(தமிழ்ச்சொல்லாக்கம்  96-100 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைதேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

101. Gas Light – காற்றெரி விளக்கு

நீராவியந்திரம் கண்டுபிடித்தவனைப் பைத்தியக்காரனென்று கல்லை விட்டெறியாத பேருண்டோ முதலில்? காற்றெரி விளக்கை (Gas Light) உண்டாக்கினவனை அவன் காலத்தோர் யார்தான் நகைத்துக் காறி உமிழவில்லை!

மேற்படி இதழ்      :           (1-10-1890) புத்தகம் -4 இல- 11, பக்கம் – 94

கட்டுரையாளர்    :           ஓர் இந்து

102. பென்சல் – எழுதுகோல் (1890)

விகுர்தி வருடத்திய பாக்கெட் பஞ்சாங்கம்

இப்பஞ்சாங்கம் ஒன்று ரிப்பன் அச்சுக் கூடத்துத் தலைவர் ம-ளள- சிரீ, சை. ரத்தின செட்டியர் அவர்கள் அனுப்ப வரப்பெற்றோம். இப்புத்தகத்திலடங்கிய விசயங்கள் அநந்தம். அவற்றை இவண் குறிப்பிடப் பெருகும். இப்புத்தக ரூபத்துள், தினசரிக் குறிப்புக்குரியவும், வரவு செலவுக்குரியவும், விசேடக் குறிப்புக்குரியவுமான விசயங்கள் எழுதிக்கொள்ள வெற்றுக் கடிதங்கள் விடப்பட்டுள்ளன. எழுதுவதற்குத் தகுந்த (பென்சல்) எழுதுகோலும் வைத்திருக்கின்றது. விலை 6 அணா. தபாற்கிரயம் – 1 – அணா. வேண்டுவோர் மேலைய செட்டியார் அவர்கட்கு எழுதிக்கொண்டால் கிடைக்கும் – பத்

இதழ் : சிரீலோகரஞ்சனி (1890) புத் – 4, இல – 3 பக். – 1

103. Headings — தலைப்பெயர்

ஞானாமிர்தம் என்னுந் திருநாமம் புனைந்து தமிழ்ச்சுவையும் சொன்னோக்கமும் பொருணோக்கமும் பொலிந்து நான்கு பக்கமுடையதாய் மாதம் இருமுறை பிரசுரஞ் செய்யப்படும் ஓர் பத்திரிகையை நமது பார்வைக்கனுப்பிய பத்திராதிபரவர்கட்கு விஞ்ஞாபன மோச்சுகின்றனம். இது சீர்வளர்சீர் யாழ்ப்பாணம் சபாபதி நாவலரவர்களை ஆசிரியராகப் பெற்றது. இதில் சாதாரணப் பிரகரணம், வைதிக சித்தாந்தப் பிரகரணம், பரமதப் பிரகரணம், தமிழ் இலக்கிய இலக்கணப் பிரகரணம், சமாசாரப் பிரகரணம் கடிதம் முதலிய தலைப்பெயர்கள் வாய்க்கப் பெற்றிருக்கிறது.

மேற்படி இதழ் , (1-6-1888) புத்தகம் – 2, இல, 11, பக். – 82

104. தலையங்கம் – தலைப்பெயர்

1889௵ ஆகட்டு – ௴ 24 உ பிரசுரமாகிய மகாவிகட தூதன் பத்திரிகையில் ‘அரக்கோணம் சான்றார் என்னுஞ் சொல் வழக்கின் முடிவு’ எனத் தலைப்பெயரிட்டெழுதிய ‘க-ஷ-கி என்பவரது தோழன்’ எனப் பெயர் பூண்டவர் பதினெண் புராணங்களின் கருத்தையும் நோக்காது, முன்னிருந்த அருந்தமிழ்ப் புலவர் கருத்தையும் நோக்காது, சான்றோராகிய சத்திரியர்களால் வெளியிடப்பட்ட நூற்களின் கருத்தையும் நோக்கது சாத்திர சம்மதமின்றி, ’சான்றார்’ என்னும் பெயர் சாதிப் பெயரல்லவென்றும், சில நூற்களிற் சான்றார் என்னும் பெயர் அரசருக்கு வழங்கிடினும் அதைப்பற்றி எனக்கு அவசியமில்லை என்றும், சேக்கிழார் அருளிச் செய்த பெரிய புராணத்தின்கண் வருகின்ற ’ஈழக்குலச் சான்றார்’ என்பதற்கு ’கள்வாணிபகுலவறிஞர்’ எனப் பொருளாகுமென்றும், சில நூற்களில் அரசருக்கு கிராமணி என்னும் பட்டப்பெயர் வழங்கிடினும் அது இராசகுல முற்றிலும் வழங்கவில்லை என்றும், சேக்கிழார் பெரிய புராணத்திற்கு நம்பியாண்டார் நம்பி தருவந்தாதிதான் முதனூலென்றும், வடநாட்டரசர் தென்னாட்டிற்கு வந்ததில்லை என்றும் இதுபோல இன்னுஞ் சில மொழிகளையும் தாறுமாறாகப் புரட்டி மூட தாற்பரியஞ் செய்து எழுதியிருக்கின்றார்.

நூல்   :           சான்றார் என்னுஞ்சொல் வழக்கின் முடிவைத் தகிக்குஞ் சண்டபானு (1891) பக்கம் – 1

நூலாசிரியர்         :           சண்முக கிராமணியார் (சத்திரிய வித்வான் நிவேதன சங்கத் தலைவர்)

105. எரிநக்ஷத்திரம் – விண்வீழ்க்கொள்ளி

சில சமயங்களில் விண்வீழ்க் கொள்ளிகள் இப்பூமியில் விழுகின்றன. அப்போது அவற்றைப் பரீட்சித்துப் பார்க்கையில் அவைகள் சாதாரணமான கற்களாகவே இருக்கின்றன. இவைகளைப் பல பொருட்காட்சிச் சாலையில் நாளைக்குங் காணலாம்.

இதழ் :           மகா விகட தூதன் 4-4-1891

புத்தகம்      :           6, இலக்கம் 13, பக்கம் : 3.

கட்டுரையாளர்    :          சான் டானியல் பண்டிதர்.

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்