(தமிழ்ச்சொல்லாக்கம் 71 – 83தொடர்ச்சி)
(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
84. வியாபாரம் – தொழில்
நூல் : சீவாத்துமா விசயமான ஒரு வியாசம் (1881)
நூலாசிரியர் : பிரம்மோபா சி பக்கம் – 12.
★
85. Telephone Wire — மின் கம்பி
நிசாம் அரசனின் மந்திரியாகிய சர் சாலர் சங்(கு) என்பவர் விச பேதியால் இறந்து போனார். இராணியவர்கள் மின் கம்பி வழியாய் அவர் குடும்பத்தாருக்கு அநுதாபச் செய்தி அனுப்பினார்கள்.
இதழ் : தேசோபகாரி (1883) மார்ச் சு : தொகுதி23.எண்.3 பக்கம் 60
சொல்லாக்கம் : இதழாசிரியர்.
★
86. Press – அச்சுக் கூடம்
அவர் இங்கிலாந்துக்குத் திரும்பின போது, அங்கே செங்கோலோச்சின நாலாம் எட்வருடு அரசன் கக்குசுதொனுக்கு வெகு இட்ட சிநேகிதராய் இருந்தமையால், அச்சடி வித்தையை இங்கிலாந்தில் தொடங்குவதற்கான அநுசரணை எளிதில் கிடைத்துக் கொண்டது. ஆகையால் கக்குசுதொன் தாம் திரும்பி வந்து சில நாளுக்குள்ளே உவெசுத்துமின்சுதர் நகரத்தில் 1471 இல் ஓர் அச்சுக்கூடம் தாபித்து, அங்கே 20 வருடக்காலம் அச்சடித் தொழிலாகிய சோலியையே நோக்கி வந்தார்.
இதழ் : தேசோபகாரி (1883- மே) மார்ச்: மார்ச் சு : தொகுதி23.எண்.3: பக்கம் 60
நூலாசிரியர் : இதழாசிரியர்
★
87. Train – புகைத்தேர் ((இ)ரயில்)
பொம்பாய் செல்லும் வழியில் கர்சட்டு இசுடேசனிலிருந்து புகைத்தேர் குகைகளில் செல்லும்போது அமாவாசை இரவில் கண் புதைத்தாலும் அமையாத இருளைக் காணலாம்.
நூல் : கங்கா யாத்ர ப்ராபவம் (1887) பக்கம் – 18
நூலாசிரியர் : கவித்தலம் துரைசாமி மூப்பனார்
★
88. (இ)லதா கிருகம் – கொடி வீடு
இராமச்சந்திர ரெழுந்தருளி யிருக்கின்றாரென்று மைதிலியார் திருவுளமுகந்து நாணமுற்றவர்போற் றிருமுகங்கோட்டி யத்தோழியரைக் கடிவதொப்பக் கடிந்து சிறிதகன்று, இங்ஙனமே செல்குதுமேல் நாயகரை யினிக்காணுவ, தெங்ஙனமெனத் திருவுளங்கொண்டு, ஏடி பாங்கி! நானாவிதக் கொடிமல்கி யெழிலுற்றிருக்குந் தீங்கனி யம்மாவை யின்னு மொருமுறை பார்ப்போமென்று மீண்டும் போகலும், இட்சுவாகு குலசம்பூதர், ஓ! ஓ! பெண்ணரசி யிங்கு வருகின்றாள் போலுமென்றோர் (இ)லதாகிருகத்துட் புகுந்தனர். ((இ)லதா கிருகம் – கொடி வீடு). அதாவது கொடி சூழ்ந்த வைப்பு.
நூல் : பிரசந்நராகவம் (1883) பக்கம் – 28
மொழி பெயர்ப்பாளர் : கவித்தலம் துரைசாமி மூப்பனார்
(சி. கே. கருப்பையா மூப்பனாரின் தாத்தா)
★
89. Exchange – மாற்று கைக்கட்டணம்
இந்தியாவிலுள்ள பொன்னை இங்கிலாந்துக்குக் கொண்டுபோய், அவ்விடத்தில் அதை உருக்கி, மறுபடியும் இந்தியாவுக்குக் கொண்டு வருங்காலத்தில், எக்சேஞ்சு என்ற மாற்று கைக்கட்டணம் அதின் தலைமேல் சுமத்தி, 10 (உ)ரூபாயுள்ள பொருளை 15 (உ)ரூபாயாக இந்துக்கள் திரவியத்தைக் கருவறுக்கிறார்கள்.
இதுதான் இப்படியானதென்றால், இந்தியாவிலேயுள்ள 6, 7, 8, 9 மாற்றுள்ள பொன்னை, இங்கிலாந்திலிருந்து வரும், பொன் விலைக்குச் சமானமாக உயர்த்தி இந்தியா வர்த்தகர்கள் பறிக்கிறார்கள்.
இந்தப் பொன் எந்தத் தேசத்திற்கும் போகாமலிருக்க அதற்கு விலையை உயர்த்திப் பணம் பறிக்கும் இந்துக்களைக் கவர்னமெண்டார் கவனியாதது யாது காரணமோ? உயர்ந்த உத்தியோகசுதர்கள் தங்கள் சுயநலத்தைக் கோருகிறார்களேயொழிய பொது நலத்தைக் கருதவில்லையே!
இதழ் : சிரீலோகரஞ்சனி (15-8-1888) புத்தகம் – 1 இல . 3, பக்கம் – 8.
இதழாசிரியர் : சி.கோ. அப்பு முதலியார்
★
90. அக்கிராசனம் – வீற்றிருத்தல்
தெரிந்து கொண்டுதான் பேசல் வேண்டுமென்னுங் கவலையல்லாத திடசாலிகளாகிய ஆபாசத்தார் நன்னூல் விருத்தியில் ‘பிற சொற்களும் வருமாலோ வெனின் சாத்தன் வந்தானென்றால் அவனுடையணி முதலியனவும் உடன் வருதல் கூறாதே யமைதல் போலுமென்க’ என்று ஆண்டுரையாசிரியர் கூறியதையும் ‘காது சேர்‘ என்பது முதலிய செய்யுட்களில் அவ்வாறு வருதலையும் உணர்ந்து இனியேனும் தம் உளறுபாட்டை விடுவாராக. பின்னும் ‘அஞ்ஞானவாசத்தைப் பிரித்துக் கூறவில்லை’ என்றும் ‘அக்கிரா சனத்திருத்தலைக் குறிப்பிக்கும் (வீற்றிருத்தல்) என்னும் பதத்தைப் பிரயோகித்ததே அதற்குச் சாட்சி என்றும் சொல்லுகின்றனர். இடையில் உடுத்தாடையில்லாதார் தலைககுத் தலைச் சாத்தணிந்தாற்போல ‘வீற்றிருத்தல்‘ என்னும் பதத்துக்குப் பொருளறியாதர் வாதம் பண்ணுதலை மேற்கொண்டு வந்ததென்ன?
நூல் : நிராகரண திமிரபானு (1888) பக். 23, 24
நூலாசிரியர் : தி. முத்துக்குமார பிள்ளை
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
No comments:
Post a Comment