Thursday, December 29, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 585-596

 அகரமுதல




தமிழ்ச்சொல்லாக்கம் 581-584 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 585- 596

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

585. பிரமாணம்    –           உறுதி

586. சிருட்டித்தல் –           பிறப்பித்தல்

587. நியதி   –           கட்டளை

588. பரிவாரம்       –           சூழ இருப்பவர்

589. பந்தம்  –           கட்டு

590. சாதனம்          –           வழி

591. லட்சியம்        –           குறி

592. உபாயம்         –           வழி

593. சகாயம்           –           உதவி

594. சகித்தல்         –           பொறுத்தல்

595. சனனம்           –           பிறப்பு

596. வயோதிகம்  –           முதுமை

நூல்   :           சீவகாருணிய ஒழுக்கம் (1927)

நூலாசிரியர்         :           சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள்

பதிப்பாசிரியர்    :           மணி. திருநாவுக்கரசு முதலியார்

(சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழாசிரியர்)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Thursday, December 22, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 581-584

 அகரமுதல

     23 December 2022      No Comment



( தமிழ்ச்சொல்லாக்கம் 576 -580 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 581-584

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

581. அநுபவம் – அடைவு

உண்மை இல்லா உள்ளம் என்றும் அச்சத்தால் பிடித்தலையும், அது பொலியும் உள்ளம் அச்சத்தால் பிடிக்கப்படாது அஞ்சாமையில் வீறுகொண்டு நிற்றலையும் விளக்கிக்கூற வேண்டுவதில்லை. அவரவர் அடைவு (அநுபவம்) அவரவர்க்கு இவ்வுண்மையை அறிவுறுத்தும்.

மேற்படி நூல் : பக்கம் – 58

582. வீரலெட்சுமி – விந்தைமகள்

கன்னிப்பேரில் விசயம் பெற்ற செழியன், அக்காலத்திலேயே வீரராவார்க்குச் செய்யத்தகும் களவேள்வியை முறைப்படி செய்யலானான். தோற்றொழிந்த வேந்தரின் முரசங்களே பானைகளாவும், வீரர்களின் முடித்தலைகளே அடுப்பாகவும், ஓடுகின்ற குருதிப்புனலே உலைநீராகவுங் கொண்டு அங்குச் சிதறிக்கிடக்கும் தசை, மூளை முதலாயின பெய்து, வீரவளை யணிந்த தோளாகிய துடுப்புகளால் துழாவிய உணவினால் திருக்களவேள்வியைச் செய்து முடித்தான். அது கண்டு களித்த விந்தைமகள் விரைந்து வந்து அச்செழியனது கொழுவிய புயங்களிற் கொலுவீற்றிருப்பதானாள்.

விந்தை மகள் : விரலெட்சுமி.

நூல்   :           பாண்டிய ராச வம்ச சரித்திரம் (1926) பக்கம் : 25

நூலாசிரியர்         :           ஆர். அரிகரமையர்

(அம்பாசமுத்திரம், தீர்த்தபதி ஐசுகூல் தலைமைத் தமிழ்ப் பண்டித்ர்)

583. நிகும்பலை – நீர்கொழும்பு

இலங்கையில், ஆங்கிலப் பாசையில் ‘நிகொம்போ‘ என்றும், தமிழில் நீர்கொழும்பு என்றும் பெயர் வழங்கி வரும் நகரமானது பூர்வத்தில் இராவணன் மகன் இந்திரசித்தன் என்பவன் நிகும்பலை என்னும் யாகம் நடத்திய விடமாம். ஆதலினால்தான் அவ்வூருக்கு ஆதியில் நிகும்பலை எனும் பெயர் வழங்கியதென்றும், அப்பெயர் நாளாவட்டத்தில் நீர் கொழும்பென மாறிவிட்டதென்றும் சொல்லப்படுகிறது.

இதழ் ; சத்திய நேசன் 1926, டிசம்பர்.

584. Play Ground – விளையாட்டுப்புலன்

முதன் முதலில் ஆதித்தியன் மகனான பராந்தகன் மதுரையை வென்று இலங்கைக்குப் போய் அவ்விடத்திலும் சயம் பெற்றான் என்பதும் அவனது ஆட்சியில் கிராம பஞ்சாயத்து ஓங்கி வளர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கவை. இவ்வம்சத்தில் பத்தாவது அரசனாகிய ராச ராசன் கீர்த்தி மிக அரியது. ஏனெனில் அவன்தான் தமிழகத்திலுள்ள நாடுகளையும் இலங்கைத் தீவையும் முதன் முதலில் ஒரு குடையின் கீழ்க் கொண்டு வந்தவன்.

இம்மன்னனின் குமாரத்தி குந்தவ்வையார் கீழச் சளுக்கிய விமலாதித்தியனை மணம் புரிந்து கொண்டதனால் அவர்கள் வம்சத்தில் தோன்றிய (பதினேழாவது சோழன்) குலோத்துங்க சோழன் சென்னை ராசதானியின் வடஎல்லை வரையிலும் ஒருகால் அரசு புரியலாயினன்.

ராச ராசனின் நன்கொடைகள் பலவுள. அவன் சைவ சமயத்தில் ஆழ்ந்தவனாயினும் நாகையில் புத்தர்களுக்கும் கோவில் கட்டுவித்தான். அதைப் பதினைந்தாவது நூற்றாண்டு வரை வெளிநாட்டார்கள் தரிசனஞ் செய்து கொண்டிருந்தனராம்.

அதன்பிறகு அது பின்னமாய்க் கிடந்ததைக் கண்ட பாதிரிமார்கள் அவ்விடத்திலேயே 1867 இல் ஒரு மாதா கோவில் தாபித்தனராம். அந்நகரத்தில் புத்தர் ஆலயம் இருந்ததென்பதற்குச் சான்றுகள் இன்று கிடைத்திருக்கும் 292 புத்த விக்கிரங்களாகும். இந்த விக்கிரகங்கள் நாகை வெளிப்பாளயத்தில் அமைக்கப் பெற்றிருக்கும் நியாயத்தலத்தின் எதிரில் பரந்து நிற்கும் விளையாட்டுப் புலனில் வெட்டி யெடுக்கப்பட்டதாகும்.

நூல்   :           நமது பரதகண்டம் (1926) இரண்டாம் பாகம், பக்கங்கள் 81, 82

நூலாசிரியர்         :           வை. சூரியநாராயண சாத்திரி, எம்.ஏ.எல்.டி.,

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Thursday, December 15, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 576 -580

 அகரமுதல




தமிழ்ச்சொல்லாக்கம் 571-575 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 576-580

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

576. Table Talk – உண்டாட்டுரை

இதழ் :           நச்சினார்க்கினியன் (1926) பக்கம் : 58

மொழிபெயர்ப்பு :           நச்சினார்க்கினியன் ஆசிரியர்

577. சீவானந்தம் – உயிர் இன்பன் (1926)

இளமையிலே சீவாவிடம் தமிழ்ப்பற்று மிகுதி. சிராவயலின் ஆசிரம வாழ்க்கையும், ஆசிரம வாழ்க்கையில் அவர் கற்ற ஏராளமான தமிழ் நூற்களும் அவருடைய தமிழ்ப் பற்றை வளர்த்தன.

இக்காலத்தில் தமிழ் நாட்டில் காங்கிரசு இயக்கத்துக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் கிட்டத்தட்ட சமமாக நடைபெற்ற இன்னொரு இயக்கம் தனித்தமிழ் இயக்கம். பிராமண ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு வடிவமாகவே – அதாவது ஆரிய எதிர்ப்பு – ஆரிய கலாச்சார எதிர்ப்பு, அதன் குறியீடாக ஆரிய மொழி எதிர்ப்பு – மறுபுறம் தனித்தமிழ் இயக்கம் – எனச் செயல்பட்டது. மறைமலையடிகளார். இதன் தானைத் தளபதி, போலியான பிராமணிய கலாச்சார எதிர்ப்புக் குரல் கொடுத்த இந்த இயக்கத்தின் ஒளியுள்ள அம்சம் தமிழ்ப்பற்று. அதாவது தமிழனின் உணர்ச்சி மற்றும் கருத்து வெளியிட்டுக் கருவியாக தமிழையே முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற அம்சம். இந்த அம்சம் இளைஞன் சீவாவைக் கவர்ந்தது. சீவா தனித்தமிழ் பக்தரானார்.

இந்த வெறி எவ்வளவு தூரம் சீவாவைப் பிடித்திருந்தது என்பதற்குப் பல உதாரணங்களைக் கொடுக்கலாம். தோழர் சி.பி. இளங்கோ கிருட்டிணன் என்ற தனது பெயரைப் பறிகொடுத்தார். சீவானந்தம் என்ற பெயர் ‘உயிர் இன்பன்’ என்று மாறிவிட்டது.

நூல்   :           சீவா என்றொரு மானுடன் (1982) பக்கங்கள் 22, 23

நூலாசிரியர்         :           பொன்னீலன்

578. பகிரங்கக் கடிதம் – திறந்த மடல்

ஒத்துழையாக் காலத்தில் இங்கிலீசு மக்களுக்குக் காந்தியடிகள் எழுதிய திறந்த மடலில் (பகிரங்கக் கடிதத்தில்) எனது அன்பார்ந்த நண்பர்களே என்று அவர்களை அடிக்கடி விளித்தமை காண்க.

நூல்   :           மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் (1926 பக்கம் : 380

நூலாசிரியர்         :           திரு. வி. கலியாணசுந்தரனார்

579. ஆத்ம சக்தி – உள்ளொளி

தியாகம் ஒருவனது பருஉடல் உணர்வை அரித்து அரித்து உள்ளொளியை (ஆத்ம சக்தியை ஒளிரச் செய்யும்.

மேற்படி நூல் : பக்கம் : 179

580. பிராயச் சித்தம் – கழுவாய்

காந்தியடிகள் தமக்குள்ள மேல் நாட்டு அறிவு துணைகொண்டு பிணங்கி நில்லாது தமையனார் ஆணைக்கிணங்கிக் கழுவாய் (பிராயச் சித்தஞ் செய்து) கொண்டார்.

நூல் : பக்கம் : 117

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Tuesday, December 13, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 571-575

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம் 566-570 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 570-575

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

571. General Hosptial – பொது மருத்துவச் சாலை

11ஆந்தேதி வெள்ளிக்கிழமை மாலை அவர்தம் திருமேனியை, விழாக்கோலத்துடன், அரசாங்கப் பொலிசுப்படை புடைசூழ்ந்து மரியாதை புரிந்து வரவும், அரசாங்க அதிகாரிகள் எத்திறத்தினரும் ஏனையோரும் பின் றொடர்ந்து செல்லவும், சென்னை நகரின் வட கோடியாகிய இராயபுரத்திலிருந்து, சென்னை நகரின் தென் கோடிப் பகுதியொன்றின் கண்ணுள்ள (அரசாங்கப் பொது மருத்துவச் சாலைக்கருகில் (General Hospital) அர்ச். வியாகுல மாதா கல்லறைத் தோட்டத்துக்கு எடுத்துச் சென்றனர்.

நூல்   :           கனம் திவான் பகதூர் எல்.டி. சுவாமிக்கண்ணு பிள்ளை, சீவிய சரித்திரம் – (1926) பக்கம் 28

நூலாசிரியர்         :           ஆ. சண்முகம் பிள்ளை

572. திருசுட்டி – கண்ணேறு

‘திருசுட்டி விழுந்தது’ என்பதை ‘திசுட்டிவிழுந்தது, கண்திசுட்டி’ என்று வழங்குகின்றனர். திருசுட்டி என்றால் கண், அதனைச் சிதைத்து திசுட்டி என வழங்கினும், கண் திசுட்டி என்பது (Gate) கேட் வாயிற்படி (Lantern) லாந்தர் விளக்கு என்பன போலல்லவா இருக்கின்றது. இது எப்படி பொருந்தும்? இதற்கு ஏற்ற தமிழ்ச்சொல் கண்ணேறு என்பதாம். கண் + ஏறு.

இதழ் :           சத்திய நேசன் (1926 பிப்பிரவரி)

தொகுதி – பகுதி, 2 பக்கம் – 37

573. Tregedy – துக்க முடிவுகொண்ட இலக்கியம்

காவிய லட்சணம், அலங்காரம், முதலியவைகளைக் கொண்டும் திராவிட பாசை சிறப்புற்றதென்றும் ஆரியபாசை அதற்குச் சிறிது குறைந்த நிலைமையிலுள்ளது என்பவர்களு மிருக்கின்றனர். அதற் குதாகரணமாய் வடமொழியில் துக்க முடிவுகொண்ட இலக்கியம் இன்மையைக் கூறித் தமிழில் காணப்படும் சிலப்பதிகாரத்தைச் சிறப்பித்துப் பேசுகின்றனர் திராவிடாபிமானிகள்.

நூல்   :           நமது பரதகண்டம் 203,4 முதற்பதிப்பு (1926) ஆறாவது சுருக்கம் – தமிழகத்தின் நாகரிகம், பக்கம் 121,

நூலாசிரியர்         :           வை. சூரியநாராயண சாத்திரிஎம்.ஏ.எல்.டி.

574. பரோபகாரம் – ஒப்புரவு

ஒப்புரவு (பரோபகார) நினைவும் செயலும் பெறுவதற்கு உயிர்ச்சார்பு இன்றியமையாதது, மனிதன் மற்ற உயிர்களோடு கலந்து வாழ வாழ, அவன்பாலுள்ள தன்னலம் என்னும் பாசம் அறுந்து போகும்.

நூல்   :           மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் (1926) பக்கம் :39

நூலாசிரியர்       :           திரு. வி. கலியாணசுந்தரனார்

575. Melody (Gudson, ) – ஒழுகிசை

தமிழ்நாட்டுச் சங்கீதம் வடநாட்டுச் சங்கீதத்தைப் போல ஒழுகிசையைத் தழுவி நிற்குமல்லாது ஆங்கிலேய சங்கீதத்தைப் போல ஒன்றிசையை தழுவி நிற்பதல்ல. ஒழுங்கிசையை ஆங்கிலத்தில் மெலடி (Melody) என்பார்கள்.

இதழ் :           செந்தமிழ்ச் செல்வி (1926) பக்கம் : 224 திருவனந்தபுரம் தி. இலக்குமண பிள்ளை பி.ஏ.,

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்