(வெருளி நோய்கள் 71-75 தொடர்ச்சி)

76.) 216 ஆம் எண் வெருளி – Diakosioihekkaidekaphobia
216 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 216 ஆம் எண் வெருளி.

முறையே diakosioi, hekkaideka ஆகிய கிரேக்கச் சொற்கள் எண் 200, எண் 16 ஆகியவற்றைக் குறிக்கும்.

666 ஆம் எண் வெருளி உள்ளோர் 6x6x6 = 216 என்பதால் 216 ஆம் எண்குறித்தும் பேரச்சம் கொள்வர்.
00

77.) 22 ஆம் எண் வெருளி – Vigintiduphobia
22 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 22 ஆம் எண் வெருளி.

20 ஐக் குறிக்கும் கிரேக்கச் சொல் viginti 2 ஐக் குறிக்கும் கிரேக்கச் சொல் dyo. 22 என்பது வாழ்க்கை மரத்துடன்(Tree of Life) தொடர்புடையது எனக் கருதுகின்றனர். எண் 22 இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என அஞ்சுவோர் உள்ளனர். இதனால் 22 குறித்த பெருங்கவலையும் பேரச்சமும் உருவாகின்றன. எண் ஆருடத்தில் 22 எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல எனக் கூறப்படுவதை நம்புவதால் 22 கண்டு அஞ்சுவோர் உள்ளனர்.
00

78.) 23 ஆம் எண் வெருளி – Eikositriophobia
23 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 23 ஆம் எண் வெருளி.

eikosi என்னும் கிரேக்கச் சொல் 20ஐயும் trio என்னும் கிரேக்கச் சொல் மூன்றையும் குறிக்கும்.
பெரும்பாலான நிகழ்வுகள் எண் 23 உடன் நேரடியாகத் தொடர்புடையன என்று எண்ணுவோர் உள்ளனர். 13 ஆம் எண்ணிற்கு அடுத்துப் பேரச்ச எண்ணாக 23 ஐக்கருதுகின்றனர்.
கப்பல் நேர்ச்சி ஒன்றில் அதன் தலைவர் கிளார்க்கு என்பவர் இறந்ததாகவும் அதன்பின் அவர் கப்பலைச்செலுத்திய நாளில் இருந்து ஒவ்வோ் 23 ஆவது ஆண்டில் ஒருவர் இறந்ததாகவும் புதின எழுத்தாளர் வில்லியம் பாரோ (William S. Burroughs) கூறியதை நம்புவோர் 23 ஆம் எண் மீது பேரச்சம் கொள்கின்றனர். பறத்தி எண் 23 நேர்ச்சிக்குள்ளாகியது. அதன் தலைமை வலவன்( ) பெரும் கிளார்க்கு என்பதுதான். எனவே, 23 ஆம் எண் கொண்ட எந்த ஊர்தி அல்லது வானூர்தி அல்லது கப்பலில் பயணம் செய்ய அஞ்சுவோர் உள்ளனர்.23 ஆம் அகவையில் வாழ்வு முடிந்துவிடும் என்று பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்.
00

79.) 250 ஆம் எண் வெருளி – Diakosioipentekontaphobia
250 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 250 ஆம் எண் வெருளி.

diakosioi = 200; pentekonta = 50.

சீனர்கள் எண் 250ஐத் தீப்பேறு எண்ணாகக் கருதுகின்றனர். மண்டரின் மொழியில் இந்த எண் அர் பாய் ஊ (er bai wu எனக் குறிக்கப்பெற்று AR-BUY-OO) என உச்சரிக்கப்படுகிறது. இதன் பொருள் அறிவு முடம் என்பதாகும். தொடக்கத்தில் சீனாவில் 1000 செப்புக்காசு என்பது தரப்படுத்தப்பட்ட அளவாக இருந்த பொழுது 250 என்பதைத் தாழ்வாக எண்ணினர். இதன் தொடர்ச்சியாக 250 என்பதை இகழ் மிகு சொல்லாகவும் அவமதிப்பாகவும் எண்ணினர். இதனால் வணிக வானூர்தி எண் 250ஐ 280 ஆக மாற்றினர். 2000 ஆண்டுகளாக 250ஆம் எண் குறித்த பேரச்சம் உள்ளதால் இதற்குக் காரணமாகச் சீனாவில் 4 கதைகளைக் கூறுகின்றனர். அவற்றின் அடிப்படையில் 250 தீயூழ் எண்ணாகவும் துன்பம் விளைவிக்கக் கூடியதாகவும் கருதிப் பேரச்சம் கொள்கின்றனர்.
00

80.) 26 ஆம் எண் வெருளி – Eikosihexaphobia / triphobia / triophobia
26 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 26 ஆம் எண் வெருளி.

எண் ஆரூடப்படி 26 சேர்க்கைகளாலும் கூட்டுவணிகம், சூது ஆகியவற்றாலும் பேரிடர் தரும். இதன் கூட்டு எண் 8. இது சனியின் எண்ணாகக் கருதப்பட்டுப் பல துன்பங்கள் விளையும் என எண்ணுகின்றனர். இந்த எண் மீது பேரச்சம் கொள்வோர் 26 மீதும் பேரச்சம் கொள்வர்.

கிரேக்கத்தில் eikosi எண் 20 ஐக் (“twenty”) குறிக்கும், hexa எண் 6 ஐக் குறிக்கும்.

13 ஆம் எண்ணைத் தீயூழ் எண்ணாகக் கருதுவதால் அதன் இரட்டிப்பு மதிப்பான26 அதைவிடப் பெருந்தீங்கிழைக்கும் என நம்புகின்றனர். பல துயர நிகழ்வுகள் 26இல் நடைபெற்றதை எண்ணிப்பார்த்தும் 26 மீது பேரச்சம் கொள்கின்றனர். திசம்பர் 26 இல் தமிழ்நாட்டில் நிகழ்ந்த பன்னூறாயிரம் உயிர்களைக் காவு வாங்கிய பெருங்கடல்கோள்(சுனாமி), சீன நிலநடுக்கம்(கன்சு), ஈரான் நிலநடுக்கம்(பாம்) முதலான துன்பியல் நிகழ்வுகள் 26 அன்றுதான் நடைபெற்றுள்ளன.கிரகட்சு எரிமலை வெடிப்பு போன்றவையும் நடந்த நாள் 26. எனவே, 26இல் நடைபெற்ற வரலாற்றுத் துன்ப நிகழ்வுகைளத் தொகுத்துச் சிலர் 26 என்பது குறித்தப்பேரச்சத்தை விளைவித்து வருகின்றனர். சிலருக்கு 26 ஆம் நாள் நிகழ்வுகளைக்கேட்கவே பேரச்சம் வரும்.
00

(தொடரும் )