(வெருளி நோய்கள் 186 -190 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 191 -195
191. அம்மம்மா வெருளி – Waizuphobia
தாய்வழி பாட்டி/அம்மம்மா தொடர்பான அளவு கடந்த பேரச்சம் அம்மம்மா வெருளி
00
192. அம்மைத்தடுப்பூசி வெருளி- Vaccinophobia
அம்மைத் தடுப்பூசி தொடர்பான பேரச்சம் அம்மைத்தடுப்பூசி வெருளி
தடுப்பூசி போடல், அம்மை குத்தல், அம்மை குத்துதல், அம்மைத்தடுப்பூசி குத்துதல், அம்மைப்பால் குத்துதல் எனப் பலவகையிலும் அம்மைநோய்த் தடுப்பிற்கான ஊசி குத்துதல் குறிக்கப் பெறுகிறது. ஊசி குத்தினால் வலிக்கும் என அஞ்சுவோர் உள்ளனர். இதுபோல் தடுப்பூசி போட்டுக் கொண்டால் காய்ச்சல் வரும் என அஞ்சுவோரும் உள்ளனர்.
சிறுவர்களிடம் மட்டுமல்லாமல், பெரியவர்களிடமும் அம்மைத் தடுப்பூசி வெருளி உள்ளது.
00
193. அயர்ச்சி வெருளி- Copophobia/Kopophobia
அயர்ச்சியின் பொழுது ஏற்படும் தேவையற்ற பேரச்சம் அயர்ச்சி வெருளி.
அயர்ச்சி, களைப்பு அல்லது சோர்வு ஏற்பட்டால் நோய் ஏற்படும், உடலுக்கு முடியாமல் போகும், படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாமல் போய்விடும், இவற்றால் மேற்கொண்டு வேலைபார்க்க முடியாமல் துன்பப்பட நேரிடும் என்று கற்பனைகளை வளர்த்துக் கொண்டு பேரச்சம் கொள்வர்.
களைப்பால் வேலையைக் குறித்த காலத்தில் முடிக்க முடியாது, குறிப்பிட்ட நேரத்திற்குள் படிக்க முடியாது குறித்த நேரத்தில் முடிக்க முடியாமையால் வரவேண்டிய பணமோ வெற்றியோ வராது போய்விடும் களைப்பால் உடல் நலக் கேடு ஏற்படும் மருத்துவச் செலவு ஏற்படும் என்று களைப்பு தொடர்பாகப் பேரச்சம் கொள்வர்.
kopo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அயர்ச்சி/சோர்வு/ களைப்பு. இக் களைப்பு உடலளவிலும் இருக்கலாம், மன அளவிலும் இருக்கலாம்.
00
194. அயலவர் வெருளி – Peregrinophobia
அறிமுகமில்லா அயலவர்களைப்பற்றிய காரணமற்ற பேரச்சம் அயலவர் வெருளி.
அயலவர் வெருளி(Peregrinophobia) என்பது முற்றிலும் புதியவர்களைப் பற்றிய வெருளி. அயல்நாட்டினராக இல்லாமல் உள்நாட்டினராக இருந்தாலும் புதியவராக இருந்தால் பேரச்சம் கொள்வது.
00
195. அயலார் வெருளி-Xenophobia/Zenophobia
அயலாரைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் அயலார் வெருளி
அயல்(27), அயலிலாட்டி(3), அயலிற்பெண்டிர்(1), அயலார்(2), அயலோர்(3), அயல(9), அயலது(25) ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களி்ல் பயன்படுத்தப்பட்டுள்ளன. போர்க்காலத்தில் அயல் நாட்டார், அயல்வீரர்கள் வரும்பொழுது நாடு தோல்வியைத் தழுவினால் அயலவர் மீது அச்சம் கொண்டுள்ளனர்.
அயல் நாட்டினர், அயல் மொழியினர், அயல் இனத்தவர், அயல் ஊரினர், உறவும் நட்புமாய் அமையாத அயலார் என அயலார்கள் மீது சிலர் தேவையற்ற பேரச்சம் கொள்வர். இந்தியாவின் வடக்கே அசாம் முதலான மாநிலங்களில் அயலார் வெருளி ஏற்பட்டுப் பெருஞ்சிக்கல்கள் எழுந்துள்ளன என நாமறிவோம்.
அயலவர் வெருளி(Peregrinophobia) காண்க.
xenos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அயல்நாட்டினர்/முன்பின் அறியாதவர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment