11 May 2026
(வெருளி நோய்கள் 1391 -1395: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1396 -1400
- தோல் நோய் வெருளி-Dermatosiophobia/Dermatophobia/ Dermatopathophobia
தோல்நோய் குறித்த அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் தோல்நோய் வெருளி.
தோல்நோய், தோல் வெடிப்பு, உறுப்புச் சிதைவு போன்றவற்றால் பெருமளவு பேரச்சம் கொள்வர் இத்தகையர்.
தோற்காய வெருளி( Dermatophobia) என முன்பு குறிப்பிட்டிருந்தேன். மேற்குறிப்பிட்ட பிரிவில் தோல் காயமும் அடங்கும் என்பதால் இதனுடன் சேர்த்து விட்டேன்.
dermato என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தோல்.
00 - தோல்வி வெருளி – Cadophobia / Atychiphobia/ Kakorraphiaphobia/ Kakorraphiophobia/ Kakorrhaphiophobia/ Alychiphobia/Failure Phobia
தோல்வி குறித்து ஏற்படும் அல்லது எதிர்பார்க்கும் சூழல் குறித்த அளவுகடந்த பேரச்சமே தோல்வி வெருளி.
தோல்வி வெருளி (cadophobia), தோற்கடிப்பு வெருளி (kakorraphiaphobia, kakorraphiophobia, kakorrhaphiophobia), ஆகூழின்மை வெருளி(Atychiphobia) யாவுமே தோல்வி தொடர்பானவைதானே. எனவே, பொதுவாகத் தோல்வி வெருளி என்று சொன்னால் போதும்.
தோல்வி குறித்த அச்சமே முயற்சிக்கு முட்டுக்கட்டையாய் அமைந்து வெற்றி வழிக்குச் செல்வதைத் தடுக்கிறது.
தேர்வு, தேர்தல், தொழில், காதல், வாழ்க்கை, விளையாட்டு, போட்டி என எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பது குறித்துத் தேவையற்ற பேரச்சம் இத்தகையோருக்கு ஏற்படும். சிலருக்குத் தற்கொலை எண்ணமும் ஏற்படுவதுண்டு. தோல்வி அச்சத்தால் குடும்பமாகத் தற்கொலை புரிந்தவர்கள் உண்டு. “தோல்வி கண்டு துவளாதே” என்னும் தன்னம்பிக்கையை ஊட்டும் கல்வியை அளித்தால் தோல்வி வெருளிகளைத் தவிர்க்கலாம்.
முயற்சி திருவினை ஆக்கும் (திருவள்ளுவர், திருக்குறள் 616)
ஊழையும் உப்பக்கம் காண்பர் (திருவள்ளுவர், திருக்குறள் 620)
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் (தேடிவந்த மாப்பிள்ளை திரைப்படம்)
தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா? (ஆபாவாணன், ஊமைவிழிகள் திரைப்படம்)
போன்ற நம்பிக்கை தரும் பாடல் வரிகளை எண்ணியும் பாடல்களை நினைத்தும் தோல்வியே கண்டு பின் வெற்றி அடைந்த ஆபிரகாம் இலிங்கன் முதலான தலைவர்களின் வரலாறுகளைப் படித்தும் தோல்வி மீதான அச்சத்தை ஓட்டலாம்.
atyches என்னும் கிரேக்கச் சொல்லிற்கு ஆகூழின்மை எனப் பொருள்.
00
- தோற்பை வெருளி – Valantiophobia
தோற்பை(wallet), பணப்பை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தோற்பை வெருளி.
தோல்பொருள்கள் மீது வெறுப்பு உள்ளவர்களுக்குத் தோற்பை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
பணப்பை என்று பொதுவாகக் குறிக்கப்பெற்றாலும் பணம் வைப்பதற்கு மட்டுமல்லாமல் வங்கி அட்டை, பிற அட்டைகள், உரிமம் போன்ற பிறவற்றையும் பாதுகாப்பாக வைத்திருக்கப் பயன்படுத்துவதால் தோல்பை வெருளி என்றே குறிக்கப்பெறுகிறது.
00 - தோனடெல்லோ வெருளி – Donatellophobia
புனைவுரு தோனடெல்லோ(Donatello) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தோனடெல்லோ வெருளி.
கூர்மதியுடன் செயற்படும் கடலாமை.
00
1400.தொழு நோய் வெருளி-Leprophobia/Lepraphobia/Leprechaunophobia
தொழுநோய் குறித்த அளவுக்கு மிகுதியான பேரச்சம் தொழுநோய் வெருளி.
தொழுநோயர்களுக்கு முகமும் தோல், நரம்புகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே தோற்றம் பார்க்க இயலாததாக உள்ளது. முறையான மருத்துவம் பார்க்காவிட்டால் கண்களும், கைகளும் பாதிக்கப்படுகின்றன. மூக்கு, வாய் மூலம் இந்நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. தொற்றுநோய் என்பதால் தொழுநோயர் மக்களுடன் கலந்து பழக முடிவதில்லை. ஆனால் தொடக்க நிலையிலேயே மருத்துவம் பார்த்தால் நலமாகலாம். தொற்றும் அச்சத்தால் சிலருக்குத் தொற்றுநோயரைக் கண்டாலே பேரச்சம் வருகிறது. தொழுநோயர்களும் தங்களைத் தாங்களே வெறுக்கும் நிலைக்குப் போவதுமுண்டு. இருப்பினும் இரந்துண்டு இன்பம் காணும் தொழுநோயரில் பெரும் பகுதியினர் அரசின் மறுவாழ்வு இல்லத்தில் சேர விரும்புவதில்லை.
lepr என்னும் கிரேக்கச் சொல்லுக்குச் செதிள் எனப் பொருள்.
தொழுநோய் என்னும் பொருளையும் தரும் leipreachயn என்னும் ஐரீசு சொல்லில் இருந்து leprechaun உருவானது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5
No comments:
Post a Comment