(வெருளி நோய்கள் 176 -180 : தொடர்ச்சி)

அந்துப்பூச்சி மீதான அளவுகடந்த பேரச்சம் அந்துப்பூச்சி வெருளி.
அந்துப்பூச்சி/விட்டில் பூச்சி(Moth) என்பது பட்டாம்பூச்சி வகையை ஒத்தது. முதலில் இதனைப் பட்டாம்பூச்சி வெருளியில் சேர்த்திருந்தேன். அதைவிடத் தனியாகச் சேர்ப்பது நன்று என்பதால் இப்பொழுது தனியாகக் குறிப்பிட்டுள்ளேன்.
motte என்னும் செருமானியச் சொல்லின் பொருள் அந்துப்பூச்சி.
00

தந்தைவழி தாத்தா / அப்பப்பா தொடர்பான அளவு கடந்த பேரச்சம் அப்பப்பா வெருளி.
தந்தையின் தந்தையை ஐயா என்றும் அழைப்பர். ஆனால், அது மதிப்புச் சொல்லாகக் கருதப்படும் என்பதால் குறிக்கவில்லை.
00

தந்தை வழி பாட்டி / அப்பாத்தாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் அப்பாத்தாள் வெருளி.
00

நெடுநேரம் உட்கார்ந்திருப்பது தொடர்பான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் அமர்வு வெருளி.
உட்கார்வதால் வலி ஏற்படுவது போன்றவற்றால், பொதுவாக மூத்தோர்களுக்கு இவ்வெருளி வருகிறது. சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வகுப்பறையில் அமர்வது பிடிக்காமல் அமர்வு வெருளியாகிறது.
சிலருக்கு- அதிலும் குறிப்பாக முதியோருக்கு – நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது பிடிக்காது. ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது இயலாமையாகப்படும். எனவே உட்கார்ந்து கொண்டே இருப்பது எரிச்சலைத் தரும்.இளையோர் போல் எழுந்துநடமாட விரும்புவார்கள். ஆனால், அதற்கும் பலருக்கு இயலாது.
கீழே உட்கார் என்னும் பொருள்கொண்ட kathizein என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து இச்சொல் உருவானது.
00

அப்பத்துண்டு(crumb) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அப்பத்துண்டு வெருளி
அப்பத்துண்டு அல்லது இதுபோன்ற உணவுத் துண்டுகள் உண்ணும்பொழுது தொண்டையில் சிக்கி விடும் என்பதுபோன்ற பயம் சிலருக்கு ஏற்படுகின்றது. இதனால் உணவுத் துண்டுகளைப் பார்த்தாலே காரணமற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
தேவாலயத்தில் வழங்கும் அப்பத்துண்டை எண்ணியும் இதனைத் தூய ஆவியாகக் கருதியும் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00