(வெருளி நோய்கள் 246 – 250 தொடர்ச்சி)

251. ஆட்ட ஊர்தி வெருளி – Gelandelimophobia

விளையாட்டுப்பயன்பாட்டு ஊர்தி(SUV) மீதான அளவுகடந்த பேரச்சம் ஆட்ட ஊர்தி வெருளி.

விளையாட்டுப் பயன்பாட்டு ஊர்தி என்பதை வி.ப.ஊ. எனச் சுருக்கமாகக் கூறலாம். [Sport utility vehicle (SUV)]

00

252. ஆட்ட வெருளி –  Ludophobia / Athlemaphobia/ Athlematophobia

ஆட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆட்டவெருளி

விளையாடும் பொழுது ஏற்படும் சிக்கல்கள் தோல்வி மீதான பயம் போன்றவற்றால் விளையாட்டு வெருளிக்கு – ஆட்டவெருளிக்கு ஆளாகின்றனர். தோல்வியுறும் பொழுது மனம் தளர்தல், ஆட்டத்தில் தவறு செய்துவிட்டால் படபடப்பிற்கு ஆளாதல் போன்றவற்றால் இவ்வெருளி வளர்கிறது. சிறு பருவத்தில் ஏற்படும் இத்தகைய போக்கு வளர்ந்து முற்றுவதும் உண்டு.

பொதுவாக விளையாட்டு வெருளி எலலா விளையாட்டுகள் மீதும் வரலாம். குறிப்பிட்ட விளையாட்டுக்ள மீது மட்டும் வெருளி ஏற்படலாம். ஆட்டம்(game), விளையாட்டு(sport) இரண்டும் வெவ்வேறு எனத் தனித்தனியாகக் குறிப்பிடுகின்றனர். எனினும், விளையாட்டு வெருளி(Athlemaphobia/ Athlematophobia)ஐ இதனுடன் இணைத்துள்ளேன்.

ludus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஆட்டம் /விளையாட்டு.

áthlēma என்னும் கிரேக்கச் சொல்லிற்கு விளையாட்டு என்று பொருள்.

00

253. ஆண வெருளி – Ketsapphobia

ஆணம்(ketchup)குறித்த அளவுகடந்த பேரச்சம் ஆணவெருளி.

00

254. ஆணியல் பெண் வெருளி – Androgynophobia, Agorocoritsophobia

ஆணியல் பெண்(tomboy) மீதான அளவுகடந்த பேரச்சம் ஆணியல் பெண் வெருளி.

tomboy என்பது 16 ஆம் நூற்றாண்டு நடுவில் முரட்டுத்தனமும் மூர்க்கததனமும் கொண்ட சிறுவனைக் குறித்தது. 1590இல் காட்டுத்தனமாகத் துள்ளியாடும் சிறுவனைப்போல் செயல்படும் சிறுமியைக்(boyish girl) குறித்தது.

ஆணாகக் கருதிக்கொள்ளும் பெண்களைப் பெண்களாகக் கருதி ஆண்கள் பழகும் பொழுது சிக்கல் வருகிறது. இதனால் பேரச்சமும் வருகிறது.

00

255. ஆணுறுப்பு வெருளி – Phallophobia / Ithyphallophobia / Medorthophobia

ஆண் உறுப்பைப் பார்த்தால் அல்லது ஆண் உறுப்பு குறித்து எண்ணினால் விறைப்புத் தன்மை குறித்துக் கவலைப்படுவதால் ஏற்படக்கூடிய அச்சமே ஆணுறுப்பு வெருளி.

விரிந்த பொருளில் சொல்வதானால் ஆண்மை மீதான பேரச்சமே இது. விறைப்பு வெருளி என்பதும் ஆணுறுப்பு சார்ந்ததே என்பதால் அதனையும் இதனுடன் இணைத்துள்ளேன்.

தாழ்வு மனப்பான்மை, இயலாமை இருப்பதாக எண்ணி வருந்துதல், பாலுறவு வெறுப்பு போன்றவற்றாலும் ஆணுறுப்பு வெருளி வரலாம்.

phallo என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் ஆண் குறி.

Ithy என்னும் பழம்கிரேக்கச் சொல்லிற்கு நேரான என்று பொருள்.

00

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி அறிவியல் தொகுதி 1/5