Sunday, July 31, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 325- 332

அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 321- 324 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 325-332

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

325. விவாகவேசம் – மணக்கோலம்

குறமடந்தை – குறச்சிறுமி, (வள்ளி நாயகி) மணக்கோலம் – – விவாகவேசம், மணக்கோலமானவன் செங்கீரை யாடியருள் எனவும், தெய்வங்கள் மணவாளன் செங்கீரை யாடியருள் எனவும் முடித்துக் கொள்க.

நூல்      :           முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் (1914), பக்கம் – 26

உரையாசிரியர்  :           காஞ்சி. மகாவித்துவான் இராமசாமி நாயுடு

326. விதூசகன் —        கோமாளி, கோணங்கி

327. உரோகணி           —        உருளி

328. தேசோமயம்        —        பேரொளி

329. பரிபாகம் —        ஏற்ற பக்குவம்

330. அஞ்சுகம் —        அழகிய கிளி

331. அபரஞ்சி —        புடமிட்ட பொன்

332. கருடன்    —        பறவைக்கரசு

நூல்      :           சதகத்திரட்டு (1914) சென்னைமதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டது.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Saturday, July 30, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 321- 324

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 316- 320 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 321- 324

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

குறிப்பு : கவிஞர் சுரதா அவர்கள் நூல்களிலும் இதழ்களிலும் இடம் பெற்ற மொழி மாற்றச்சொற்களைத்தொகுத்துத்தந்துள்ளார். ஆனால், பின்வரும் பத்திகளில் குறிப்பிட்டனவற்றிற்கான தமிழ்ச்சாெற்கள் குறிப்பிடப்படவில்லை. நூலில் விடுபட்டதா?அல்லது வேறு நோக்கில் சேர்த்துள்ளாரா என்றும் புரியவில்லை. எனினும் நூலில் உள்ளவாறு (கிரந்த எழுத்துகள்மட்டும் நீக்கிக்)கிழே தரப்பட்டுள்ளது. எழுத்துப்பிழைகளாகத் தெரிவனவற்றையும் திருத்தவில்லை.

321.

சூரியன், சிருட்டி தெளிந்தருளிய சிரீமது பஞ்சமுக விசுவப்பிரம்மாண்ட பிரம்மிதே சத்ரு சாகர பரியந்தம் தேவப்பிறாம்மனோப்யோ சுயம்பவந்து மாந்தூர் கிண்ணந்தூர்.

மாகா ஆசீர்வாதம் சம்பூர்ணம்

அ. பட்டனாச்சாரி அவர்கள் எழுதிய பஞ்சப்றம்ம கப்பல்

322.

பாறுலகில், ளமநுவிசுவப்றம்மா, தேசிகா, மனுவிசுவப்பிரம்மா பவுசுடனேசானகரிசி கோத்திரம் தேசிகா, இரிசிகோத்திரம் குசுதிரமா ஆசுவலாயணமா தேசிகா, ஆசுவ லாயணமா பபிரவரயாம் சத்துயோ சாதமது தேசிகா, சத்துயோ சாதமது, பண்புடனே அமுதரிந்த கார்முனைகள் ஏழு கப்பல், தேசிகா, ஏழுகப்பல், கலப்பை நாலுகப்பல் கூர்மையுள்ள எழுத்தாணி சந்திவி, தேசிகா எழுத்தாணி, குணமுடனே ஏழு கப்பல் சீருடனே ரிக்குவேதம் தேசிகா சிறந்தபடி, வேதபாறாயணமும் தேசிகா வேதபாறாயணமும்.

323.

அய்யும், ஓம குண்டமும், அவுபாசனமும், அநுக்கிரக சித்தியும் உருத்திரன் சிருட்டியும் தயவான மனுநீதியும் தண்டமிள் விளங்க அகராதி நன்னூலும் டொப்பிகளறுக்கவே கத்தியொரு கப்பல் துள்ளிபமான கூர்மண் வெட்டியும், பொர்பணிகள் போலவே வங்கிசமுதாடு புகளான கட்டாளி கன்றகோடாலி அப்பு வெளியாகவே பிக்காசு குந்தாளம், அடவுடனே வருகிறது அஞ்சாறுகப்பல் துப்பாக்கி பீரங்கி பன்னிரண்டு கப்பல் துட்டர்களை வெட்டவே கத்தி யொருகப்பல் குப்பரத்தள்ளி குத்தி மலத்தும் கூர்மையுள்ள ஈட்டி வேல் வல்லயமனந்தம் செப்பமுள கைதோட்டா, வெடிகளொருகப்பல் சீறானசுருட்டு கைபிடி அருவாள்.

324.

பற்பல ஆயுதம் அனேகங்களுண்டு பண்புடன் சொல்ல என்னாவு காணாது சொர்ப்பமாய் சொல்லுகிறேன் தந்தியொரு கப்பல் சுகம்னகெடிகாரம் முவெட்டு கோடி நிப்பரம் நிமிசத்தில் நூறுமயிலோடும் நேர்த்தியுள்ள இரயில்வண்டி முன்னூறு கப்பல் நாலஞ்சுகப்பல் தப்பமுடன் மிதிவண்டி ஒவ்வொரு கப்பல் தப்புகள்வறாமலே உயர்வான மோட்டார்கார் வண்டி யொருகப்பல் தப்புகள் வறாமலேறகங்ளெல்லாம் தானாகப்பாடுகின்ற புவனகறாப்பெட்டி கற்பகம் போலவே அரண்மனைகள் செய்ய கதவுநிலைக்கெல்லாம் கொப்புக்கன சில சாமான் அற்ப்புதமாய் மனுவேலை அளவிட்டு சொல்ல ஆதிசேடனாலும் முடியாது சாமி இப்படியே இவ்வளவும் ஏற்றுமதியாகி இனமான மாந்தை நகர் விட்டேகி வருகுதையா கப்பல் ஏலேலோ ஏலேலோ தேசிகா ஏலேலோ.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Friday, July 29, 2022

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 10

 அகரமுதல




(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 9 இன் தொடர்ச்சி)

குமரிக் கோட்டம்

அத்தியாயம் 2 தொடர்ச்சி

’சே, கட்டேலே போறவனே?’ என்று கூவிக் கொண்டே, செட்டியார் பிடியிலிருந்து திமிரிக் கொண்டு கிளம்பினாள் குமரி. இதற்குள், ஆடை நெகிழ்ந்து புரண்டிடவே, காலிலே புடவையின் ஒரு முனை சிக்கிக் கொள்ள, இடறிக் கீழே வீழ்ந்தாள். செட்டியார் அவளைத் தூக்கி நிறுத்தினார். அவளுக்கு மேலும் மேலும் மயக்க உணர்ச்சி அதிகரித்தது. எதிர்க் கும் போக்கும் போய்விட்டது. அவளும், அணைப்புக்கு அணைப்பு, முத்தத்துக்கு முத்தம், என்ற முறையில் விளையாடத் தொடங்கினாள்.

“கண்ணு”

“ஏன், மூக்கு “

“இதோ பார்! ”

“மாட்டேன், போ.”

“ஒரே ஒரு முத்து.”

”வெவ்வெவ்வே.”

இன்பவிளையாட்டு! செட்டியார் பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்ததை விட, மிக இரம்மியமாகி விட்டது.

செட்டியார் மடி மீது தலை வைத்து அவள் சாய்வாள். செட்டியார் குனிந்து ஒரு முத்தம் தருவார்; தலையைப் பிடித்து அவள் ஓங்கிக் குட்டுவாள். பிறகு திமிரிக் கொண்டு எழுந்திருப்பாள். செட்டியாரைப் பிடித்திழுத்துத் தன் மடியில் தலையைச் சாய்த்துக் கொள்ளச் சொல்வாள்; செட்டியாருக்கு மூச்சுத் திணறும்படி முத்தங்கள் சொரிவாள். ஒரு ஆண்பிள்ளையின் பார்வை சற்று வேகமாகப் பாய்ந்தால் கோபிக்கும் குமரிக்கு இவ்வளவு “சரசத்தன்மை” இருக்குமென்று செட்டியார் நினைத்த தில்லை! செட்டியாருடைய முழுக்கு, பூச்சு, பக்தி, பாராயணம், ஆசாரம், சனாதனம் ஆகியவற்றைக் கண்டவர் தான். நள்ளிரவில், அவர் கல் உடைக்க வந்த கன்னியின் கன்னத்தைக் கிள்ளிக் கொண்டும், கூந்தலைக் கோதிக் கொண்டும், காமுகக் குமரன் போல் ஆடிக் கிடக்கக் கூடியவர் என்று எண்ணியிருக்க முடியும் !

காலை முதல் வேலை செய்த அலுப்பினால் அவள் குடிசையிலே, கையே தலையணையாகக் கொண்டு தூங்கி இருக்க வேண்டியவள், ஒரு இலட்சாதிகாரியின் மடியிலே ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு இருக்கிறாள்! கைலாயக் காட்சியைக் கனவிலே கண்டு இரசிக்க வேண்டிய நேரத்திலே பக்திமானான செட்டியார், தம்முடைய வாலிப மகன், காதலித்தவளைக் கடிமணம் புரிவேன் என்று சொன்னதற்காக, ‘காதலாம், காதல் ! சாதியைக் கெடுத்துக்கொள்வதா, குலம் நாசமாவதா, ஆசாரம் அழிவதா, ஒரு பெண்ணின் சிநேகத்துக்காக, என்று கனல் கக்கிய செட்டியார், ஒரு பெண்ணை, கூலி வேலை செய்ய வந்தவளை, நடுசியில், கட்டி முடியாத கோயிலில். ’கண்ணே ! மணியே!’ என்று கொஞ்சிக்கட்டித் தழுவிக்கொள்கிறார், அதுவும் அவள் தன்னுடைய நிலையை இழந்து விடும்படியாக மயக்கம் தரும் லேகியம் சாப்பிடும்படி செய்து. செட்டியாருக்கு இவற்றை எண்ணிப் பார்க்க நேரமில்லை ; அவருக்கு அளவில்லாத ஆனந்தம் ; எத்தனையோ நாட்களாகக் கொண்டிருந்த இச்சை பூர்த்தியாயிற்றே என்ற சந்தோசம் !

இன்று இரவு அவருக்கு. இன்ப இரவுக்குக் கடிகாரம் ஏது? கோட்டான் கூவினால் கூடக் குயிலின் நாதமாக வன்றோ அந்த நேரத் தில் தொனிக்கும். கருத்த மேகம் சூழ்ந்த வானமும் கூட. அன்று தனி அழகாகத்தானே காணப்படும்! இன்பத்துடன் அளவளாவும் நாள் அமாவாசையாக இருந்தாலும், பெளர்ணமியாகி விடுகிறது என்பார்கள். செட்டியாரின் நிலை அதுதான். அவர் மனத்திலே அந்த நேரத்தில் கொஞ்சமும் பயமில்லை. “என்ன காரியம் செய்தோம் ! நமது வயது என்ன ! வாழ்க்கை எப்படிப்பட்டது ! எவ்வளவு பாசுரம் படித்தோம், எத்தனை திருக்கோயில் வலம் வந்தோம்? காமத்தின் கேடுபற்றி எத்தனை புண்ணிய கதை படித்திருக்கிறோம்? ஒரு கன்னியை, — அவள் நிலை தவறும் படி செய்வது தகுமா? இவ்வளவு மோகாந்த காரத்தில் மூழ்குவது சரியா?” என்று சிந்திக்கத் துளியும் முடியவில்லை.

அவளுடைய அதரம், அதன் துடிப்பு ! அவளுடைய விழிகள், அவை கெண்டை போல ஆடுவது! அவளுடைய துடியிடை ! குழையும் பேச்சு ! இவற்றைக் கண்டு, ரசித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு வேறு விதமான நினைப்பு வருமா!

எந்த வாயால், “காமத்துக்குப் பலியாகி சாதியைக் கெடுக்கத் துணிந்தாயே, நீ என் மகனல்ல, என் முகாலோபனம் செய்யாதே, போ வீட்டை விட்டு” என்று கூறினாரோ அந்த வாயால், செட்டியார், அழகுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். காதல் கீதம் பாடிக் கொண்டிருந்தார். “இது இதழல்ல கனி; கன்னமல்ல ரோசா ; கண்ணல்ல தாமரை,” என்று கவிதைகளைப் பொழிந்து கொண்டிருந்தார். தூங்கிக் கிடந்த ரசிகத் தன்மை முழுவதும் வெள்ளமெனக் கிளம்பிற்று. இன்ப இரவு அவருக்கு ! அவளுக்கோ, ஏமாந்த இரவு ! அவள் அறியமாட்டாள், காமத்துக்குத்தான் பலியாக்கப் படுவதை.

அவள் ஏதோ ஓர் உலகிலே சஞ்சாரம் செய்து கொண்டிருந்தாள். அந்த உலகிலே நிற்கமுடியவில்லை; கண்கள் சுழன்றபடி உள்ளன; ஏதோ ஓர் வகைக் களிப்பிலே மூழ்கி மூழ்கி எழுந்திருக்க வேண்டி இருக்கிறது. காரணம் தெரியவில்லை களிப்புக்கு. ஆடலும் பாடலும் திடீர் திடீரென்று கிளம்புகிறது; லாகிரியால் ஏற்பட்ட ஆனந்த நிலைமையிலே அவள் இருந்தாள். அவள் நிலை இழந்தாள், அவர் இன்பம் பெற்றார். தாம் சூது செய்து அந்தச் சுந்தரியை அடைந்ததாகவே அவர் எண்ணவில்லை : எப்படியோ ஒன்று எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது என்ற திருப்தி. அதுமட்டுமில்லை, சாமர்த்தியமாக அந்தச் சரசியைப் பெற்றுவிட்டோம் என்ற சந்தோசம். மதில் சுவரின் மீது ஓசைப் படாமல் ஏறி, மேல் வேட்டியை வீசிக் கிளையை இழுத்து, கிளையிலே கூத்தாடிய மாங்கனியை மெல்லப் பறித்தெடுத்து, முகர்ந்து பார்த்துத் தின்னும் போது, அதன் சுவையிலே இலயித்துவிடும் கள்ளனுக்கு, கனி திருடினோம் என்ற கவனங்கூட வருவதில்லை. மீறிவந்தாலும், தன் சாமர்த்தியத்தைத் தானே புகழ்ந்து கொள்வானே தவிர, செச்சே! எவ்வளவு சூதாக நடந்து கொண்டோம் என்று எண்ணிச் சோகிக்கமாட்டானல்லவா !


கனியைக் களவாடுபவனை விட, கன்னியரைக் களவாடுபவன், கட்டுத் திட்டம், சட்டம் சாத்திரம், பதிகம் பாசுரம் ஆகியவற்றின் பிடியிலா சிக்குவான் ! முள் வேலியைத் தாண்டி விட்டோம் என்று கருதிக் களிப்பான். இன்ப இரவு. அவ்வளவுதான் அவருக்குத் தெரியும் ! அவள் ஓர் அழகி, அவ்வளவுதான் அவருக்குத் தெரியும். அவளை அடைந் தாகிவிட்டது. அதுபோதும் அவருக்கு . குறும்புப் பார்வைக்கும் கேலிப் பேச்சுக்கும் கூடக்கோபித்துக் கொள்ளும் குமரி, குழந்தை போலத் தூங்கிவிட்டாள், குழந்தை வேலச் செட்டியாரின் மடியில் சாய்ந்தபடி. செட்டியார், மடியில் சாய்ந்திருந்த மங்கையைப் பார்த்தபடி இருந்தார். நெடுநேரம் தூங்கவில்லை. பிறகு, அப்படியே அவரும் நெல்மூட்டை மீது சாய்ந்தபடி நித்திரையில் ஆழ்ந்தார். ஆதவன் உதித்தான்!

(தொடரும்)

கா.ந. அண்ணாதுரை

குமரிக்கோட்டம்

Thursday, July 28, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 316- 320

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 309-315 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 316-320

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

316. அபிமானம் – பற்றுள்ளம்

ஆரியம் வேதமுதலியன நிறைந்துள்ள தெய்வமொழி என்று அடிப்படுகின்றமையின், தெலுங்கு முதலியன அதினின்று பிறந்தன எனின் அவ்வம்மொழியார் கனிவு காட்டுதலும், தமிழினின்று அவை பிறந்தனவெனின் முனிவு காட்டுதலும், பற்றுள்ள மேயன்றி முறைமையாகாது. அப்பற்றுள்ளத்தினின்றும் நீங்கி யுண்மை யெதுவென ஆராய்ந்து தெளிதல் வேண்டும். பற்றுள்ளம் – அபிமானம்.

நூல்   :     மொழிநூல் (1913) பாயிரவியல், பக்கம் 34

நூலாசிரியர்    :    மாகறல் கார்த்திகேய முதலியார்

317. கிரகபதி – கோளரசு

செந்தமிழ் நிலம் நடுவிலும், அதனைச் சூழப் பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடும், அக்கொடுந்தமிழ் நாட்டைச் சூழச் சிங்களம் சோனக முதலிய நாடுகளும் வைத்துக் கூறினதை யுய்த்துணரின் செந்தமிழ்க்குப் பன்னிரண்டு கொடுந்தமிழ் மொழியும் அணுக்கவியைபுடையன என்பதும், சிங்களம் சோனக முதலியன சேய்மை யியைபுடையன என்பதும் பெறப்பட்டமை காண்க. ஏனைய கோள்களுக்கும் அக்கோள்களி னடுவிலுள்ள சூரியனுக்கும் இயைபுண்மை போல, ஏனையமொழிகளுக்கும் அம்மொழிகளி னடுவிலுள்ள செந்தமிழ்க்கும் இயைபுண்மை பெற்றாம். சூரியன் கோளரசென்பது போலத் தமிழ் மொழியரசென்பது பெறப்படுகின்றது. கோளரசு – கிரகபதி.

நூல்   :    மொழிநூல் (1913) பாயிரவியல், பக்கம் 38

நூலாசிரியர்    :  மாகறல் கார்த்திகேய முதலியார்

318. Museum – பல பொருள் காட்சி சாலை

மியூசியம் : பல பொருள் காட்சி சாலை, இது எழும்பூரிலிருக்கும் ஓர் நேர்த்தியான கட்டடம். நானாவிதமான நூதன வசுதுக்களையும் வினோதப் பொருள்களையும் கொண்டு வந்து சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நாடக சாலையும், பெரியதொரு புத்தக சாலையும் இருக்கின்றன.

நூல்   :           விட்ணு தல மஞ்சரி (1908-1913)

இரண்டாம் பாகம் பக்கங்கள் 89-93

நூலாசிரியர்  :   மயிலை கொ. பட்டாபிராம முதலியார்

319. Cycle – மிதிவண்டி

நிமிடத்தில் நூறு மையிலோடும் நேர்த்தியுள்ள ரயில்வண்டி, முந்நூறு கப்பல், நாலஞ்சுகப்பல் தப்பமுடன் மிதிவண்டி ஒவ்வொரு கப்பல், தப்புகள் வராமலே உயர்வான மோட்டார் கார்வண்டி,…

நூல்   :   சந்தியா வந்தனம் (1913), பக்கம் – 35

நூலாசிரியர்  :    கோ. வெங்கிடாசல ஆச்சாரியார், திருச்சிராப்பள்ளி

320. மகாநாடு (மாவட்ட) மாநாடு

1 அமெரிக்க மதுரை மிசினில் உள்ள கிறித்துவ ஆலயங்களின் மாவட்ட மாநாட்டின் மூன்றாவது ஆண்டு அறிக்கை : முதற்பதிப்பு; II சாமுவேல் சோசப்பு அய்யர், அருப்புக்கோட்டை, லெனாக்சு பிரசு, பசுமலை, சூலை, 1913

நூல்   :   அமெரிக்க மதுரை மானினில் உள்ள கிறித்துவ ஆலயங்களின் மாவட்ட மாநாட்டின் மூன்றாவது ஆண்டு அறிக்கை (1913)

நூலாசிரியர்  :    ஏ.எசு. அப்பாசாமி பிள்ளை தமிழ்நூல் விவர அட்டவணை (1911-1915) மூன்றாம் தொகுதி – மூன்றாம் பகுதி பக்கம் – 34 பொதுப் பதிப்பாசிரியர் கொண்டல் மகாதேவன், பி.எசி, எம்.ஏ.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Tuesday, July 26, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 309-315

 அகரமுதல


      27 July 2022      No Comment



(தமிழ்ச்சொல்லாக்கம்: 305- 308 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 309-315

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

309-315. ஏழிசை ஒலிகள்

309. ச, சட்சம்         —        மயிலொலி

310. ரி, ரிடபம்       —        எருத்தொலி

311. க, காந்தாரம்            —        யாட்டொலி

312. ம, மத்திமம்   —        கிரவுஞ்சவொலி

313. ப, பஞ்சமம்    —        குயிலொலி

314. த, தைவதம்   —        குதிரையொலி

315. நி, நிடாதம்    —        யானையொலி

நூல்   :           மொழிநூல் (1913) பாயிரவியல், பக்கம் 15

நூலாசிரியர்         :           மாகறல் கார்த்திகேய முதலியார் (சைதாப்பேட்டை, கண்டி வெசுலேனியன் மிசன் தியலாசிகல் காலேசு தமிழ்ப்பண்டிதர்)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, July 24, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 305- 308

 அகரமுதல

     25 July 2022      No Comment








(தமிழ்ச்சொல்லாக்கம்: 302-304 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 305-308

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

305. சர்வசுதந்தரம் – முற்றூட்டு

இராசநீதிகளையும், ஆசாராதிகளையும், வழக்கங்களையும், தெய்வத்தையும், புண்ணிய பாவ மோட்ச நரசாதிகளையும், சிவஞானத்தையும் யாவர்க்கும் உணர்த்துவதும், பூர்வ சரிதங்களை விளக்குவதும் இவ்வியற்புலமையன்றோ? இத்தகைய உயர்வு தாழ்வுகளையறிந்தே பூர்வ அரசர்களில் எத்தனையோ பேர், இயற்புலவர்கட்கு முற்றூட்டாகப் (சர்வசுதந்தரம்) பல கிராமங்களைத் தானஞ்செய்தும் பற்பல ஆடையாபரண வாகன முதலிய விசேட மரியாதைகளைச் செய்தும் பாதுகாத்ததுடன் தமக்கு முக்கிய மந்திரிகளாகவும், உயர்ந்த துணைவர்களாகவும், தம்மினுமிக்க மரியாதையுடன் எப்போதுந்தம்முடன் (இவ்வியற்புலவர்களையே) வைத்து, அவர்கள் சொல்வழி நின்று புவிபுரந்து புகழ்புனைந்து வாழ்ந்தார்களென்பது புறநானூறு முதலிய பழைய நூல்களால் நன்கு புலப்படுவதாகும்.

நூல்   :  இயலிசைப்புலவர் தாரதம்மியம் (1911) பக்கம் – 3

நூலாசிரியர்    :     மு. ரா. கந்தசாமிக் கவிராயர்

306. Photo – நிழல்படம்

ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் 5-மணியோடு கண்காட்சி சாலை முடிந்ததும் அன்றிரவு 8மணி முதல் 10 மணி வரை செயின்டு மேரி ஐசுகூல், போனரே சாமியார் அவர்கள் நிழல்படம் காட்ட ம-ள-ள-சிரீ என்.எசு.செம்புணாதய்யர் அவர்கள், ஊர்வன சாதி, பட்சி சாதி இவற்றைப்பற்றி ஒரு உபந்நியாசம் செய்தார்.

இதழ் :    விவேக போதினி (நவம்பர் 1911) எண்,5. பக்கம் – 223

சொல்லாக்கம்     :    சி. வி. சாமிநாதையர்

307. Vote – வாக்கு

மேற்றிசை மதங்கள் தற்காலத்திய ‘ஸயன்சு’ என்னும் சாத்திர வாராய்ச்சியின் எதிர்நிற்கச் சத்தியற்று, படு சூரணமாய் மண்ணோடு மண்ணாய் மாறியும் குருட்டு நம்பிக்கையையும் மூட விசுவாசத்தையும் மிசனரி சபைகளில் (vote) வாக்கின்பேரில் முடிவாகும் சித்தாந்தங்களையுமே பிரமாணமாகக் கொண்டிருக்கும் மேற்றிசை மேற்பூச்சு மதங்களெல்லாம் சாத்திர வாராய்ச்சியாகிற பெருஞ் சம்மட்டியால் மொத்துண்டு இருந்தவிடந் தெரியாமல் பசுபமாகியும்; சாத்திர ஆராய்ச்சி விர்த்தியாக ஆக, அவைகளை யனுசரித்து அத்தேசத்திய மத நூல்களுக்கெல்லாம் பொருள் செய்தும், கடைசியில் அதுவும் சரிப்படாமற் போகவே, அம்மத நூல்களெல்லாம் குப்பை கூளங்கள் நிறைந்த அறைகளுக்கு அலங்கார சாமான்களாக மாற நேரிட்டும், மேற்றிசையில் உண்மையாய் மதவிசாரணை செய்பவர் தங்கள் மதத்தின் உபயோகமற்ற தன்மையைக் கண்டு, அதைத் துறந்து தீர்க்க சந்தேகிகளாகவும் இருந்து வருகிற இச்சமயத்தில் உண்மையாய் உயிருடன் இருக்கும் மதங்கள் அமிருத கலசங்களென்னும்படியான வேதங்களில் ஞானாமிர்தத்தைப் பானம் பண்ணிய இந்துமதமும் பெளத்த மதமுமே என்பது ஒர் அதிசயமல்லவா?

நூல்   :    விவேகானந்த விசயம் (1912). பக்கங்கள் :124, 125

நூலாசிரியர்  :  மகேச குமார சர்மா

308. Boarding House – விடுதி வீடு

ஆங்கிலம் கற்றற்கு நமது பிள்ளைகள் கொழும்பு, மதுரை, சென்னை, புதுக்கோட்டை முதலிய விடங்களுக்குப் போய் அசெளகரியத்தோடு படிப்பதைப் பார்க்கிலும் நம்மவர் வசிக்கிற பெரிய ஊர்களான தேவி கோட்டை, காரைக்குடி, கானாடு காத்தான் முதலிய விடங்களில் உயர்தர வித்தியாசாலை (High School) களும் அதையொட்டி மாணவர் விடுதிவீடு (Boarding House) களும், ஏற்பட்டுவிட்டால் நிரம்ப செளகரியமாக விருப்பத்தோடு சாசுத்தியான பிள்ளைகள் படிக்கவும் ஏதுவாகும்.

நூல்   :   வியாசங்களும் உபந்தியாசங்களும் (1913) இரண்டாம் பதிப்பு: பக்கம் : 31

நூலாசிரியர்   :   மு. சின்னையா(செட்டியார்), மகிபாலன்பட்டி

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Friday, July 22, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 302-304

 அகரமுதல



(தமிழ்ச்சொல்லாக்கம்: 295 – 301 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 302-304

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

302. Atoms – உயிரணு

பூமியில் எங்கு பார்த்தாலும் பதார்த்தங்கள் நிறைந்திருக்கின்றன. இப்பதார்த்தங்களை (இ)ரசாயன சாசுதிரிகள் பலவிதமாகச் சோதனை பண்ணிக் கடைசியில் அவை துண்டு பண்ண முடியாமலிருக்கும்படியான நிலைமையை அடைகின்றன என்று தாபித்திருக்கிறார்கள்.

அப்பேர்ப்பட்ட நிலைமையை உடையன ஏறக்குறைய எண்பது விதமானவை. அவற்றை உயிரணு (Atoms) என்று சொல்வது வழக்கம்.

நூல்   :           வியாசப்பிரகாசிகை (1910), பக்.97.

பதிப்பாளர்            :           பி. எசு. அப்புசாமி (ஐயர்)

(உரிமையாளர்    :           சக்கரவர்த்தினி பத்திரிகை)

303. பிரசண்ட மாருதம் – பெருங்காற்று (1909)

பின்பு அவ்வணிகன் புறப்படும்போது சக்திதேவன் தானும் கூட வருவதாகச் சொல்ல அவனும் சம்மதித்து தங்களிருவர்க்கும் வழிக்கு வேண்டும் உணவுப் பதார்த்தங்களை நிரம்ப வைத்துக் கொள்ள இருவரும் கப்பலின் மீதேறிக் கடல்மார்க்கமாகப் பிள்ளை பிரயாணமானார்கள்.

பின்னர் அக்கப்பலானது நெடுந்தூரங்கடந்து அந்த உத்தலத்(து) விபத்தை யடைவதற்குச் சொற்ப தூரத்திற் செல்லுங்கால் மின்னற் கொடியாகிய நாவுடன் கூடி முழங்குகின்ற கரிய மேகமாகிய இராக்கத வடிவம் ஆகாயத்திற் கிளம்பிற்று. அச்சமயத்தில் இலேசான பொருள்களை உயரவெடுத்தெறிகின்றதும், கனத்த பொருள்களைக் கீழே கொண்டமிழ்த்துகின்றதுமாகிய பிரசண்டமாருதம் (பெருங்காற்று) விதியின் ஆரம்பம் போல வீசிற்று.

இதழ் :           செந்தமிழ் (1910), தொகுதி -8, பகுதி – 2, பக்கம் -71

கட்டுரை     :           கதாசரித சாசரம்

மொழிபெயர்ப்பாளர்   :           வீராசாமி (ஐயங்கார்)

304. அலிட்ரேசன் – முற்றுமோனை

நளன்சீர் நவிலுநல நல்கும் என்பதில் நகர முற்று மோனையால் வந்திருப்பதைக் கவனிக்க. அங்கில முடையார் இதை அலிட்ரேசன் என்பர்.

நூல்   :    நள வெண்பா மூலமும் அகல உரையும் (1910) நூற் சிறப்புப் பாயிரம், பக்கம் – 4

உரையாசிரியர்   :           தமிழ்வாணர் – மதுரகவி ம. மாணிக்கவாசகம் (பிள்ளை)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்