(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1022 – 1039 இன் தொடர்ச்சி)

1040. நுண்ணுயிரி மரபியல்

Microbial genetics

1041. நுண்ணுயிரி  வளைசலியல்

Microbial Ecology

1042. நோய்மி முறிப்பியல்

Antibiotic என்பதற்கு ஆண்ட்டி பையாட்டிக்கு, உயிரி எதிர்ப்பி, உயிரி முறிப்பி, உயிரி யெதிர்ப்பி, உயிர் எதிரி, எதிர்  உயிர்ம மருந்து, எதிர்மருந்து, கிருமி முரணி, நச்சொடுக்கி, நுண்மக்கொல்லி, நுண்ணுயிரி முறி, நுண்ணுயிரி முறிப்பியல், நுண்ணுயிரிக் கொல்லி, நுண்ணுயிரிக் கொல்லி (முறி), நுண்ணுயிர் எதிரி, நுண்ணுயிர் எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பொருள், நுண்ணுயிர்க் கொல்லி, நுண்ணுயிர்ப் பகை, நுண்மக் கொல்லி, நோய் நுண்ணுயிர்க் கொல்லி, பாக்(கு)டீரியப் பகை எனப் பலவகையாகக் கூறுகின்றனர். ஒலி பெயர்ப்புச் சொற்களைப் பயன்படுத்தியுள்ள சொற்கள் நமக்குத் தேவையில்லைஉயிருக்கு எதிராகக் கூறுவதும் தவறு. உயிரைக் கொன்று மரணத்தை அளிக்கவில்லை. எனவே, உயிர் அல்லது நுண்ணுயிர் எனப் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் சரியல்ல. உயிரி என்பது எல்லா உயிரினங் களையும் குறிக்கும் பொதுச் சொல். எனவே, அதுவும் பொருந்தாது.

ஓர் அகராதியில் ‘தழிஞ்சி’ எனப் பயன்படுத்தியுள்ளனர். தழிஞ்சி என்பது தொல்காப்பியர் குறிப்பிடும் புறத்துறை. பகைவீரர்களால் தாக்குதலுக்கு உண்டான படைவீரர்களைப் பாராட்டியும் பொருள் கொடுத்தும் அரசன் தழுவிக் கொள்வதைக் கூறுவது. அதேபோல், தோற்றோடும் வீரரை எதிர்த்துத் தாக்காத மறப் பண்பினையும் கூறுவது. எனவே, இது பொருந்தாது. பகைப் படையினர் நாட்டு எல்லையுள் நுழையாதபடி வரும் வழிகளைக் காப்பதும் தழிஞ்சி என்னும் புறத்துறையாகும். இந்தப் பொருளில் பகை நுண்மிகள் வராத வகையில் காப்பதால் தழிஞ்சி எனக் கருதிப் பார்த்திருக்கலாம். நல்ல சிந்தனை. எனினும் பெரும்பான்மை ஒத்து வராமையால் பின்பற்றுவது முறையாகாது.

உடலுக்குக் கேடு விளைவிக்கும் நோய்மிகளை எதிர்ப்பது அவற்றிற்கான மாற்று மருந்துமாகும். எனவே, நோய்மி முறிப்பியல் எனலாம்.

Antibiotics

1043. நோய்மி யியல்

நச்சியஇயல், நோய் நுண்நச்சாய்வியல்,  நச்சியியல், நச்சுநுண்மவியல், நச்சுயிரி யியல், நச்சுரி இயல், நச்சுயிரியல், நோய் நுண்ணியியல், நுண்ணுயிரி, நோய் நுண்ம நச்சாய்வு நூல், வைரசியல், வைரசு இயல் எனப் பலவாறாகக் கூறப்படுகிறது.  நச்சுயிரி இயல் என்பதுதான் நச்சுரி இயல் என அச்சுப்பிழையாக இடம் பெற்றுப் பலராலும் அவ்வாறே பகிரப்பட்டுள்ளது. இவற்றுள் கடைசி இரண்டும் ஒலி பெயரப்புச் சொற்கள். நோய்தரும்  தீ நுண்மியைச் சுருக்கமாக நோய்மி(virus) எனலாம். நோய்மிபற்றிய ஆராய்ச்சி

நோய்மி யியல் – Virology

கணிப்பொறித்துறையில் உள்ள virus என்பதைச் சிதைப்பி என்று சொல்ல வேண்டும்.

Virology என்பதைச் சிலர் நச்சியல் என்கின்றனர்.  Toxicology என்பதைச் சிலர் நச்சியல் என்பதால் குழப்பம் வரலாம்.

Virology

 

(தொடரும்

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000