Friday, September 27, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 5. ஈ. இன்பம்

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 4 இ. விளைவு-தொடர்ச்சி)


மனத்தின் இயக்க விளைவுதான் உணர்ச்சி.
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி” (453) என்றார் திருவள்ளுவர். உணர்ச்சி உடம்பில்-மெய்யில் வெளிப்படுவதை (மெய்யில் படுவதை) ‘மெய்ப்பாடு’ என்றனர் தமிழ்ச் சான்றோர்.
உணர்ச்சி வெளிப்பாடாம் ‘மெய்ப்பாடுகள்’ எட்டு.
நகையே அழுகை இளிவரல் (இழிவு) மருட்கை (வியப்பு)
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்பு
“[26]
என்றார் தொல்காப்பியர். எட்டுள் இறுதியாகச் சொல்லப் பட்ட உவகைதான் ‘இன்பம்’ எனப்படுவது.
எனவே, இன்பம் என்பது உள்ள நிகழ்ச்சி. இவ்வின்பம் உள்ளத்தில் எழுந்து உடலிலும் உணரப்படும்.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
“(1330)
என்றதில் ‘கூடி முயங்கப் பெறும் இன்பம்’ உடலால் நேர்வது. ஊடும் காம இன்பம் உள்ளத்தால் நேர்வது. உடலால் நேர்வதும் உணர்வாக உள்ளத்தால்தான் வெளிப்படும்.
எனவே, எவ்வகையிலும் இன்பம் என்னும் உணர்வு உள்ளத்திற்கு உரியது.
உளவியலை ஆராய்ந்து இக்காலத்தில் காணப்பட்ட முடிவும் இவ்வாறே கூறுகிறது. ஆனால் இவ்வின்பத்தை வெளிப்படுத்தும் உள்ளம் என்பது உடலில் எங்கு இருக்கிறது(?), இருக்கும் இடம் எது(?) என்பதை இன்றைய அறிவியலால் இன்றளவும் காணமுடியவில்லை. திருவள்ளுவர் அதனை வெளிப்படுத்தினார்.
உள்ளத்தைக் குறிக்கத் தமிழில் மனம், நெஞ்சம், (அகம்) எனும் சொற்களும் உள்ளன. இவற்றைத் திருவள்ளுவர் ‘வாய்மை’ அதிகாரத்தில் அடுத்தடுத்து வைத்துள்ளார்.
“தன் நெஞ்சு அறிவது பொய்யற்க” (293)
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்” (294)
“மனத்தொடு வாய்மை மொழியின்” (295)
“அகம் தூய்மை வாய்மையால்’ (293)

நான்கு சொற்களில் ‘அகம் இடத்தைக் குறிக்கும். அவ்விடம் நெஞ்சம் என்று குறிக்கப்பட்டுள்ளது.
உள்ளம் – உள்ளே அமைந்தது.
மனம் (மன் + அம்) – நிலைத்தது (மன்-நிலைப்பு)
அகத்தே (உள்ளே) மனம் – (உள்ளம்) உள்ளது என்று பொதுவாக இடம் குறித்தார். இடம் என்றால் எந்த உறுப்பு என்னும் இடம் ? அதற்கு விடைதான் ‘நெஞ்சம்’ என்பது. நாம் இப்போது வடமொழியில் குறிக்கும் ‘இதயம்’ என்பதே நெஞ்சம். நெஞ்சில் கைவைத்துச் சொல்’ என்கிறோம். எங்கே கை வைப்பது? மார்பின் மையத்தில் கைவைப்போம். இவ்வழக்கிலும் நெஞ்சம் மார்புப் பகுதியில் அமைந்தது’ என்று அறிகிறோம். தனி உருவின்றி உணர்வே உருவாக நெஞ்சக இயக்கத்தோடு பிணைந்திருக்கிறது. இதன்படி “நெஞ்சம்” என்ற சொல்லை வைத்து உணர்ச்சியைத் தரும் உள்ளம் தெஞ்சகத்தில் உள்ளது என்றார். இன்று காணப்படாத ஒர் உண்மை அன்று திருவள்ளுவரால் ஓர் அதிகாரத்தில் நான்கு சொற்களைப் பெய்து காட்டப்பட்டுள்ளது.
உணர்ச்சிகளில் இன்பம் ஒன்று.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
” (628)
என்னும் திருக்குறள் இன்பத்தைப் பற்றிய மூன்று கருத்துக்களைக் கொண்டுள்ளது.
“இன்பம் விருப்பத்தைத் தரும்.
இன்பத்தையே எதிர்பார்த்து இல்லாமல் அதனை விரும்பாதிருக்கவும் வேண்டும்.
இன்பத்திலேயே விருப்பம் கொள்ளாதிருந்தால் துன்பம். வராது” இவை உள்ளத்தால் எழும் உணர்ச்சித் தொடர்புடையவை.
இன்பம் பயக்கும் வினை” (669) என்றதில் இன்பத்தை ஒருவன் “செய்யும் செயல் தரும்” என்று. செயல் தொடர்பு உள்ளது.
மேற்காணப்பட்ட நான்கையும் பொருத்தி நோக்கினால் உடன்பாட்டுப் பொருளாக ‘விரும்பிச் செயலாற்றினால் இன்பம் தோன்றும்’ என்பது கிடைக்கிறது.
பொதுவாக இன்பம் என்றால் முடிவில் மாந்தர்க்குத் தோன்றுவது உடலுறவு இன்பமாக உள்ளது. இதனைச் ‘சிற்றின்பம்’ என்றனர் இடைக்காலத்தார். திருவள்ளுவர்க்கு இது கருத்தன்று. கருத்தாயிருப்பின் ‘காமத்துப் பால்’ பாடிக் காதலினைச் சிறப்பித்திருக்கமாட்டார்.
சிற்றின்பம் வெஃகி (அவாவி) அறணல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்
“(173)
என்னும் திருக்குறளில் உள்ள “சிற்றின்பம்” என்பது. ,சிறிதளவான இன்பம்’, ‘சிறு நேர இன்பம்’ எனப் பல்வகை. அவாவாலும், அவாக்கொண்டு செய்யப்படும் செயல்களாலும் உண்டாகும் உணர்வுகளையே குறிக்கும். காம இன்பத்தை மட்டும் குறிக்காது. மற்றும் “இன்பம் இடையறாது ஈண்டும்” (369) என்றார். இது இன்பம் சிறு அளவிலோ சிறுநேரத்திலோ மட்டுமன்று, தொடர்ந்தும் இருப்பது என்பதையும் குறிக்கிறது. மேலும் “பேரறிவு” (215). “பேராண்மை” (148) என்றெல்லாம் பாடியவர் ‘பேரின்பம்’ என்னும் சொல்லமைப்பையும் காட்டவில்லை.
எனவே, இன்பம் என்பது ஒரு நிலையை மட்டும் குறிப்பதன்று.
தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு” (239) என்றதால்,
காமுறுவர் கற்றறிந்தார்” (399) என்னும் கல்வி யின்பம் குறிக்கப்பட்டது.
ஈத்துவக்கும் இன்பம்” (228) என்றதால் இல்லாதவர்க்குக் கொடுத்து அவர் மகிழ்வதைப் பார்த்து உவப்பது இன்பமாகிறது.
செறுவார்க்கும் சேண் இகவா இன்பம்” (869) என்றதால் எதிரியின் அச்சத்தால் போரிலும் மற்றவனுக்கு இன்பம் தோன்றுவது குறிக்கப்பட்டது.
“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்” (156) என்றதால் பிறரை ஒறுப்ப (தண்டிப்ப) தாலும் இன்பம் தோன்றுவது குறிக்கப்பட்டது.
“இன்பம் பயக்கும் மாசறு காட்சியவர்க்கு” (352) என்றதால் அறிவால் இன்பம் தோன்றுவது குறிக்கப் பட்டது.
இவை போன்று ஒன்றாக,
இன்பம் கூடி முயங்கப் பெறின்” (1330) என்று உடலுறவு இன்பம் குறிக்கப்பட்டது.
இவ்வாறெல்லாம் இன்பத்தை விளக்கும் திருவள்ளுவர் இன்பத்துடன் துன்பத்தைத் தொடர்புபடுத்திப் பாடியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.
இன்பம் இடையறா தீண்டும், அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்
” (369)

      "இன்பம் விழையான்; இடும்பை இயல்பென்பான்;
      துன்பம் உறுதல் இலன்" (628)

      "இன்பத்துள் இன்பம் விழையாதான், துன்பத்துள்
      துன்பம் உறுதல் இலன்” (629)

      "துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி
      இன்பம் பயக்கும் வினை” (669)

      "இன்பக் கடல் மற்றுக் காமம்; அஃதடுங்கால்
      துன்பம் அதனிற் பெரிது’’ (1166) என்றெல்லாம்

துன்பத்துடன் தொடர்புபடுத்தி இன்பத்தை விளக்கினார். துன்பத்திற்குரிய பிற சொற்களாகிய ‘இடும்பை’ (628) ‘இன்னாமை‘ (630) என்பவற்றையும் உடனமைத்துக் காட்டினார்.
இவ்வாறு இன்பத்தோடு துன்பத்தை இணைப்பதும் இன்பம் பல்வகை உணர்வுகளால் எழுவதும் எனும் கருத்துக்களைக் கருத்தில் நிறுத்தி இக்கால அறிவியலுக்கு வருவோம்.
செருமனி நாட்டு உளவியல் வல்லுநர் உண்டி (Wundi) உணர்ச்சிகளை ஆராய்ந்து உண்மை கண்டவர். அவர் கண்ட கீழ்வரும் உண்மை இங்கு காணத்தக்கது.
“இன்பம், துன்பம், ஊக்கம், ஒய்வு, கிளர்ச்சி, அமைதி என ஆறும் உணர்ச்சிக்கு அடிநிலைகள்” – இவ்வாறு உணர்ச்சியின் அடிநிலைகளைக் கண்டவர் இன்பத்தை அடுத்துத் துன்பத்தை வைத்துள்ளமை திருவள்ளுவத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.
திருவள்ளுவர் தம் திருக்குறளில் இன்பத்துடன் துன்பத்தை இணைத்துக் குறித்தமை ஐந்து குறட்பாக் களில் கண்டோம். அவற்றுள்ளும் “இன்பத்துள் இன்பம்” என்றும், “துன்பத்துள் துன்பம்” என்றும் துணுக்கமாகக் கூறியமை இரண்டின் அடிநிலைக் கிளைகள் ஆகும்.
வல்லுநர் உண்டி அவர்கள் ஆறு அடிநிலைகளை, மேலும் ஆய்ந்து ஒரு கருத்தை வெளிப்படுத்தினார் :
“அடிநிலையாகக் கூறப்பட்ட ஆறில்
எவையேனும் மூன்று இணைந்தே
காணப்படும்” என்றார். சான்றாக,

  1. இன்ப ஊக்கக் கிளர்ச்சி
  2. துன்ப ஊக்க அமைதி – எனக் காட்டினார். இவை இரண்டை வைத்துத் திருவள்ளுவத்தைக் காணலாம். இரண்டில் முதலில் உள்ள இன்ப ஊக்கக் கிளர்ச்சியில் இன்பத்துடன் ஊக்கம் தோன்றிக் கிளர்ச்சி உணர்வாகிறது.
    திருவள்ளுவத்தில்,
    “துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி
    இன்பம் பயக்கும் வினை” (669)
    என்னும் குறட்பா
    “இன்பம் பயக்கும் வினை செய்க;
    துன்பம் உறவரினும் செய்க;
    துணிவு ஆற்றிச் செய்க–“
    என அறிவிக்கின்றது.
    இக்குறளில் எடுத்துக் கொள்ளப்பட்டது இன்பம். அதனைத் துணிவு ஆற்றி என்றது, நெஞ்சத்துணிவைத் துண்டுவதாகிய ஊக்கத்தைக் குறிக்கும். நெஞ்சத் துணிவால் எழுந்த ஊக்கத்துடன் செய்க என்றது, இன்ப ஊக்கத்தில் கிளர்ச்சியால் நேர்வது. எனவே, வள்ளுவர் குறள், உளவியல் வல்லுநர் அடிநிலை விளக்கத்தைப் பின் வருமாறு குறித்துக் காட்டுவதாகிறது.

வள்ளுவர் : வல்லுநர் :
இன்பம் பயக்கும் : இன்ப
துணிவு ஆற்றி : ஊக்க
செய்க : கிளர்ச்சி


இது போன்றே வல்லுநர் காட்டிய ‘துன்ப ஊக்க அமைதி’யை வள்ளுவக் குறள்
இன்பம் விழையான், இடும்பை இயல்பென்பான்
துன்பம் துடைத்துான்றும் தூண்
” (628)
என்பது காட்டியது. இக்குறளில் துன்பத்தைப் போக்கும் உறுதிப்பாடு கூறப்பட்டது.
துன்பம்,
அஃது ‘இடும்பை இயல்பென்று கொண்டு உள்ளத்தின் ஊக்கத்தால்
துடைக்கப்படுவது;
துடைக்கப்பட்டதைக் கலக்கமில்லாத உறுதித்தூணில் வைப்பது’-என மூன்று கருத்துகள் உள்ளன. இவை “உளவிய அறிவிய”லில் பொருந்துகின்றன.
வள்ளுவர் வல்லுநர்
துன்பம் : துன்ப
(மன ஊக்கத்தால்) துடைத்து : ஊக்க
இடைவளிமண்டிலம் (Microsphere) : ஊக்க
ஊன்றும் தூண் : அமைதி

18ஆம் நூற்றாண்டளவில் ஆய்ந்து காணப்பட்ட இன்ப துன்ப விரிவுகள் திருவள்ளுவத்தில் முறையே ஒவ்வொரு குறளில் அமைந்தவையாகின்றன. திருவள்ளுவம் ஓர் உளவியல் அறிவியலில்தன் பங்களிப்பை வைத்துள்ளமைக்கு இஃதொரு சான்று.
இன்பம் சீர்குலையாமல் அமைய வேண்டும். அதற்கு இடையூறு வராமல் பாதுகாப்பு வேண்டும். அப்பாது காப்பாம் ‘ஏமம்’ இன்றியமையாதது.

(தொடரும்)

Friday, September 20, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 4 இ. விளைவு

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 3. ஆ. செல்வம்-தொடர்ச்சி)

‘விளைவு’ என்பதற்குப் ‘பயன்படுவதற்கு உண்டாதல்’ என்று பொருள். விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்’ {177) என்று திருவள்ளுவர் விளைவைப் பயனாகக் குறித்தார். “விளைவின் கண் வீயா விழுமம் தரும்” (284) என்றதிலும் விளைவு கெடாத பயனைக் குறிக்கும். பயன்பட உண்டாகும் பொருள் கண்ணாற் காணப்படும் பருப் பொருளாகவும் இருக்கலாம்; நுண்பொருளாகவும் இருக்க லாம்; கருத்துப் பொருளாகவும் இருக்கலாம்.

‘வயல் விளைவு நன்றாக இருந்தது’-இதில் விளைவு பருப்பொருளாகிய நெல்லைக் குறிக்கும்.

‘இராமன் விளைவு’ (Raman Effect) இதில் விளைவு அறிவியல் வல்லுநர் சி. வி. இராமன் கண்டறிந்த ஒலிச் சிதறலாகிய நுண்பொருளைக் குறிக்கும்.

‘கல்வி அறிவாக விளையும்’ — இதில் விளைவு கருத்துப் பொருள்.

திருவள்ளுவர் இவற்றையெல்லாம் அடக்கியே “விளையுள்” (545, 731) “விளைவது” (732) எனக் குறித்தார்.

இவ்வாறு விளைச்சல் பலவகைப்படினும் சிறப்பாகப் பருப்பொருள் விளைச்சல் முதன்மையானது. அதனிலும், உழவுப் பயிர் விளைச்சல் மூலமானது. திருவள்ளுவர் இம்மூலமான உழவையே முதற்குறிக்கோளாக வைத்தார்.

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” (1031) என்றமை இன்று உலகில் மாற்றமின்றி உள்ளது. தொழில் பற்றிய இக்கால அறிவியல், உழவைத்தான் முதல் தொழிலாகக் கொண்டுள்ளது.

உழவு தமிழரின் தனி உரிமைத் தொழில். மிகத் தொன்மைய மக்களினத்தாருள் மிகச்சிலரே இத்தொழில் கொண்டோர். ஆரியர் எனப்படுவோர் உழுதொழிலை இழிவாகக் கருதினர்.

                “இழிவான உழுதொழிலைச் செய்யும்
                பார்ப்பானைச் சிரார்த்தம் முதலிய
                சடங்குகளுக்கு அழைக்காதே”

என்று மனுநூல் விதித்தது.

திருவள்ளுவர் உழவு என்றொரு தனி அதிகாரத்தை அமைத்து அதனில் பத்துக் குறட்பாக்களைப் படைத்தார். இப்பத்துக் குறட்பாக்களில் உழவின் இன்றியமையாமை, உழவுமுறை, உழவுப் பயன் ஆகியன தெளிவாக்கப்பட்டுள்ளன.

இக்கால ‘உழவியல்’ விளக்கங்கள் திருவள்ளுவத்தின் அடிப்படை கொண்டவையாக அறிமுகமாகின்றன. இன்றியமையா இரண்டை இங்குக் காணலாம். திருவள்ளுவர் கால உழவு இருவகை. ஒன்று நீர்ப்பாய்ச்சல் உழவு, மற்றொன்று புழுதி உழவு.

இதனை,

        “ஏரினும் நன்றால் எருவிடுதல், கட்டபின்
        நீரினும் கன்றதன் காப்பு” (1038)

என்னும் குறளில், உழவுத் தொழிலின் செயற்பாட்டிை. அமைந்திருக்கும் வரிசை கொண்டு அறியலாம்.

முதலில் வானத்து மழையால் நிலம் நனைந்ததும், ஏரால் உழுதல்.

அடுத்துப் புழுதியில் எரு இடுதல்;

பின் களை எடுத்தல்;

பின் மழைநீரை நிரப்புதல்;

பின் கதிர்ப்பயிரைக் காத்தல்-என்பன புழுதி உழவாகும்.

திருவள்ளுவர் வாழ்ந்த பகுதி புழுதி உழவைக் கொண்டது.

திருவள்ளுவர் வாழ்ந்த இடம் முகவை, மதுரை மாவட்டச் சுற்றுவட்டத்தைக் கொண்டதாகும் என்று கண்ட என் கட்டுரை “வள்ளுவர் வாழ்விடம்” என்பது. இது ‘கிராம ஊழியன்’ (அரசு இதழ்), குறளியம், ‘மலைநாடு” (கோலாம்பூர் இதழ்), முதலியவற்றில் வெளி வந்து பாராட்டைப் பெற்றது. பின் ‘புதையலும் பேழையும்’ என்னும் என் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது.

திருவள்ளுவம் ஏரால் உழும் தொழில்பற்றிக் குறிப்பிடு கின்றது. புழுதி உழவில் உழுது மண்கட்டிகளைப் புரட்டி விடுவர். கட்டிகளை உடைத்துத் துாளாக்குவர் அவ்வாறு ‘தூளாக்கப்பட்ட’ புழுதியை நன்கு சூரியனின் வெப்பக் கதிரில் காயவைக்க வேண்டும் என்பன திருவள்ளுவரின் உழவியல். அப்புழுதியைக் காயவைப்பதற்கும் ஒர் எடுத்துக் காட்டகக அளவு கூறினார்.

        “தொடிப் புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
        வேண்டாது சாலப் படும்”(1037)

என்னும் குறள் கூர்ந்து காணத்தக்கது.

‘தொடி’ என்பது ஒர் அளவு. அது அக்காலப்படி ஒரு பலம் நிறைகொண்டது. கஃசு என்னும் அளவு கால் பலம் நிறை கொண்டது.

‘உழும்போது கீழ்மேல் மண்ணாகிய ஒரு பலம் அளவு புழுதியைச் சூரியனது வெய்யில் வெப்பத்தால் நான்கில் ஒரு பங்கு என்னும் அளவாகும் வரை காயப்போட வேண்டும். அவ்வாறு காய்ந்தால் ஒரு பிடி எருவும் போடப்படாமல் மிகுதியாக விளையும் என்பது இக்கருத்து. சொல்லப்பட்ட அளவெல்லாம் ஒரு குறிப்புத்தாமே அன்றி நிறுத்துப் பார்த்துச் செய்யவேண்டிய அளவுகள் அல்ல.

இங்கு ‘உணக்கின்’ என்பதுதான் அறிவியல் உள்ளி டான கருத்துடைய சொல்.

‘உனக்குதல்’ என்றால் சூரியன் வெப்பக்கதிர்கள் புழுதியின் உள்ளுள்ளே புகுந்து வெப்பமூட்டுதலைக் குறிக்கும். இதனால் புழுதி எருப் போடவேண்டாத அளவு எருவின் உரத்தைப்பெறும் என்பதாகும்.

இக்கருத்து இக்கால வேளாண்மை அறிவியலில் வெளிப்பட்டுள்ளது. இதற்கு சூரியனின் கதிர்கள் பற்றிய சிற்றளவு விளக்கத்தை இங்குக் காணவேண்டும்.

சூரியன் ஒரு வெப்ப ஆ.விக்கோள். அதன் கதிர்களால் பிறகோள்களும் நம் மண்ணுலகும் இயக்கி உயிரினங்களை வாழவைக்கின்றன. சூரியனிடமிருந்து வெளிப்படும் கதிர் களில் கண்ணுக்குப் புலனாகின்றமையும் உண்டு; புலனா காதனவும் உள்ளன. அவை :

புறஊதாக் கதிர் (Ultra Violet Ray)

அகச்சிவப்புக்கதிர் (InfraRed Ray)

வேதிய வினைக்கதிர்(Active Ray)

எனப்படுகின்றன.

இக்கதிர்கள் வானச் சூழ்நிலையில் சிறுசிறு மாற்றங் களுடன் நிலத்து மண்ணைத் தாக்குகின்றன; அல்லது தழுவுகின்றன. இக்கதிர்களுடன் கூடிய வெய்யில் வெப்பம் பல நோய் நுண்ணுயிரிகளை மாய்க்கும். மேலும் ஊட்டங்களாக ‘ஏ’, ‘டி’ முதலியவற்றை ஊட்டும்.

உழவில் புழுதி உணக்கப்பட்டால் அப்போது இக்கதிர்களின் தாக்கத்தால் வேண்டாத நுண்ணுயிரிகள் அழியும், இது பயிர் முளைக்குப் பாதுகாப்பு. நீர்ப்பசை நீங்கி சூரியக் கதிர்களின் ஒளியால் பாங்குபெறும். இதனால் ஊட்டங்கள் தழுவுவதால் எரு தரும் உரத்தை மண் புழுதி பெறுகிறது, இதனால் எருவின்றியும் நல்ல விளைச்சல் உண்டாகும்.

மேலும் சூரியனில் களங்கங்கள் எனப்படும் ‘கரும்புள்ளி கள்’ உள்ளன. இவை உண்மையில் கரும்புள்ளிகள்’ அல்ல வென்றும் ஒளி மாற்றத்தின் தோற்றங்கள் என்றும் கண்டுள்ளனர். இக்கரும்புள்ளிகளின் வெப்பக்கூற்றால் மண்ணுலகில் உயிரினம் பயனடைகிறது என்றும் கண்டுள்ளனர்.

இவ்வகையிலும் சூரியனின் வெப்பக் கதிர் மண்ணிற்கு உரம் ஊட்டுவதாகிறது.

18-ஆம் நூற்றாண்டில் காணப்பட்ட இவ்வறிவியல் உண்மை கி.மு. முதல் நூற்றாண்டுத் திருவள்ளுவத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளமை வியந்து போற்றக் குரியது.

எனவே, விளைவு’ என்பதிலும் திருவள்ளுவம் இக்கால “கிலத்துஅறிவியல்” பாங்கை முன்னோடி அடையாளமாகக் காட்டுகிறது.

‘விளைவு’ என்பதால் நேரும் பயன்பாடுகள் தாம் மாந் தர்க்கும் உயிரினங்கட்கும் இன்பத்தை வழங்குகின்றன. இத்தொடர்பில் இன்பம் அடுத்துக் காணப்படவேண்டியது.

(தொடரும்)

Friday, September 13, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 3. ஆ. செல்வம்

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.4. வந்தபின் தீர்த்தல்-தொடர்ச்சி)

‘பிணியின்மை’யை அடுத்துத் திருவள்ளுவரால் குறிக்கப்பட்டது “செல்வம்”.

‘செல்வம்’ என்றால் என்ன? ‘செல்வம்’ என்று எதனைச் சொல்கின்றோம்? பல பொருள்களையும் ‘செல்வம்’ என்று கொள்கின்றோம்.

நிலத்திலும் கடலிலும், மலையிலும் முறையே: இயற்கையாகக் கிடைக்கும் பொன், கரி, தனிமம் முதலியவற்றையும், முத்து, பவளம், உப்பு முதலியவற்றையும், மணி, கல், மரம் முதலியவற்றையும் செல்வமாகக் கொள்கின்றோம்.

மாந்தரால் செயற்கையில் உருவாக்கப்படும் வயல் வீடு, பொறிகள், பண்டங்கள் முதலியனவும் செல்வம். உழைப்பில் விளையும் நெல், பருப்பு, எண்ணெய் முதலியனவும் செல்வம். இவை அனைத்தும் கண்ணால் காணப்படும் பொருள்கள். எனவே, செல்வம் என்பதைப் பொருள் என்றும் சொல்லலாம்.

திருவள்ளுவர் “செல்வம் செயற்கு” (375) என்று செல்வம் என்னும் சொல்லாலும் குறித்தார். “தாளாற்றித் தந்த பொருள் எல்லாம்(212) என்று பொருள் என்னும் சொல்லாலும் குறித்தார். செல்வத்தை ஈட்டுவதைப் ‘பொருள் செயல்வகை’ என்று குறித்தார். இரண்டையும் கொண்டாலும் ‘செல்வம்’ என்பதை கொண்டு அதற்கு அடைமொழியாகப் ‘பொருள்’ என்பதை வைத்து “பொருட் செல்வம்” (241) என்றார்.

‘செல்வம்’ என்பதற்குப் ‘பொருள்’ என்பதை மட்டும் அடைமொழியாகத் திருவள்ளுவர் கொள்ளவில்லை. “கல்விச் செல்வம்” (400), “செவிச்செல்வம்” (411), “வேண்டாமைச் செல்வம்” (367), “அருட்செல்வம்” (241) என மேலும் நான்கைச் செல்வம் என்றார். இவை நான்கும் கண்ணால் காணப்படும் பொருள்கள் அல்ல; கருத்துப் பொருள்கள். காணப்படும் பருப்பொருள்கள் எல்லாம் செல்வமாகக் கணக்கிடப்படுவது அதனதன் மதிப்பால்தான். பொருளின் மதிப்புதான் ‘செல்வம்’ எனப்படும்.

ஒருவனுக்கு நெல் தேவைப்படுகிறது. முற்காலத்தில் தேவைப்படும் நெல்லின் மதிப்புடைய பருப்பை மாற்றுப் பொருளாகக் கொடுத்தான். இது ‘பண்டமாற்று’ எனப் பெற்றது. வாங்கியவன் பருப்பைப் பயன்படுத்திக் கொள்வான். கொடுத்தவன் மாற்றாகப் பெற்ற நெல்லைப் பயன் படுத்திக்கொள்வான். இந்தப் பண்டமாற்றுப் பொருள்கள் உடன் நேரடியாகப் பயன்படும் நெல்லாகவோ, பருப்பாகவோ அன்றிப் பொன்னாகவும் ஆயிற்று. பொன்னை அணிகலனாக்கிப் பயன்படுத்தலாம். அதனை அப்படியே உண்ணமுடியாது. உணவுப்பொருள் வேண்டுமானால் அதே மதிப்புடைய உணவுப் பொருளைப்பெற்று உண்ணலாம். எவ்வாறாயினும் பொருளின் பயன்பாடு அதன் மதிப்பால் தான் பெறப்படுகிறது.

இந்த மதிப்புப் பண்டமாற்று, பொன்னிலிருந்து நாணயத்திற்கும், பணத்தாளிற்கும் மாறியது. இவை இரண்டையும் அவற்றின் மதிப்பளவிற்கு வேறு பொருளாக மாற்றியே பயன்படுத்த முடியும். அவற்றையே நேரடியாகப் பயன்படுத்த முடியாது. இதுதான் செல்வப் பயன்பாட்டின் நடைமுறை.

இவ்வாறிருக்க, பொருளாக நேரடியில் பயன்கொள்ள முடியாத கல்வியும் கேள்வியும் வேண்டாமையும் அருளும் எவ்வாறு செல்வமாகும்? திருவள்ளுவர் இவற்றைச் செல்வம். என்றமை பொருந்துமா?

பொருந்தும்.

இப்பொருத்தத்தில்தான் இன்றையப் பொருள் அறிவியலின் கோட்பாடு பொதிந்துள்ளது.

இன்றைய அறிவியலில் பொருளியல் (Ecnomics) ஒன்று. அன்றாட வாழ்விற்கு இன்றியமையாத ஒன்று. பொருளியலின் இன்றியமையாத முதற்கூறு செல்வம்.

செல்வம் பற்றி இன்றையச் ‘செல்வ அறிவியல்’ (Wealth Economics) என்ன கூறுகிறது(?) என்பதைக் காண வேண்டும்.

‘செல்வம்’ என்பது குறிப்பிட்ட நேரத்தில் இருக்கும் பொருளியல் சரக்கின் இருப்பைக் குறிக்கும் என்று இன்றையச் ‘செல்வ அறிவியல்’ கணித்துள்ளது.

இதன்படி ஓர் இருப்புச் சரக்கைச் ‘செல்வம்’ என்று சொல்ல வேண்டுமானால் அதற்குப் பின்வரும் மூன்று இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.

ஒன்று:

மாந்தனின் தேவையை நிறைவேற்ற வேண்டும்.

இரண்டு;

அதன் அளவு முழுத்தேவைக்குக் குறைந்ததாக வேண்டும்.

மூன்று:

ஒருவனிடமிருந்து மற்றவனுக்கு மாறக்கூடியதாக இருக்கவேண்டும்.

இவை இக்காலச் செல்வ அறிவியல் கண்ட இலக்கணங்கள். இம்மூன்றும் கண்ணால் காணப்படும் பொருட் செல்வத்திற்குப் பொருந்தும். வீடு ஒரு பொருட் செல்வம் என்றால் அஃது ஒருவன் தேவைக்குப் பயன்படுகிறது (1), முழுத்தேவைக்கும் ஈடுசெய்ய இயலாததாகும் (2), மற்றவனுக்கு விற்பனையால் மாறும் (3).

இவை மூன்றும் கண்ணிற்குப்படும் உருவப் பொருளுக்கன்றி மற்ற அருவத்திற்கும் பொருந்தும். காணப்படும் உருப்பொருளும் பொருள்தான். கருதப்படும் கருத்துப் பொருளும் பொருள்தான். மேற்குறிக்கப்பட்ட மூன்று இலக்கணங்கள் இக்கருத்துப் பொருளுக்கு எவ்வாறு ஈடாகும்?

ஒருவனின் ‘தேவையை நிறைவேற்றுவது செல்வம்’ என்று கண்டோம்.

ஒரு நோயாளிக்கு மருத்துவம் தேவை. அந்தத் தேவைக்கு மாற்றாகப் பணம் கொடுப்பான். பணம் கொடுத்துப் பெறுவது நோயைத் தீர்க்கும் தேவையை நிறைவேற்றுகிறது. ஆனால் மருத்துவரின் மருத்துவச் செயல்’ என்பது பருப்பொருள் அன்று; நுண்பொருள். அஃதாவது மருத்துவர் கற்ற கல்விப்பொருள், கேள்விப்பொருள், பட்டறிவுப் பொருள் என்னும் இவற்றால் தேவைப்பட்ட நோய் நீங்குகிறது. இதற்கு மருத்துவரிடமிருந்து அவரின் கல்வியையோ, கேள்வியையோ, பட்டறிவையோ, நோயாளி பெறவில்லை. இவற்றைப் பெற்றால் நோயாளி மருத்துவனாக ஆகிவிட வேண்டும்; ஆவதில்லை. தன் பணத்திற்கு மாற்றுப் பொருளாக – செல்வமாக எதைப் பெறுகிறான்? மருத்துவன் அறிவின், கல்வியின், பட்டறிவின் உதவியை, அஃதாவது பணியைப் பெறுகிறான்.

இவ்வகையில் மருத்துவரின் பணி என்னும் அருவப் பொருள் மாற்றாகப் பெறப்பட்ட செல்வம் ஆகிறது. இந்தச் செல்வ அறிவியலின்படி,

கண்டுபிடிக்கப்பட்ட காப்புரிமை (Patent)

நூலாசிரியரின் மதிப்பூதியவுரிமை (Copy Right)

ஒருபொருளின் நன்மதிப்பு (Goodwill) என்னும் இவையும் இன்றையச் செல்வ அறிவியலின்படி செல்வங்களேயாகும்.

இக்கால இவ்வறிவியலைத் திருவள்ளுவரின் செல்வம் தொடர்பான அடைமொழிக் குறட்சொற்களில் காண முடிகிறது.

கல்விச் செல்வம், கேள்விச் செல்வம், வேண்டாமைச் செல்வம், அருட்செல்வம் ஆகிய செல்வங்களுள் ஒவ்வொன்றும் இக்கால செல்வ அறிவியலின் மூன்று இலக்கணங்களையும் பொதிந்தது.

கல்வி, கேள்வி, வேண்டாமை, அருள் இவற்றைக் கொண்டோரின் செயற்பாட்டின் மூலம் நிறைவேற்றப்படுகிறது (1 : இவற்றைக் கொண்டவரின் முழு அளவில் ஓர் பயன்பாடாகிறது (2); ஒருவரிடமிருந்து செயற்பாட்டுப் பயன் மாறுகிறது (3). எனவே, கருத்துப் பொருளாம் இவையும் இக்கால அறிவியலின்படி செல்வங்களாகின்றன. திருவள்ளுவரும் செல்வ அறிவியலாளர் ஆகிறார்.

இக்காலச் ‘செல்வப் பொருளியல்’ நாட்டு அரசாட்சியின் பங்கில் செயலாகும்போது பின்வரும் முறை கொள்ளப்படும்.

பண்டமாற்றுப் பொருளாக நாணயத்தையோ பணத் தாளையோ அரசு வெளியிடும்போது அவற்றின் மதிப்புடைய பொன்னோ, வெள்ளியோ பொருளோ, கடன் ஆவணமோ அரசின் இருப்பில் வைக்கப்படும். அவ்வாறு செய்வதுதான் பணவீக்கத்தை ஏற்படுத்தாது. பண மதிப்பைச் சரியாமல் உரிய மதிப்புள்ளதாக வைத்திருக்கும். (அண்மைக் காலமாக இம்முறை கடைப்பிடிக்கப் பெறாமல் பணவீக்கம் நேர்ந்து பணமதிப்பு குறைந்து வருகிறது).

இவ்வாறு ஒரு நாடு பொருளின் செலாவணிக்கேற்ற இருப்பைப் பெற்றிருக்கவேண்டும். நாட்டின் இலக்கணம் கூறும் திருவள்ளுவர்.

        “பெரும்பொருளால் பெட்டக்கதுஆகி,அருங்கேட்டால்
        
ஆற்ற விளைவது நாடு” (732)

என்று விதித்தார். இக்குறளில், ‘நாட்டிற்குப் பெரும்பொருள் வேண்டும்; அது பெட்டக்கதாக ஆக வேண்டும்’ என்றவை கூர்ந்து காணத்தக்கவை. பெரும் பொருள் என்றது நாட்டு மக்கட்கும், உயிரினங்கட்கும் வேண்டப்படும் பொருள்களின் நிறைவாகும்.

“பெட்டக்கது” என்னும் சொல் திருவள்ளுவரின் தனி ஆக்கச் சொல். இதற்கு ‘விரும்பத்தக்கது’ என்று பொது வான பொருள் கண்டனர். இதற்குத் தனியான ஆழ்ந்த சிறப்புப் பொருள் உண்டு.

‘பெட்பு-தக்கது’ என்பவற்றின் கூட்டுச்சொல் “பெட்டக்கது” “பெட்பு” என்பதற்குப் “போற்றிப் பாதுகாத்தல்” என்பது ஆழ்ந்த பொருள். இப்பொருளை அழுத்தமான சான்றுடன் உறுதிசெய்யவேண்டும். இப்பொருளின் பொதிவை இலக்கியங்களில் காணமுடிகிறது.

கடிய நெடிவேட்டுவன் என்னும் சிற்றரசன் தன்னை நாடிவந்த புலவர் பெருந்தலைச் சாத்தனாரை மதித்துப் போற்றிப் பரிசு வழங்காமல் காலங்கடத்தினான். இதனை விரும்பாத புலவர்,

        “முற்றிய திருவின் மூவர் ஆயினும்
        
பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே[24]

என்று பாடினார். ‘முடிமன்னர் மூவேந்தரானாலும் எம்மை மதித்துப் போற்றிப் பாதுகாவாது ஈவதை யாம் விரும்ப மாட்டோம்’ என்றார். இது கொண்டும் ‘பெட்பு’ என்னும் சொல் ‘போற்றிப் பாதுகாக்கும்’ கருத்தைக் கொண்டது என்பதை அறியலாம்.

‘பெட்பு – தக்கது’ எவ்வாறு “பெட்டக்க” தாயிற்று? ‘நட்பு’ என்னும் சொல் ‘நட்டு’ என்று ஆகி ‘நட்பு கொண்டு’ என்னும் பொருளைத் தரும். திருவள்ளுவரும் ‘முகத்தால், நட்புக்கொண்டு’ என்பதை “முகம்நட்டு” (830) என்று பதிந்துள்ளார். நாலடியாரும் நட்ட கால்’ (நட்பு கொண்ட போது) என்பதை “நட்டக்கால்”[25] என்றமைத்தார். இவை போன்றே பெட்பு’ என்பதும் பெட்டு’ என்றாகி, ‘பாதுகாப்பு’ என்னும் பொருளைத் தந்தது.

செல்வத்தைப் பாதுகாப்பாக வைக்க மரத்தால் செய்யப்பட்டதைப் ‘பெட்பு’ (பெட்டு+இ) என்கிறோம். பெரும் மதிப்புடைய செல்வத்தைப் பேணி வைக்கும் பெரும் உறுதியுள்ள பேழையைப் ‘பெட்டகம்’ (பெட்டு-அகம்) என்கிறோம். இங்கெல்லாம் ‘பெட்டு’ என்னும் சொல் ‘போற்றிப் பாதுகாத்தல்’ என்னும் பொருளில் உள்ளது.

இவற்றின் முன்னோடிச் சொல்லாகத் திருவள்ளுவர் ஆக்கிய “பெட்டக்கது” என்னும் சொல் பெரும் செல்வத்தைப் போற்றிப் பாதுகாக்கும் கருத்தைக் கொண்டது.

ஒரு நாடு வளத்தில் நிலைத்திருக்க வேண்டுமானால் பெரும் செல்வத்தால் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும். அதற்குப் பெரும் மதிப்புடைய செல்வம் போற்றிப் பாது காக்கப்பட்டு, இருப்பில் அமைய வேண்டும். இது “பெரு பொருளால் டெட்டக்கதாகி” என்பதன் விளக்கமாகும்.

செல்வம் என்பது செலாவணிக்கு உரியது என்றாலும் அதன் மதிப்புடைய பொருள்கள் நாட்டு மக்களுக்குத் தட்டாமல் கிடைக்கவும், அவற்றைப் பெற்றுத்தரும் பண்டமாற்றுப் பொருள்களாகிய நாணயம் முதலியன தம்மதிப்பைக் குறைத்துக் கொள்ளாமலோ கூட்டிக்கொள்ளாமலோ இருக்கவும் மதிப்புடைய செல்வம் நாட்டுக் கருவூல இருப்பாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் இக்கருத்து இக்காலச் செல்வப் பொருளிய’லில் எவ்வாறு மலர்ந்துள்ளது என்பதைக் காண முடிகின்றது.

நாணயத்தையோ பணத்தாளையோ அரசு வெளியிடும் போது அவற்றின் மதிப்புடைய பொன், வெள்ளி முதலிய செல்வப் பொருள்கள் அரசுப் பாதுகாப்புக் கருவூலத்தில் இருப்பாக வேண்டும் என்று விளக்கப்பெற்றது. இச் ‘செல்வ அறிவியல்’ “பெட்டக்கதாகி” என்னும் சொல் லாக்கத்தில் அமைந்துள்ளது. பொருள் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியது என்பதை “பொருளாட்சி போற்றாதார்க்கில்லை” (252) என்பதாலும் திருவள்ளுவர் வலியுறுத்தியுள்ளதையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம். இதனால், திருவள்ளுவம் ‘செல்வப் பொருளிய’லாம். அறிவியலில் விளங்குகின்றது.

பொருளியல் கோட்பாடும் திருவள்ளுவமும்

‘பொருளியல்’ என்னும் இயல் 18ஆம் நூற்றாண்டில் தான் உருப்பெற்றது. இப்பொருளியலின் தந்தை ‘ஆதம் சுமித்து’ என்பார். இவர் காலம் 1723-1790. இவர் வகுத்த பொருளியற் கோட்பாட்டின் அடித்தளக் கோட் பாடுகள் மூன்று அவை :

பொருள்களின் ஆக்கம் (Production)

பண்டமாற்று (Exchange)

பகிர்வு (Distribution)

பின்னர் ஆய்வுகளால் இம்மூன்று பகிர்வுக்கு முன்னர் (Consumption) என்பதும் இணைக்கப்பெற்று நான்காயின.

இவை நான்கும் பொருளியலின் அடித்தளக் கோட் பாடுகள். இவற்றைத் திருவள்ளுவர்,

                “இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த
                வகுத்தலும் வல்ல தரசு”

என்னும் குறளில் காட்டினார்.

பொருள்களை விளைச்சலால் உண்டாக்குதலும், அவற்றைத் தொகுத்தலும், போற்றிப் பாதுகாப்பாகக் காத்தலும், காத்தவற்றைப் பகிர்ந்து வழங்கலும், வழங்கப்பட்டவை. மாந்தர்க்கோ உயிரினங்களுக்கோ நுகர்வு ஆதலும் ஆகிய நான்கையும் திறமையுடன் செய்வதுதான் ஆட்சி செய்தற்குரிய அரசாகும். இதை அக்கால மன்னர் அரசுக்குக் குறிக்கப்பட்டனவாயினும் இக்கால மக்கள் ஆட்சிக்கும் மாற்ற மின்றிப் பொருந்துகின்றன.

இக்காலப் பொருளியல் நான்கை குறட் கருத்துடன் பொருத்திக் காணுமாறு திருக்குறள் அமைந்துள்ளமை குறிக்கத் தக்கது

வள்ளுவம்பொருளியல்
இயற்றல்ஆக்கம்
ஈட்டல் காத்தல்மாற்று
வகுத்தல்பகிர்வு
வகுத்து வழங்கலும் பெறலும்நுகர்வு

மேலும், பொருளியலின் பல்வகைக் கூறுகளையும் திருவள்ளுவர் தம் திருவள்ளுவத்தில் காட்டியிருக்கின்றார். இவற்றை விரிவாகப் பொருளியல் வல்லுநர் முனைவர் பா. நடராசன் அவர்களும், திருவள்ளுவர் விருதுபெற்ற குறளறிஞர் கு. ச. ஆனந்தன் அவர்களும் நுணுக்கமாகவும் விளக்கமாகவும் எழுதியுள்ளனர்.

அவற்றையும் இணைத்துப் பார்த்தால் திருவள்ளுவம் ‘செல்வப் பொருளிய’விலும் பொருளி அறிவிய’விலும் விளக்கம் பெறுவதை அறியலாம்.

இக்கால ஆங்கில அகரமுதலிகளில் ‘பொருளியல்'(Economics) என்னும் சொல்லுக்குக் காட்டப்பட்டுள்ள பொருள்:

“செல்வத்தின் ஆக்கத்தையும் (இயற்றல்) பங்கீட்டையும் (வகுத்தல்) பற்றிய செயல்முறை நூல்” என்றிருக்கும். இச்செயல்முறை நூலாகத் திருவள்ளுவம் திகழ்கிறது.

இத்தகைய செல்வமாகும் பொருள்கள் பல. அவையாவும் இயற்கையாகவும் செயற்கையாகவும் விளைபவை.

எனவே, செல்வத்தை அடுத்துத் திருவள்ளுவத்தில் விளைவைக் காண்கின்றோம்.

(தொடரும்)