(வெருளி நோய்கள் 76 -80 தொடர்ச்சி)

81.) 3 ஆம் எண் வெருளி – Triskaphobia
3 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 3ஆம் எண் வெருளி.
கிரேக்கத்திலும் இலத்தீனிலும் tri என்பது 3 ஐக் குறிக்கும்.
3 என்பது தீய விளைவை எச்சரிக்கும் வரையறுக்கப்பட்ட எண் என எண்ணுகின்றனர். எடுத்துக்காட்டாக, நெஞ்சகத்தில் 3 தாக்குதல் வரை வரும், நீரில் மூழ்குபவர் 3 முறை தண்ணீருக்கு மேலே வருவர் என்பனவற்றைக் குறிப்பிடலாம். எனவே, பாதிக்கப்படுவோர் 3 ஆம்நேர்வு வருவதைத் தவிர்ப்பர். இருப்பினும் 3 தீமை பயனப்பனவாக உள்ள மூடநம்பிக்கையர் மிகுதி உள்ளனர். மூவர் உள்ள படத்தில் நடுவில் உள்ளவர் விரைவில் இறப்பார் என்ற நம்பிக்கை உள்ளவர் உள்ளனர். ஒரே தீப்பெட்டியில் அல்லது பற்றவைப்பில்(lighter) இருந்து புகைச்சுருட்டைப்பற்ற வைத்தால் மூன்றாவதாகப்பற்ற வைப்பவருக்குத் துன்பம் வரும். மூவராகப் பற்ற வைப்பதால் மூவருக்குமே கேடு நேரும் என எண்ணுவர். இந்தியாவில் ஆரிய நம்பிக்கைகளால் மூவராகப் புறப்பட்டுச் சென்றால் அச்செயல் உருப்படாது, திருமாணமாகாத ஆடவர் மூவர் ஒரே வீட்டில் இருக்கக் கூடாது, கைம்பெண் மூவர் ஒரே குடும்பத்தில் இருக்கக் கூடாது என்பனபோன்ற மூடநம்பிக்கைகள் பரவி 3ஆம் எண் மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
82.) 30 ஆம் எண் வெருளி – Trigintiphobia
30 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம்30 ஆம் எண் வெருளி.
எதிர்காலப் பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல என எண் ஆரூடத்தில் 30 ஆம் எண் குறித்துக் கூறப்படுகிறது. எனவே, 30 ஆம் எண் குறித்துப் பேரச்சம் கொள்வோர் உருவாகுகின்றனர். முப்பதின் கூட்டுத்தொகை 3 என்பதால் 3இன் மீது அச்சம் கொள்வோருக்கு 30 ஆம் எண் மீதும் பேரச்சம் வருகிறது.
முப்பதாம் நாள் என்பது மாதத்தின் கடைசிநாள் அல்லது கடைசிக்கு முந்தைய நாள். எனவே, கையிருப்பு கரைந்து பணத்திண்டாட்டம் ஏற்படும் நாளாக ஆகிறது. இதனால் 30 ஐக் கண்டு அஞ்சுவோரும் உள்ளனர்.
ஒன்றிலே இருந்து இருபது வரைக்கும்
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் – தேதி
ஒன்றிலே இருந்து – சம்பளத் தேதி
ஒன்றிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் – இருபத்
தொன்றிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்

என முதல் தேதி என்னும் திரைப்படத்தில் உடுமலை நாராயணகவியின் பாடலைக் கலைவாணர் என்.எசு.கிருட்டிணன் பாடுவார்.
மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு 30 என்பது கவலை தரக்கூடியதாக அமைவது நடைமுறை.
00
83.) 300 ஆம் எண் வெருளி – Tricentumphobia
300 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் வெருளி.
300 என்பது தேவதை எண்ணாகக் கருதப்பட்டுப் பலராலும் விரும்ப்படுகிறது. எனினும் இதன் கூட்டு எண் 3இன் அடிப்படையில் இந்த எண் மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
84.) 333 ஆம் எண் வெருளி – Triakosioitriakontatriophobia
333 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 333 ஆம் எண் வெருளி.
கிரேக்கத்தில் triakosioi = 300; triakonta = 30; trio = 3; மூன்றும் சேர்ந்து = 333
பொதுவாகப் பேயின் எண்ணாக அஞ்சப்படும் எண் 666 இல் பாதி என்பதாலேயே பலருக்குப் பேரச்சம் வரும். எண் 3 மூன்று முறை வருவதாலும் 3 X 111 என அமைவதாலும் அச்சம் கொள்வோர் உள்ளனர். காலை 3.33 மணிக்குப் பேயின் ஆதிக்கம் இருக்கும் என்றும் அப்பொழுது அது வந்து தாக்கும் என்றும் பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்.
00
85.) 39 ஆம் எண் வெருளி – Triakontenneaphobia
39 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம்39 ஆம் எண் வெருளி.
கிரேக்கத்தில் triakonta = 30, ennea = 9. மொத்தம் 39.
எண் ஆரூடத்தின்படி 36 பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல எனக் கூறுப்படுவதால் இந்த எண் மீதான பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
மிகவும் அஞ்சத்தக்கதாகக் கருதப்படும் 13இன் மடங்காக இருப்பதால் 39 மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர். கிரேக்கத்தில் இந்த எண் மொழி மாற்றத்தில்(morda-gow) இறந்த பசு என்னும் பொருள் தருகிறது. எனவே, மூடநம்பிக்கையில் 39 குறித்துப் பேரச்சம் கொள்கின்றனர்.
சில நிகழ்வுகளால் 39 பரத்தமையின் குறியீடாகவும் துப்பாக்கிச் சூட்டின் அடையாளமாகவும் சாபமாகும் கருதப்படுகின்றது. இவற்றை விரிப்பின் பெருகும். ஆஃபுகானில் 39 ஆம் எண்மீதான அச்சம் உள்ளோர், 40இற்கு ஒன்று குறைந்த அல்லது 40 ஐ எட்ட ஒன்று உள்ள எண் என்றே குறிக்கப்பெறுகிறது. அகவையை இப்படித்தான் குறிக்கின்றனர்.
00

(தொடரும் )