(வெருளி நோய்கள் 221 -225 – தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 226 -230
- அறியாக் காரண வெருளி – Pamphobia
அறியாக் காரணம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அறியாக் காரண வெருளி
சிலர் Panphobia என்பதையும் அறியாக்காரண வெருளி எனக் குறித்துள்ளனர். அனைத்து வெருளியைக் குறிப்பிடும் panphobia என்பது தவறான எழுத்தொலிப்பில் குறிக்கப்பட்டுள்ளது. அதை உணராமல் நேர்ந்த தவறு இது.
00 - அறியாமை வெருளி – Althazagoraphobia(1)
அறியாமைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அறியாமை வெருளி.
அறியாமையால் பணிச்சுணக்கம், பண இழப்பு முதலானவை ஏற்படுவதால் அறியாமையை அடுத்தவர் வெளிப்படுத்தும் பொழுது சினம் வருகிறது. அறியாமையால் இடரோ இழப்போ ஏற்படலாம் என்ற அச்சத்திற்கும் ஆளாகின்றனர்.
00 - அறியாதவர் வெருளி – Agnostophobia
அறியப்படாதவர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அறியாதவர் வெருளி.
பொதுவாகக் கூட்டங்கள், வரிசைகள், கடைத் தெருக்கள், பயணங்கள், பொதுவிடங்கள் முதலான இடங்களில் காணும் அறியாதவர் பற்றிய பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். இவர்களால் திருடு போகலாம், தீங்கு நேரலாம் முதலான பல்வகைப் பேரச்சங்களுக்கு ஆளாகின்றனர்.
agnostos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அறியப்படாதவர்.
00 - அறிவியல் வெருளி – Scientophobia
அறிவியல் குறித்த வரம்பற்ற பேரச்சம் அறிவியல் வெருளி.
பிற்போக்கு மத வாதிகளும் பழமைவாதிகளும் அறிவியல் முன்னேற்றங் கண்டு வெறுப்பவரகளாக உள்ளனர். கடவுளின் ஆணைக்கு எதிரானதாகக் கருதி எதிர்க்கிறார்கள். இத்தகையோரும் அறிவியல் வெருளிக்கு ஆளாகிறார்கள்.
அறிவியல் ஆக்கவும் அழிகக்வும் கூடியது. ஆனால் அழிவிற்கே அதனைப் பயன்படுத்துகிறார்கள் என அறிவியல் மீது பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்.
அறிவியல் சார் கற்பனைக் கதைகள் பலவற்றில் அறிவியலின் அழிவுப்பாதை கூறப்படுகின்றது. இதனைப் படிப்போருக்கும் அறிவியல் வெருளி வருகிறது. அறிவியல் என்றால் இயற்பியல், வேதியல், உயிரியல் மட்டுமல்ல. தொல்லியல் முதலான எல்லாத் துறையியல்களுமே அறிவியல்களே! இவை மீதான பேரச்சம் குறித்துப் பல கட்டுரைகள் பல பக்கங்களில் வந்துள்ளன. அந்த அளவில் அறிவியல் குறித்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர். அணுஆயுதப்போர் முதலான பேரழிவிற்குக் காரணமானவையும் அறிவியல் விளைவுகளே என அதனைக் கண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்வோர உள்ளனர்.
00 - அறிவுத் துறைகள் வெருளி – Ologypediaphobia
அறிவுத் துறைகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் அறிவுத் துறைகள் வெருளி.
அறிவியல் வெருளியில் குறித்தவையே இதற்கும் பொருந்தும். அறிவியல் வளர்ச்சியை மக்கள் முன்னேற்றத்திற்கானதாகக் கருாமல் அழிவிற்கானதாகக் கருதுவோர் அறிவியல் துறைகளைக் கண்டு வெறுக்கிறார்கள். அறிவியலைக் கற்பதில் ஆர்வமின்மையும் வெறுப்பும் உள்ள மாணாக்கர்களும் அறிவியல் வெருளிக்கு ஆளாகிறார்கள்.
-ology என்பது அறிவியல் அல்லது அறிவியல் துறையைக் குறிக்கும் பின்னொட்டுச் சொல். -pedia, என்னும் பின்னொட்டு paidia என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது. கற்றல் என்பது பொருள். இணைந்து அறிவியல் கற்பதிலான வெறுப்பு அல்லது பேரச்சம் என்னும் பொருளைத் தருகின்றன.
00 (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன், வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment