(வெருளி நோய்கள் 1461 -1465: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1466 -1470
- நிண்டெண்டோ காணாட்ட வெருளி – Nintendophobia
நிண்டெண்டோ (Nintendo) நிறுவனத்தின் காணாட்டம் குறித்த வரம்பற்ற பேரச்சம் நிண்டெண்டோ காணாட்ட வெருளி.
நிண்டெண்டோ நிறுவனக் காணாட்டப் பொருள்கள் மீதான அளவு கடந்த பேரச்சம் காணாட்ட வெருளி
நிண்டெண்டோ(Nintendo) நிறுவனம் மிகுதியான காணாட்டங்களை விற்பனை செய்கிறது. இதனைப் பயன்படுத்தும் பொழுது ஒளிரும் விளக்குகளால் வலிப்பு நோய், மன நோய் முதலானவை ஏற்படுவதாக அஞ்சுகின்றனர். எனவே, நிண்டெண்டோ நிறுவனப் பொருள் மீது அளவுகடந்த பேரச்சம கொள்கின்றனர். நூற்றாண்டு பழமை கண்ட நிண்டெண்டோ நிறுவனம் முதலில் சீட்டுக்கட்டுகள் உருவாக்கத்தில் இருந்தது. இப்பொழுது கணிணியாட்டத்தில் இறங்கி விட்டது. இந்நிறுவனம் குறிதத பேரச்சமாகிய நிண்டெண்டோ வெருளியே இங்கே நிண்டெண்டோ காணாட்ட வெருளியாகக் குறிக்கப் பெறுகிறது.
00
- நிரப்ப வெருளி – Tacophobia நிரப்ப உணவு(Taco)பற்றிய அளவற்ற பேரச்சம் நிரப்ப வெருளி.
மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பாலேடு, காய்கறிகள் முதலியவற்றை நிரப்பிச் சோளம், கோதுமை முதலியவற்றால் செய்யப்படுவது நிரப்பம்(Taco) என்னும் மெகசிகன் உணவு.
00 - நில நடுக்க வெருளி – Seismophobia
நில நடுக்கம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நில நடுக்க வெருளி.
அண்மைப்பகுதிகளில் நிலநடுக்கம் நிகழ்ந்ததைக் கேள்விப்பட்டு அல்லது நில நடுக்கம் குறித்த செய்திகளைப்படித்ததால் அல்லது படக்காட்சி, செய்திக்காட்சிகளில் காண்பதால் தாங்களும் நில நடுக்கத்திற்கு ஆளாகப்போகிறோம் எனத் தேவையற்ற வரம்பற்ற பேரச்சத்திற்கு ஆளாவர்.
00
- நிலக்கடலைநெய் வெருளி-Arachibutyrophobia / Fystikovoutyrophobia
நிலக்கடலை நெய் குறித்த பேரச்சம் நிலக்கடலை நெய் வெருளி.
arachis என்னும் இலத்தீன் சொல்லுக்கு நிலக்கடலை என்றும் butyrum என்னும் இலத்தீன் சொல்லுக்கு வெண்ணெய் என்றும் பொருள்.
arachis என்பதற்குப் பட்டாணி என்னும் பொருளில் அளித்த விளக்கத்தின்படி முதலில் பட்டாணி வெருளி எனக் குறித்திருந்தேன். ஆனால் இது நிலக்கடலைநெய் என்னும் பொருளில்தான் கையாளப்பட்டுள்ளது. எனவே, நிலக்கடலை நெய் வெருளி எனக் குறிப்பிடுவதே சரி.
இதனைப்பார்த்த மாத்திரத்தில் அச்சம் வருவதில்லை. தடியப்பம் / வெதுப்பம் (இடையே வைத்து உண்ணும் பொழுது மேல்வாயில் ஒட்டிக்கொள்வதுபற்றிய பேரச்சமே இது. எனவே, இதை உணவு வகை வெருளிவகையில் சேர்ப்பது பொருத்தமாக இருக்கும்.
00
- நிலத்தடித் தொடரி வெருளி – Jixyuphobia
நிலத்தடித் தொடரி(subway) குறித்த வரம்பற்ற பேரச்சம் நிலத்தடித் தொடரி வெருளி.
.subway என்பது சுரங்கப்பாதை. எனினும் இங்கே சுரங்கப்பாதையில் இயங்கும் தொடர் ஊர்தியைக் குறிக்கிறது. எனவே, தெளிவு கருதி நிலத்தடித் தொடரி எனக் குறித்துள்ளேன். tube/métro/underground railway system எனவும் இத்தொடரிப் போக்குவரத்து முறைஅழைக்கப்பெறுகிறது
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5
No comments:
Post a Comment