(வெருளி நோய்கள் 276 – 280 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 281 – 285
281. ஆற்றல் வெருளி – Energyphobia
ஆற்றல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆற்றல் வெருளி.
ஆற்றல் வெருளி என்பது பொதுவாகத் தனித்துவமான வெருளி அல்ல. ஆனால், மின்வெருளி(Electrophobia), நெருப்பு வெருளி (Pyrophobia),கதிர்வீச்சு வெருளி(Radiophobia), அறுமரு(அறுவை மருத்துவ) வெருளி(Tomophobia) முதலிவற்றை உள்ளடக்கியது.
00
282. இ.ப.வட்டு வெருளி – DVDphobia
இ.ப.வட்டு(DVD) குறித்த வரம்பற்ற பேரச்சம் இ.ப.வட்டு வெருளி.
இலக்கமுறை பல்திற வட்டு(Digital Versatile Disc)என்பதன் சுருக்கமே இ.வ.ப.(DVD).
இ.ப.வட்டின் உள்ளடக்கங்கள் மீதும், இ.ப.வட்டின் குறிப்படங்கள் மீதும் பேரச்சம் கொள்கின்றனர்.
இவ்வட்டுகளில் அருவருக்கத்தக்க அல்லது இழிகாமப் பட உருக்களோ, படங்களோ செய்திகளோ இருக்கும் எனக்கேள்விப்பட்டு எல்லா வட்டுகளின் மீதும் பேரச்சம் ஏற்படுவதுண்டு.
00
283. இ.பா.வெருளி – BJphobia
புனைவுருவான இளைய பாரனி(Barney Junior) குறித்த வரம்பு கடந்த பேரச்சம் இ.பா.வெருளி.
proto, cerat, ops ஆகிய கிரேக்கச் சொற்களின் பொருள்கள் முறையே முதல், கொம்பு, முகம் என்பன. சேர்த்து முதற்கொம்பு முகம் என்றாகிறது. முதற்கொம்பு முக மூமா(dinosaur) போன்ற வடிவுடைய புனைவுருவின் பெயர் இளைய பாரனி(Barney Junior). ஆங்கிலச்சுருக்கெழுத்தில் இ.பா. / B.J என அழைக்கப்படுகிறது.
முதலில் கொம்புமுக வெருளி எனக் குறித்தேன். அவ்வாறு குறிப்பிட்டால் ‘கொம்புமுக மூமா’ எனத்தவறாகப் பொருள் கொள்ளலாம் என்பதால் புனைவுரு பாத்திரமான இளைய பாரனியின் பெயரே குறிக்கப்பட்டுள்ளது.
00
284. இசிவு வெருளி-Tetanophobia
இசிவுநோய் / வாய்ப்பூட்டு நோய் தொடர்பான வரம்பு கடந்த பேரச்சம் இசிவு வெருளி.
துருப்பிடித்த ஆணி போன்ற இரும்புப்பொருள்கள், தூசி போன்றவற்றால் இசிவு நோய் ஏற்படுவதால் இவற்றைக்கண்டாலே பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
285. இசை வெருளி – Melophobia/Musicophobia
இசை தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் இசை வெருளி.
பல்வகை இசை குறித்தும் தனிதனியே அமையும் இசை வெருளிகள் பின்னர் இங்கே தரப்பட்டுள்ளன.
melodia என்னும் கிரேக்கச் சொல்லிற்கு இசை எனப் பொருள்.
சிலர் இசையின் மீதான பகுத்தறிவற்ற, தீவிர அச்சம் கொள்கின்றனர். இசை அச்சுறுத்தலாக இல்லாத சூழ்நிலைகளில் கூட, இசையைக் கேட்கும் பொழுது பதற்றம் கொள்கின்றனர்.
சிலருக்குக் குறிப்பிட்டவகை இசை அல்லது குறிப்பிட்ட மொழி இசை அல்லது குறிப்பிட்ட நாட்டு இசை மீது பேரச்சம் ஏற்படுவதுண்டு.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment