(வெருளி நோய்கள் 226 -230 தொடர்ச்சி)

231. அறிவுவெருளி-Epistemophobia/Gnosiophobia

அறிவு தொடர்பில் எழும் தேவையற்ற மிகையான பேரச்சமே அறிவுவெருளி. 

சிலருக்குப் புதியதாக எதைக் கற்க / அறிய வேண்டுமென்றாலும் பேரச்சம் வரும். சிலருக்குக் குறிப்பிட்ட ஒன்றைக் கற்க அல்லது அறிய மட்டும் பேரச்சம் வரும்.

பள்ளிக்கூடம் செல்ல, பிள்ளைகள் அடம்பிடித்து மறுப்பதும் அறிவு வெருளிதான். பலர் படிப்படியாக இதிலிருந்து விடுபட்டு விடுகின்றனர். சிலர் இதிலிருந்து விடுபடாமல் முழுமையான அறிவு வெருளிக்கு ஆட்பட்டுவிடுகின்றனர்.

gnos  / epistemo ஆகிய கிரேக்கச்சொற்களின் பொருள் அறிவு. 

00

232. அறுவை மருத்துவ வெருளி – Tomophobia 

அறுவை மருத்துவம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அறுவை மருத்துவ வெருளி.

அறுவை மருத்துவம் பல முன்னேற்றங்களையும் எளிய முறைகைளயும் கண்டு வருகிறது. எனினும் அறுவை என்றாலேயே உயிருக்கு முடிவு கட்டுமோ, பக்க விளைவுகள் வருமோ, முழு நலன் கிட்டுமோ, என்றெல்லாம் பல வகை அச்சங்களுக்கு ஆளாகின்றனர். நோயர்களுக்கு மட்டுமல்ல நோயரின் குடும்பத்தினருக்கும் இத்தகைய அச்சங்கள் வருவது இயற்கையே. அறுவை மருத்துவம் தோல்வியுற்று இறந்தவர்கள்பற்றிய செய்திகளை அறிந்ததாலும் எல்லாமே அப்படித்தான் ஆகுமோ என்ற அச்சத்திற்கு ஆளாவோர் உள்ளனர். அறுவை மருத்துவம் என்னும் பொழுது கண் புரை அறுவை முதலான உடல் உறுப்புகள் அறுவை, உடல்உறுப்பு மாற்று அறுவை, எனப் பலவகை உள்ளன. அறுவை மருத்துவத்தில் சிக்கல் கூடக்கூட அதன் மீதான பேரச்சம் வளர்வதாக உள்ளது.

Ergasiophobia/ Ergophobia என்பனவற்றையும் அறுவை வெருளி என்கின்றனர். அவற்றைப் பணி வெருளி என்று சொன்னால் போதும்.

00

233. அறை வெருளி-Koinoniphobia

அறைகளைப்பற்றியும் அறைகளில் நிறைந்துள்ள கூட்டம் குறித்தும் அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் கொள்வது அறை வெருளி.

அறை நிறைந்த மக்களைப் பார்க்கும் பொழுது ஏற்படும் பேரச்சம் என்பதால் அறை நிறைவு வெருளி/நிறைஅறை வெருளி எனலாம். சுருக்கமாக அறை வெருளி என்கிறோம்.

தனித்தனியாக அல்லது குழுக்களாக ஒரே அறையில் இருக்கும் பொழுது அல்லது அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பொழுது வசதிக்குறைபாடு, பாதுகாப்பின்மை போன்ற எண்ணங்களால் பேரச்சத்திற்கு உள்ளாகின்றனர்.

அடைப்பிட வெருளி(Claustrophobia) யுடன் ஒப்புமை உடையது.

koini என்னும் கிரேக்கச் சொல், பொது அல்லது பகிர்வு என்பனற்றைக் குறிக்கும்.

00

234. அறைகலன் வெருளி – Epiplaphobia 

அறைகலன் வெருளி குறித்த வரம்பற்ற பேரச்சம் அறைகலன் வெருளி.

அறைக்கு அணி செய்வதால் நாற்காலி முதலிய அறைகலன்கள் அறையணி என்றும் அழைக்கப்பெறுகின்றன.

எல்லா அறைகலன் மீதும் சிலருக்குப் பேரச்சம் இருக்கலாம். சிலருக்கு ஒன்று அல்லது சில, அல்லது பல அறைகலன்கள்மீது பேரச்சம் வரலாம். சிலருக்குத் பழமையான அறைகலன்கள் மிது பெரு வெறுப்பு வரலாம். 

00

235. அற்பி  வெருளி – Dodophobia 

அற்பி (Dodo) என்னும் பறவை மீதான அளவுகடந்த பேரச்சம் அற்பி  வெருளி.

அற்பி (தோடோ)   என்பது மரபழிந்துபோன மோரிசு தீவுகளுக்குரிய பெரிய பறவை.பறக்க இயலாத அருவருப்பான தோற்றமுடைய வான்கோழி அளவுள்ள பறவை.

அற்பி (தோடோ)   பறவைபோன்று அருவருப்பான தோற்றம் உள்ளதாகக் கருதப்படுபவர்கள் மீது வரும் காரணமற்ற பேரச்சத்தையும் அற்பி வெருளி என்கின்றனர்.

00