(வெருளி நோய்கள் 286 – 290  தொடர்ச்சி)

291. இட வயின் வெருளி –  Levophobia / Sinistrophobia

இடப்பக்கம் உள்ள பொருள்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் இட வயின் வெருளி

இவர்களுக்கு இடப்பக்கக் கைப்பழக்கம் உள்ளவர்கள் மீதும் இடப்பக்க உறுப்புகள் மீதும் தேவையற்ற வரம்பற்ற பேரச்சம் வரும்.

இடப்பக்கம் எதிர்நோக்கும் எதைக் கண்டாலும் அதனால் பெருந்தீங்கு விளையும் எனப் பேரச்சம் கொள்வர்.

இடப்பக்க அச்சத்தால் ஓட்டுதல், படித்தல் அல்லது பொருட்களை எட்டுதல் போன்ற எளிய பணிகள் கூடப் பதற்றத்தை ஏற்படுத்தும். எனவே மேலும் பேரச்சம் கொள்வர்.

புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ
(நெடுநல்வாடை அடி 181) என்பதன் பொருள்-

(தோளிலிருந்து) வழுக்கி விழுந்த அழகிய ஆடையை இடப்பக்கமாகத் தழுவி

இச்சங்க இலக்கிய அடியைப் பின்பற்றி இங்கே இட வயின் என்று சொல்லப்பட்டுள்ளது.

(தோளிலிருந்து) வழுக்கி விழுந்த அழகிய ஆடையை இடப்பக்கமாகத் தழுவி

  • இச்சங்க இலக்கிய அடியைப் பின்பற்றி இங்கே இட வயின் என்று சொல்லப்பட்டுள்ளது.

“sinistro” என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இடம்/இடப்பக்கம். பேச்சு வழக்கில் இடது என்கிறோம்.

00

292. இட வெருளி –  Topophobia 

இடம் குறித்த வரம்பற்ற பேரச்சம் இட வெருளி.

குறிப்பிட்ட இடம் அல்லது குறிப்பிட்ட இடங்களைப்பற்றி வரும் பேரச்சம்.

இடம் என்பது தெரு, கட்டடம், சுற்றுப்புறம், குறிப்பிட்ட சூழலில் அமைந்த நிலப்பகுதி மூடப்பட்டுள்ள குறிப்பிட்ட பகுதி, திறந்துள்ள குறிப்பிட்ட பகுதி என எல்லாவற்றையும் குறிப்பிடும்.

topo என்னும் இத்தாலியச் சொற்பகுதியின் பொருள் இடம் என்பதாகும்.

அவைக்கூச்சம் முதலானவையும் இதில் அடங்கும்.

00

293. இடர் வெருளி – Dyskolophobia

ஒருவருக்கு நேரும் இடையூறு, இடர், தொந்தரவு முதலியன குறித்து ஏற்படும் வரம்பற்ற பேரச்சம் இடையூறு வெருளி.

ஒரு செயலை அல்லது பணியை அல்லது தொழிலைத் தொடங்கும் பொழுது இதில் இடம் வரும் எனக் கருதிப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.

நீச்சல் அடிப்பதற்கு நீரில் குதிக்காமலேயே இடர்ப்பாடு வரும் என அஞ்சுவோர் போல் ஏதம், துன்பம், இடர்கள் வரும் எனப் பேரச்சம் கொள்பவர்கள் இத்தகையோர்.

Dyskolo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் இடயூறு/இடர்ப்பாடு

00

294. இடர்ப்பு வெருளி – Periculophobia

இடர் வாய்ப்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் இடர்ப்பு வெருளி.

periculo என்னும் இலத்தீன் சொல்லிற்கு இடர் வாய்ப்பு(risk) எனப் பொருள். அதுவே இடர்ப்பு எனப்புதுச்சொல்லாகக் குறிக்கப்பெற்றுள்ளது.

இடர்ப்பில் இறங்கித் தோல்வியைச் சந்தித்து வரும் துன்பத்தை எண்ணி இடர்ப்பு வெருளிக்கு ஆளாகின்றனர்.

00

295. இடறல் வெருளி – Analafrophobia

இடறி விழுதல் தொடர்பான அளவுகடந்த கவலையும் பேரச்சமும் இடறல் வெருளி.

ஒரு முறை இடறி விழுந்தால் அது குறித்து எப்பொழுதும் அஞ்சும் இயல்பு உள்ளவர்கள் உள்ளனர். சான்றாக ஒரு முறை நகர் ஏணியில்  இடறி விழுந்தால் எப்பொழுதும் நகர் ஏணியில் ஏற அஞ்சி ஒதுங்குவர்.

இத்தகையோர் இடறுகை, தவறுகை,தடுக்கி விழுதல் போன்ற தடுமாற்றங்கள் குறித்த பேரச்சம் எப்போதும் கொண்டிருப்பர். மேலும் இதனால் அடிபடுமோ காயம் படுமோ என்றும் அஞ்சுவர்.

00

(தொடரும்)