Sunday, October 16, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 481-485

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 476-480 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 481-485

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

481. ஆபீசு – அரசாட்சி

482. Records – ஆதரவுகள்

483. Circular – சுற்றுத்தரவு

இந்த மலை வழக்கை மலையினும் பெரிதென்று சொல்வது பெரிதும் தகும். வேலியே பயிரை மேய்வதுபோல், இவ்வழக்கில் துரைத்தனத்தார் எதிரியாயிருந்து மன்றி இடையூறாகவும் இருந்தார்கள். ஷை வழக்குக்கு வேண்டும் ஆதரவுகள் (Records) பலவற்றிற்கும் அரசாட்சியாரிடம் (ஆபீசுகளில்) இருந்து நகல்கள் எடுக்க வேண்டியதாயிருந்தது. சமீன்தாரவர்கள், வகையரா கேட்கும் நகல்கள் கொடுக்கக் கூடாதென்று சில்லாக் கலைக்டர் பொதுவான ஒரு சுற்றுத்தரவு (Circular) அனுப்பியிருந்தபடியால், சர்க்கார் கட்சிக்கு மாறான ஆதரவுகள் கிடைப்பது அரிதினும் அரிதாயிற்று.

மேற்படி நூல் : பக்கம் – 88

484. Tutor – தனியாசிரியர்

அப்பால் 17ஆவது வயதில் முதலாவதாக 17 உரூபாச் சம்பளத்தில் தாம் படித்த கல்விச் சாலையிலேயே கீழ் வகுப்புகளில் ஒன்றிற்கு ஆசிரியராக நியமிக்கப் பெற்றார். அதில் சிறிது காலம் சென்றபின் சிங்கம்பட்டி சமீனைச் சேர்ந்த சொத்துகள் சர்க்கார் மேற்பார்வையில் இருந்து வருகையில், ஷைசமீன் மைனர் துரையவர்களுக்குத் தனியாசிரியராக (Tutor) நியமிக்கப் பெற்றார்.

மேற்படி நூல்        :           வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி.செ. சுப்பிரமணிய பிள்ளையவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924), பக்கம்

நூலாசிரியர்         :           மு.பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை

(திருநெல்வேலி இந்து கலாசாலைத் தமிழாசிரியர்)

485. Professors & Lecture – சொற்பெருக்காசிரியர்கள்

பரீட்சைகளில் தேறி வேலை சம்பாதித்துக் கொண்டவர்களில் சிலர், முக்கியமாகக் கல்லூரிகளில் அமர்ந்திருக்கும் சொற்பெருக்காசிரியர்கள் (Professors& Lecturers) நல்ல செளகரியம் வாய்ந்த நிலைமையில் வாழ்நாளை யாரம்பிக்கின்றனர். அவர்கள்தாம் ஆங்கிலத்தில் கற்றதையும் தமது ஆராய்ச்சியின் பயனையும் இதரர்களுக்கு உபயோகப்படுமாறு தேச பாசைகளில் தெரிவிக்க வேண்டிய சாவகாசமும் பொருளும் அவர்களுக்குண்டென்று தோன்றுகின்றது. ஆனால் அவர்களில் பெரும்பான்மையோர் இத்தகைய ஊக்கமும் கவலையும் மேற்கொள்வதில்லை. எஞ்சிய சிலர் ஆங்கிலத்தில்தான் தம்முடைய கல்வித் தேர்ச்சியைக் காட்ட வேண்டும் என்று அபிப்பிராயப்படுகின்றனர்.

நூல்   :           தமிழ்நூற் பெருக்கம் (1924) பக்கம் – 18

நூலாசிரியர்         :           வை. சூரியநாராயண சாத்திரி, எம்.ஏ.எல்.டி.,

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Friday, October 14, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 476-480

 அகரமுதல





(தமிழ்ச்சொல்லாக்கம்: 472-475 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 476-480

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

476. பிரமாணம் – மேற்கோள்

பிரிந்திருக்க வொண்ணாத இரு பொருள்களில் ஒன்றை உண்மையான நெறியில் ஆராய்ந்தறியப் புகுந்த இடத்தில் மற்றதையும் ஒருவாற்றேனும் அறியாதிருக்க முடியாது. சிறிதேனும் அறியும்படி இயல்பாகவே நேரிடும். சீவனும் சிவனும் பிரிந்திருப்பதில்லை என்பதற்கு மேற்கோள் (பிரமாணங்கள்)

உலகமும் பல்லுயிரும் ஒன்றி நிறைந்தோங்கி

இலகும் சிவன் எம்மிறை

மேற்படி நூல் : பக்கங்கள் -33, 34

477. குமாசுதா – எழுத்தாளர்

இவர், இல்வாழ்க்கையில் திரும்பத் திரும்ப தாரமிழத்தலும், மறு தார மடைதலும் ஆகிய காரியங்களால் பலவாறு துன்பப்பட்டவரெனினும், இன்னொரு வகையில் சிறந்த பாக்கியவானாயிருந்தார். நண்பர் நியாயவாதியாயிருந்த நிலைமைக்கேற்ற உற்ற நற்றுணையாகவும், எழுத்தாளராகவும் (குமாசுதா) அமைந்துள்ள ஒருவரே தொடக்கத்திலிருந்து நண்பரின் வாழ்நாள் முடிவுரை உதவியாக இருந்தார்.

மேற்படி நூல் : பக்கம் – 23

478. சென்றிநெறி ஆல் – நூற்றாண்டு மண்டபம்

479. Treasurer – பொருளாளர்

சுமார் 18 ௵க்குமுன் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் (சென்றி நெறி ஆலில்) மாகாண மகாநாடு கூடியது. அதில் கைத்தொழிற் பொருட் காட்சியும் நடைபெற்றது. திருநெல்வேலி சில்லா, சிக்கனத்திற்குப் பேர்ப்போன தாகையால், பொருட்காட்சி முதலிய காரியங்களுக்குரிய முன் முயற்சியில், நமது நண்பரைப் பொருளாளர் (Treasure) ஆக நியமித்துக் கொண்டால் குறித்த காரியங்கள் எவ்வழியினும் இடர்ப்பாடின்றி இனிது முடியும் என்று சிலர் தூண்டினார்கள்.

மேற்படி நூல் : பக். 61, 52.

480. Manager – பொறுப்பாளர்

கல்விச் சாலைகளில் புதிதாய் வந்த ஆசிரியரை சில மாணவர்கள் ஆழம் பார்க்கத் துணிவது போல், புதிதாகப் பட்டத்துக்கு வந்திருக்கிற சமீன்தாரவர்களையும் உதவியாக வந்திருக்கும் புதிய பொறுப்பாளரை (மானேசர்) யும் குடிகள் பதம் பார்க்க முயன்றார்கள்.

மேற்படி நூல் : பக்கம் – 81

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Wednesday, October 12, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 472-475

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 465-471 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 472-475

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

472. அபிப்பிராயம் – கருத்துகள்

இனி, நான் நேரில் ஒருவாறு தெரிந்து வைத்திருந்த காரியங்களில் அநுமான வகையும் சேர்த்து முற்றுற எழுதி வெளியிட்டிருக்கிற என் கருத்துகள் (அபிப்பிராயம்) சரிதானா என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு தலைவரோடு அவ்வக் காரியங்களில் தொடர்புற்றிருந்தோர் இடங்கள் தோறும் சென்று, அவரவர்க்கு உரிய பாகங்களை வாசித்துக் காட்டியபோது அன்னோர் முற்றிலும் சரி என்று ஒப்புக்கொண்டு என்னை மகிழ்வித்தார்கள்.

மேற்படி நூல் : பக்கம் – 4

473. புத்திக்கூர்மை – அறிவு நுணுக்கம்

பேதை பெதும்பைப் பருவங்களில் அறிமுகமில்லாத அந்தப்புரக் கன்னிகையான ஒரு பெண்ணினுடைய குலநல முதலியவைகளைத் தெரிந்து கொள்ளுதல் எளிதன்று. ஆயினும் குலநலம் உடல் நலம் அழகு படிப்பு பணம் முதலிய காரியங்களை பிறர் பலர் மூலமாய் வெவ்வேறான வழிகளில் முயன்றால் பெரும்பாலும் உண்மை தெரிந்து கொள்ளக்கூடும். ஆனால் வீடடங்கி அந்தப் புரத்திலிருக்கும் கன்னிகையின் குணம் செயல்களையும் அறிவு நுணுக்க (புத்திக்கூர்மை)த்தையும் பற்றி பிறர் மூலமாய்த் தெரிந்து கொள்ளுவது அரிதினும் அரிதேயாம்.

மேற்படி நூல் : பக்கம் 10, 11

474. சங்கீத ஞானம் – பண்ணறிவு

475. சாரீரம் – ஒலிநயம்

நமது நண்பருக்கு இயல்பாகவே பண்ணறிவுண்டு. சிறிது கேள்விப் பயிற்சியுமுண்டு. ஆனால் ஒலிநயம் (சாரீரம்) இல்லை. ஆயினும் அவர் பாக்களை வாசிக்கும் போதெல்லாம் சந்தத்தைத் தழுவியே வாசிப்பது பழக்கம்.

மேற்படி நூல் : பக்கம் – 73

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, October 10, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 465-471

அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 461-464 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 465- 471

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

465. உயர்தர நியாய மன்று – சில்லாக் கோர்ட்(டு)

466. Appeal – அப்பில் மேல்வழக்கு

467. Preview Council – பேராச் சங்கம்

அப்பால் சென்னை உயர்தர நியாயமன்றில் (சில்லாக்கோர்ட்டில்) சமீன் பொருட்டாக மேல் வழக் (அப்பீல்) கிட்டதில் ஷை மலைகளின் முழு உரிமையும் சமீனுக்குத்தான் உண்டென்றும் சர்க்காருக்கு எவ்வித உரிமையும் கிடையாதென்றும் உறுதி கூறப்பட்டது (சித்தாந்தம் செய்யப்பட்டது) அப்பால் சர்க்கார் பொருட்டாக, பேராச் சங்கத்தில் (பிரிவி கவுன்சில்) எதிர்வாதம் செய்யப்பட்டது.

மேற்படி நூல் : பக்கம் – 86

468. சர்வ சுதந்தர பாத்தியம் – முழு உரிமை

விசாரணை முடிவில், வழக்கிடப்பட்ட மலைகள், நீடித்த காலமாகச் சமீன் ஆளுகையில் இருந்து வந்திருக்கிறதென்றும் ஆனால் முழு உரிமை (சர்வ சுதந்தர பாத்தியம்) சமீனுக்குக் கிடையாதென்றும், முழு உரிமை சர்க்காருக்குத்தான் உண்டென்றும், சர்க்காருக்குட்பட்டுச் சில உரிமையுடன் சமீன் அனுபவிக்கலாம் என்றும் சில்லா நீதிபதியால் தீர்ப்புச் சொல்லப்பட்டது.

மேற்படி நூல் : பக்கம் – 86

469. Major – தகுந்த வயது வந்தவர்கள்

470. Minor – இளைஞர்கள்

471. Registrar – பதிவாளர்

அவருடைய பிள்ளைகளில் தகுந்த வயது வந்தவர்களும் (மேசர்), இளைஞர்களும் (மைனர்) இவர்களெல்லாரும் நல்ல குணமுடையவராகையால் தந்தையின் கையெழுத்துக்குறையை பொருட்படுத்தாமல் தந்தையாரின் நோக்கத்தின்படி நடப்பதே தங்கள் கடமையென்றுணர்ந்து, பதிவாளர் (ரிசிசுட்டரார்) முன்பு, மரண சாதனத்தை ஒற்றுமையுடன் ஒப்புக்கொண்டு பதிவு செய்து கொண்டார்கள்.

மேற்படி நூல் : பக்கம் – 75

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Saturday, October 8, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 461-464

 அகரமுதல






(தமிழ்ச்சொல்லாக்கம்: 453-460 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 461-464

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

461. சங்கீத வித்துவான்கள் – இசைப் புலவர்கள்

தற்கால வழக்கிலுள்ள சுமார் 40 சாதாரண இராகங்களை இனங்கண்டு பெயர் சொல்லத் தெரிந்தவர். மேலும் பாட்டுக் கச்சேரிகளை ஆதரிப்பதுண்டு. பாடகர்களின் தராதரங்களைச் சரியாய் மதிக்க வல்லவர். நாக சுரங்களையும் நன்றாய்க் கேட்டுச் சுவையுணர்வார். ஆகையால் இசைப்புலவர்களும் (சங்கீத வித்துவான்களும்) இவர் தம் நட்பையும் ஆதரவையும் பெரிதும் விரும்பினார்கள்.

மேற்படி நூல் : பக். 73

462. சம்மெரி வியாச்சியம் – தொடுத்துரை வழக்கு

463. கிரிமினல் கேசு – தண்ட வழக்கு

அக்குடிகள் முந்திய ஏற்பட்டின்டி அறுப்புக்களத்தில் வரம் பிரித்தாக்க வேண்டிய நெல் தீர்வையை முறைப்படி செலுத்தாமலும், அதனால் வருங்கேடு இன்னதென்றறியாமலும் ஒழுங்கீனமாய் நடக்கத் துணிந்து விட்டார்கள். கலவரம் செய்யவும் தொடங்கினார்கள். ஆகையால் குடிகளுக்கும் சமீனுக்கும் தொடுத்துரை வழக்கும் (சம்மெரி வியாச்சியம்) தண்ட வழக்கும் (கிரிமினல் கேசும்) ஏற்பட்டன.

மேற்படி நூல் : பக், 81.

464. விசேடங்கள் – சிறப்புச் செயல்கள்

இன்னும் சமீன் குடிகளில் வீடுகளில் நடக்கும் நன்மை தீமைகளாகிய சிறப்புச் செயல் (விசேடங்கள்)களுக்கு அவரவர்கள் தகுதிக்கேற்ப நன்கொடை அளித்து வரும்படி ஏற்பாடு செய்தார்.

மேற்படி நூல் : பக்கம் 83

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Thursday, October 6, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 453-460

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 447-452 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 453-460

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

453. பிரதிகம் – பிண்டம்

454. பதிகம் – பத்து

மற்றி தற்குப் பதிகம்வன் றொண்டர்தாம் புற்றி டத்தெம் புராண னருளினாற் சொற்ற மெய்த்திருத் தொண்டத் தொகையெனப்

பெற்ற நற்பதி கந்தொழப் பெற்றதால்

என்னுந் திருப்பாவின்கண் பதிகம் என்னும் வடசொல் ஈரிடத்துளது. முன்னது ’பிரதீகம்’ என்னும் வடசொற்றிரிபு. பிரதிகம் என்னுஞ் சொல் பிண்டம் அஃதாவது சரீரம்’ என்னும் பொருட்டு பின்னது, ’பதிகம்’ என்னும் வடசொற்றிரிபு இப்பதிகம்’ என்னுஞ் சொல்லிற் பதி என்பது ’பத்து’ என்னும் பொருட்டு; இராவணனுக்குப் ’பதி கண்டன்’ என்னும் பெயரிருத்தலறிக.

நூல்      :           பெரிய புராண வாராய்ச்சி (1924) பக்கம் 127

நூலாசிரியர்      :           வா. மகாதேவ முதலியார் (கிறித்தவ கலாசாலைத் தமிழாசிரியர்)

455. சுப்பிரமணி – வெண்மணி

தந்தையின் சிறிய தாயாராகிய சண்முகத்தம்மாள் சில காரணங்களால் இக் குழந்தையினிடத்தில் பற்றுடையவளாய் சிரத்தையுடன் குழந்தையைப் பாதுகாத்து வளர்த்து வரிவாளாயினாள். இம்மைந்தனுக்குத் தந்தையின் தந்தையராகிய பேரனார் சுப்பிரமணி (வெண்மணி) என்னும் பிள்ளைத் திருநாமம் அமைந்தது. –

நூல்      :           வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி. செ. சுப்பிரமணியபிள்ளையவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924) பக். 4

நூலாசிரியர்      :           மு.பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை

(திருநெல்வேலி இந்து கலாசாலைத் தமிழாசிரியர்)

456. Unlimited Bank – மட்டிடப் பெறாத பணக்கூடம்

நம் நண்பர் பெரிது முயன்று செய்த இப் போது நலம் ஊருக்கும் நாட்டுக்கும் நன்மை தருவமன்றி அவர் தங் குடும்பத்துக்கும் நன்மை பயப்பதாயிற்று. நாளடைவில் நமது நண்பர் இந்நகரத்துச் சிறந்த செல்வர்களில் ஒருவராயினார். அப்பால் தாம் சொந்தத்தில் பணக்கூடம் ஒன்று அமைத்து வைக்கும் தகுதியுடைய ராயினார். 1087ம்௵ தமக்கு உற்ற நண்பராகிய திருவாளர் பி.எம்.கைலாசம் பிள்ளையவர்களைத் துணைக்கொண்டு கே.எசு.பாங்க் என்னும் பெயரால் மட்டிடப் பெறாத (Unlimited) பணக்கூடம் ஒன்றை அமைத்து வைத்தனர்.

மேற்படி நூல் : பக், 45

457. Municipality – நகரப் பாதுகாப்புச் சங்கம்

இனி நமது நண்பரின் பொதுநல விருப்பும் உழைப்புங் கண்டறிந்த பல பொதுநலச் சங்கங்களில் இவர் உதவியை நனி விரும்பிக் கொண்டார்கள். திருநெல்வேலி நகரப் பாதுகாப்புச் சங்க (முன்சிப்பாலிட்டி)த்தில் நெடுங்காலம் அங்கத்தினர் கவுன்சிலர் ஆக இருந்து ஊரார் உவக்குமாறு உழைத்து வந்தார்.

மேற்படி நூல் : பக்கம் – 59

458. உபகரணங்கள் – துணைக்கருவிப் பொருள்

சேதுபதியவர்கள், மற்ற ஆடம்பரமான வரவேற்பு முதலியவை விரும்பிலரேனும், வைதீகமான சிவபூசை வழிபாட்டில் மிகப் பற்றுடையவர் என்பதும், அதனைச் சிறக்கச் செய்வதில் கருத்துடையவர் என்பதும் தெரிந்துகொண்ட நண்பர், அதற்குரிய துணைக் கருவிப் பொருளை (உபகரணங்களைச் சிறப்பாக செய்து வைத்திருந்தார்.

மேற்படி நூல் : பக்கம் – 63

459. பரமானந்தம் – பேரின்பம்

பக்தியிற் சிறந்த சேதுபதியவர்கள், திருக்கைலாசம் போல் தோன்றிய பூசை மடத்தின் அமைப்பும் சிறப்புங் கண்டு வியந்து பேரின்பத்தில்: (பரமானந்தத்தில்) மூழ்கினவராய் ஐம்புலனும் ஓர் புலனாக ஒடுங்கிய மனத்துடன் உள்ளமுருகிச் சிவ வழிபாடு செய்து முடித்தார்.

மேற்படி நூல் : பக்கம் – 64

460. தரும சங்கடம் – அறவழியிடர்

நண்பர் தம்முடைய மூத்தமகனாகிய துரைசாமி பிள்ளைக்குத் திருமண முயற்சி தொடங்குங்கால் இருதலையிடரில் அகப்படலுற்றார். ஆயினும் இது உலகத்தில் புதியதன்று. இடை இடையே நிகழ்வதொன்றாம்.

நூல்      :           வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் திரு. செ. சுப்பிரமணிய பிள்ளை யவர்களின் சரித்திரச்சுருக்கம் (1924) ப73

நூலாசிரியர்      :           மு. பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை

(திருநெல்வேலி இந்து கலாசாலைத் தமிழாசிரியர்)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்