தமிழில் எண்ணற்ற அறிவியல் செய்திகள் உள்ளன. இன்றைக்குக் காணப்படும் அறிவியல் உண்மைகள் அன்றே கண்டறியப்பட்டுள்ளன. அறிவியல் தமிழின் அன்றைய வளத்தையும் இன்றைய உண்மையையும் உணர்த்த அனைவருக்குமான அறிவியல் தமிழ் என்னும் நூல் கணியச்சில் உருவாக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக உறங்கிக் கிடக்கும் உண்மைகளை இணையத்தில் ஏற்றலாம் என இவ்வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. புதிய பதிவுகளும் மேற்கொள்ளப்படும்.
தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை உணர்த்துவதாக உள்ளன. சொற்களே அறிவியலை உணர்த்துகின்றன என்றால் அறிவியல் துறையில் நம் முன்னைப் பழந்தமிழர் மிகச் சிறந்து இருந்திருக்க வேண்டும் அல்லவா? நாம் மீண்டும் அறிவியலில் சிறந்து விளங்கப் பழந்தமிழ் அறிவியல் வளங்களை அறிந்து புதியன படைக்க வேண்டும். இங்கே நாம் பயிர் அறிவியல் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
பயிர் வகைகளை வகைப்படுத்திப் பெயர்கள் சூட்டியுள்ளமையே மிகச் சிறந்த அறிவியல் வளத்திற்கு நாம் உரியவர்கள் என்பதை எடுத்து இயம்புகின்றது.
அரும்பு, மொட்டு, மலர், முகை, வீ முதலான பூ வகைகளும் இலை, கீரை, ஓலை, மடல் முதலான இலை வகைகளும் தமிழின் பயிர் அறிவியல் வளத்தை உணர்த்துவனவாகும். மேலும் சிலவற்றைப் பார்ப்போம். பூக்காம்பு சிறியதாக இருப்பின் காம்பு என்றும் பருத்தும் மென்மையாகவும் இருப்பின் தாள் அல்லது தண்டு என்றும் உள் துளையுள்ளது நாளம் என்றும் அழைக்கப் பெறும். பூவின் அகவிதழ் அல்லி என்றும் புறவிதழ் புல்லி என்றும் அழைக்கப் பெறும். இதழ் பெரியதாக இருப்பின் மடல் என்றுதான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு, நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக வழி வழியாக அறிவியல் மரபைப் பின்பற்றியே உரிய பிரிவு வகைளுக்கேற்பவே சொல்லி வருகிறோம். இருப்பினும் இன்று மரபுகளை மறந்தும் அறியாமலும் தவறாகப் பேசும் வழக்கம் வந்துள்ளது. நாம் மரபார்ந்த தமிழ் அறிவியல் சொற்களை அறிய திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, உரிச்சொல் நிகண்டு முதலான பல்வேறு நிகண்டுகளைப் படித்துப் பார்க்கலாம். எடுத்துக்காட்டிற்கு ஒரு நிகண்டு நூற்பாவைப் பார்ப்போம்.
மணமலி பூவீ மலர்போ து அலராம்
துணர் மஞ்சரிகொத்துத் தொத்தோடு இணராம்
நலம்சேர் குலைதாறு வல்வரியாகும்
பலம்காய் கனியாம் பழம்
(உரிச்சொல் நிகண்டு பா. 94)
அஃதாவது மலரானது பூ, வீ, போது. அலர் என்றும் பூங்கொத்தானது துணர், மஞ்சரி, தொத்து, இணர் என்றும் குலையானது தாறு, வல்லரி என்றும் பழமானது பலம், காய், கனி என்றும் பெயர் பெறும். இவ்வாறு உரிச்சொல் நிகண்டு வகைப்படுத்திக் கூறுகிறது.
கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வந்த உரிச்சொல் நிகண்டிற்கு முன்னரே கி.பி. 9ஆம் நூற்றாண்டில் வந்த பிங்கல நிகண்டு இதே பொருண்மையில் சொல்லும் நூற்பாக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
தாதும் அதழும் தண்டும் தோடும்
ஏடும் பூவின் இதழ்ப் பெயர் என்ப.
அல்லி அகஇதழ்
புல்லி புற இதழ்
(பிங்கல நிகண்டு பா. 2813-2815)
இவ்வாறு நிகண்டுகள் தெரிவிக்கும் அறிவியல் உண்மைகளைக் கூறப் பல நூற் தொகுதிகள் வெளியிட வேண்டும். எனினும் சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் பார்ப்போம். மொழி ஞாயிறு பாவாணர், புலவர்மணி இரா.இளங்குமரனார் முதலான அறிஞர்கள் பலரும் தமிழின் சொல் வளம் குறித்து முன்னரே கட்டுரைகள், நூல்கள் வழி விளக்கி உள்ளனர். இலக்கியங்கள் அடிப்படையிலும் வழக்குச் சொற்கள் அடிப்படையிலும் அவர்கள் தெரிவித்தவற்றையே நாம் காண்போம்.
பிஞ்சின் பெயர்கள் அதனதன் நிலைக்கேற்ப மாறுபடும்.அவையாவன: பூவோடு கூடிய இளம்பிஞ்சு- பூம்பிஞ்சு; இளங்காய்-பிஞ்சு; மா- வடு; பலா- மூசு; எள்-கவ்வை, தென்னை, பனை-குரும்பை, சிறு குரும்பை-முட்டுக் குரும்பை, முற்றாத தேங்காய்- இளநீர், இளம் பாக்கு-நுழாய், இள நெல்- கருக்காய், வாழை- கச்சல்.
காய், கனி, இலை, வேர் முதலான ஒவ்வொன்றிற்கும் அவற்றின் வகைகள், நிலைகளுக்கேற்பப் பெயர் சூட்டியுள்ள அறிவியல் வளம் பிற மொழிகளில் காண இயலாதது. அறிவியல் பாடங்கள் இவற்றின் அடிப்படையில் அமையும் வகையில் அறிவியல் ஆசிரியர்கள் நூல்களை எழுத வேண்டும். பாடத்திட்டங்களும் அதற்கேற்ப அமைய வேண்டும். இவை பிற மொழிப் பாடங்களிலும் இடம் பெற்று உயர்தனிச் செம்மொழியான தமிழ் அறிவியல் மொழி என்பதை உலகோர் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
தமிழ் அறிவியல் செய்திகளைத் தரணி எங்கும் பரப்புவோம்!