(வெருளி நோய்கள் 216 -220 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 221 -225
- அழுக்கு ஏனங்கள் வெருளி – Hnirshunphobia
அழுக்குச் சமை கலன் அல்லது தூய்மையற்ற உண்கலன்கள், ஏனங்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் அழுக்கு ஏனங்கள் வெருளி.
அழுக்குச் சமை கலன் வெருளி என முதலில் நேர் பொருளாகக் குறித்திருந்தேன். பொதுவான ஏனம் என்னும் சொல்லைப் பயன் படுத்துவே சிறப்பு என்பதால் இப்பொழுது அழுக்கு ஏனங்கள் வெருளி என மாற்றியுள்ளேன்.
சமைத்த பாத்திரங்கள், உணவுத் தட்டுகள், வட்டில்கள், குவளைகள் முதலியன கழுவப்படாமல், தூய்மைப்படுத்தப்படாமல் இருப்பதைப் பார்க்கும் பொழுது, வீட்டிலோ உணவகங்களிலோ தூய்மைக் குறைவான பாத்திரங்கள் அல்லது தட்டுகள், குவளைகள் முதலியவற்றில் உணவு பரிமாறும் பொழுது அளவுகடந்த வெறுப்பிற்கும் பேரச்சத்திற்கும் ஆளாகின்றனர். இவற்றால் நோய் பரவும் என்பதால் விழிப்பாக இருக்க வேண்டும். ஆனால், அச்சத்துடன் அவற்றை ஏற்காமல் புறக்கணிக்க வேண்டும். தூய்மைக் குறைபாட்டுடன் பயன்படுத்தி அஞ்சுவதை விட இதுதான் சிறந்தது.
00
- அழுக்கு வெருளி – Automysophobia
மாசு வெருளி/தூசு வெருளி/நுண்மி வெருளி/தொற்றுவெருளி/ குப்பை வெருளி-Misophobia/Mysophobia/Molysmophobia/Molysomo phobia/Verminophobia/Amathophobia/Koniophobia/Rupophobia/ Rypophobia/Koniphobia
நோய்மி வெருளி- Bacillophobia/Microbiophobia/Bacteriophobia/ Germophobia/Germaphobia , தூய்மையின்மை வெருளி – Ataxaphobia
தூய்மையின்மை அல்லது துப்புரவின்மையால் -அஃதாவது அழுக்கினால் – ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் அழுக்கு வெருளி.
அழுக்கு வெருளி உடையவர்கள் அழுக்கு மீதான பேரச்சம் அல்லது வெறுப்பால் ஓயாமல் கை கழுவுவர் அல்லது அடிக்கடி குளிப்பர்.
அழுக்கின் மீதான பெருவெறுப்பால் நலக்கேடு ஏற்பட்டுத் துன்பங்களுக்கு ஆளாக அல்லது உயிரிழக்க நேரிடும் என்ற தேவையற்ற பேரச்சமே இவர்களை ஆட்டுவிக்கும்.
தூசு வெருளி, மாசு வெருளி/தூசு வெருளி/ நுண்மி வெருளி/ தொற்றுவெருளி, நோய் நுண்மி வெருளி என முன்பு தனித்தனியாகக் குறிக்கப்பட்டன. வெவ்வேறு பெயர்களில் குறிக்கப்படுவன ஒரே வெருளியைத்தான் என்பதால், இப்பொழுது இணைத்துத் தரப்படுகிறது.
அழுக்கின் பிறப்பிடங்களில் ஒன்றாகிய குப்பை பற்றிய பேரச்சம் குப்பை வெருளி(Rupophobia) எனப்படுகிறது. இதுவும் அழுக்கு வெருளியுடன் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
ஒரு பெயரை மட்டும் குறிப்பிட்டால் அது வேறு, இது வேறு என்பதுபோல் பேசவோ கருதவோ கூடும். எனவே, மாற்றுப்பெயர்களும் இங்கே தரப்பட்டுள்ளன.
auto என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் தான்/தானே. myso என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அழுக்கு.
amathos, koni ஆகிய கிரேக்கச் சொற்களின் பொருள் தூசி.
musos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தூய்மையற்ற என்பதாகும்.
molysmo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அருவருப்பான அழுக்கு.
00
- அழுக்குடைமை வெருளி – Pelophobia
தனிப்பட்ட முறையிலும் உடைமைப் பொருள்களையும் அழுக்காக வைத்திருத்தல் அழுக்குடைமை வெருளி.
சீருந்தில் சேறு படிந்து அல்லது வேறு வகையில் அழுக்கு படிதல் போன்று உடைமைப் பொருள்களில் அழுக்கு படிந்திருத்தல் அல்லது படியும் என எதிர்பார்த்தல் ஆகியவற்றால் ஏற்படும் அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00
- அழைப்பக வெருளி – coetusermophobia
அழைப்பு மையங்கள்(call centres) மீதான தேவையற்ற பேரச்சம் அழைப்பக வெருளி.
இந்த உதவி வேண்டுமா, அந்த உதவி வேண்டுமா, இதற்குக் கடன் வேண்டுமா, அதற்குக் கடன் வேண்டுமா என்பனேபால் பணி மிகுந்துள்ள நேரங்களிலும் கால நேரம் பார்க்காமலும் அழைப்பு மையங்களில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. இதனால் எரிச்சலடைவோர் மிகுதி. இதனால் இவர்களிடமிருந்து மட்டுமல்ல, தொலைபேசி மணி ஒலித்தாலே இம்மையங்களில் இருந்துதான் அழைப்பு வந்திருக்கும் என நடுங்குவோரும் உள்ளனர்.
இதற்கு மறுதலையாக அழைப்பு மையங்களில் வாடிக்கையாளர் பணி மையங்களில் பணியாற்றுவோர் பல்வகை உணர்ச்சி மிகுந்த வாடிக்கையாளர்களை நாளும் எதிர்கொண்டு அழைப்புகள் கண்டு அஞ்சும் போக்கும் உள்ளது.
00
- அளறு வெருளி – Hadephobia/Stygiophobia/Stigiophobia
அளறு/நரகம் தொடர்பான வரம்புமீறிய பேரச்சமே அளறு வெருளி.
அளறு வெருளி/பாழ்வினையர் உலகு வெருளி/நரக வெருளி என்று நாமும் மூவகையாகக் குறிக்கலாம். எனினும் வெவ்வேறு வெருளி என மக்கள் எண்ணக்கூடாது என்பதற்காக அளறு வெருளி என்றுமட்டுமே குறிப்பிடலாம்.
எலலாச் சமய நூல்களிலும் குற்றம் இழைத்தவர்கள், பாவம் செய்தவர்கள் இறப்பிற்குப் பின் அளறுலகு/நரகுலகு செல்வர் என்றும் அங்கே கடுமையான தண்டனைகள் பாவியருக்கு வழங்கப்பெறும் என்றும் கதைகள் உள்ளன. இதனை அறிந்து அங்கே இறப்பிற்குப் பின் செல்ல நேரிடும் என்று அளவு கடந்த பேரச்சம் கொள்வர் இத்தகையர்.
மக்கள் தவறு செய்யாமல் இருக்கத்தான் இத்தகைய கதைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இதனை நம்பி மக்கள் தவறு இழைக்காமல் இருந்தால் இவ்வுலகம் பண்பாடு மிக்கதாக, அமைதியானதாக, ஒற்றுமையாக இருந்திருக்கும். பாவக்கதைகளை விளக்குபவர்களே பாவம் செய்பவர்களாகத்தான் இருக்கின்றனர். இருப்பினும் சிறுபான்மையர் ஒழுக்க வரம்பிற்குள் வாழ இக்கதைகள் உதவுகின்றன. அவ்வாறு வாழ விரும்புவோரே அளறு வெருளிக்கும் ஆளாகின்றனர்.
திருவள்ளுவர் ஒழுக்க வரையறை இல்லாப் பெண்களின் மேல்லிய தோள், கீழானவர்கள் ஆழ்ந்து கிடக்கும் நரகம் என்னும் பொழுது அளறு என்றுதான் குறிப்பிடுகிறார்.
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு (திருக்குறள் 919) என்கிறார் அவர்.
Hades என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அளறு/நரகம்
stygius என்னும் இலத்தீன் சொல்லிற்கும் Stணgios என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கும் நரகம் தொடர்பான/ கீழுலகம் என்று பொருள். [சுடைக்சு(Styx) என்பது நிலஉலகத்தையும் நரகமாகிய கீழுலகத்தையும் பிரிக்கும் ஆறு. இதன் தொடர்பான பேரச்சத்தை இச்சொல் குறிக்கிறது.]
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment