(வெருளி நோய்கள் 151 -155 : தொடர்ச்சி)

அடுப்பு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அடுப்பு வெருளி.

அடுப்புத் துளைகள் பால் பொங்கி வடிதல் போன்றவற்றால் அடைபட்டுக்கொண்டு எரி வளி சீராக வராமல் இடையூறுகள் எற்படும், தீ நேர்ச்சி(தீ விபத்து) ஏற்படும், தீ அளவைக் குறைக்கவும் கூட்டவும் உள்ள இயக்கி நல்ல முறையில் இயங்காமல் தொல்லை கொடுப்பதால் ஏற்படும் தீங்குகள் முதலியன பற்றிய தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.

எரிவளி அடுப்பு என்று இல்லை. மண்ணெண்ணெய் அடுப்பு, கரி அடுப்பு, விறகு அடுப்பு முதலியவற்றைப் பயன்படுத்தும் பொழுதும் அளவுகடந்த பேரச்சம் வருவதும் இயல்பே!

00

அடை(pancake) உணவு வகை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அடை வெருளி.

அடை என்பது இங்கே  அதுபோன்ற முட்டை-பால் அடை, தோசை, ஊத்தப்பம், முதலியனவற்றையும் குறிக்கும்.

அடை செரிமானம் ஆகுமா, ஆகாதா, ஒவ்வாமை வருமா என்றெல்லாம் அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.

00

சிறிய இடத்தில் இருக்கும் பொழுது அடைத்துப் பூட்டி வைக்கப்படுவோம் என்று ஏற்படும் தேவையற்ற பேரச்சம் அடைதாழ் வெருளி.

குளியலறை போன்ற சிறிய அறைக்குள் இருக்கும் பொழுது தாழ்ப்பாள் திறக்க முடியாமல் உள்ளேயே இருக்க வேண்டுமோ,  யாரும் கதவைப் பூட்டி விட்டுச் சென்று விடுவரோ, தானாகக் கதவு பூட்டிக் கொள்ளுமோ என்பனபோன்ற பேரச்சம் வரலாம்.

சிலர் மின்ஏணிக்குள்/ஏணறைக்குள்(Lift) தனியாக நுழைந்ததும் கதவு திறக்கமுடியாமல் போய்விடுமோ என்று பேரச்சம் கொள்வர்.

அடைத்து வைக்கப்படும் நிலை குறித்த அளவுகடந்த பேரச்சம் சுற்றடைப்பு வெருளி(Clithrophobia) என முதலில் தனியாகக் குறித்திருந்தேன். எனினும் தாழ் போட்டு அடைக்கப்பட்டிருப்பதும் சுற்றியும் அடைக்கப்பட்டிருப்பதும் ஒன்று என்பதால் தனியாக வேறுபடுத்த வேண்டா என்பதால் இத்துடன் இணைத்துள்ளேன்.

cleithro என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் மூடு அல்லது அடை.

cleisio என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சுற்றியடைக்கப்பட்ட (பகுதி)

00

உள்ளறை/மறைவறை/ஒதுக்கறை/ உள்ளகப் பேழை முதலான அடைபகுதிகள் (Closets)குறித்த அளவில்லாப் பேரச்சம் அடைபகுதி வெருளி.

வைக்கப்படும் பொருள்களுக்கேற்ப அடைபகுதிகள் பல வகைப்படும்.

மறைவிட வெருளி என முதலில் குறித்திருந்தேன். மறைவிடம் என்பது கழிவறையையும் குறிக்கும். இவ்வெருளியில் அதுவும் அடங்கும். ஆனால், அது மட்டுமல்ல.  எனவே, எனக் குறித்துள்ளேன்.

00

வெளியேற முடியாத அளவில் அறைக்குள் இருக்கும்பொழுது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் அடைப்பிட வெருளி.

அடைதாழ் வெருளிக்கும் இதற்கும்  வேறுபாடு உள்ளது. ஊடுகதிர்க்கருவி முதலான மருத்துவக் கருவி வழி ஆய்வுகளுக்காக ஆய்வறையில் இருக்கும்பொழுது ஆய்வாளர் வெளியில் இருப்பார். அப்பொழுது ஏற்படும் தேவையற்ற அச்சம். சிற்றிட வெருளி என்றும் சொல்லலாம்.

கதவு பூட்டப்பட்ட ஊர்திகள், பலகணி/காற்றமாடங்கள் இல்லாத அறைகள், தானியங்கித் தாழ்ப்பாள் உள்ள உணவக அறைகள் என இவை போன்றவற்றில் மாட்டிக் கொள்ளும் பொழுது அல்லது மாட்டிக்கொள்ளுவோமோ என எண்ணும் பொழுது வரும் பேரச்சம் அடைதாழ் வெருளி.

claustrum  என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அடைப்பு.

00