Friday, September 30, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 430-436

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 426 – 429 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 430-436

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

430. Biology – உயிர் நூல்

431. பிராணதாரணப் பிரயத்தனம் – Struggle For Existence

‘போதுமான மட்டுஞ் சுறுசுறுப்பாயிருப்பவனே பிராணதாரணப் பிரயத்தனத்தில் (Struggle For Existence) ஒழிந்துவிடாது தங்கி நிற்பான்’ என்று உயிர் நூல் (Biology) முறையிடுகின்றது.

நூல்   :           நூல் தமிழ் வியாசங்கள் (1922) பக்கம் -6

நூலாசிரியர்         :           வி.கோ. சூரியநாராயண சாத்திரியார், பி.ஏ., (சென்னைக் கிறித்தவ கலாசாலை முன்னாள் தலைமைத் தமிழ்ப் பண்டிதர்)

432. Psychology – உளநூல்

433. Political Economy – செல்வ நூல்

434. மனித நூல் – Anthropology

ஈண்டுக் குறித்த நூல் என்பது உயிர்நூல். உளநூல் (Psy- chology) மனித நூல் (Anthropology) ஒழுக்க நூல், செல்வநூல் (Political Economy) பெவுமிய நூல் (Geology) முதலியவற்றின் பொதுப்பெயர்.

நூல்   :           தமிழ் வியாசங்கள்

நூலாசிரியர்         :           வி.கோ. சூரியநாராயண சாத்திரியார், பி.ஏ.,

435, 436 முன்னடை, பின்னடை

எம்.ஏ. வரதராச பிள்ளை, பி.ஏ.பி.எல், எப்.டி.எசு. எல்லாருக்கும் பொதுவாக உரிமையான, ‘சிரீமான்’ என்னும் முன்னடையும், அவர்கள் என்னும் பின்னடையும் இல்லாமலே தமது பெயர் கிட்டத் தட்ட ஒரு சாண் இருந்தது. வக்கீல் அதைப் பார்த்து மனம் பூரித்தார்.

நூல்      :           சதானந்தர் (ஓர் அரிய தமிழ் நாவல்) (1922) அதிகாரம் – 2 – பித்தோ பேயோ, பக்கம் – 38

நாவலாசிரியர்  :           நாகை சொ. தண்டபாணிப் பிள்ளை

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Wednesday, September 28, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 426 – 429

 அகரமுதல





(தமிழ்ச்சொல்லாக்கம்: 421-425 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 429-429

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

426. Mathematics professor – கணித நூற்புலவர்

அக்காலத்தில் சென்னை பிரஸிடென்சி காலேசில் மாத மெடிக் புரொபெசராக (கணித நூற்புலவர்) இருந்து காலஞ்சென்ற இராயபகதூர் பூண்டி அரங்கநாத முதலியாதொருவர்தான், இவ்வாசிரியர் சிவபதம் பெற்றதும், இவரது சேசுட்டக் குமாரனாகிய அடியேனுக்குத் தாம் மேற்பார்த்து வந்த தமிழ் டிரான்சி லேட்டர் ஆபீசில் உத்தியோகஞ் செய்வித்து, அதன் மூலமாய் எமது குடும்பத்தைத் தமது நண்பரைப் போல் பாவித்துக் காப்பாற்றினவர். அந்நன்றி யென்றும் மறக்கற்பாலதன்று.

நூல்   :           சிரீ சங்கர விசயம் (1921), 3ஆவது பதிப்பு பக். 14

முகவுரை    :           தொழுவூர் வே. திருநாகேசுவரன்

(தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களின் புதல்வர்

427. நமோ, நம – வணக்கம்

நமோ, நம என்பவை மந்திரங்களி னீற்றில் வணக்கத்தை யுணர்த்தற்பொருட்டு, வருஞ்சொற்கள்; இவற்றிற்கு ‘வணக்கஞ் செய்கிறேன்’, ‘நமசுகரிக்கின்றேன்’ என்பன பொருள்களாம்.

நூல்   :           கந்தர் சசுட்டிக் கவசம் மூலமும் உரையும் (1921 பக்கம் 24)

நூலாசிரியர்         :           மதுரை சில்லா, செம்பூர் – வித்துவான் வீ. ஆறுமுகஞ் சேர்வை

428. Station Master – தங்கு நிலையத்தவர் (1922)

டி. எம். அச்சுக்கூடம்

ஓம்

பல்லாவரம், 23.1.1922

அன்பிற்கோர் உறையுளாய்த் திகழும் திருவாளர் வே. நாகலிங்கம் பிள்ளையவர்கட்குச் சிவபெருமான் திருவருளால் எல்லா நலன்களும் உண்டாகுக!

தங்கள் அன்பின் திறத்தாலும் திருவருள் வலத்தாலும் பையனும் நானும் நலமே இங்கு வந்து சேர்ந்தோம். வரும்போது தனுக்கோடித் தங்கு நிலையத்தவர் (Station Master) வேண்டுகோளுக்கிணங்க அங்கே, ‘தமிழரின் கடவுள் நிலை’ என்பதைப் பற்றி ஒரு விரிவுரை நிகழ்த்தினேன். அதனை ஆரியப் பார்ப்பனர் பலரும் வந்து கேட்டனராயினும், எவருங் குறை சொல்லாமல் மகிழ்ந்து வியந்தனர்.

அன்புள்ள

மறைமலைமடிகள்

நூல்   :           மறைமலையடிகள் (1951) பக்கம் 211.

நூலாசிரியர்         :           புலவர் அரசு

429. Hammock – வலையேணி

அப்பொழுதுதான் கனகவல்லி பாட்டை முடித்தாள். மாடியின் நடுவே, இரண்டு மரத்துண்டுகளிடையே கட்டப்பட்டிருந்த வலையேணி (Hammock) ஒன்றில் அவள் படுத்திருந்தாள். கடுமையும் செம்மையும் கலந்த அவ்வலையேணியில், ஒல்லியும் உயரமுமான அப் பொன்மேனிப் பாவை நல்லாள் வெண்சிவப்புப் பட்டாடை யுடுத்துப் படுத்திருந்த காட்சி, நீல வானத்திடையே மின்னற்கொடி யொன்று நிலையாய்க் கிடப்பதுபோலிருந்தது. –

நூல்   :           சதானந்தர் (ஒர் அரிய தமிழ் நாவல்) (1922) அதிகாரம் -4 துறவியின் துறவு, பட்சகம் -79

நூலாசிரியர்         :           நாகை சொ. தண்டபாணிப் பிள்ளை

(மறைமலையடிகள் மாணவர்)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, September 26, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 421-425

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 417-420 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 421-425

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

421. Cinema – படக்காட்சி

இவ்வழகிய நகரத்தில் நானாவித வியாபாரத் தலங்களும், கைத்தொழிற் சாலைகளும், நீதிமன்றங்களும், உயர்தரக் கலாசாலைகளும், நாடக மேடைகளும்; சினிமா (படக்காட்சி) நிலையங்களும், கண்காட்சித் தோட்டங்களும், கடற்றுறைமுக வசதிகளும், மற்றும் மக்கள் தத்தம் மனதிற் கேற்றவாறு களிப்பூட்டும் விநோத விசித்திரங்களும், இன்னும் பல்வேறு செளகரியங்களும் ஒருங்கே அமைந்திருப்பதால் பற்பல தேயத்தினரும் இச்சென்னை மாநகரை வாழத்தானமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

நூல்   :           குடியால் கெட்ட குடும்பம் (1921). பக்கம் – 4

நூலாசிரியர்         :           ‘தமிழ் நாவலர்’ எசு.கே. கோவிந்தசாமிப் பிள்ளை.

422. சகப்பாங்கு   –           உலகநடை

423. அன்னமயம்  –           சோற்றுருவம்

424. சலதாரை       –           சாக்கடை

நூல்   :           சின்மயதீபிகை (1921)

நூலாசிரியர்         :           முத்தைய சுவாமிகள், குமாரதேவராதீனம்

விருத்தியுரை       :           காஞ்சிபுரம் இராமாநந்த யோகிகள்

425. பாலசுப்பிரமணி(ய  முதலியார், ம.பி.ஏ.,பி.எல்.)

– இளமுருகனார் (1921)

இவர் 1944இல் பள்ளத்தூரிலும், 1948இல் யாழ்ப்பாணத்திலும் சைவ சித்தாந்த சமாச ஆண்டு விழாக்களில் தலைமை வகித்தவர். சமாசச் செயலாளராக (1921-1943) 22 ஆண்டுகள் தொடர்ந்து தொண்டாற்றியவர்.

சைவ சித்தாந்த மகா சமாசம் பொன் விழா மலர்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Saturday, September 24, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 417-420







(தமிழ்ச்சொல்லாக்கம்: 411-416 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 417-420 

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

417. தரித்திரர்       –          இல்லார்

418. காந்தன்          –          நாயகன்

419. அந்தரியாக பூசை –          உட்பூசை

நூல்   :           அட்டரங்க யோகக்குறள் வருத்தமற வுய்யும் வழி (1923)

பரிசோதித்தவர்  :           சேரா. சுப்பிரமணியக் கவிராயர்

(திருவாவடுதுறை ஆதீன வித்துவான்)

420. விவாக முகூர்த்தப் பத்திரிகை – மண இதழ்

(1524)

நாட்கள் உருண்டோடின. நம் பேராசிரியர் (மயிலை சிவமுத்து) முப்பத்திரண்டாம் அகவையைக் கடந்து முப்பத்து மூன்றாம் அகவையைக் கண்டார். அப்போது அவருக்குத் திருமணம் செய்வது பற்றி பேச்சு எழுந்தது. நம் பேராசிரியரின் ஆசிரியராகிய மணி. திருநாவுக்கரசு முதலியார் அவர்களால் மண இதழ் என்னும் தலைப்போடு திருமண அழைப்பிதழ் எழுதப் பெற்றது. நம் பேராசிரியர் 10.9.1924 இல் உற்றார் உறவினர் அனைவரும் மனங்களிக்கப் பேராசிரியர் மணி திருநாவுக்கரசு முதலியார் அவர்கள்.

எண் குணத்து முத்தாய் எழிலிற் குமரனாய்

வண்தமிழிற் சாமியாய் வாழ்காளை – பெண்குணத்து

மங்கையர்க்குப் பேரரசாம் மானுடனே பல்லாண்டு

மங்கலமாய் வாழ்க மகிழ்ந்து.

என மனமகிழ்ந்து வாழ்த்த மங்கையர்க்கரசியார் என்னும் அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். தமிழ்நெறிக் காவலர் பேராசிரியர் மயிலை சிவமுத்து நினைவு மலர். மாணவர் மன்ற வெளியீடு, சென்னை.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Thursday, September 22, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 411-416

 

அகரமுதல





(தமிழ்ச்சொல்லாக்கம்: 408-410 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 411-416

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

411. கீர்த்தனை – பாட்டு

கீர்த்தனை என்பது வடமொழிச் சொல்லாயினும் தமிழில் பாட்டென்னுஞ் சொல்லோடு வேற்றுமையின்றிப் பயின்று தொன்றுதொட்டு வழங்கி வருகிறது. பாட்டென்னுஞ் தமிழ்ச் சொல்லோ இசைத் தமிழின் பாகுபாட்டையுணர்த்தும் தேவபாணி என்பது முன்னோர் ஆட்சி.

நூல்   :           பரமானந்தப் பக்திரசக் கீர்த்தனை (1920) முகவுரை – பக்கம் – 5

நூலாசிரியர்   :  தூத்துக்குடி டி.டி. சங்கரதாசு சுவாமிகள் (தமிழ்நாடகத் தலைமை நாடகாசிரியர்)

412. பாலசுந்தரம் – இளவழகனார் (1920)

குருகுலம் அழகரடிகளார்

வாழ்க்கைக் குறிப்புக்கள்

பிறந்த ஊர்      :   மதுராந்தகத்தை அடுத்த மாம்பாக்கம்

ஆண்டு        :    1904 ஏப்பிரல்

பெற்றோர்  :    சுப்பராய பிள்ளை திரு. மாணிக்கம்மாள்

மரபு  :      வள்ளலாரைத் தோற்றுவித்த ‘சீர் சுருணிகர்’

பெயர்    :  பெற்றோரால் அமைந்த பெயர் பாலசுந்தரம்; ஆசிரியரால் அமைந்த பெயர் இளவழகனார்; தீக்கையால் அமைந்த பெயர் அழகரடிகள்.

1920.16 ஆம் வயதில் தமிழ்க் கடல் மறைமலையடிகளார்க்கு மாணவர்

நூல்   :   குருகுலம் – திருக்குறள் பீடம், அழகரடிகள் வாழ்க்கை வரலாறு

நூலாசிரியர்    :   த.ஆறுமுகம் பக்.53, 54.

413. ஞானவாசகம் – அருட்பா

414. சித்தவிருத்தி – நெஞ்சிற் பரப்பு

நூல்   :   திருவாதவூரடிகள் புராணம் (1923) (கடவுள்மாமுனிவர்)

குறிப்புரை :   பிரசங்க பாநு கா. இராசாராம் பிள்ளை

415. ஞான சாகரம் – அறிவுக் கடல் (1923)

416. பதுமம் – திருமலர்

“ஞான சாகரம்” (1902) இதுவே பின்னர் அறிவுக் கடல் எனத் தனித் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது! ஆசிரியர் நாகை வேதாசலம் பிள்ளை எனும் மறைமலையடிகளாவர். ஞான சாகரம் முதலிய தனது பெயருக்குத் தகுந்தாற் போல் பதுமம் – 1, இதழ் – 1 என்று வெளிவந்தது. பின்னர் 1923 இல் அறிவுக் கடலாகப் பெயர் மாற்றப்பட்ட பின்பு திருமலர், இதழ் என்று வெளிவரலாயிற்று.

நூல்   :     தமிழ் இதழியல் வரலாறு (1977) பக்கங்கள் 50, 61

ஆசிரியர்    :    மா. சு. சம்பந்தன்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Tuesday, September 20, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 408-410

அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 403-407 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 408-410

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

408. Governor – காவலர்

விசுவநாதரின் இராச விசுவாசமும் வீரமும் புயவலியும் இத்தன்மையவென உணர்ந்த இராயர் மகிழ்ச்சியுற்று அவர் வேண்டும் வரங்களைக் கொடுப்பதாகச் சொன்னார். நாயக்கர் தமது பிதாவிற்கு உயர்ப்பிச்சை கொடுக்க வேண்டுமென்று தாய் உயிர்வேண்டிய பரசுராமரைப் போற் கேட்க, அவரும் மனமுவந்து ஈந்தனர். அன்றியும் விசுவநாதரைப் பாண்டி நாட்டுக்குத் தலைமுறை தத்துவமாய்க் காவலர் ஆக்கினர்.

காவலர் என்ற பதம் Governor என்ற ஆங்கில மொழியின் பெயரில் இந்நூலில் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

நூல்   :           பாண்டிய தேச நாயக்க மன்னர் வரலாறு (1919), பக். 7,

நூலாசிரியர்         :           நெ. ரா. சுப்பிரமணிய சருமா, அமெரிக்கன் மிசன்,

(பசுமலை உயர்தர கலாசாலைத் தலைமைத் தமிழ்ப் பண்டிதர்)

409. அன்னகோசம் – தீனிப்பை

விசபேதி ஒருவகை மோசமான நாசகால வியாதி. கலரா கண்ட இடத்தில் அநேகர் மரித்துப் போவார்கள். ஆகையால் இப் பெருவாரிக்குச் சனங்கள் பெரிதும் பயந்து இடம் பெயர்ந் தோடுவார்கள். கலராவை ஒருவகைத் தொத்து வியாதியென்றே கருதுகிறார்கள். விசபேதி அன்னகோசத்தில் (தீனிப்பை) எவ்வகை ஆகாரத்தையும் இருக்கவொட்டாமல் அதைக் கீழுக்கும் மேலுக்குங் கிண்டிக் கிளப்பிவிடுகிறது.

இதழ் :           நல்லாசிரியர், 1919 சூன் வயது-15 மாதம் – 1, பக்கம் – 8

கட்டுரையாளர்    :           சி. வே. சண்முக முதலியார் உபாத்தியாயர், செசனல் பள்ளி, காரியதரிசி, உபாத்தியாயர் சங்கம், திருவள்ளூர்,

410. மீனாட்சி – கயற்கண்ணி

தமிழே சிறந்தது

இராகம் – பியாகு, தாளம் – ஆதி

பல்லவி

தமிழே சிறந்ததென உனது நாமம் விளங்கச்

சாற்றும் அந்தப் பொருளை யாரறிவார் – அம்மா (தமிழே)

அநுபல்லவி

அமிழ்தினிற் சிறந்தது ஆரியத் துயர்ந்தது

அகத்திய னார்சிவ னிடத்தினி லுணர்ந்தது

அடிசீர் மோனை எதுகை தொடைசேர் தளையின்வகை

ஆகும் பாவினம் சந்தமா விரிந்தது – வண்ணத் (தமிழே)

சரணம்

திணைபால் காட்டும் விகுதி சிறப்புப் பொதுப் பகுதி

சேர்ந்த விதங்களெல்லாம் தென்மொழிக் கே தகுதி

இணையெனும் வடமொழி இருமொழியின் பேர்வழி

இசைக்கும் எழுதுவ தெல்லாம் வலஞ்சுழி – அதால் (தமிழே)

அகரத்தோ டகரஞ்சேர் வடமொழி தீர்க்க சந்தி

ஆகுமென் றுரைப்பார்கள் அறியார்கள் புத்தி நந்தி

மகரவொற் றழிவிதி மார்க்கமென் பதைப் புந்தி

வைத்தவர்மரு வென்றாரே முந்தி – அதால் (தமிழே)

கயற்கண்ணி மொழிபெயர்ப் பதற்கென உரைசெய்வார்

கந்தப் புராணமதின் காப்புச் செய்யு ளறியார்

இயற்படப் புணரியல் என்னுடன் வாதாடுவார்

இசை மராடி என்பதற் கென்புகல்வார் – அதால் – (தமிழே)

வடமொழி வழக்கில்லை வழங்குவர் தமிழ்ச் சொல்லை

மலைவேங் கடங்குமரி மற்றிரு கடல் எல்லை

இடமாக வகுத்தவர் இன்றுள்ளார் களுமல்லை

இயம்பும் மீனாட்சியென்ற பெயர்வல்லை – அதால்- (தமிழே)

– சங்கரதாசு சுவாமிகள்

நூல் : சங்கரதாசு சுவாமிகள் பக்திரசக் கீர்த்தனை (1920)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்