(

(வெருளி நோய்கள் 196-200 தொடர்ச்சி)

அலைபேசியைப் பயன்படுத்த முடியாத சூழலில் ஏற்படும் தேவையற்ற பேரச்சமே அலைபேசி வெருளி.


அலை இணைப்பு கிடைக்காமல் அல்லது மின்னேற்றம் இன்மையால் அல்லது வேறு சூழலில் அலைபேசியைப் பயன்படுத்த முடியாமல் போனால் இதனைப் பயன்படுத்துவோர் அடையும் கிலி, மனத் தடுமாற்றம், காரணமில்லாப் பேரச்சம் முதலானவை அலைபேசி வெருளியாக மாறுகிறது.

அலைபேசி இயங்கா வெருளி என்பது சுருக்கமாக அலைபேசி வெருளி எனக் குறிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் அலைபேசியைப் பயன்படுத்தும் பொழுது அவர்களின் பெற்றோர் முதலான உறவினர்களுக்கு இவர்கள் தவறாகப் பயன்படுத்தி வாழ்க்கையை அழித்துக் கொள்வார்களோ என்ற பெரும் அச்சம், மனத்தைப்பாதிக்கும் விளையாட்டு அல்லது பாலியல் படங்கள் மூலம் மனச்சிதைவிற்கு ஆளாவார்களோ என்ற பேரச்சம் எழுவதால் அலைபேசி வெருளி எனப் பொதுவாகச் சொல்வதும் பொருத்தம்தான்.
ஐக்கிய இங்கிலாந்தில் பாதிக்கு மேற்பட்டோர் அலைபேசி வெருளியால் துன்புறு கிறார்களாம்.
இதன் ஆங்கிலச்சொல் Nomophobia என்பது இரு சொற்கள் பகுதி கலந்து உருவான ஒட்டுச்சொல்(portmanteau). இயூகோவு(YouGov) என்பவர் 2008 இல் இதனைக் கட்டுரையில் குறிப்பிட்ட பொழுது தொலைபேசி இயங்காத பொழுது53 விழுக்காட்டினர் பாதிப்பிற்குள்ளாவதாகத் தெரிவித்து இருந்தார். இப்பொழுது இந்த அளவு கூடியுள்ளது.
00

அலை தொடர்பான பெருங்கவலையும் பேரச்சமும் அலை வெருளி.
கரையில் நின்றிருந்தாலும் அலைகளில் சிக்க நேரிடும், அலை அடித்துக் கொண்டு சென்றுவிடும் என்பன போன்றகவலைகளும் அதனால் பேரச்சமும் கொள்வர்.
கடலலை மட்டுமல்லாமல் அலைபோல் எழுச்சி உள்ள நீர்நிலைகள் யாவற்றைக் கண்டாலும் ஏற்படும் கட்டுக்கடங்காத பேரச்சமே இந்நோய்.
கடல்கோள்(சுனாமி), கடல்கோள் பற்றிய நினைவு, கடலோரப்பாறைகளில் மோதும் அலைகள், ஏற்ற இறக்கமுள்ள அலை பாய்வு, வெள்ளம், நீரலைஉள்ள ஆறு முதலான நீர்நிலைகள், அலைகளின் ஒலி என யாவற்றிலும் ஏற்படும் மிகையான பேரச்சம் இத்தகையோர்க்கு வரும்.
‘kymo’ என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு அலை எனப் பொருள் .
00

அலைமிதவை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அலைமிதவை வெருளி.
அலைமிதவையில் பயணம் செய்யும் பொழுது கவிழ்ந்து விடும், பேரலை வந்து மூழ்கடித்துவிடும், இறக்க நேரிடலாம் என்ற பேரச்சம் வரும்.
00

மாந்த உடலில் மாந்த அல்லாத உயிர் – அல்மாந்த நிலை – இருப்பதாக எண்ணிக் கவலைப்பட்டுப்பேரச்சம் கொள்வது அல்மாந்த வெருளி.

அல்மாந்த என்பதை அன்மாந்த என்றுதான் குறிக்க வேண்டும். நல் முறை > நன் முறை, தொல் மரபு > தொன் மரபு என்பனபோல்.புதுச் சொல் என்பதால் எளிமை கருதி,மாந்த அல்லாத என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில் அல் மாந்த எனப்பட்டுள்ளது.