Tuesday, October 29, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 8. 5. இனநல ஏமம்

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 7 உ.3. கல்வி ஏமம், 4.கேண்மை ஏமம்- தொடர்ச்சி)

நட்பாம் கேண்மை போன்றது இனம். இங்கு இனம் என்றால் ஒருவருடன் அவருக்கு இனமாக அஃதாவது துணையாகக் கூடியிருப்பவரைக் குறிக்கும். சாதி என்பதை அன்று. கேண்மை இருவர் தொடர்ந்து ஒன்றிப் பழகுவது. இனம் கூடியிருப்பது; தொடராமலும் அமையும். நட்பு இடையறாத் தொடர்பு, இனம் ஒரு கூட்டு; செயற் பாட்டிற்குத் துணையாக உதவுவதும் பழகுவதும் இனமாதல் ஆகும்.

நட்பில் தீநட்பும் உண்டு; கேண்மையில் புன்கேண்மையும் உண்டு. இனத்திலும் நல்லினமும் உண்டு; தீயினமும் உண்டு. இதனைத் திருவள்ளுவர்,

             “நல்லினத்தின் ஊங்குங் துணையில்லைதீயினத்தின்
             
அல்லல் படுப்பது உம் இல்” (460)

என்ற குறளில் காட்டினார். இத்துடன், நல்லினம் துணையாகும் (பாதுகாப்பாகும்), தீயினம் அல்லல் தரும் என்று ‘இன நல ஏம’த்தைக் குறித்தார்.

பெரியாரைத் துணைக்கோடல்’ என்னும் அதிகாரத் தால் நல்லினத்தின் நலத்தையும் சிற்றினஞ் சேராமை’யால் தீயினத்தின் தீமையையும் விளக்கினார். ‘சிற்றினஞ் சேராமை”யாம் எதிர்மறையில் நல்லினத்தில் ஏமத்தை அழுத்தமாக விரித்தார்.

மக்கட் கூட்டம் இலக்கியங்களில் ‘மன்பதை’[27] எனப் படும். அதனைத்தான் ‘சமுதாயம்’ என்கின்றனர். தமிழில் ‘குமுகாயம்’ என்று குறிக்கின்றோம். குமுகாய அமைப்பு இந்த இனநலத்தால்தான் உருவாகிறது. இன மாகக் கூடுவது தனியொருவர்க்கும் வேண்டியது; பொது மக்களுக்கும் வேண்டியது; நாட்டிற்கும் வேண்டியது. இனநலத்தால் அந்நலம் பெற்றவரோ, நாடோ ஏமம் பெறும். திருவள்ளுவர்.

இனம் என்னும் ஏமம்” (306) என்று இனத்தையே ‘ஏமம்’ என்றார்.

ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர்க்கும் ‘இனநலம்’ ஒரு பாதுகாப்பு. சான்றோர்க்கு மனநலம் நன்றாக அமைந்திருக்கும். ஆயினும்,

          “மனநலம் நன்குடைய ஆயினும் சான்றோர்க்கு
          
இனகலம் ஏமாப்பு உடைத்து” (458)

சான்றோனாயினும் பொதுமக்களில் ஒருவனாயினும் உயிரோடு வாழும் வாழ்வு இம்மை வாழ்வு. உயிர் போனாலும் அவன் வாழ்நாளில் பெற்ற புகழ் உலகில் நின்று நிலவும். அப்புகழ் வாழ்வு அவனது மறுமை வாழ்வு. அண்ணல் காந்தியடிகள், வள்ளலார், பெரியார், சவகர்லால் தேரு, அறிஞர் அண்ணா முதலியோர் இயற்கை யெய்தினாலும் இன்றும் மக்கள் நெஞ்சில் புகழுடன் வாழ்கின்றனர். இவ்வாழ்வு அன்னாரின் மறுமை வாழ்வு. இந்த மறுமையைத்தான் திருவள்ளுவர் “உளதாகும் சாக்காடு” (235) என்றார். மறுமை வாழ்வு எவ்வாறு தொடர்கின்றது? அவர்களோடு நல்லினமாக இருந்தோர் இன்றும் வாழ்வதாலும், அவர்தம் கொள்கைகளை ஏற்று அவர்களுக்கு இன்றும் நல்லினமாக உள்ளோர் வாழ் வதாலும் மறுமை வாழ்வு நீடிக்கிறது. இவ்வகையில் இனநலம் மறுமை வாழ்விற்கும் ஏமம் ஆவது, இது,

“மனநலத்தின் ஆகும் மறுமை; மற்றஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து” (459)

என்னும் குறளில் பதியப்பட்டுள்ளது.

‘இனநலம் ஏமம்’ என்று திருவள்ளுவர் காட்டிய கருத்துகள் குமுகாய அறிவியலில் (Social Science) வெளிப்படுத்தப்பட்டுள்ளமை வியக்கத் தக்கதாகும்.

உயிரினத்தோற்றம் அதன் படிமலர்ச்சி (Evolution)யை ஆய்ந்து ஒரு சட்டகம் அமைத்தவர் தார்வின் என்பார். இவர் கொள்கை தார்வின் கொள்கை’ எனப்படும். இக் கொள்கை வழி ஆய்ந்தோர் பின்வரும் கருத்தை வெளியிட்டனர் :

          “குமுகாயப் படிமலர்ச்சியில் போரும்
          
போட்டியும் வேண்டாதவை அல்ல;
                                                 
முறையானவையே

என்றனர்.

ஆனால், இதனை மேலும் ஆராய்ந்த குமுகாயவியலார் அக்சிலி (Huxley) என்பார் இக்கொள்கை தவறு என்று மறுத்து,

          ‘மாந்தருக்குள் (இனமாகக் கூடும்) கூட்டுறவும்,
          ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதும்
          குமுகாய நலத்திற்கு உதவும்’
 என்றார்.

இந்தக் குமுகாயவியல் (Social Science) கொள்கை. மேலே கண்ட திருவள்ளுவ இன ஏமக் கருத்தில் மிளிர்கின்றது.

இனம் இல்லாமை – ஏமம்

இனம் ஏமமாவது போன்று இனம் இல்லாமையும் ஏமமாகும். இன்றைய அரசியல் கட்சிகளின் நிலைமை மற்றையக் கட்சியுடனோ, கட்சிகளுடனோ கூட்டு சேர்ந்து தேர்தலில் ஈடுபட வேண்டியுள்ளது. இக்கூட்டு அரசியல் இனம் ஆகும். கூட்டில் கொள்கை ஒற்றுமை, குறிக்கோள் ஒற்றுமை பார்ப்பதும் மறைந்து வருகின்றது. கூட்டு சேர்வது வெற்றிக்கு மட்டும் அன்றிக் கட்சிக்கும் ஏமம் ஆக வேண்டும். இதற்கு மாறாக,

‘ஒரு கட்சியுடன் கூட்டு சேராதிருத்தலே வெற்றிக்கும் கட்சிக்கும் ஏமமாக அமையும். காரணம் கூட்டு சேரத் தகுதியின்மை பலவகையால் அமையலாம். அவற்றுள்ளும் இக்காலம் குறிப்பிடத்தக்கதாக ஒரு கட்சியின் தலைமை அதற்குரிய தகுதியைக் கைவிட்டதாகலாம். கட்சித் தலைமை பெருந்தகவான குணம் இல்லாமல் தன் மூப்பு கொண்டதாகுமானால் கூட்டின் ஏமம் குறையும், தலைமையின் தனி வாழ்விலும், பொறுப்பு நடை முறைகளிலும் ஆட்சியில் ஊழல் மலிந்திருப்பது மாகிய குற்றங்கள் பலவாக இருப்பினும் கூட்டின் ஏமம் கெடும்.’

இவ்வாறு இக்காலத்தில் பொதுவாகக் கருதப்படுகிறது. இக்கருத்து நடைமுறைச் செயற்பாட்டிற்கும் பொருந்தும் நிலை உள்ளது.

இந்நிலை பற்றிய திருவள்ளுவரின் கருத்து

குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனன் இலனாம் ஏமாப்பு உடைத்து (868)

சள குணமின்மையும் குற்றம் பல உண்மையும் இனம் ஆகாமலே மாற்றாரை ஏமத்தில் வைத்து விடுகின்றன. இக் கருத்து இன்றையக்கட்சி அரசியல் (Partism Political) என்று தோன்றிக் கொண்டிருக்கும் புதுமை அறிவியலின் முன் னோட்ட அடையாளமாகின்றது.

பெண்ணினத்தையும் அடக்கியே திருவள்ளுவர் ஆண்பாலிலேயே அறிவுரையும் கருத்துரையும் வழங்கியுள்ளார். இம்முறையில் இக்குறளிலும் பெண்களையும் குறிப்பிட்டே குறித்துள்ளார். இக்காலத்தில் தலைமை அமைச்சர்களாகவும், முதலமைச்சர்களாகவும் மகளிர் அமர்ந்துள்ளமையால் இஃது இருபாலார்க்கும் உரிய குறளாகும். படிப்போர் நாட்டு நடப்பறிந்து பொருள்கொள்ள வேண்டியுள்ளது. பொதுமறையான திருக்குறட் கருத் துக்கள் திறனாய்வு செய்யப்படும்போது எந்த ஒரு கட்சியையும் பொதுவாகச் சுட்டாது போவதே திறனாய்வுக்கு ஏமமாகும்.

(தொடரும்)

Friday, October 11, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 7 உ.3. கல்வி ஏமம், 4.கேண்மை ஏமம்

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 6. உ.ஏமம் தொடர்ச்சி)

                    “ஒரு மைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
                    எழுமையும் ஏமாப்பு உடைத்து’’ (398)

இங்கும் ஒருமை, எழுமை மாந்தப் பருவங்களையே குறிக் கும். ஒரு பருவமாகிய சிறுவன் பருவத்தில் ஒருவன் கற்க வேண்டும். கற்றால் அவனுக்கு அக்கல்வி தொடர்ந்து முதுமை வரை வரும் ஏழு பருவங்களுக்கும் பாதுகாப்பு ஆகும்.

கல்வியால் பெற்ற அறிவுப் பாதுகாப்பு ஆறறிவு மாந்தனை உண்மையில் மாந்தனாக வைத்திருக்கும்.

கல்வியை “எண்என்ப, ஏனை எழுத்து என்ப” (392) என்று இரண்டுள் அடக்கினார். சிறுவன் தன் பருவத்தில் கற்கும் எண், எழுத்து எனும் இவையிரண்டும் அவன் வாழ் நாள் வரை கல்விக்கும், செயலுக்கும், வாழ்விற்கும் அடித்தளமாக நின்று அவன் அறிவையும், அறிவார்ந்த வாழ்வையும், அவற்றால் அவனையும் பாதுகாக்கின்றன. முதற் பருவத்தில் சிறுவன் ‘அ, ஆ, இ…… ‘ என எழுத்துகளையும், ‘1,2,3……0’ என எண்களையும் கற்கிறான். இவன் அவ்வாறே அவனது ஏழு பருவங்களுக்கும் துணை. யாக நிற்கின்றன. துணையாக நின்று அவன் மொழியறிவையும், கணக்கறிவையும் பாதுகாத்து ஏமம் செய்கின்றன.

எழுத்து நிலையிலும் எண்நிலையிலும் மட்டுமல்லாமல் குறியீடுகளாகவும் துணையாகின்றன. எழுத்துகளே எண்களாக உதவுகின்றன. தமிழில்,

க—1, உ—2, ரு—5, எ—7, அ—8, ய—10,

ள—100, வ—கால் (¼), தெ—முக்கால் (¾)

வத—முந்திரி, அத—1000 என்றெல்லாம் குறியீடுகளாகத் துணைநின்று ஏமமாகின்றன.

ஆங்கிலத்தில் தேற்ற வாய்பாடாக,

AB3 BC2+CA2 -என்றெல்லாம் எழுத்தும் எண்ணுமாக முன் பருவத்தில் கற்கப்பட்டவை, பின் பருவங்களில் குறியீடுகளாக நின்று அறிவிற்கு ஏமமாகின்றன. பல கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளக் குறியீடுகளாக உதவி ஏமமாகின்றன.

இக்காலக் குழந்தைக் கல்வி மழலையிலேயே தொடங்குகின்றது. இக்குழந்தைக் கல்விமுறையில் கிண்டர்கார்டன் முறையை அறிஞர் புரோபெல் என்பார் அமைத்தார். மாண்டிசோரி அம்மையார் அமைத்த முறை அவர் பெயரால் நடந்துவருகின்றது. முதற் சிறுவன் பருவத்தில் விளையாட்டுச் செயலறிவோடு கூடிய கல்வியை இவை தருகின்றன. இம்முதற்பருவக் கல்வி முதுமைப் பருவம் முடிய அவனை அறிதிறன் (Intelligence), உடையவனாக்கி அவனுக்கு ஏமமாகின்றது.

குழந்தையின் அறிதிறனை ஆய்ந்தவர் கலிபோர்னியா நாட்டுப் பேராசிரியர் பினே (Binet) என்பவர். இவர்,

‘குழந்தைப் பருவத்தில் உள்ள அறிதிறன் செப்பமாக்கப் பெற்றால் அது அவன் வாழ்நாள் வரை அவனைப் பாதுகாக்கும்’ என்று கண்டறிந்தார்.

மற்றொரு பேராசிரியர் தெருமென் (Dermen) என்பார் தம் ஆய்வில்,

‘குழந்தைகள் வளர்ந்த பின்னர், தாம் குழந்தைப் பருவத்தில் பெற்ற அறிதிறனால் உலகப்புகழ் அடைவர்’ என்று கண்டறிந்தார்.

இக்காலத்தில் கண்டறியப்பட்ட கல்வி அறிவியல் (Educational Science) மிக எளிமையாக எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்னும் தொடரில் பொதிந்துள்ளது.

மேற்கண்டவற்றால் கல்வி ஓர் ஏமம் ஆகிறது.

கல்வி ஓர் ஏமத் தொடர்பில்

கல்வியறிவுடையார் அதன் வலிமையால் பல வகையில் ஏமம் ஆவார். அவற்றுள் ஒன்று அவரை நட்பாக கேண்மையாகக் கொள்ளல். இதனை,

“மூத்த அறிவுடையார் கேண்மை” (441) என்றார்.

இவ்வகைக் கல்வி ஏமத்தொடர்பில் ‘கேண்மை ஏமம்’ தொடர்கின்றது.

கேண்மை என்பதற்கு நட்பு என்பது பொருள். நட்பினும் அழுத்தமானது கேண்மை.

கேண்மை தனியொருவர்க்கும் வேண்டும்; நாட்டிற்கும் வேண்டும். கேண்மையின் சிறப்பான பயன், தன்னைத் தழுவியவருக்குத்தான் ஏமமாக அமைவது. அவ்வாறு ஏமம் தராத கேண்மை கொள்ள வேண்டாத ஒன்றாகும். இதனைத் திருவள்ளுவர்,

‘ஏமம் சாராக் கேண்மை’ என்று பொதுவில் குறிக்க வேண்டியவர், இதற்கு ஓர் அழுத்தம் கொடுக்க எண்ணி,

“ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை” என்றார். சிறியவரும் கேண்மை செய்வார். ஆனால், அது “புன்கேண்மை’; ஏமம் செய்யாது. இதனை

“எய்தலின் எய்தாமை நன்று” (815) என்று முடித்தார்.

எனவே புன்கேண்மை ஏமம் ஆகாது.

நல்ல கேண்மை ஏமம் ஆகும்.

இக்கருத்து திருக்குறளில் ‘அரசியல்’ என்னும் இயலில் உள்ளது.

இக்காலம் அரசியல் அறிவியல் (Political Science) நாட்டிற்கு இன்றியமையாததாகத் தோன்றியுள்ளது. கேண்மை ஏமத்திற்கு இன்றைய உலகத்தில் அரசாட்சி நடப்பில் நல்ல சான்றைக் கண்டு வருகிறோம்.

உலகத்து நாடுகளில் சில கூட்டுசேரா நாடுகளாக உள்ளன. இருப்பினும் தெற்காசிய நாடுகள் கேண்மை கொண்டு ஒரு கூட்டாக சார்க் (Saarc) என்னும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏழு நாடுகள் இக்கூட்டு நாடுகள். இந்திய நாட்டுடன் இதில் பாக்கித்தானமும் உள்ளது. இக்கூட்டில் கேண்மை கொண்டிருக்கிறது பாக்கித்தான். ஆனால் இக்கேண்மையில் இருந்து கொண்டே இந்திய நாட்டிற்கு எதிரான கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுகிறது. காசுமீரத்தில் கமுக்கமாகக் குண்டர்களை அனுப்பிக் கொலை, கொள்ளை, கலவரம் செய்து அம்மாநில மக்களின் ஏமத்தைக் குலைக்கிறது. பம்பாயில் குண்டுகள் வெடிக்கக் காரணமாகி அந்நகர்ப் பாதுகாப்பில் கலக்கம் ஏற்படுத்தியது.

‘சார்க்’கில் கேண்மை உண்டு;

அமுக்கச் செயலால் ஏமம் இல்லை;

இதனால் கேண்மை என்பதே புன்கேண்மையாகிறது.’ நாம் கண்ணால் காணும் இந்த அரசியல் அறிவியலில் முன் னோடிப் பதிவாகத் திருவள்ளுவத்தை

(கேண்மை)

              “செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
              எய்தலின் எய்தாமை நன்று” (815)

என்று பேசவைத்தார் திருவள்ளுவர். பாக்கித்தானத்தின் கேண்மை பெறுவதைவிடப் பெறாதிருத்தலே நல்லது என்று நம் நாட்டு மக்கள் எண்ணவேண்டி நேர்ந்துள்ளது.

திருவள்ளுவர் தொலைநோக்காகக் கருதியது போன்று பாக்கித்தானின் இந்தக் கேண்மையை

இனம்போன்று இனமல்லார் கேண்மை” (822) என்றார்.

கேண்மையில் இனத்தாரும் உள்ளனர்;

இனம் அல்லாதாரும் உள்ளனர்.

இவ்விரண்டையும் அடுத்துக் காணலாம்.

(தொடரும்)

Friday, October 4, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 6. உ.ஏமம்

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 5. ஈ. இன்பம்-தொடர்ச்சி)

ஏமம் என்றால் பாதுகாப்பு. இடையூறோ, துன்பமோ, அழிவோ நேராமல் பாதுகாப்பளிப்பதும் ஏமம். இவை வரும்போது காத்துக்கொள்வதும் ஏமம். ஏமம், ஏமாப்பு, ஏமார்த்தல் எனும் மூன்றும் ஒரே பொருளன.

நாட்டையோ மக்களையோ உயிரினங்களையோ பகை, இயற்கை, குணக்கேடு, மொழி ஆட்சி முதலியவை தாக்குமானால் பல்வகைப் பாதுகாப்புகள் வேண்டும்.

இப்பாதுகாப்பு எதனால் அமையும்? எதனால் அமையும் என்பது பொருந்தாது. எவற்றால் அமையும் என்பதே பொருந்தும்.

திருவள்ளுவர் பாதுகாப்பனவாகப் படையையும்அரண்களையும்ஆட்சித் திறனையும் கூறியுள்ளார்இவை நாட்டையும் நாட்டு மக்களையும் உயிரினங்களையும் காக்கும்.

மனத்துன்பத்தைவாழ்க்கையைபண்புகளைக் காக்கும் ஏமங்களாகத் திருவள்ளுவர்

          செல்வம் (1.12)

          அடக்கம் (128)

          கல்வி (398)

          கேண்மை(815)

          இனநலம் (458, 459, 306, 868)

          அரண் (742, 744, 750)

பொருளியல்உளவியல்உளப்பகுப்பியல்கல்வியியல்அரசியல்குமுகாயவியல்கட்சி அரசியல்போர்முனை இயல்வாழ்வியல்.

ஆகியவற்றை ஏமமாகக் கூறியுள்ளார்இவை காக்கும்திறத்தைக் கூறியுள்ளமை இக்கால அறிவியல் துறைகள் பலவற்றுக்கு முன்னோடியாக உள்ளது.

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி

எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து“(112)

இதில் ஆக்கம் செல்வத்தைக் குறிக்கும். இச்செல்வம் நேர்மை உடையவனால் ஆக்கப்பட்டால் அது அவனுக்குப் பின் வாழும் மக்களுக்கும் தொடரும்; நலன்களுக்கும் ஏமம் ஆகும். இதனால் செல்வம் ஓர் ஏமப் பொருளாகிறது.

இன்றளவில் அமெரிக்க நாடு பெரும் வல்லரசு நாடு. குறிப்பிடத்தக்க மேன்மையுடைய வல்லரசு. வல்லரசுடன் வளன் அரசு. இவ்வளத்திற்கு அந்நாட்டில் செல்வம் கொழிப்பதே காரணம். பெரும் செல்வ வளம் கொண்டு அறிவியல் ஆய்வுகளால் மக்களுக்கு ஆக்கம் தருகிறது. போர்க்கருவிகளைச் செல்வத்தால் குவித்து எத்தாக்கு தலையும் அழிக்கும் பாதுகாப்பைத் தந்துள்ளது. ஈரானும் அது போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடுகளும் தம் செல்வ வளத்தால் அந்நாட்டு மக்களைப் பாதுகாக்கின்றன.

இந்நாடுகளின் செல்வவளம் இந்நாட்டு மக்களின் தலைமுறை தலைமுறைக்குப் பாதுகாப்பாக விளங்குகிறது, எதிர்கால வளங்கள் பலவற்றிற்கும் செல்வக் குவியல் பாதுகாப்பாக உள்ளது. இதுதான் திருவள்ளுவரால் ‘எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து’ எனப்பட்டது.

அவ்வந் நாட்டுச் செவ்வங்களின் நிலைக்கு ஒரு விதிப்பு வைத்தால், அச்செல்வம் செப்பம் உடைய வழியில் வர வேண்டும். செப்பம் தவறி வந்த செல்வம் செப்பம் தவறியோர்களாலே பாதுகாப்பற்று அழிக்கப்படும். போரால் மட்டும் அன்று; அவ்வந்நாட்டு மக்களின் செப்பமில்லாத செயல்களாலும் பாதுகாப்பற்றதாகும். இதற்கு ஒர் உவமை கூறித் திருவள்ளுவர்

சலத்தால் (வஞ்சத்தால்) பொருள் செய்து

            ஏமார்த்தல் (பாதுகாத்தல்) பசுமட்

கலத்துள் நீர்பெய்து இரீதியற்று”(660)

என்றார்.

எனவே, திருவள்ளுவர் குறித்த ‘செல்வத்தால் பாதுகாப்பு’ (இருவகையிலும்) இக்கால உலக அரசுகளால் கண்காணும் காட்சியாக வெளிப்படுகின்றது. இது பொருளிய அறிவியலின் குறியாகும்.

செல்வம் பாதுகாப்புத் தருவது. அது போன்று அது பாதுகாக்கப்பட வேண்டியதும் ஆகும். செல்வத்தைப் பேணிப் பாதுகாப்பது போன்று வேறு பலவும் பாதுகாக்கப்படவேண்டும் என்பார் திருவள்ளுவர். அவற்றுள் ‘அடக்கம்’ ஒன்று,

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

            (ஏனெனில்)

அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு(122)

இக்குறளில் உயிர்க்கு ஒப்பில்லாத செல்வம் ‘அடக்கம்’ என்றார். எனவே, செல்வம் போன்று அடக்கமும் ஓர் ஏமம் ஆகிறது.

அடக்கம்‘ ஏமம் ஆவதைத் திருவள்ளுவர் ஓர் உவமையுடன்,

ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து“(126)

என்று விளக்கினார். இதில் ‘அடக்க’லை ‘ஏமாப்பு’ என்றார்.

அடக்கம்‘ வேறு. ‘அடக்கல்‘ வேறுஆனாலும்இரண்டும் தொடர்புடையவை. ‘அடக்கம்‘ தானே அடங்குவது. ‘அடக்கல்‘ தானே அடங்காமல் அவா எழும்போது அடக்கிக் கொள்தல்.

ஆமை இயல்பாகவே நான்கு கால்களையும் ஒரு தலையையும் உள்ளே – ஓர் ஓட்டிற்குள்ளே வைத்திருத்தல் ‘அடக்கம்’. அடக்காமல் வெளியே நீட்டி ஒரு பகை தோன்றும்போது உள்ளே இழுத்துக் கொள்ளுதல் ‘அடக்கல்.’

இங்குத் திருவள்ளுவர் ‘அடக்கல்’ என்பதை வற்புறுத்துகிறார்.

இக்கால உளவியலில் ‘அடக்கல்’ (Repression) என்பது ஒரு துறை. இதனை ஆராய்ந்தவர் ஆஃச்திரிய நாட்டறிஞர் சிக்மாண்டு பிராய்டு (Sigmund Freud) என்பார். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் உளப்பகுப்பியல் (Psycho-analyses) என்னும் ஓர் இயலைப் புதிதாக நிறுவினார். இவ்வாய்வில் ‘அடக்கல்’ ஒன்று, இவர் கருத்தின் படி ‘அடக்கல்’ என்பது பல்வகை மனப்போராட்டங்களால் விளைவது. அவற்றுள் இரண்டை இன்றியமையாதனவாகக் குறிப்பர்.

1. ‘தனியொருவனின் இயல்பான அவாவிற்கும் அவனின் நேர்மையான உணர்ச்சிக்கும் நேரும் மனப் போராட்டத்தால் விளையும் அடக்கல்.’

2. ‘தனியொருவனின் அவாவிற்கும் மக்கள் மரபு பற்றிய எண்ணத்திற்கும் நேரும் மனப்போராட்டத்தால் விளையும் அடக்கல்.’

இவையிரண்டையும் ஆமை உவமையாக்கப்பெற்ற குறளில் காண்கின்றோம்.

1. தனியொருவன் தன் அவா எழும்போது அவனின் உள்ளடக்கமான நேர்மை என்னும் உணர்ச்சி தடுக்கிறது. இரண்டிற்கும் போராட்டம். நேர்மை, அவாவை அடக்கல் செய்கிறது. இது ஆமை இயல்பாகவே அடங்கி இருக்கும் அடக்கல் போன்றது.

2. தனியொருவன் தன் ஐந்து பொறிகளில் எழும் அவாவினை அடக்காமல் எழுப்புவான். அப்போது அவனுக்குள்ளேயே தன்னைச் சூழ்ந்த குமுகாய மரபு என்னும் ஒழுக்க உணர்வு அவாவினைத் தடுக்கும். இரண்டிற்கும் ஒரு போராட்டம் நிகழும். அவன் அவாவைக் குமுகாய மரபு அடக்கும். இது ஆமையின் பார்வையில் தோன்றிய பகையால் உறுப்புக்களை அடக்கல் செய்வது போன்றது.

இவ்வாறாக இக்கால ‘உளப்படுப்பியலைக் குறளில் காண்கின்றோம்.

அடுத்து, “எழுமையும் ஏமாப்பு உடைத்து” (398) என்றதிலும் இன்றைய ‘உளப்படுப்பியல்’ கருத்து பொதித்துள்ளது.

சிக்மாண்டு பிராய்டு.

முதற் பருவமாகிய குழந்தைக்கும் உடலுறவு ஊக்கம் இயல்பாக உண்டு. (இயல்பாகவே இதனை அடக்கலில் கொள்வதால்) இக்குழந்தைக்கு ஆளுமை (Personality)உருவாகும்’ என்று கண்டறிந்தார்.

இவ்வுளப்பகுப்பியலில் ‘அடக்கல்’ ஒருதுறை.

ஐந்தடக்கல ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து”

என்றதில்,

ஒரு பருவத்தில் அஃதாவது குழந்தைப் பருவத்தில் இயல்பான ‘அடக்கல்’ அமையும். குழந்தையால் இவ்வடக்கல் அறியப்படாதது. இவ்வடக்கலே முதுமை வரை ஏழு பருவத்திற்கும் ஆளுமையாக நிற்கும். ஏழாவது பருவம் வரை இந்த ஆளுமை ஏமாப்பு ஆகும்’

இவ்வாறு பொருள் பொதிந்த இக்குறளால் அக்காலத் திருவள்ளுவரின் இக்கால உளப்பகுப்பியல் அடக்கல்’ புலனாகின்றது. எனவே திருவள்ளுவ உளப்பகுப்பியலாம் ‘அடக்கல்’ ஏமம் ஆகிறது.

அடக்கம் கல்வியாளர்க்கு அமைந்தால் கல்விக்குச் சிறப்பு என்பதை,

கற்று அடக்கல் ஆற்றுவான்” (139) என்பதால் காட்டினார். இவ்வாறு காட்டிய தொடர்பாலும் மேலே கண்ட ‘அடக்கல்’ பற்றிய ஒருமை எழுமை என்னும் தொடர்பாலும் அடுத்துக் கல்வி ஏமத்தைக் காண நேர்கின்றது.

இடையில் ஒருமை, எழுமை பற்றிய ஒரு குறிப்பு. உரையாசிரியர்கள் ஒரு பிறப்பு, ஏழு பிறப்பு என்று பல இடங்களில் பொருள் கொண்டனர். ஏழு பிறப்பு திருவள்ளுவர் ஏற்றதே, ஏழு ஆயினும் அடக்கம், கல்வி பற்றிய கருத்தில் ஒரு (முதல்) பருவம், ஏழு (இறுதி) பருவம் என்று கொள்வதே அறிவார்ந்த பொருளாகும்.

ஏழு பருவங்களாவன :

பெண் : பேதைபெதும்பைமங்கைமடந்தைஅரிவைதெரிவைபேரிளம் பெண்.

ஆண் : சிறுவன், மீனி, மறலோன், திறவோன், காளை, விடலை, முதுமகன்-இவ்வாறு ‘அவிநயம்’ என்னும் பழைய இலக்கணநூல் குறிக்கிறது.

(தொடரும்)