Friday, August 30, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.3. வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல்

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.2. பிணியின்மை – தொடர்ச்சி)

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்”  (948)

இக்குறளிலுள்ள “நோய் நாடி” என்றது நோயை நாடிபிடித்து ஓர்ந்து பார்த்து “இன்ன நோய்” என்றறிவது. இஃது இக்கால மருத்துவ அறிவியலில் நோய் காணல் (Diagnosis) எனப்படுகிறது. நோய் முதல் நாடுவது, தமிழ் மருத்துவத்தில் நோய்க்குக் காரணம் “வளி முதலா எண்ணிய மூன்றில் எது” என்று நாடி கொண்டே காணுதல். இஃது இப்போது சிறுநீர், குருதி, மலம் முதலிய ஆய்வுகளாலும் கதிர்ப்படம். கதிர்வீச்சுப்படம் கதிவீச்சுவரி முதலிய படப்பதிவுகளாலும் அறியப்படுகிறது. “அது தணிக்கும் வாய் நாடுவது” முதலில் நோயைக் குறைக்கும் மருந்தைத் தேர்வது. இஃது இக்காலத்தில் மருந்துகளாக மாத்திரை, மேற்பூச்சு, ஊசி, அறுவை, கதிர்ப்பாய்ச்சல் முதலியவற்றில் ஒன்றையோ பலவற்றையோ ஆராய்ந்தறிந்து செய்வது. இதனைத் திருவள்ளுவர் “தணிக்கும்” என்னும் சொல்லால் குறித்தமை கருதத்தக்கது. ஐரோப்பிய மருத்துவத்தில் நோயை உடனே தடுக்கும் முனைப்பான மருந்துகளே வழங்கப்படும். தமிழ்முறையில் முதலில் நோயைக் குறைக்கும் – தணிக்கும் வழியறிந்து உடல் ஏற்கும் அளவான மருந்தை வழங்கும் முறையே கொள்ளப்படும். இஃதே பின் விளைவுகள் இல்லாமல் பையப் பையத் தணித்து முடிவாக நோய் தீர்ந்துபோகச் செய்யும்.

“வாய்ப்பச் செயல்” என்றது பொருந்திய மருந்து கொடுத்தல். இதிலும் நீரிய மருந்து, குழம்பு, அறுத்துச் சுடுதல், பற்று முதலிய கையாளப்பட்டன.

திருவள்ளுவர் அடுத்து மருந்து கொடுக்கும் முன் நோய் பெற்றவனின் உடல் நிலையளவு, நோயின் தாக்க அளவு, நோயின் கால அளவு, இவற்றைக் கருதிப் பார்த்துச் செய்தலைக் குறித்தார். இதனை “உற்றான் அளவும்: பிணியளவும், காலமும் கற்றான் கருதிச் செயல்” (949) என்னும் குறளில் அமைத்தார்.

புதுமை மருத்துவத்தில் நோயாளியின் உடல்’ மருந்தைத் தாங்கும் அல்லது ஏற்கும் நிலை பார்க்கப்படுகிறது. நோயின் கால அளவு உசாவி அறியப்படுகிறது . எடுத்துக்காட்டாகக் கண்பார்வை நோய் என்றால் அதிலும் ‘நீர் அழுத்த நோய்’ என்றால் நோயாளி நீரிழிவு நோய் உள்ளவரா என்று ஆராய்ந்தறிவர். உள்ளவர் என்றால் எத்துணை காலமாக இருக்கிறது(?) என்பதை உசாவி அறிவர். இந்தக் கால அளவுதான் கணக்கில் கொள்ளப்படும்.

அடுத்து,

“கற்றான் கருதிச் செயல்” என்றதில் ‘கற்றான்’ என்னும் சொல் திருவள்ளுவர் காலத்திலும் அதற்கு முன்பும் மருத்துவக் கல்வி இருந்ததையும் குறிக்கிறது. இக் காலத்தில் மருத்துவக் கல்வி கற்றுத் தேர்ந்து பட்டம் பெற்றவரையும் குறிப்பாகக் காட்டி நிற்கிறது.

நிறைவாக மருத்துவத்தைக் கையாளும்போது இடம் பெறும் நான்கை அடுத்துக் குறித்து முடித்தார். அதனை நான்காகக் குறித்தார்; நான்கு கூறாகக் குறித்தார்.

உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான் என்று

அப்பால் நாற்கூற்றே மருந்து” (950)

திருவள்ளுவ மருத்துவத்தில் இவை நான்கும் நினைவில் நிற்பவை. உற்றவன் – நோய்பெற்ற நோயாளி; தீர்ப்பவன் நோயைத் தீர்க்கும் மருத்துவன்; மருந்து – நோய்க்கு உரிய தூள், நீறு, மாத்திரை, குழம்பு, களிம்பு, மூலிகை முதலியனவும், அறுத்துச் சுடுவதும் அடங்கும். நான்கையும் முறைப்படுத்தி அடுக்கினார்.

இக்கால மருத்துவ நடைமுறையுடன் இவற்றைப் போருத்திப் பார்த்தால் ஒன்றி வருகின்றன.

நோயாளி எக்காலத்தும் நோயாளிதான். சில நோய் களின் புதுமைத் தோற்றம் இருக்கலாம். ஆனால் தீர்ப்பானாம் மருத்துவன் மாறியுள்ளான். இம்மருத்துவனைத் திருவள்ளுவர் “தீர்ப்பான்” என்று தனிப்பொருளுடன் குறித்தார். முன்னே “அது தணிக்கும் வாய்” என்று மருத்துவத் தொடக்கத்தில் தணிப்பதாகக் குறித்தார். தணித்தல்-நோயின் கடுமையைக் குறைத்தல். நோயைத் தணித்து நோயாளியை முதலில் தம் மருத்துவத்திற்குப் பாங்குபடுத்தல், பின்னர் தக்க மருந்தைத் கொடுத்துப் படிப்படியாக நோய் அறவே தீர்ந்து போகும் அளவு செய்தல். எனவே, ‘தீர்ப்பான்’ என்ற சொல்லால் மருத்துவத்தின் பொருள் அழுத்தம் புலனாகிறது. இவ்வாறு ‘தீர்ப்பவன்’தான் மருத்துவத்திற்கு உயிரூட்டமளிப்பவன் இதற்கு ‘மருத்துவன்’ என்னும் சொல் ஈடாகாது. மருத்துவன் என்பதற்கு, மருத்துவம் செய்பவன்’, ‘மருந்து கொடுப்பவன்’ எனத்தான் பொருள். இவன், மருந்தைத் தேர்பவன் தீர்ப்பவன்தான் மருந்தின் உயிரோட்டத்தால் நோயாளியின் உயிரோட்டத்தை இயக்குபவன்-இயங்க வைப்பவன். இவ்வழுத்தமுள்ள ‘தீர்ப்பான்’ என்னும் சொல் திருவள்ளுவரின் மருத்துவ ஆக்கச் சொல். இந்தச் சொல்லும் திருவள்ளுவரின் மருத்துவ அறிவியலைப் புலனாக்குகிறது.

அடுத்து ‘மருந்து’ என்றார். இஃது இயற்கை மூலிகையையும், நிலம்தரும் முப்பு’ என்னும் நீற்றையும்’ செயற்கைக் கலவை, புடம் போடுவது, வடித்தெடுப்பது’ அரைத்தெடுப்பது முதலியவற்றையும் குறிக்கும், இம் மருந்துதான் நோய் தீர்க்க இன்றியமையாதது. என்றாலும், மற்ற மூன்றும் அமைந்தால்தான் இம்மருந்து உரிய பயனை உரிய காலத்தில் தரும். எனவே, நான்கு கூறுகளில் ஒன்றாக மருந்தைக் குறித்தார்.

நான்காவதாக “உழைச் செல்வான்” குறிக்கப் பட்டான். இவன் நோயாளியின் அணுக்கன். உடனிருந்து உரிய நேரத்தில் உரியவற்றைச் செய்து துணை நிற்பவன். இக்காலத்தில் இதனை மகளிர் பெருமளவில் செய்கின்றனர். இன்னோர் ‘செவிலியர்’ எனப்படுகின்றனர். தமிழ் அகப் பொருள் இலக்கியங்களில் பெற்றெடுத்த தாய் ‘நற்றாய்’ எனப்படுவாள். அணுக்கமாக இருந்து போற்றி வளர்க்கும் தாய் ‘செவிலித்தாய்’ எனப்படுவாள். இச்செவிலித்தாய் போன்றவர் செவிலியர். மேலை மருத்துவத்தில் இச்செவிலியர் முறை முன்னரே இருப்பினும் அதனை முறை யாக்கி நிறைவாக்கிய பெருமை 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நைட்டிங்கேள் என்னும் பெருமகளையே சார்ந்தது. இவ்வம்மையால்தான் மருத்துவத்தில் செவிலித் தொண்டு முறைப்படுத்தப் பெற்றது.

இது திருவள்ளுவரால் கி. மு. முதல் நூற்றாண்டில் முறைப்படுத்திக் கூறப்பட்டுள்ளமை மருத்துவ அறிவியலின் அணுக்கத்தைக் காட்டுகிறது.

மருந்தை கூறத் துவங்கியவர் இதன் முதற் குறளாக “மிகினும் குறையினும் நோய் செய்யும்” என்று நோய்க்குக் காரணத்தைக் காட்டி அடுத்து, மருந்து பற்றித் தொடங்கினார்.

அதன் தொடக்கம் “மருந்து என வேண்டாவாம்’. என்றதைக் கண்டோம். ‘மருந்து’ என்னும் சொல்லுடன் தொடங்கினார். நிறைவான பத்தாவது குறளில், “அப்பால் நாற்கூற்றே மருந்து” என்று நிறைவேற்றினார். ‘மருந்து’ என்று தொடங்கி மருந்து என்று நிறை வேற்றியமை ஒரு சொல்லமைப்பு நயம் மட்டும் அன்று: இவ்வமைப்பில் உள்ள ஆழ்ந்த கருத்து வெளிப்படுத்தக்கது

முதலில் “மருந்து என வேண்டாவாம்” என்று மருந்து வேண்டாம் என்றார். நிறைவில்

“அப்பால் நாற்கூற்றே மருந்து” என்று மருந்து வேண்டுவதைக் குறித்தார். வேண்டா என்றவர் ‘வேண்டும்’ என்றது முரணா? அரணா? இரண்டில் எது என்று அறிய இக்கால அறிவியல் துறை ஒன்றைக் காண வேண்டும்.

உடலிய உளவியல்

அறிவியல் துறைகளில் ‘உளவியல்’ (Psychology) ஒன்று. இதன் ஒரு கூறாக ‘உடலிய உளவியல்’ (Physiological Psychology) உள்ளது. இஃது ‘உள்ளத்தின் உணர்விற்கும் உடலின் செயற்பாட்டிற்கும் உறவு உண்டு’ என்னும் கருத்தைக் கொண்டதாகும்.

உள்ளத்தில் தோன்றும் மகிழ்ச்சி உடலின் நலத்திற்குக் துணை செய்யும். உள்ளத்தில் தோன்றும் தொய்வோ கலக்கமோ, அதிர்ச்சியோ உடலின் தொய்விற்கும் தாக்கத்திற்கும் துணையாகும். இஃது ‘உடலிய’ உளவியலின் கோட்பாடு.

மருந்து-வேண்டாம்-வேண்டும்

இக்கோட்பாட்டின் முன்னோடி அறிகுறிதான் “மருந்து என வேண்டா” என்றதும் “நாற்கூற்றே மருந்து” என்றதும் ஆகும். “மருந்தென வேண்டா” என்றது உளவியல் அறிந்த பாங்கு மருந்துவேண்டும் என்றது உடலியலும் நோயியலும் செறிந்த செய்முறைக் கருத்து

(தொடரும்)

கோவை. இளஞ்சேரன், அறிவியல் திருவள்ளுவம்

Friday, August 23, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.2. பிணியின்மை – தொடர்ச்சி



(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.1. பிணியின்மை – தொடர்ச்சி)

இம்மூன்றுதாம் உடலில் சமநிலையில் இருந்து உடலை இயங்க வைக்கின்றன. பருவத்தாலும், உணவாலும் உடலில் இம்மூன்றும் தனித்தனியே கூடியும் குறைந்தும் நோயைத் தருகின்றன. இம்மூன்றையும் வைத்தே தமிழ் மருத்துவ முறைகள் பிறந்தன; விரிந்தன. இவை மூன்றிலும் முதலிலுள்ள ‘வளி’ வல்லமை வாய்ந்தது. மற்றைய இரண்டும் அடுத்தடுத்த வல்லமை உடையவை. இதனை உருவகமாக வளியை அரசனாகவும், பித்தத்தை அமைச்சனாகவும், கோழையைப் படை மறவனாகவும் மருத்துவ நூலார் சொல்லினர்.

தேரையர் என்னும் மருத்துவத் தமிழறிஞர்,

அரசன் வாதமொடு அமைச்சன் பொருநன்” என்றும்

“தான் (வளி), மனை (பித்தம்), சேய் (கோழை) மன்னன், அமைச்சன், மீளி”[20] என்றும் பாடினார். தேவாரம் பாடிய அப்பரும்,

“ஆனது இக்காளை (கோழை) அமைச்சை (பித்தத்தை) மேவிடின் ஆன் இறை (வளி) உறின்” [21] என்று உருவகித்துப் பாடினார்.

இத்துணை ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டவை வளி முதலிய மூன்றும், இவற்றைக் கொண்டு நோயையும் கண்டறியலாம். மருந்தையும் கொடுத்தறியலாம் . இம்முறை இக்கால மருத்துவ அறிவியலில் இல்லை என்பது கருதத்தக்கது.

இம்முறை கொண்ட தமிழ் மருத்துவம் ஒரு தனித் தன்மை உடையது. திருவள்ளுவரின் இக்குறள் இத்தனித் தன்மையை எடுத்து மொழிகிறது. மொழிவதன் மூலம் அக்கால நோய் அறிவியலை அறிமுகம் செய்கிறது.

இது நோய் தோன்றுவதன் கருநிலை கூறுவது.

வரும்முன் காத்தல்-உணவியல்

நோய் வரும்; அதனை நீக்க மருந்தும் வேண்டும். நோய் வந்தால்தானே மருந்து வேண்டும்? நோய் வரும்முன் காத்துக் கொண்டால் மருந்து எதற்கு?

மருந்து என வேண்டாவாம்” என்று தொடங்கினார் திருவள்ளுவர். தொடங்கி மருந்து வேண்டாமைக்குக் காரணமும் கூறினார்.

அருந்தியது

அற்றது போற்றி உணின்” (942)

மருந்து வேண்டா என்றார். இவ்வாறு உண்டால் நோயும் வராது; மருந்தும்-மருந்துகளும் வேண்டியன அல்ல. இது வரும் முன் காக்கும் முதல் கவனம்.

திருவள்ளுவர் தம் நூலில் ஒவ்வொரு சொல்லையும் அதன் உள்ளார்ந்த பொருள், அதனை அமைக்கும் இடத்தின் பொருத்தம் அறிந்தே எழுதுபவர். இக்குறளிலும் இவ்வமைப்பைக் காண்கின்றோம்.

‘மருந்து என வேண்டா’ என்றதில் ‘என’ என்றதும் வேண்டா என்றதும் பன்மை வினைகள். இவற்றால் முன்னுள்ள மருந்து என்றதற்கு மருந்துகள் என்று பொருள்.

தமிழ் மருத்துவத்தில் ஒரு நோய்க்கு ஒரு மருந்து. சில நோய்களுக்கும் ஒரே மருந்து என்பது மரபு. இதன்படி இங்கு மருந்து என்றது ஒரு நோய்க்குச் சில மருந்துச் சரக்குகள் கலந்தமை பொருள். இவ்வகையில் பன்மையாகிறது. ஆனால், இக்காலத்தில் ஒரு நோய்க்கு ஒரு மருந்து என்றில்லை. ஒரே நோய்க்குப் பலவகை மாத்திரைகள்: இவற்றுடன் நீரிய மருந்துகள், ஊசி மருந்து கொடுக்கப்படும் நிலையை நோக்கும்போது திருவள்ளுவர் மருந்துகள் என்று எதிர்காலத்தை நோக்கிப் பதிந்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகின்றது. நோயும், பல மருந்துப் பொருள்களும் பல என்றவர், மருந்து வேண்டா என்றதற்குக் காரணம் பல சொல்லவில்லை. ஒன்றுதான் சொன்னார்.

‘அருந்தியது அற்றது’ என்று இரண்டையும் தனித் தனியே ஒருமையில் சொன்னமை அவர்தம் ஆழ்ந்த கருத்தை அறிவிக்கிறது.

அற்றது’ என்பது வயிறு ஒரு உணவுப் பொருளும் அற்ற வெற்று அறையாக உள்ளதைக் குறிக்கும். எனவே, வரும் முன் காக்கும் முறை அறிமுகமாகிறது. இதில் “போற்றி உணின்’, என்பதில் ‘போற்றி’ என்றால் ‘பாதுகாத்து’ என்று பொருள். வெற்று வயிற்றினைப் போற்ற மறு உணவு இடவேண்டும். அந்த உணவு பாதுகாப்புக்குரிய உணவாக வேண்டும். எனவே இங்கு. சொன்ன போற்றி உணல் அடுத்தடுத்த குறட்பாக்களில் விளக்கம் பெறுகிறது.

‘அற்றது:போற்றி’யைத் தொடர்ந்து ‘அற்றல் அறிந்து’ உண்டால் உடம்பு நோயின்றி விளங்கும்.

அதனைக் கடைப்பிடித்து,

மாறு அல்ல துய்க்க;

துவரப்பசித்துத் துய்க்க“(494)

என்றார். இதில் மாறு அல்ல என்றது போற்றுதலின் விளக்கம்.

இதனையே தொடர்ந்து

“மாறுபாடு இல்லாத உண்டி” என்றார். இவ்வுணவை அறிந்து மற்றவற்றை,

        “மறுத்து உண்ணின்

        ஊறுபாடு இல்லைஉயிர்க்கு”  (945)

என்றார்.

“அற்றது போற்றுதல்”. “அற்றது அறிதல்”, “மாறு அல்ல துய்த்தல்”, “பசித்துக் துய்த்தல்”, “மாறுபாடு இல்லாமை”, “மறுத்து உண்ணல்”-இவற்றால் நோய் வராமை மட்டும் அன்று; “மருந்து வேண்டா” என்பது மட்டும் அன்று. இவற்றால் உடல் காக்கப்படும் என்பது மட்டும் அன்று.

ஊறுபாடு இல்லை உயிர்க்கு”-உயிருக்கே இக்கால வடமொழிச் சொல்லின்படி ஆபத்து-ஊறுபாடு இல்லை.

இடையில் மருந்தின் தொடர்பில் இக்கால அறிவியலைக் காணவேண்டும். அறிவியலில் ஒரு துறை ‘உடலியல்’ இதனுடன் இணைந்த துறை ‘உணவியல்’. இவை இரண்டும் மருந்தியலின் தொடர்புடையவை. உணவியல் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு தனிக் கலையாகியுள்ளது, உணவில் ‘சீருணவு’ (Balanced Diet) இன்றியமையாதது. ‘காப்புணவு’ (Productive food) நோயின்றி உடலைக் காப்பது . ‘ஒழுங்கான உணவு’ (Normal Diet). உடலியக்கத்தைச் சீராக வைத்திருப்பது. இக்கால அறிவியலில் இவை மூன்றும் விரிவாகியுள்ளன. சுருக்கமாக இவற்றைத் திருவள்ளுவரின் உணவுக் கருத்துகளாகக் கூறியுள்ளவற்றில் அடக்கலாம்.

(அற்றது அறிந்து)                   

’போற்றி உண்ணும் உணவு’  –       சீருணவு

’மாறுபாடில்லா உணவு’        –       காப்புணவு

‘அளவறிந்து உண்ணல்’         –       ஒழுங்குணவு

இவ்வாறு இக்கால உணவு அறிவியலை, திருவள்ளுவம் விளக்குவதைக் காண்கிறோம்.

வயிற்றுத் தீ

அருந்தியது அற்றுப்போவதை-அஃதாவது செரித்து ஊட்டமாவதை இக்கால அறிவியல் மிக விளக்கமாக ஆய்ந்துள்ளது. செரிமானம் உடம்பின் வெப்ப நிலையால் அதிலும் வயிற்று வெப்ப நிலையால் முழுமையடைகிறது.

உயிரிகளின் உடம்பின் வெப்பமும் அவை வேலை செய்வதற்கு வேண்டப்படும் வெப்பமும், செரிமான உணவு உயிர்வளி (Oxygen)யுடன் ‘உயிரணுக்’ (Cells)களில் வினைப்படும் போது வெளியாகின்றன.”

இது செரிமானத்திற்கு வெப்பம் செயற்படுவதை விளங்குகின்றது.

மேலும் விளக்கமாக,

கரிநீரகி (Carbohydrate), ஊட்டப்பொருள் (Protein). கொழுப்பு ஆகிய மூன்றும் எரிக்கப்பட்டு உடல் ஆற்றலைத் தருகின்றன.’

மேலும் விளக்கமாக,

‘இவை மூன்றும் வயிற்றுத்தீயால் எரிக்கப்பட்டு முறையே கிராமுக்கு 4,4,9 உடல்வெப்ப அளவுகளை-கலோரிகளைத் (Calories) தருகின்றன’

என்னும் உணவின் செரிமான விளக்கம் இக்கால உணவு அறிவியலில் காணப்படுபவை.

இதில் செரிமானத்திற்குச் செய்யப்படும் வயிற்று வெப்பம் தருதல் வயிற்றுத் தீ’ எனப்பட்டது. புறநானூற்றில் சேரமான் கணைக்கால் இரும்பொறை “வயிற்றுத் தீத்தணிய“[22] என்று பாடினார்.

வயிற்றுத் தீயார்க்கு உணவு வழங்கினார்”[23] என்று ஏலாதியில் கணிமேதையார் குறித்தார்.

திருவள்ளுவர்,

        “தீ அளவின்றித் தெரியான் பெரிதுண்ணின்

        நோய் அளவின்றிப் படும்” (946)

என்றார். வயிற்றுத் தீயின் அளவு தெரிந்து அஃதாவது வயிற்றுத் தீயை அளவாக வைக்கும் அளவான உணவே உண்ணவேண்டும் என்பதை அறிந்து அளவான உணவை (சீருணவை) உண்ண வேண்டும். அதிகமாக உண்டால் நோய் அளவில்லாமல் உண்டாகும்-என்று செரிமானக் காரணமும் கூறினார். இஃது முன்னர் “அற்றால் அளவறிந்து உண்க’ என்றதற்கும் கழிபேரிரையான்கண் நோய்’ என்றதற்கும் காரண விளக்கமாகும்.

முன்னே கண்ட இக்கால உணவு அறிவியலின் கண்டு பிடிப்புகளான கருத்தேற்றங்களின் உள்ளீடாகத் தீ அளவின்றி” என்றும் குறள் திகழ்கிறது. “உணவே மருந்து’ என்பது தமிழ் வழக்கு.

இக்கால மருத்துவர்கள் நீரிழிவு முதலிய நோய்களுக்கு உணவுக் கட்டுப்பாட்டையே வலியுறுத்துவதையும் கருதிப் பார்க்கவேண்டும்.

எவ்வகையிலும் உணவுபற்றித் திருவள்ளுவர் அறிவித்துள்ளவை இக்கால உணவு அறிவியலின் முன்னோடிகள் என்று பதியத்தக்கவை.

(தொடரும்)

Friday, August 16, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.1. பிணியின்மை

 



(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. நாட்டிற்கு ஐந்து – தொடர்ச்சி)

நோய் – பிணி
அறிவியல் துறைகள் 1. நோய்இயல், 2. உணவியல் 3. மருத்துவ இயல், 4. உடலிய உளவியல் – எனும் நான்கு இயல்கள் – இத்தலைப்பில் குறளிலிருந்து புலனாக்கப்படுகின்றன.


நோய் மாந்தர்க்கு உடலிலும் அமையும். உள்ளத்திலும் அமையும். அது மாந்தர்க்குப் பெருமளவில் உடன்பிறப்பு. ‘கருவிலே திருவுடைமை’ என்பது போன்று ‘கருவிலே நோயுடைமை’யும் உள்ளது. இக்குழந்தைக்குக் கருவிலேயே நோய்க்கூறு அமைந்தது ‘என்று இக்கால மருத்துவர் அறிந்து கூறுவர். இன்னும் ஆழமாக நோக்கினால் கருப்பைக்குள் இருக்கும் குழந்தையை ஆய்ந்து அதன் நோயைக் கணிக்கும் காலம் இது. மாந்தன் தோன்றிய காலத்திலேயே அவனுடன் நோயும் தோன்றியதாம். தோற்ற கால மாந்தனின் படிவங்கள் கிடைத்தவற்றில் நோய்க்குறிகள் தென்பட்டமை காணப்பட்டுள்ளது. எகித்தியப் படிவங்களில் இக்கால் நோயின் குறிகள் காணப்பட்டன. எனவே, நோய் மாந்தனுக்கு உடன்பிறப்பு, அதனால்தான் “உடன் பிறந்தே சொல்லும் வியாதி” என்றனர். நோய் இடம் பிடிக்க உடலில் இடந்தேடி அமைவது அதனால்தான் நோய்க்கு இடம் கொடேல் என்றார் ஒளவையார்.
நோய் உடலை நோக வைப்பது. ‘நொ’ என்றால் ’துன்பப்படு‘ என்று பொருள். இதுதான் ‘நோய்’ என்று வடிவெடுத்தது. இடம் பிடித்து உடலில் நின்று துன்பம் தரும். துன்பம் தரும் எத்தாக்கத்தையும் நோய் என்னும் சொல்லால் குறிக்கின்றோம். இந்நோயே உடலை இறுகப் பற்றிப் பிணித்துக் கொண்டு விலகாமல் அடம்பிடிக்குமானால் அது ‘பிணி’ எனப்படும். பிணித்து நிற்கும் நோய் பிணி. இது கடுமையானது; கொடுமையானது. இஃது இல்லாமை நாட்டுக்கு ஒர் அணி. இப்பிணியிலும் உடலைப் பற்றிப் பிணித்துக் கொண்டு நீங்காமல் தொடர்ந்து துன்பம் தருவன பல உள்ளன. நீரிழிவு, என்புருக்கி, நரம்பிமுப்பு முதலியன நெடுங்காலம் உறவாடித் துன்புறுத்துவன: இவற்றைத் திருவள்ளுவர் “ஓவாப் பிணி’ (734) என்றார். பிணிக்கும் நோய் இல்லாது நலத்துடன் வாழ்வதற்கென்றே திருவள்ளுவர் ‘மருந்து’ என்னும் ஓர் அதிகாரம் வகுத்து 10 குறட்பாக்களை வழங்கினார். இப்பத்துக் குறட்பாக்களிலும் நோயின் அறிவியற்கருத்துக்கள் உள்ளன.


இக்காலம் மருத்துவ அறிவியல் மிடுக்கோடு வளர்ந்து வருகிறது; நுணுக்கமான முறைகள் கொள்ளப்படுகின்றன. மருந்துகளில் அனைத்து வகையும் நாளுக்கு நாள் நுண்ணறிவின் ஆட்சிகளால் வளர்ந்து வருகின்றது. நாளுக்கொரு புதுமுறை கண்டறியப்படுகிறது. ஊசியை உடலில் குத்தி மருந்து செலுத்திய முறை மாறிக் குத்தாமலே மருந்தை உள்ளே செலுத்தும் முறை வந்துள்ளது. நெஞ்சகத்தாக்க நோய்க்கு மார்பை அறுத்துச் செய்யும் அறுவைப் பண்டுவம் (சிகிச்சை) மாறிவிட்டது. கால் நரம்பில் செயற்கை நுண்குழல் நரம்பைச் செலுத்தி, நெஞ்சகக் குழலில் படிந்துள்ள கொழுப்பைக் கரைக்கும் முறை வந்துள்ளது. எண்ணிப்பார்க்க முடியாத அணு துணுக்கங்கள் பிறந்துள்ளன. இவற்றால் மக்கட் கூட்டம் பழங்காலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறது.


முற்கால மாந்தரின் இறப்பு நூறு ஆண்டைத்தாண்டி வந்தது. இக்காலம் அந்நிலையை அடைந்து வருகிறது. முற்கால மாந்தரின் உயிர்வாழ் எல்லை ஒட்டுமொத்த வருத்தலாக எண்பதாண்டாக இருந்தது. இக்கால மருத்துவம் 28இல் இருந்ததை ஏறத்தாழ அறுபதுக்குக் கொண்டு வந்துள்ளது.


எனவே இக்கால மருத்துவ ஆட்சியில் எல்லையிலோ, பயனிலோ, பெருமையிலோ முற்கால மருத்துவ ஆட்சி முழுமையாக ஈடுகொடுக்க முடியாது.
ஆனாலும், இவற்றின் கூறுகள் முற்காலத்தில் இருந்தன என்பது உண்மை. அவற்றுள் சில திருவள்ளுவத்திலிருந்து இங்கு காணப்படுகின்றன.

  1. நோயின் காரணங்களை ஆராய்தல்;
  2. அக்காரணங்கள் செய்யும் உடல் அமைப்பு மாறுதல்களை ஆராய்தல்:
  3. காரணங்களையும் மாறுதல்களையும் எதிர்க்கும் முறைகளை ஆராய்தல்.
    இவை மூன்றையும் மருந்து அதிகாரக் குறட்பாக்களில் காண்கின்றோம். இவ்வதிகாரத்தில்,
    முதற்குறள்,
    வளிமுதலா (வளி, பித்தம், ஐ) எண்ணிய மூன்று
    மிகினும் குறையினும் நோய் செய்யும்

    என்று நோயைச் செய்யும் காரணிகளான வளியும், பித்தமும், சளியும் சமநிலையில் இல்லாமல் மிகுந்தாலும் நோய் உண்டாகும்; குறைந்தாலும் நோய் உண்டாகும் என்று (1) நோயின் காரணங்கள் ஆராய்ந்து காணப்பட்டன. இது நோய் இயலின் முதல் ஆய்வை உள்ளீடாகக் கொண்டது.
    அடுத்த ஆறு குறட்பாக்கள்,
    உண்பது செரித்ததை அறிந்து உண்ணல்;
    அளவறிந்து உண்ணல்;
    பசியெடுத்தபின் மாறுபாடில்லாத உணவை உண்ணல்;

மாறுபாடில்லாத உணவை உண்ணும் உடல்நலத்தால்
உடலிலுள்ள உயிர்க்கு ஊறுபாடு இல்லை;

மிக அதிகம் தின்றால் உடம்பில் நோய் நிலைக்கும்;

வயிற்றுத் தீயின் அளவறிந்து உண்ணவேண்டும்.


என உணவுகொள்ளும் அளவை வைத்து (2) அதனை ஏற்கும் உடல் நோயில்லா அமைப்பைப் பெறுக என்று விளக்குகின்றன. ஆறு குறட்பாக்களும் இக்கால நோய் இயலின் இரண்டாவது ஆய்வை உள்ளீடாகக் கொண்டவை.
இறுதி மூன்று குறட்பாக்களும்,
நோயை, நோயின் மூலத்தை அறிந்து மருந்து வழங்கல்,
மருத்துவம் கற்றவன் கருதிச் செய்யவேண்டியவை:
மருந்து நலம்பயப்பச் செய்பவை நான்கு-என விளக்குகின்றன. இவை நோய் இயலின் (3) நோயை எதிர்த்து முறியடிக்கும் வழியைச் சொல்கின்றன.
இவ்வாறாக ஒட்டுமொத்தமாகப் பத்துக் குறட்பாக் களும் இக்கால நோய் அறிவியலின் கருத்துகளை ‘நோய் இயல்’ அறியப்பட்ட ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குமுன் அறிவிக்கப்பட்டவை.


மருந்தும் மருத்துவமும் உடலில் பல இடங்களிலும் கி. மு. விலிருந்தே உள்ளன. மேலை நாட்டு அறிவியல் பாங்கில் முதன்முதலாக கி. மு. 400 அளவில் கிரேக்க அறிஞர் இப்போசிரேட்டெசு (Hippocrates) என்பார் கண்டறிந்தார். இவர் ‘நோயியல் தந்தை‘ எனப்படுபவர். பல அரிய புதுமைக் கருத்துகளை இவர் கண்டு கூறியிருப்பினும் நோய் போக்க மருந்தாக மந்திரச் செயலையும் ஏற்றுக் கருத்தறிவித்தார். பகுத்தறிவிற்கு ஒவ்வாத ‘மந்திர–மாந்திரிகம்’ அக்கால நோயியலின் கூறுகளாகவும் இருந்தன. இப்போதும் உலகிலும்- நம் மண்ணிலும் இந் நடைமுறை உள்ளது. (Medicine Man) என்பதற்கு ( நாகரிகமாந்தரின் மாய மந்திரவாதி’ என்று ஆங்கில அகர முதலிகளில் பொருள் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.


திருவள்ளுவரோ இதனைக் கொள்ளாதவர். பத்துக் குறட்பாக்களிலும் பிற இடங்களிலும் மந்திரமுறையைக் கூறவில்லை. இது திருவள்ளுவர் பகுத்தறிவோடு கூடிய அறிவியல் பாங்கினர் என்று காட்டுவதாகும்.


மருந்து என்னும் அதிகாரத்தின் பத்துக் குறட்பாக்கள்
நோய் பிறத்தல் (941)
வருமுன் காத்தல் (942-947)
வந்தபின் தீர்த்தல் (948-950) எனும் முறையில் அமைக்கப்பட்டுள்ளன.


நோய் பிறத்தல்
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
“(941)
என்னும் முதற்குறள் நோய் பிறத்தலுக்குக் காரணம் சொல்கிறது. இதில் பரிமேலழகர் முதலியோர் “மிகினும், குறையினும் என்றதற்கு ‘உணவு மிகுந்தாலும் குறைந்தாலும் என்று எழுதினர். பரிப்பெருமாளோ “வளி முதலிய மூன்று குறைந்தாலும்… (?) நோய் செய்யும்’ என்றார். ஆனால், குறளின் சொற்கிடக்கை வளி முதலிய மூன்று மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் செய்யும் என்ற பொருளையே கொள்ள வைக்கிறது. எனவே, வளி (வாதம்), பித்தம், ஐ (கோழை) என உடலில் அமைந்த மூன்று மிகுந்தாலும் நோய்; குறைந்தாலும் நோய்: சமநிலையில் அமையவேண்டும். அமைந்தால் நோய் இல்லை. எனவே, நோய்க்குக் காரணம் உடலில் வளி முதலிய மூன்றுந்தாம்.

இது நூற்றுக்கு நூறு தமிழ்க் கண்டுபிடிப்பு. மிகத் தொன்மையான கண்டுபிடிப்பு. இக் கண்டுபிடிப்பு தமிழில் பல நூல்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைக் குறிக்கத் தான் திருவள்ளுவர் “நூலோர்” என்று தமிழ் மருத்துவ நூலாரைக் குறித்தார். ஆனால், பரிமேலழகர் வளி முதலா எண்ணிய மூன்று’ என்பதற்கு “ஆயுள்வேதம் உடையாரால் வாதம் முதலாக எண்ணப்பட்ட மூன்று” என்று பொருள் எழுதினார். இது ஆயுள்வேத முறையாகப் பின்னர் கொள்ளப்பட்டது. இது தோற்றத்தில் தமிழ் மருத்துவ முறை. எவ்வாறென்றால் ‘ஆயுள் வேதம்’ கி. பி ஏழாம் நூற்றாண்டில்தான் உருப்பெற்றது. இது அதர்வண வேதத்தில் உள்ளதாகச் சிலர் கருதினர். அதர்வணத்தில வேறு வகைக்காக எழுந்ததை மருத்துவத்திற்குப் பொருத்தி இவ்வாறு கூறுவர். உண்மையில் வளி முதலா எண்ணிய மூன்றின் விளக்கம் தமிழில் தனிஉரிமைக் கருத்தாகும்.

(தொடரும்)


Friday, August 9, 2024

அறிவியல்திருவள்ளுவம், கோவைஇளஞ்சேரன், 2. நாட்டிற்கு ஐந்து

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், ஈ. வான அறிவியல் பொதிவு-தொடர்ச்சி)

அறிவியல் ஆய்வும், கண்டுபிடிப்புகளும், பயன்களும் நாட்டு நலனை நோக்கமாகக் கொண்டவை. நாடு என்றால் மலை முதலிய அசையாப் பொருள்களும் ஓரறி உயிர் முதல் ஆறறி உயிர் வரையான உயிர்களும் அடங்கும். எனவே அறிவியல் நலனும் இவைகட்கே உரியது. இவற்றிலும் சிறப்பாக மாந்தருக்கே உரியது.

திருவள்ளுவர் மாந்தரின் செம்மையான வாழ்விற் கென்றே திருக்குறளைப் படைத்தார். அதில் மாந்தருக்குப் பல்வகை நெறிகளையும் வடித்தார். பல்வகைப் பற்றுக்கோடுகளையும் கொடுத்தார். நலமும் வளமும் தரும் அறிவார்ந்த கருத்துக்களையும் வழங்கினார். அவற்றுள் அறிவியல் பாங்கான கருத்துக்கள் என்றும் துணைகளாக நின்று என்றும் நலனளிப்பவை.

எனவே, மாந்தரைக் கொண்ட நாட்டை வைத்து அவர் வழங்கிய கருத்துக்களில் அறிவியல் உயிரோட்டங்களைக் காணல் ஒரு வழியாகும்.

’’பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்

அணியென்ப காட்டிற்கிவ் வைந்து’’ (738)

என்னும் குறள் அவர்தம் அறிவியற் கருத்துகளைக் காண ஒரு கொளுவாக உள்ளது. ஏரின் உழவு நடப்பதற்கு ஏர் முனையில் ‘கொளு’ அமைவது போன்று செய்யுளில் கருத்துகளைச் சுட்டுவதற்கும் ஒரு நூற்பா உண்டு. அதற்குக் ‘கொளு’ என்று பெயர்.

“பிணியின்மை” என்னும் குறட்பாவைக் கருத்துக் கொளுவாகக் கொண்டு அதன் வழி திருவள்ளுவரின் கருத்துகளைக் காண முடிகின்றது. அவர்தம் அறிவியற் கருத்துகளைக் காண்பதற்கு இக்குறள்தான் வழி என்றில்லை. பிறவழிகளும் உள்ளன. இங்கு இக்குறளை ஒரு பொருத்தமான வாய்ப்பாகக் கொள்ளலாம்.

நாட்டிற்கு அணிகளைக் கூறும் இக்குறளில்,

“நோய் இல்லாமை
செல்வம்
பொருள் விளைச்சல்
உயிர்களின் இன்பம்
உயிர்களின் பாதுகாப்பு”

என ஐந்து இடம் பெற்றுள்ளன. இவை செம்மையாக அமைந்தால் நாடு-அணிபெற்ற அழகில் ஒளிரும். அஃதாவது, வளம் பெற்ற வனப்பில் திகழும். நாட்டு அணிகளாகும் இவ்வைந்திலும் மந்தர்தம் நலங்களே நிறைந்துள்ளன.

ஒரு சங்கிலித் தொடர்

மற்றுமோர் அறிவார்ந்த பொருத்தம் இவ்வைந்தையும் அமைத்த பாங்கில் உள்ளது. ஐந்தைக் குறிக்க வேண்டுமென்று ஒன்று, இரண்டு என எண்ணுவதற்காக மட்டும் இவ்வைந்தின் அமைப்பு இல்லை. ஒன்றை அடுத்த ஒன்று முன்னைய ஒன்றின் தொடர்பாகவே அமைந்துள்ளது. எனவே, ஐந்தும் ஒன்றன் தொடர்புடைய ஒன்றாகச் சங்கிலித் தொடராய் அமைக்கப்பட்டுள்ளன.

நோய் இல்லாமை – பிணியின்மை செல்வத்தின் பயன்பாட்டிற்குத் தடை இல்லாது உதவுவது. எத்துணை செல்வமிருப்பினும் நோய் பிணித்துக் கொண்டிருந்தால் அச்செல்வம் உரிய மகிழ்ச்சியைத் தராது. எனவே, பிணியின்மையை அடுத்துச் செல்வம் வைக்கப்பெற்றது. நாட்டுச் செல்வம் என்பது சிறப்பாக நிலத்து விளைச்சலில்தான் உள்ளமையால் செல்வத்தை அடுத்து விளைவு அமைக்கப் பெற்றது. பல்வகை விளைச்சலால் மக்களின் வாழ்க்கை இன்பம் பெறும். பெறப்பட்ட இன்பம் பறிபோகாமல் நிலைக்கப் பாதுகாப்பு வேண்டும். இவ்வாறாக ஐந்தும் ஒன்றையொன்று தொடரும் சங்கிலித் தொடராக அமைக்கப்பட்டுள்ளன. பிணியின்மை முதலில் மாந்தரின் வளமான வாழ்விற்கு உடல் நலந்தான் அடிப்படை என்பதைக் காட்டுவதாகும்.

இப்பிணியின்மையில் அமைந்துள்ள அறிவியல் திறத்தைக் காணுதல் இக்கால அளவில் ஒரு முதன்மை பெறுவதாகும்.

(தொடரும்)

Friday, August 2, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், ஈ. வான அறிவியல் பொதிவு

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், இ. அறிவியல்அறிமுகச்சொல்-தொடர்ச்சி)

அறிவியல் என்பது ஒரு பொதுத்துறை. பொறியியல், உளவியல், உயிரியல், கணக்கியல், உடலியல், உளவியல் எனவெல்லாம் பல துறைகளில் கண்டுபிடிப்புகள் நேர்கின்றன. எப்பெயர் பெரினும் அவ்வொவ்வொன்றும் அறிவின் நுண்ணிய செயற்பாட்டால்தான் விளைகின்றது. எனவே. பொறி அறிவியல், உள அறிவியல், வான அறிவியல் என்றெல்லாம் அறிவியல் துறையாகவே கொள்ளப்படும்.


இவற்றுள் வான அறிவியலைச் சற்று விளக்கமாகக் கண்டு அதன் திருக்குறள் அடையாளத்தைக் காணலாம்.


வானம் என்பது எல்லையற்றுப் பரவியுள்ளது. நிறமற்றது; இடமற்றது. எண்ணற்ற விண்மீன்கள், உடுக்கள், கோள்கள் பரவிச் சிதறி இயங்கும் வெட்டவெளி கொண்டது.


ஞாயிற்றிலிருந்து கோள்கள் சிதறித் தனித்தனிக் கோள்களாக இயங்கி வருகின்றன. அவற்றுள் ஒன்று நாம் வாழும் நிலம் என்னும் பூவுலகம். இதற்கொரு தனிச் சிறப்பு உண்டு. உயிரினங்களைப் பெற்றிருக்கும் ஒரு கோள் இப்பூவுலகம். பிற கோள்கள் சிலவற்றில் உயிரினம் இருக்கலாம் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து வருகின்றனர் வானியலார்.
பூவுலகில் மட்டும் உயிரினம் உள்ளமைக்கு மூலக் காரணம் எது? நெருப்பு, நீர், காற்று. மண் என்பவை காரணங்களே. ஆனால், உயிரினம் மூச்சுவிட்டு உயிர்வாழ இன்றியமையாத துணை மூலமாக இருப்பது காற்றுதான். இக்காற்று ஏது? எங்கிருந்து வந்தது: பூவுலகைச் சுற்றியுள்ள சூழல் இக்காற்றுக்குத் துணைக் காரணம். வளி என்னும் காற்றை வழங்கிய தாய் பூவுலகம் என்னும் நம் ஞாலம். பூவுலகைச் சுற்றிதான் காற்று உலவி இயங்குகிறது ஞாயிறு என்னும் வெப்ப ஆவியிலிருந்து சிதறிய உருண்டையாம் பூவுலகம் காலப்போக்கில் ஆறி, ஆறி இன்றைய நிலைக்கு வந்துள்ளது. ஏறத்தாழ ஒர் இயல்பமைந்த சூழல் அமைந்தபோது இயற்கைத் தோற்றமாக உயிரினம் முளைத்தது. உயிரினம் பிறப்பதற்குப் பிறப்பு அணுக்களே மூலகாரணம். கதிரவன் பூவுலகின் தாய், பூவுலகம் உயிரினங்களின் தாய். இந்தத் தாய் உயிரினங்களை ஈன்றெடுக்கும் கருவாகப் பிறப்பு அணுக்களைக் கொண்டிருந்தது. இது தாய்க் கருப்பையில் உள்ள பெண் கரு முட்டையைப் போன்றதே. கருத்தரிக்க ஆண் கரு வேண்டுமன்றோ, வானத்தில் இயங்கும் பிற கோள்களிலிருந்து சில பிறப்பணுக்கள் பூவுலகில் புகுந்தன. இவற்றின் அறிய இயலாத புணர்ச்சியால் பூவுலகத்தாய் சுருக்கொண்டாள். முதலில் முதற்கணியம் (Protoplasm) தோன்றியது. பின் ‘கூழ்மம்’ (Collide) உருப்பெற்றது. அது ஊன் வடிவுற்று ‘ஊன்மம்‘ ஆயிற்று. ஊன்மத்திலிருந்து புழு தோன்றிப் படிப்படியாக உடலுருவம் வளர்ந்து வளர்ந்து படிப்படியாக மலர்ந்தது. இந்தப் படிமலர்ச்சி (Evolution பரிணாம வளர்ச்சி)யில் மாந்தன் தோன்றினான். எவ்வகை உயிராயினும் அதற்கு மூலம் ஐம்பெரும் பூதங்கள். அவற்றில் காற்று ஒன்று. அது பல வகையில் இன்றியமையாதது.

(தொடரும்)