(வெருளி நோய்கள் 96 -100 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் : 21; 34; 39; 64.; விடுபாடுகள்
21. ‘எல்’ /’ L’ எழுத்து வெருளி – Lambdaphobia
‘எல்’ / ‘L’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எல்’ /’ L’ எழுத்து வெருளி.
வண்டி ஓட்டும் பயிற்சி மேற்கொள்பவர்கள் அதன் அடையாளமாக ‘எல்’(L) என்னும் பயிலுநர்(Learner) பலகை மாட்டி ஓட்டுவர். பயிலுநர் பலகையைக் கண்டு சாலையில் செல்லும் பிறருக்கும் அச்சம் வந்து அதனால் ‘எல்/L’ எழுத்து மேல் பேரச்சம் வருவதும் இயற்கைதான்.
+++
34. ‘சிறுக்கி’ /’bitch’ சொல் – Mugouphobia
‘சிறுக்கி’/’bitch’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘சிறுக்கி’ /’bitch’ சொல் வெருளி.
bitch என்னும் சொல் பொதுவாக நாய், ஓநாய், நரி முதலியவற்றில் ஆனினத்தைக் குறிக்கும். எனினும் கொச்சை வழக்கில் பரத்தமைத் தரகர், கட்டாய வன்முறையால் தற்பால் உறவு கொள்ளும் ஆடவர், இழிவானர் முதலிய பொருள்களையும் குறிக்கும். எனவே, இச்சொல் மீது காரணமற்ற வெறுப்பும் மிகையான பேரச்சமும் கொள்கின்றனர்.
++
39. ‘பறிதல்’ / ‘fart’ சொல் வெருளி – Fongpiphobia
‘பறிதல்’ / ‘fart’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் பறிதல் / ‘fart’ சொல் வெருளி.
பறிதல் என்னும் சொல்லை இங்கே கையாண்டாலும் உண்மையில் இதனைக் குறிக்கும் குகரத்தில் தொடங்கும் ஈரெழுத்து சொல் கண்டே பெரிதும் அச்சம் கொள்கின்றனர். சொல்லைச் சொல்லும் பொழுதே தீய நாற்றம் அவர்களை ஒட்டிக் கொள்கிறது.
காண்க: பறி வெருளி(Flatuphobia/Flatulophobia/ Fortophobia/ Ventignophobia/ Malventophobia)
+++
64. 13 ஆம் எண் வெருளி – Triskaidekaphobia / Terdekaphobia
பதின்மூன்றாம் எண் அல்லது தொடர்பானவை மீது வரும் தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் 13 ஆம் எண் வெருளி.
பதின்மூன்றாம் எண் மீதுள்ள அச்சத்தால் அறைகளுக்கு அந்த எண்ணைக் குறிக்காமல் 14 ஐக் குறிப்பர். அல்லது 12 அ எனக் குறிப்பர். எழுத்துச் சேர்க்கை 13 எண்ணில் வருமாறு பெயர் சூட்ட மாட்டார்கள்.
13 ஆம் நாள் தேர்வு அல்லது குறிப்பிடத் தகுந்த நாள் வந்தது எனில் தோல்வி, பேரிடர் முதலியவை வரும் எனப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி குரோவரைக் குற்றவாளி ஒருவன் கத்தியால் குத்திவிட்டான். அதனால், அவரை உடனே, தில்லி மருத்துவமனையில் சேர்த்தனர். நீதிபதி கண்விழித்ததும் அந்த அறை எண் 13 என அறிந்து பெருங்கூச்சல் போட்டார். 13 தனக்கு இராசியில்லா எண், 13 ஆம் நாளன்றுதான் கத்தியால் குத்தப்பட்டேன், அன்று உசாவிய – விசாரித்த – வழக்கு எண் 13, எனவே நான் பிழைக்கவேண்டுமென்றால் உடனே அறையை மாற்றுங்கள் என்று கத்தினார். உடனே வேறு அறைக்கு மாற்ற இயலாததால் அந்த அறை எண்ணை 12 அ என மாற்றினர். அதன் பின்னரே அமைதியானார்.
பிரித்தானிய அரச குடும்பத்தில் இரண்டாம் எலிசபெத்தின் தங்கை இளவரசி 21.08.1930 இல் பிறந்தார். அன்றைக்குப் பிறப்பைப் பதிந்தால் வரிசை எண்13 என வந்தது. எனவே, அன்றைக்குப்பதியாமல் பிறிதொரு நாள்பதிந்தனர்.
1965 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசி எலிசபெத்து செருமனிச்சுற்றுப்பயணத்தின் பொழுது தூயிசுபருகு (Duisburg)என்னும் தொடர் வண்டி நிலையத்திற்குச் சென்றிருந்தார. அவர் செல்ல வேண்டிய தொடரி 13 ஆம் எண் நடைமேடையில் இருந்து புறப்பட இருந்தது. ஆனால் அதில் ஏறுவதற்கு மறுத்துவிட்டார்.
பின் அந்தத் தொடரியை வேறு நடைபாதையில் இருந்து இயக்கினர். அதன்பின்னரே அமைதியடைந்து அதில் பயணம் மேற்கொண்டார்.
13 ஆம் எண் அச்சத்தைப் போக்குவதற்குப் பகுத்தறிவாதிகள் அவ்வப்பொழுது முயன்றும் போதிய பயனில்லை. சான்றாக 13.1.1882 இல் 13 பகுத்தறிவாளர்கள் நியூயார்க்கு நகரில் 13 ஆவது சங்கம் என ஒரு சங்கத்தை நிறுவினர்.விடுதி ஒன்றின் 13 ஆம் எண் அறையில் 8.13 இற்கு விழாவைத் தொடங்கி 13.00 மணிக்கு முடித்தனர். உறுபப்பினர் ஆண்டுக்கட்டணம் 1.3 தாலர் வாணாள் கட்டணம் 13 தாலர் ஒவ்வொரு திங்கள் 13 ஆம் நாளும் 13 பேரும் கூடி விருந்துண்டனர். 1300 உறுப்பினர்களைச் சேர்த்தனர். இணைவுச்சங்கங்களில் இருந்து 13.13 தாலர் கட்டணம் பெற்றனர்.
இயேசு 12 சீடர்களுடன் உண்ணும்பொழுது 13 ஆவதாக உண்டார். அதனால்தான் காட்டிக் கொடுக்கப்பட்டுச் சிலுவையிலறையப்பட்டார் என்று நம்பும் கிறிததுவர்கள் பலர் 13 ஐ மரண எண்ணாகக் கருதுகின்றனர்.
13 ஆம் எண்ணை நம்பிக்கை எண்ணாக எண்ணுவோரும் உள்ளனர்.
கிரேக்கத்தில் treiskaideka = 13; treis =3; kai=உம்; deka=10.
00
65. 13ஆம் நாள் வெள்ளி வெருளி – Paraskevidekatriaphobia / Paraskavedekatriaphobia/ Friggatriskaidekaphobia
பதின்மூன்றாம் நாளன்று வெள்ளி வந்தால் அது கண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்வது பதின்மூன்றுடன் வெள்ளிவெருளி.
வெள்ளி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 29 இடங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் வெள்ளி மாழையையும், சிறுபான்மை வெள்ளிக் கோளையும் குறிக்கும் வகையிலேயே காணலாம். வெள்ளிக் கோளால் அமைந்த நாளே வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை அன்று பதின்மூன்றாம் நாள் அமையும் பொழுது வரும் பேரச்சமும், பிற கிழமையில் வரும் பதின்மூன்றாம் நாள் குறித்த பேரச்சமும் உள்ளன.
வெள்ளிக்கிழமையை நல்ல நாளாகக் கருதுவோரும் உள்ளனர். அவர்களில் சிலர், வெள்ளிக்கிழமையும 13ஆம் நாளும் இணைந்து வந்தால் தமக்குத் தீங்கு வரும் என்று தேவையற்ற பேரச்சம் கொள்வர். ஐரோப்பியர்களிடம் இந்த மூட நம்பிக்கை மிகுதியாக உள்ளது. அதனைப் பின்பற்றி நம் நாடடிலும் இவ்வாறு பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
Paraskevஅ என்னும் பழங்கிரேக்கச்சொல்லின் பொருள் வெள்ளிக்கிழமை dekatreஅs என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் பதின்மூன்று
வட செருமானிய மொழியான பழம் நோர்சில்(Old Norse) Frigga என்பது வெள்ளிக்கிழமை என்ற பெயர் சூட்டப்பட்ட நோர்சு தேவதை. பழங்கிரேக்கத்தில் treîs என்றால் 3, ka என்றால் உம், தெக்கா என்றால் 10 (அஃதாவது 3உம் 10உம், எனவே 13)
00
++
(தொடரும் )
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment