Monday, December 25, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 991- 1002

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 984-990 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 991- 1002

  1. இரசீது – பணப் பற்றுச் சீட்டு
    இப்பணியில் ஆர்வமுள்ள அன்பர்களும், பத்திரிகைகளுக்குரியவர்களும் ஆசிரியர்களும் பொதுமக்களிடம் கட்டணம் நன்கொடை திரட்டிப் பெயர் விவரங்களுடன் அளித்துதவினால், அவரவர்கள் கொடுக்கும் பெயர்ப்பட்டியின்படி குருகுலத்தின் பணப் பற்றுச் சீட்டு – இரசீதுகள் அனுப்பப் பெறும்.
    நூல் : தமிழ்ப்பணி (1950), பக்கம் : 54
    நூலாசிரியர் : தமிழகத்தின் தமிழ்ப்பணிக் குழுவினர்
    ⁠(உறையூர் – திருச்சிராப்பள்ளி)

992.பஞ்சபாணம் – ஐந்தம்பு

  1. த்வசம் – கொடி
  2. சமரகேசரி – போர்ச்சிங்கம்

நாளியல் விளக்கம் என்னும் நந்தன வருடத்துச் சுத்த வாக்கிய பஞ்சாங்கம் (1951)
ஆசிரியர் : வித்வான் : சோ. அருணாசல தேசிகர் (சீர்காழி)

  1. Lipstick – உதட்டுச்சாயம்
    உதட்டுச்சாயம் அழிந்து போய் விடுமே என்று காதலனை முத்தமிடத் தயங்குகிறவளைப் பற்றியும், சரிகை வேட்டி அழுக்காய் போய் விடுமே என்று தெருவில் சுவாமி புறப்பாடானபோது சாசுட்டாங்க வணக்கம் செய்யப் பால் மாறுகிறானே பக்தன்! அவனைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா? அந்த வரிசையில் இந்த ஆசாமியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    நூல் : குட்டிக் கட்டுரைகள் (1951), பக்கம் :34, 35
    நூலாசிரியர் : வித்துவான் ந. சுப்பிரமணியன் எம். ஏ.
  2. பஞ்சாங்கம் – நாளியல் விளக்கம்
    நாளியில் விளக்கம் என்னும் நந்தன வருடத்துச் சுத்த வாக்கிய பஞ்சாங்கம். இது சீர்காழி, வித்துவான் சோ. அருணாசல தேசிகரால் கணிக்கப்பட்டது.
    நாளியல் விளக்கம் என்னும் நந்தன வருடத்துச் சுத்த வாக்கிய பஞ்சாங்கம் (1951)
    ஆசிரியர் : சோ. அருணாசல தேசிகர்
    ( கவிஞர் சுரதா அவர்களின் யாப்பிலக்கண ஆசிரியர் )
  3. அபிலாசை – விழைவு
  4. வியாக்கிரபாதர் – புலிக்கான் முனிவர்
    999.பீதாம்பரம் – பொன்னுடை
  5. அசுட்டாட்சர் – எட்டெழுத்து
  6. இரணியன் – பொன்னன்
  7. இரதவீதி – தேர்மறுகு

நூல் : திருச்சிறுபுலியூர் உலா (1951)
குறிப்புரை : கி. இராமாநுசையங்கார்

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, December 18, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 984-990

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 979-984-தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 984-990

  1. Art – கைவன்மை
    கைத்திறன் என்பது மனிதன் உள்ளத்தில் உள்ள ஆன்ம வுணர்ச்சியையும் இறைவனையும் ஒன்றுபடுத்துவதாகும். இதன் பெருஞ் சிறப்பை உளங்கொண்ட நம் முன்னோர் அழகினை ஆதரித்தனர். அழகிய சோலைகளை அமைத்தனர். அழகொழுகு கட்டடங்களைக் கட்டினர், இயற்கை அழகு வாய்க்கப் பெற்ற இடங்களில் செயற்கை அழகையும் சிறப்புறச் செய்தனர். இயற்கையும் செயற்கையும் கூடிய வழி இன்ப வெள்ளம் பெருக்கெடுத்தோடுகின்றது போலப் பேரழகு பெரும் பொலிவுடன் விளங்கும் அன்றோ? இங்ங்ணம் நம் முன்னோர் பேரழகில் பிறந்தனர். பேரெழிலில் வளர்ந்தனர்; அவ்வழகிலேயே இரண்டறக் கலந்தனர். அவ்வழகினை அகமகிழக் காட்ட வல்லது கைவன்மை ஒன்றேயாகும்.
    நூல் : அறிவியல் கட்டுரைகள் (1949), பக்கம் : 11
    நூலாசிரியர் : பேராசிரியர் பி. இராமநாதன் எம். ஏ.
  2. Outline Map – புறவரிப்படம்
    நூல் : கட்டுரை விளக்கம் (1949)
    நூலாசிரியர் : வித்துவான் ஆர். கன்னியப்ப நாயகர்
    ⁠தமிழாசிரியர் ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
  3. சி. சென்ராயல் – தமிழன்பன்
    1950இல் தமிழரசன், தசாவதானி கணக்காயர் மீ. உ. கான்முகமது புலவர் அவர்கள், சென்ராயல் என்ற பெயரை தமிழன்பன் என மாற்றம் செய்தார்.
  4. தாளப்பேச்சு
    சாவி : சுழட்டவும் இல்லை கழட்டவுமில்லை
    சோறு சமைக்க சலம் எங்கே?
    விதூ : சொல்றதைக் கேளடி தோண்டியைத் தூக்கினேன்
    டுடுப்புன்னு ரெண்டா போச்சிடி
    புத்தகம் : இராசா – விக்கிரமா, திரைப்பாடல் புத்தகம் (1950) பக்கம் : 6
    சொல்லாக்கம் : திரைப்பாடலாசிரியர் சிதம்பரம் ஏ. எம். நடராச கவி
  5. வ. இராசமனோகரன் – வ. கோவழகன் (1950)
    பழனி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 1950-51 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படிக்கும்போது கேடயம் என்னும் பெயரில் கையெழுத்துப் பிரதி நடத்தப்பட்டது.
    ‘கோவழகன்’ என்கிற புனைபெயரில், கவிதை, கட்டுரை, கதை எழுதினேன்.
    வ. கோவழகன் (1950)
    (வ. இராசமனோகரன்)
    புலவர் மா. நடராசன், தமிழாசிரியர்
    பழனிநகராட்சி உயர்நிலைப்பள்ளி, என் பெயரை மாற்றினார்.
  6. Black Marketing – இருட்டு வாணிபம்
    இருட்டு வாணிபமும், (Black-Marketing) திருட்டுக் கொள்ளையும், சுருட்டிப் பதுக்குதலும், பிரட்டுப் பித்தலாட்டமும் தமிழனுக்குப் பிடிக்காதன என்பதற்கு இப்பாடல் ஒன்றே போதியசான்றாகும்.
    நூல் : தமிழ் உள்ளம் (1950), பக்கம் : 110
    நூலாசிரியர் : வித்வான் ஜி. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ. பி.எல்.
    ⁠(துணைப் பேராசிரியர்,
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, December 11, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 979-984

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 969-978-தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 979-984

  1. சுந்தரராசு – அழகரசன்
    அறிவிப்பு
    இந்நூலை என் அம்மானாரிடமிருந்து யான் விலைக்கு வாங்கிக் கொண்டமையால், இதன் பதிப்புரிமை எனதாகும்.
    சேலம்,
    சுந்தரராசு என்னும் அழகரசன்
    29, 12. 1949
    நூல் : சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949)
    நூலாசிரியர் : பண்டித புலவ ஞா. தேவநேயனார், பி.ஓ. எல் (சேலம்
    ⁠நகராண்மைக் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர்)
  2. சுந்தரேசன் – எழிலரசன் – எழிலன்
    கவிஞர் வானம்பாடி என்று தமிழர்களால் அழைக்கப்பட், கலைமாமணி, கவிஞர் திலகம், கவிசிரீ கவிஞர் வானம்பாடி துரை சுந்தரேசன் அவர்கள் 1948இல் வானம்பாடி என்னும் வார இதழினைத் தொடங்கிச் சில காலம் நடத்தினார்.
    இளமைக் காலத்திலிருந்தே எழிலரசன், எழிலன் என்னும் புனை பெயர்களில் எழுதி வந்தார். வானம்பாடி பத்திரிகையிலும் ஆசிரியர் எழிலன் என்றே காணப்படுகிறது.
    தி. வ. மெய்கண்டார்
    நூல் : அமரர் கலைாமணி கவிஞர் வானம்பாடி
    ⁠வாழ்க்கைக் குறிப்பு (1987)
  3. பாரதி – ‘கல்வி’ அறிவுள்ளவர்
    பாரதியாருக்கு அவர் தந்தையார் வைத்த பெயர் சுப்பிரமணியம் என்பதாகும். தாம் இளம் பருவத்தினராய்ப் இருந்த போதே இவர் கல்வி அறிவுள்ளவராகக் காணப்பட்டமையினால், விருதை சிவஞான யோகியார் என்னும் அறிஞர், கல்வி அறிவுள்ளவர் என்னும் பொருள்படும் பாரதி என்னும் பட்டத்தை இவருக்கு, எட்டயபுரம் சமத்தானத்திலே, குரு குகதாசப் பிள்ளை வீட்டிலே, கற்றோர் புகழும் அவையிலே, அளித்தார்.
    நூல் : தமிழ்ப் பெருமக்கள் பக்கம் – 68, ஏப்பிரல், 1949 ஆம் ஆண்டு வெளிவந்த நூல்
    நூலாசிரியர் : எசு. எசு. அருணகிரிநாதர்.
  4. பூதக் கண்ணாடி – உருப்பெருக்கிக் கண்ணாடி
    வானத்தில் – கொசு முதற்கொண்டு பெரிய கழுகுவரையுமாகப் பலவகைப்பட்ட பிராணிகள் பறவைகளாகக் காணப்படுகின்றன. இவை இறக்கைகளைக் கால்களாகக் கொண்டு காற்றென்னும் பாதையில் நடந்தும், பறவைகளாக வான வெளியில் சஞ்சரிக்கின்றன. இவை நம் முகக் கண்கொண்டு கண்டபிராணிகளாகும். உருப்பெருக்கி பூதக் கண்ணாடியும் கொண்டு கண்டால் இன்னும் சிறிய உயிர்ப்பொருள்களையும் காணலாம். நூல் கண் கொண்டு கண்டால் இன்னும் பெரிய உயிர்ப் பொருள்களையும், சிறியவைகளையும் காணலாம்.
    நூல் : மனித இயல்பு (1949) பக்கம் -21
    நூலாசிரியர் : திருத்தேவர் பழநியப்பக் கவுண்டர்
    ⁠(பரமாத்துவைத சித்தாந்த ஆசிரியர்)
  5. ஞானேந்திரியம் – புறமறி கருவி
    மிருகாதிகளின் அகவுணர்வு பிறந்ததிலிருந்து பெரும்பாலும் ஒரளவுள்ளதாகவே காணப்படுகிறது. விருத்தியடைவதில்லை. அது புறமறி கருவியான (ஞானேந்திரியமான) கண், காது, மூக்கு, நாக்குப் போன்றதாயிருக்கிறது. பத்து வயதில் இரண்டு கச தூரத்தில் தெரிந்த தினை, 15 வயதில் 4 கச தூரத்திலும், 20 வயதில் 20 கச தூரத்தில் கண்ணுக்கு நன்றாய் தெரியும் என்பது இல்லை. 10 வயதில் எப்படி எவ்வளவு தூரத்தில் தெரியுமோ 30, 40 வயதிலேயும் அப்படி அவ்வளவு தூரத்திற்றான் தெரியும். இந்த ஞானேந்திரியங்களின் அறிவு மனித உடம்பிலானாலும் சரி அவ்வாறு அளந்து போட்டதேயாகும்.
    நூல் : பக்கம் 30
  6. Gide – சுட்டிக்காட்டி
    தனுசுகோடிக்குச் சேது என்றும் பெயர் வழங்குகிறது. வங்காள விரிகுடாவும் இந்து மகாசமுத்திரமும் கலக்கும் இம்முனையில் குளித்தால் நல்ல கதி கிடைக்கும் என்று இராமேச்சுரத்துக்கு வரும் இந்துக்கள் பலர் இங்கு வந்து முழுகிவிட்டுப் போகிறார்கள். இவ்விடத்திலிருந்து தினந்தோறும் நீராவிக் கப்பல்கள் பிரயாணிகளையும், சாமான்களையும் ஏற்றிக் கொண்டு இலங்கைக்குச் செல்கின்றன. இத்தீவில் வசிப்பவர்கள் படகோட்டுதல், மீன் பிடித்தல் முதலிய தொழில்களைச் செய்து பிழைக்கிறார்கள். இராமேச்சுரத்திலும், தனுசுகோடியிலும் அப்புண்ணிய சேத்திரங்களில் உள்ள பழைய சின்னங்களைச் சுட்டிக்காட்டி நற்கதிக்கு வழிகாட்டும் பார்ப்பனரும் பலர் வசிக்கிறார்கள்.
    நூல் : திராவிட நாடு (முதல் பாகம்) (1949)
    ⁠அமைப்பு இயல், பக்கம் – 7
    நூலாசிரியர் : அ. கு. பாலசுந்தரனார், பி.ஏ., எல்.டி.
    ⁠(ஆசிரியர், சிந்தாதிரிப்பேட்டை
    உயர்நிலைப் பள்ளி, சென்னை)

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, December 4, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 969-978

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 949-968-தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 969-978

  1. அவதாரம்
    அவதாரம் என்பதற்குக் கீழிறங்குதல் என்பது பொருள். உயர்நிலையிலுள்ள ஒருவர், பிறர் நலன் நாடி உலகில் தோன்றுவதைத்தான் அவதாரம் எனக் கூறுகின்றோம்.
    நூல் : பெரியாழ்வார் பெண்கொடி (1947), பக்கம் : 176
    நூலாசிரியர் : பண்டிதை எசு. கிருட்டிணவேணி அம்மையார்.
  2. சம்சார நெளகா – வாழ்க்கைப் படகு
    பிரகதி பிக்சர்சு & ஃச்டார் கம்பைன்சு தயாரித்த சம்சார நெளகா அல்லது வாழ்க்கைப் படகு (தமிழ்)
    புத்தகம் : சம்சார நெளகா அல்லது வாழ்க்கைப் படகு
    ⁠பாட்டுப்புத்தகம் (1948), பக்கம் 1
    நூலாசிரியர் : நடிகர் பி. ஆர். பந்துலு
  3. சுந்தரேசன் – எழிலன் (1948)
    சுந்தரேச துரை என்ற இயற்பெயர் கொண்ட வானம்பாடி எழிலன் வானம்பாடி என்னும் புனை பெயர்களில் எழுதினார். வானம்பாடி என்னும் பெயரில் 1948இல் வார இதழ் நடத்தினார். பின்னர் 1973இல் கவிதா மண்டலம் என்னும் கவிதை ஏட்டைத் தொடங்கி 3 ஆண்டுகள் நடத்தினார்.
    இதழ் : இளந்தமிழன் சனவரி மார்ச்சு 1989), பக்கம் 10
    சிறப்பாசிரியர் : தி. வ. மெய்கண்டார்.
  4. சுவாமி அருணகிரிநாதர் – செம்மலை அண்ணலாரடிகள்
    நூல் : மக்களின் கடமை (1948), பக்கம் – 1
    ஆக்கியோன் : சுவாமி அருணகிரிநாதர் என வழங்கும் செம்மலை அண்ணலாரடிகள்
  5. இராசரத்தினம் – அரசுமணி
    திருவல்லிக்கேணியில் உள்ள கெல்லெட்டு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் புலவர் அரசுமணியின் இயற்பெயர் இராசரத்தினம் என்பதாகும். அப்பெயரை அரசுமணி என்று 1948ஆம் ஆண்டில் இவர் மாற்றி வைத்துக் கொண்டார்.
  6. Power House – மின் மனை
    19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மைசூர் நாட்டு சருக்கார் தங்கள் நாட்டில் உள்ள சீவநதிகளின் இயற்கையான நீர் வீழ்ச்சிகளின் உதவியால் மின்சாரச் சக்தியைத் தயாரிக்க முன் வந்தனர். சிவசமுத்திரம் என்ற இடத்தில் உள்ள காவிரியின் நீர் வீழ்ச்சியண்டை 1902இல் மின்மனை (Power House) ஒன்றை நிறுவி மின்சாரத்தை தோற்றி, அங்கிருந்து 92 கல் தூரத்தில் உள்ள கோலார் தங்க வயல்களுக்குக் கொண்டு போய், விளக்கெரிக்கவும், யந்திரங்களை இயக்கவும் உபயோகித்தனர். இச் சக்தியைக் கொண்டு நடத்த பல தொழிற்சாலைகளையும் ஏற்படுத்தி, இந்தியாவுக்கு, ஏன் ஆசியாவுக்கே வழி காட்டினார்கள்.
    நூல் : திராவிட நாடு (முதல் பாகம்) (1949),
    ⁠அமைப்பியல், பக்கம் – 72
    நூலாசிரியர் : அ. கு. பாலசுந்தரனார், பி.ஏ., எல்.டி.
    ⁠(ஆசிரியர், சிந்தாதிரிப்பேட்டை
    ⁠⁠உயர்நிலைப் பள்ளி, சென்னை)
  7. பிரிவு உபசாரப் பத்திரிகை – பிரிவு விடை இதழ் (1545)
    சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியரும், தமிழ்த் துறைத் தலைவருமாயிருந்த பேராசிரியர் மொ. அ. துரையரங்கனார் அவர்கள் பி.ஓ.எல், எம்.ஓ.எல். –
    மதுரைத் தியாகராய கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகச் சென்றபோது பாராட்டி அளித்த சென்றபோது பிரிவு விடை இதழ்.
    பச்சையப்பன் கல்லூரித் தமிழ் மாணவர்கள்
    சேத்துப்பட்டு
    18 10.1949 இதழ் : இதழ் இணக்கம் (1949), மலர் : 3, இதழ் 9
    ஆசிரியர் : வித்துவான் மொ. அ. துரை. அரங்கசாமி, பி.ஓ.எல்,
  8. Projector – ஒளியுருவ இயந்திரம்
    இராபருட்டு பால் என்ற அறிஞன் முதன் முறையாக கினிடோசு கோப்பையும் படவிளக்கையும் இணைத்து ஒளியுருவத்தைத் திரையில் விழச்செய்தான். அதைத்தான் எல்லாரும் வேடிக்கைப் பார்த்தனர். அநேகமாக பால், பேசாத திரைப்படத்தை(சினிமாவை)க் கண்டுபிடித்து விட்டான் என்றே கூற வேண்டும். இதே சமயத்தில் பிரான்சு நாட்டில் (உ)லூமிரி சகோதரர்களும் அமெரிக்காவில் (இ)லாதம் (Latham) என்பவனும் ஒளியுருவ இயந்திரம் கண்டுபிடித்தனர்.
    நூல் : களஞ்சியம் (1949), பக்கம் , 54
    நூலாசிரியர் : இரா. நெடுஞ்செழியன் எம்.ஏ.,
  9. மெளன முத்திரை – சொல்லாக் குறி
    978.ஆனந்தம் – சிவப்பேற்றின்பம்
    நூல் : கவிஞன் உள்ளம் (1949)
    நூலாசிரியர் : வித்துவான் ந. சுப்பு ரெட்டியார், பி.ஏ. பி.எஸ்ஸி.
    ⁠எல்.டி., தலைமையாசிரியர் சமீந்தார்
    ⁠உயர்நிலைப் பள்ளி, துறையூர்.

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, November 27, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 949-968

 





(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 941- 948 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 949-968

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. பேடின் – வளர்பிறை
  2. லாங் அல்லது சுலோ பேடின் – நீள் வளர் பிறை
  3. பேடவுட் – தேய்பிறை
  4. லாங் பேடவுட் – நீள தேய்பிறை
  5. டிசால்வ் – தேய் வளர்பிறை
  6. வைப் – துடைப்பு
  7. கட் – வெட்டு
  8. ஐரிசு இன் – உட் சுழல்
  9. ஐரிசு அவுட் – வெளிச்சுழல்
  10. சூபர் இம்போசு – அடுக்குக் காட்சி
  11. மல்டிபிள் எக்சுபோசர் – அடுக்குத் தூக்கு
  12. டிசுடண்ட் சாட் – நெடுந் தொலைவுக் காட்சி
  13. லாங் சாட் – தொலைவுக் காட்சி
  14. பிக்ளோசு அப் – நுண்ணணி
  15. க்ளோசு அப் – அண்மைக் காட்சி
  16. டாப் சாட் – முடிநேர்க் காட்சி
  17. ஃச்ட்ரெய்ட் சாட் – நேர்க் காட்சி
  18. ட்ரக் சாட் – கருவிப் பாய்ப்பு
  19. க்ரேன் சாட் – தூக்கிப் பாய்ப்பு
  20. மாசுக் சாட் – மறைப்புக் காட்சி
    இதழ் : குண்டூசி, நவம்பர் 1947, பக்கம் : 14, பட்டை – 1, ஊசி – 2
    கட்டுரையாளர் : பாலபாரதி சது. சு. யோகியார்

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்


Monday, November 20, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 941- 948

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 931- 940 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 

941- 948

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. Profiles – பக்கப் பார்வைப் படங்கள்
    இந்த நாகரிகமற்ற காட்டு மனிதர்களுக்குப் படம் வரையத் தெரிந்திருந்தது. ஆனால் காகிதத்தாள்களாவது எழுதுகோலாவது மைதீட்டும் கருவியாவது அக்காலத்தில் இருக்கவில்லை. கல் ஊசிகளும் கூர்மையான கருவிகளுமே அவர்களிடம் இருந்தன. இவற்றைக் கொண்டு குகைகளின் சுவர்களில் அவர்கள் மிருகங்களின் உருவங்களைக் கீறி வரைந்தார்கள். அவர்கள் எழுதியுள்ள சித்திரங்களில் சில மிகவும் நன்றாயிருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் பக்கப் பார்வைப் படங்கள் (Profiles). பக்கப் பார்வைப் படங்களை வரைவது எளிது என்று உனக்குத் தெரியும்.
    நூல் : சவாகர்லால் நேருவின் கடிதங்கள் (1944)
    ⁠பக்கங்கள் -43, 44
    மொழிபெயர்ப்பு : சி. இரா. வேங்கடராமன், பி.ஏ. பி.எல்,
    ⁠(இந்திய ஊழியர் சங்கம்)
  2. வாக்கியம் – சொற்றொடர்
    இராமன் பாடம் படிக்கிறான்
    சீதை கோலம் போடுகிறாள்
    பசு பால் தரும்
    நாய் வீட்டைக் காக்கும்.
    இவ்வாறு பல சொற்கள் தொடராகச் சேர்ந்த சொற்றொடரால் (வாக்கியத்தால்) ஒரு கருத்தினைப் பிறருக்கு அறிவிக்கின்றோம்.
    நூல் : சிறுவர் தமிழிலக்கணம் (1945)
    பக்கம் – 5
    நூலாசிரியர் : வே. வேங்கடராசுலு ரெட்டியார்
  3. கிளாரினெட் – கிளரியம்
    இஃது ஐரோப்பியத் துளைக்கருவிகளுள் ஒன்று. இப்போது இது தஞ்சாவூர்க் கூட்டியத்தில் (பாண்டில்) இடம் பெற்றுள்ளது. இதைச் சதிர்க் கச்சேரிகளில் வாசிக்கப்படும் சின்ன மேளத்தில், குழலுக்கும் முக வீணைக்கும் பதிலாக முதன்முதலாக நுழைத்தவர் மகாதேவ நட்டுவனார் ஆவார்.
    நூல் : தமிழர் இசைக் கருவிகள் (1945), பக்கம் – 50
    நூலாசிரியர் : பி. கோதண்டராமன்
  4. சாயாசரீரம் – நிழலுடல்
    நூல் : பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி (1945) பக்கம் . 8
    குறிப்புரை : வி. சிதம்பர இராமலிங்க பிள்ளை
    ⁠(திருவாவடுதுறை ஆதீன வித்துவான்)
  5. Band – கூட்டியம்
    ஐரோப்பிய இசையின் தொடர்பினால் தமிழ்நாட்டு இசையில் ஏற்பட்ட நவீனங்களில் பாண்டு (கூட்டியம்) என்பதும் ஒன்று. சென்ற நூற்றாண்டில், தஞ்சாவூர் சமத்தானத்தில், மரத்தாலும், பித்தளையாலும் ஆன இசைக் கருவிகளைக் கொண்டு ஒழுங்காக அமைக்கப்பட்ட முதல் பாண்டு, கருநாடக இசை முறையில் வாசிக்கப்பெற்றது.
    நூல் : தமிழர் இசைக் கருவிகள் (1945), பக்கம் – 62
    நூலாசிரியர் : பி. கோதண்டராமன்
  6. Universe – உலகத் தொகுதி
    தருக்கையுடைய மனத்தவர்களே ! நீங்கள் போய் விடுங்கள்; மெய்யடியார்களே! விரைவாக வாருங்கள் அடியார் கூட்டத்தில் சேர்ந்து, இறைவன் சம்பந்தமான பிறருடைய அநுபவங்களைக் கேட்டும் தம்முடைய அநுபவங்களைப் பிறருக்குச் சொல்லியும் பரம்பரையாக ஈசனுக்கு அடிமைப் பணி செய்யுங்கள். உலகத் தொகுதியையும் கடந்த அப்பாற்பட்ட பொருள், அளவுகடந்த ஆனந்த வெள்ளமாயிருக்கும் அல்லது ஆனந்த வெள்ளத்தைத் தரும் பொருள், முன்னும், இப்போதும், எக்காலத்தும் (அழியாது) உள்ள பொருளென்றே சிவபெருமானுக்குப் பல்லாண்டு கூறுகின்றோம்.
    நூல் : சைவ சமய விளக்கம் (1946), பக்கம் – 51
    நூலாசிரியர் : அ. சோமசுந்தர செட்டியார்
    ⁠(சேக்கிழார் திருப்பணிக் கழகத் தலைவர்)
  7. Vacuum – பாழ்
    வாய் திறந்து பகவானைப் பேரிட்டழையாமல் மனத்தால் தியானிப்பவர்களும் அவரைக் (பகவானை) குதா என்னும் நாமத்தால் ஒசைபடாமல் சொல்லி, ஏதாவதொரு வடிவத்தாலேயே தியானிப்பார்கள். அவரை ஏதேனுமொரு பாவனையினாலன்றி தியானித்தல் எளிதன்று. அவரை ஆகாயமாகவாவது தியானித்தே தீர வேண்டும். ஆகாயமும் ஒரு பொருளே அன்றி வெறும் பாழ் அல்ல. முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாம், அப்பாலும் பாழென்றறி என்றபடி பகவானைப் பாழ் என்றாலும் அவர்க்கு நாமம் ஏற்படுகிறது. எப்போது நாமம் ஏற்படுகிறதோ, அப்போது உரூபமும் ஏற்படாமல் இராது.
    நூல் : கபீர்தாசு (1945), பக்கம் : 9, 10
    நூலாசிரியர் : பண்டிதர் ம. மாணிக்க வாசகம் பிள்ளை

  1. எலினேரியோ – காட்சிக் கோப்பு
    ‘லினேரியோ’ என்பது ஒரு ஆங்கிலச் சொல். தமிழில் அதன் பிரதி பதம் ‘காட்சிக் கோப்பு’.
    இப்பதம் திரைப்படத்திற்கும்(சினிமாவுக்கும்) சரி, நாடகத்திற்கும்(டிராமாவுக்கும்) சரி – பொதுவானது.
    இதழ் : குண்டுசி, நவம்பர் 1947, பக்கம் :12, பட்டை – 1, ஊசி – 2
    கட்டுரையாளர் : பாலபாரதி ச. து. சு. யோகியார்

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, November 13, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 931- 940

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 916- 930 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 

931- 940

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழிமாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

931- Executive Officer – ஆணையாளர்

தற்காலம் செங்கோட்டை மிட்டாதார், திரு. எம். சுப்பிரமணியக் கரையாளர் ஆட்சித் தரும கருத்தராயும், தென்காசி, வக்கீல், திரு. டி.எசு சங்கரநாராயண பிள்ளை பி.ஏ., பி.எல், அட்வகேட் திரு. ஏ.சி. சண்முக நயினார் பிள்ளை பி.ஏ., பி.எல், தரும கருத்தர்களாயும் நியமிக்கப்பட்டு நிருவாகம் நடத்தி வருகின்றனர். மாதச் சம்பளம் உரூபாய் 200 வரை பெறும் ஓர் ஆணையாளரையும் (Executive Officer) நியமிக்கின்றனர். இப்போதுள்ள ஆணையாளர் திருவாளர் கே.வி. சுப்பையாப் பிள்ளையவர்கள் B.A.,

நூல் : திருக்குற்றாலத் தலவரலாறு (1943), பக்கம் – 60

932. நாராயணசாமி – திருமால் அடிகள் (1943)

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நானும் நெடுஞ்செழியனும் ஒன்றாகப் படித்தோம். அந்தக் காலத்தில் நெடுஞ்செழியனுக்குப் பேசும்போது நாக்கு புரளக் கடினப்படும்.

அந்த நாக்குச் சரியாகக் கூழாங்கற்களை வாயில் அடக்கியபடி 6 மாதம் பயிற்சி பெற்றார். தினமும் பேசிப் பேசிப் பழகுவார். அந்த நாத் தடு மாற்றம் மாறியது. சிறந்த பேச்சாளர் ஆனார்.

நாராயணசாமி என்ற பெயரை முதலில் திருமால் அடிகள் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். அப்படி மூன்று மாதங்கள் இருந்தார். இது என்ன திருமாலுக்கு அடிகள் என்று கேட்டேன். பிறகு அவர் பட்டுக்கோட்டை போய்விட்டுத் திரும்பும்போது நெடுஞ்செழியன் என்ற பெயரோடு வந்தார்.

இதழ் : நவமணி, 13.7.1970

933. முருகு. சுப்பிரமணியன்

ஆசிரியர் முருகுவின் எழுத்துலகம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது என்று சொல்லலாம்.

திருச்சி அர்ச். சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் 1939 ஆம் ஆண்டு ஐந்தாம் படிவத்தில் படித்துக் கொண்டிருந்தபோது திரு. முருகுவின் கட்டுரை ஒன்றைத் தமிழாசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வகுப்பில் படித்துக் காட்டி கட்டுரை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அழுத்தமாகச் சொன்னார்.

1942ல் படிப்பு, முதல் பல்கலைக்கழக வகுப்போடு முடிந்தது. படிப்பு முடியுமுன்னர் திருச்சியிலேயே இளந்தமிழன் என்னும் திங்களிருமுறை ஏட்டைத் துவக்கினார்.

இளந்தமிழனில் முருகு என்னும் புனைபெயரில் எழுதி வந்ததோடு, இளந்தமிழன் ஆசிரியர் முருகு என்னும் பெயரிலேயே வந்தது. அதுவே பிறகு பெயருக்கு முன்னால் சேர்ந்து முருகு சுப்பிரமணியன் என்றாகிவிட்டது.

நூல்        :               தமிழ்க்காவலர் முருகு சுப்பிரமணியன்

                                ⁠பொன்விழா மலர் (1976), பக்கம் – 36, 37

தொகுப்பு            :               பரிதா மணாளன்

934. பிரயோசனம்              –              பயன்

935. பார்யை         –              மனைவி

936. சுவரம்           –              காய்ச்சல்

937. புருசன்        –              கணவன்

938. இரெங்கசாமி- அரங்கண்ணல் (1943)

25 ஆண்டுகளுக்கு முன்பு! ‘கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்! கிழித்தெறியத் தேடுதுகாண்பகைக் கூட்டத்தை’ என்று பாரதிதாசனார் பாராட்டிய திருவாரூரில், ஒரு தமிழ்க் குகை, மா. வெண்கோ எனும் புனைபெயருக்குள் தன்னை மறைத்துக் கொண்ட வயலூர் சண்முகம், திருக்குவளை கருணாநிதி, கோமல் இரங்கசாமி, திருவாரூர் சாமா, விசயபுரம் செல்லக் கணபதி, குளக்கரை சீனுவாசன்… அடிக்கடி இந்த மாணவப் பட்டாளம் அந்தக் ‘குகை’க்குள் கூடும். திருக்குவளை கருணாநிதி வேலையிருந்தால்தான் வருவார். அவர் தவிர மற்ற நாங்கள் எல்லாம் ஒரு கூட்டம். தமிழ் மீது எங்களுக்கு ஓர் ஆசை.

எனது மாணவ ஆசான் வ. கோ. சண்முகம் ஓர் அவைக் கோழை! மிராசு வீட்டுப் பிள்ளை எனும் நினைப்பும் வசதியான வாழ்வும் அவருக்கு அப்போது அமையாதிருந்தால் இன்று அவர் கவிஞர்களில் கவிஞராகவோ அல்லது இன்னொரு கருணாநிதியாகவோ இருந்திருக்கலாம். சிறந்த தமிழ்த் தும்பீ! அவருடைய வீடுதான் எங்கள் குகை. கோமல் இரங்கசாமியான என்னை அரங்கண்ணல் ஆக்கியது அவர்தான்.

இராம. அரங்கண்ணல், எம்.எல்.ஏ., சுரதா பொங்கல் மலர் – 1970

939. Bus – நெய்யாவி ஊர்தி

நெய்யாவி ஊர்தியிலே (பொருள் தெரியாவிட்டால் நீச பாசையிலுள்ள பஃச் என்ற திசைச் சொல்லை உபயோகித்துக் கொள்ளவும்) பிரயாணம் செய்து கொண்டிருந்த, ஒரு சகோதரி வேடிக்கையாக ஒன்றைச் சொல்ல, அதைக் கேட்ட மற்றப் பிரயாணிகள் கொல் என்று சிரித்தார்கள்.

நூல்        :               அசோகவனம் (1944), பக்கம் -92

நூலாசிரியர்         :               எ. முத்துசிவன்

940. Bangalow – தங்கிடம்

பொருநையாறு இம்மலைமிசைத் தோன்றிக் கீழ் நோக்கி ஓடி வருகிறது. இது தோன்றும் இடம் சதுப்பு நிலமாக எப்போதும் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கிறது. இது சிறிது தூரம் வந்தவுடன் கன்னிகட்டி என்ற ஓரிடம் இருக்கிறது. அவ்விடம் மரச் செறிவுள்ளதாய்ப் பேரழகினதாய் விளங்குகின்றது. இங்கே தங்கிடம் ஒன்றிருக்கிறது.

நூல்        :               பாவநாசம் பாவநாச சரி கோவில் வரலாறு (1944), பக். 5

நூலாசிரியர்         :  இ. மு. சுப்பிரமணியபிள்ளை, தலைமைத் தமிழாசிரியர்,

                                நாட்டாண்மை உயர்ப்பள்ளிக்கூடம், சங்கரன் கோவில்.

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்