(வெருளி நோய்கள் 206 -210 தொடர்ச்சி)

அவாய்த்தீவுபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அவாய் வெருளி.
அவாய்(Hawaii) ஐக்கிய அமெரிக்காவில் 50 ஆவது மாநிலமாக 1959இல் இணைந்த தீவுக்கூட்டம். வட பசிபிக்கு கடலில் அமைந்துள்ள இதன்தலைநகரம ஆனலூலூ(Honolulu).
அவாய்த்தீவு, அதன் மக்கள், மொழி, கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றின்மீது ஏற்படும் தேவையற்ற வெறுப்பினால் விளைவது.
00

மருத்துவ ஆய்விற்காக உடைகளைக் கழற்றச் செய்தல் அவிழ்ப்பு வெருளி.
வேறு காரணங்களுக்காக உடலை அம்மணமாக்குவதிலிருந்து வேறு பட்டது இது.
மறைவிடங்களில் நோய் இருந்தால் மருத்துவரிடம் ஆடையை அவிழ்த்துக் காட்ட வேண்டுமே என்று அஞ்சி மருத்துவரைப் பார்க்காமல் நோயை முற்ற விடுபவர்களும் உள்ளனர்.
தொடைப்பகுதிகள் அல்லது பின் பகுதிகளில் ஊசி செலுத்துவதற்காக ஆடையை ஒதுக்க அஞ்சி அது குறித்துக் கவலைப்பட்டே ஆடை வெருளிக்கு ஆளாவோரும் உள்ளனர்.
வீட்டைச் சுற்றி அம்மணமாக நடக்கும் இயல்பு உள்ளவர்களும் மங்கிய வெளிச்சத்தில் மருத்துவர் முன் ஆடையை அவிழ்க்க அஞ்சுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
exuer என்றால் சட்டை கழற்று என்பது பொருள்.
காண்க: அம்மண வெருளி – Dishabiliophobia/Gymnophobia /Nudophobia
00

போப்பாண்டவர் என அழைக்கப்பெறும் அவைக்கோ மீதான தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் அவைக்கோ வெருளி.
உரோமன் கத்தோலிக்க திரு அவையின் தலைவர் போப்பு அல்லது போப்பாண்டவர் என அழைக்கப்பெறுகிறார். திரு அவையின் தலைவர் என்ற முறையில் இங்கே அவைக்கோ எனச் சுட்டப்பட்டுள்ளது. திருத்தந்தை என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
துறவியர் வெருளி(Hierophobia/hermitphobia) சமயவர் வெருளி(Ecclesiaphobia/Ecclesiophobia) தூயவர் வெருளி(Hagiophobia) போன்ற சமயத்தவர் சாரந்த வெருளி இது.
papa என்னும் இலத்தீன் சொல்லிற்குப் போப்பு எனப் பொருள்.
00

அழகு மங்கை பற்றிய காரணமற்ற பேரச்சம் அழகி வெருளி.
அழகான பெண்கள், சூடேற்றும் அல்லது சிற்றின்ப எழுச்சியூட்டும் பெண்கள் ஆகியவர்களுடனான உறவு அல்லது தொடர்பு அல்லது நட்பு முறியும் பொழுது அழகி வெருளி உண்டாகிறது. அழகான பெண்களைத் தொலைவிலிருந்து கண்டாலே, அவர்களுடன் எவ்வகைத் தொடர்பும் ஏற்படாத பொழுதே இத்தகையோர் திகிலடைந்து அல்லது மலைத்துப்போய் அல்லது திகைத்துப்போய்த் துன்பத்திற்கு ஆளாகின்றனர். இதனால் மூச்சுத் திணறல், வேகமாக மூச்சு விடுதல், சீரற்ற இதயத் துடிப்பு, வியரத்தல், குமட்டல், ஒட்டுமொத்தப் பேரச்சம் ஆகியவற்றால் பாதிப்புறுகின்றனர்.
பெண் வெருளி(gynephobia), சிறுமி வெருளி(puellaphobia) வகையைச் சேர்ந்தது. அவற்றின்உட்பிரிவாகவும் கொள்ளலாம்.
cali என்னும் கிரேக்கச் சொல்லிற்கு அழகு என்றும் gyne என்னும் கிரேக்கச் சொல்லிற்குப் பெண் என்றம் பொருள்கள்.
காதல் தேவதையைக் குறிக்கும் Venus என்னும் சொல்லில் இருந்து venustraphobia சொல் உருவானது.
00

அழகான விலங்குகள், பறவைகள் மீதான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் அழகு விலங்கு வெருளி.
அழகு துன்பம் தருவது என்ற எண்ணங்கொண்டவர்களுக்கு அழகான விலங்குகளையோ பறவைகளையோ கண்டால் பேரச்சம் வருகின்றது.

(தொடரும்)