(வெருளி நோய்கள் 166 -170 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 171-175
- அண்மையர் வெருளி – sedsocophobia
தவறானவர் அடுத்து இருப்பதாகப் பேரச்சம் கொள்வது அண்மையர் வெருளி.
நகரும் படிக்கட்டு அல்லது பொது இடங்களில் அடுத்து அமர்ந்திருப்பவர் தவறானவர் அல்லது தீங்கானவர் எனப் பேரச்சம் கொள்வர். யாரைப்பார்த்தாலும் ஐயம் ஏற்படுவது போன்றதுதான் இதுவும்.
அண்டையர் வெருளி என்பது வீட்டிற்கு அருகே குடி இருப்பவர்களைப் பற்றிய பேரச்சம். அண்மையர் வெருளி என்பது நமக்கு அருகில் இருப்பவர்களைப் பற்றிய பேரச்சம்.
காண்க: அண்டையர் வெருளி – Geitophobia
00
- அதக்கு வெருளி – Chiclephobia
வாயில் உண்பிசினை அதக்குதல்(chewing) அல்லது அதுக்குதல் -மெல்லுதல் – தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அதக்கு வெருளி.
நாகவாற்றி மொழி (Nahuatl) உணவுப்பொருளில் கலக்கும் இயற்கைப் பிசினைக் குறிக்கும் சொல்லில் இருந்து உருவானது Chicle. அதக்குத்தீனி/அதுக்குத்தீனி(chewing gum) முதலானவற்றை அசைபோடுவது குறித்த பேரச்சத்தைக் குறிக்கிறது.
அதக்குதல் அல்லது அதுக்குதல் என்றால் வாயில் மெல்லுதல் எனப் பொருள். முதலில் தன்மையின் அடிப்படையில் உண்பிசின் வெருளி எனக் குறித்திருந்தேன். இருப்பினும் விழுங்கி உண்பதற்குரியதல்ல என்பதால், செயல் அடிப்படையில் குறிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் அதக்கு வெருளி எனக் குறித்துள்ளேன்.
சவை என்றாலும் மெல்லுதல் என்றால்தான் பொருள். என்றாலும் சபை, அவை, கூட்டம் என்றும் பொருள்கள் உள்ளன.
00
173. அதள் வெருளி-Doraphobia
விலங்குத் தோல்(leather) மீதான அளவுகடந்த பேரச்சமே அதள் வெருளி.
விலங்குத் தோலால் அல்லது தோல் முடியால்(fur) நோய் ஏற்படும், பெருந்துன்பம் நிகழும் என்று அவற்றிற்கான வாய்ப்பு இல்லாத பொழுதும் தேவையற்று அஞ்சுவது அதள் வெருளி.
சிறு பருவத்தில் விலங்கின் தோல் தொடர்பாகக் கேட்ட கதைகளால் அஞ்சி அதுவே நாளடைவில் பேரச்சமாக வளர்ந்து அதள் வெருளியாவதும் உண்டு.
தோல் அல்லது தோல் முடி குறித்த ஒவ்வாமைபற்றித் தீவிரமாகச் சிந்தித்து வெருளி நோயாக மாறும் வாய்ப்பும் உள்ளது.
அதள் என்பது விலங்கின் தோலினைக் குறிக்கும். எனவே skin= தோல், leathier=அதள் என வேறுபடுத்திப் பயன்படுத்தலாம்.
dora என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் தோல்.
காண்க: தோரா வெருளி – Doraphobia
00
174. அதிரடி இசை வெருளி – Rokkuphobia
அதிரடி இசை(rock music) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அதிரடி இசை வெருளி.
அதிரடி இசையால் ஒலி மாசு ஏற்படும், மன அழுத்தம் உண்டாகும் என்றெல்லாம் கவலைப்பட்டு அதிரடி இசை மீது சிலர் பேரச்சம் கொள்கின்றனர்.
00
175. அதிரடித் திரைப்பட வெருளி – Actiophobia
அதிரடித் திரைப்படம்(Action film) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அதிரடித் திரைப்பட வெருளி.
அதிரடி இசைபோன்று அதிரடித் திரைப்படம் மீதும் ஒலி மாசு ஏற்படும், மன அழுத்தம் உண்டாகும் வன்முறைக் காட்சிகளால் மன நலம் பாதிக்கப்படும் என்றெல்லாம் கவலைப்பட்டு அதிரடித் திரைப்படம் சிலர் பேரச்சம் கொள்கின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment