(வெருளி நோய்கள் 181 -185 : தொடர்ச்சி).
வெருளி நோய்கள் 186 -190
186. அமில வெருளி – Acidophobia
அமிலத் தன்மை மீதான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் அமில வெருளி.
பயிரியலில் அமிலமண்ணில் வளரும் சில பயிர்களின் பொறுக்காத் தன்மையைக் குறிப்பது. இதைப்போன்ற மக்களின் பேரச்சத்தைக் குறிப்பது அமில வெருளி.
காதல் தோல்வி, ஒருதலைக்காதல், பழிக்குப் பழி போன்றவற்றால் அமிலத்தை முகத்தில் வீசும் கொடும் பழக்கம் பரவி வருகிறது. இதனாலும் அமிலம் என்றாலே தேவையின்றி அஞ்சுவோர் உள்ளனர்.
00
187. அமெரிக்க வெருளி – Americanophobia
அமெரிக்கா தொடர்பான வெறுப்பும் பேரச்சமும் அமெரிக்க வெருளி.
அமெரிக்கக் கண்டம், ஐக்கிய அமெரிக்க நாடுகள், அமரிக்க நாகரிகம், அமெரிக்கப் பண்பாடு,அமெரிக்கப் பொருள்கள், அமெரிக்க அரசியல் கொள்கை, அமெரிக்க மக்கள் என அமெரிக்கா தொடர்பானவற்றின் மீது அளவுகடந்த வெறுப்பு கொள்வோர் உள்ளனர். பொதுவுடைமைக் கருத்து சார்ந்தோர் மட்டுமல்ல, பிற கருத்து உடையோர்களிடமும் சில வகைக் கட்சி அல்லது இயக்கத்தினரிடமும் இவ்வெருளியைக் காணலாம். அமெரிக்க வணிகத்தால் பாதிக்கப்பட்டு அமரிக்க வெருளிக்கு ஆளாவோர் உள்ளனர்.
00
188. அமேசான் வெருளி – Amazonphobia
அமேசான் நிறுவனம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அமேசான் வெருளி.
00
.
189. அமைதி வெருளி-Sedatephobia
அமைதிச் சூழலில் உருவாகும் தேவையற்ற அச்சமே அமைதி வெருளி.
அமைதி ஆயிரம் சொற்களை உணர்த்தும் என்பர். ஆனால் அமைதியான சூழலே சிலருக்குத் தேவையற்ற சிந்தனைகளுக்கு வழி வகுத்து அச்சம் ஏற்படுத்தும். புயலுக்குப் பின்தான் அமைதி என்பர். ஆனால், அமைதியான சூழலே சிலருக்குப் பேரிடர் வரப்போகிறது என எண்ணச்செய்து மனத்தில் கலவரத்தை உண்டு பண்ணிப் பேரச்சத்திற்குத் தள்ளிவிடும். தனிமைச் சூழல் அமைதியைத் தருவதால் அதுவே பேரச்சம் தரவும் வாய்ப்பாகிவிடுகிறது.
sedate என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அமைதி அல்லது உறக்கம் அல்லது இறப்பு.
00
190. அம்மண வெருளி -Dishabiliophobia/Gymnophobia / Nudophobia/Nudiphobia
அம்மணம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அம்மண வெருளி.
அம்மணமாக இருப்பது அல்லது தன்னுடைய அம்மண நிலையைப் பிறர் பார்ப்பது பிறரின் அம்மண நிலையைப் பார்ப்பது தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் கொண்டிருப்பர்.
gymnos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடுப்பற்ற எனப் பொருள்.
(gymnasion என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடற்பயிற்சிக்கான இடம் எனப் பொருள். gymnasein என்றால் உடையின்றிப் பயிற்சி எனப் பொருள்.)
ஆடையிலி வெருளி(Dishabiliophobia), உடுப்பின்மை(நிருவாண) வெருளி (Gymnophobia), அம்மண வெருளி(Nudophobia) எனத் தனித்தனியாகக் கூறுவதை விட அம்மண வெருளி என்றே சொல்லலாம். (நான் அவ்வாறுதான் தனித்தனியே முதலில் குறிப்பிட்டிருந்தேன்.)
ஆடை அவிழ்ப்பு வெருளி(exuerphobia) என்பது மருத்துவ நோக்கில் ஆடையை அவிழ்க்கச் சொல்வது குறித்தது.
dis என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பிரி எனப்பொருள். habil என்னும் இலத்தீன் சொல்லிற்கு ஆடை எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment