வெருளி அறிவியல்  –  4
அகவை வெருளி
அச்ச வெருளி
அச்சச்சூழல் வெருளி
அடைதாழ் வெருளி
அடைதாழ் வெருளி
அடைப்பிட வெருளி
அடைப்பிட வெருளி
அண்மையர் வெருளி
அண்மையர் வெருளி

  1. அகவை வெருளி – senecophobia
அகவை(வயது) கூடுவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அகவை வெருளி.  
ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று போகும் என்பது இயற்கை. எனினும் சிலருக்கு அகவை கூடுவது தோற்றத்தில் முதுமையைக் காட்டும் எனக் கவலை தருவதாக அமைகிறது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அகவை கூடினால் வாய்ப்பு குறையும் என்ற அச்சம் வரும். இவற்றால் இத்தகையோர் அகவை கூடுவது குறித்த தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.பெண்களுக்கு அகவை கூடுவது குறித்த அச்சம் இருப்பதாகக் கருதுவர். ஆனால் ஆண்களுக்கும் அகவை கூடுவது குறித்த அச்சம் உள்ளது.
senec என்னும் இலத்தீன் சொல்லிற்கு அகவையாதல் (வயதாதல்) எனப் பொருள்.
இவ்வெருளி உள்ளவர்கள் முதுமை வெருளிக்கும்(Gerontophobia) ஆளாவார்கள்.
00
  1. அச்ச வெருளி-Fearaphobia
அச்சம் பற்றிய பேரச்சம் வருவதே அச்ச வெருளி.
பலருக்கு எதைக்கண்டாவது அச்சம் வரும். ஆனால் சிலருக்கு அச்சம் குறித்தே பேரச்சம் வரும். இந்தப் பொருள் அல்லது சூழல் அல்லது படம் அல்லது படக்காட்சி அல்லது நிறம் அல்லது ஆள் அல்லது புத்தகம் அல்லது கதை அச்சத்தை விளைவிக்கலாம் எனக் கருதிப் பேரச்சம் கொள்வர். அச்சந்தரும் செய்திகளைப் படித்தாலும் கேட்டாலும் நாடகம் அல்லது தொலைக்காட்சி அல்லது திரைக்காட்சிகளில் பார்த்தாலும் பேரச்சம் வரும்.
தொடரி, பேருந்து, வானூர்திகளில் பயணம் மேற்கொள்ளும் பொழுது எதிரில் அல்லது உடன் அமர்ந்திருப்பவர் கடத்திவிடுவாரோ என்பது போன்ற  அச்சத்திற்கும் ஆளாவர். (அச்சநோய் வரும் என அஞ்சுவது வெருள்நோய் வெருளி. அது வேறு வகை.)
00
  1. அச்சச்சூழல் வெருளி-Counterphobia
அச்சம் ஏற்படுவதற்கான சூழல் உருவானால் அதனைத் தவிர்க்க முயலாமல், அளவுகடந்து அஞ்சுவது அச்சச்சூழல்வெருளி.
counter என்னும் இலத்தீன் சொல்லிற்கு எதிர் எனப் பொருள். counterphobia என்னும் பொழுது அச்சத்திற்கு எதிரான அச்சம் எனப் பொருளாகிறது. அச்சச்சூழலுக்கு எதிரான அச்சம் என்ற பொருளில் குறிக்கின்றனர்.அஞ்சுவதற்குரிய சூழல் நேர்ந்தால் அதனை எதிர்கொள்ளாமல் பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வதை இது குறிக்கிறது.
இஃதும் அச்சச்சூழலின் ஒரு பகுதிதான்.
00
  1. அடைதாழ் வெருளி-Cleithrophobia/Cleisiophobia
சிறிய இடத்தில் இருக்கும் பொழுது அடைத்துப் பூட்டி வைக்கப்படுவோம் என்று ஏற்படும் தேவையற்ற பேரச்சம் அடைதாழ் வெருளி.
குளியலறை போன்ற சிறிய அறைக்குள் இருக்கும் பொழுது தாழ்ப்பாள் திறக்க முடியாமல் உள்ளேயே இருக்க வேண்டுமோ அல்லது யாரும் கதவைப் பூட்டி விட்டுச் சென்று விடுவரோ அல்லது தானாகக் கதவு பூட்டிக் கொள்ளுமோ என்ற பேரச்சம் வரலாம்.
சிலர் மின்ஏணிக்குள் / ஏணறைக்குள் தனியாக நுழைந்ததும் கதவு திறக்கமுடியாமல் போய்விடுமோ என்று பேரச்சம் கொள்வர்.
cleithro என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் மூடு அல்லது அடை.
00
  1. அடைப்பிட வெருளி-Claustrophobia
வெளியேற முடியாத அளவில் அறைக்குள் இருக்கும்பொழுது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் அடைப்பிட வெருளி.
அடைதாழ் வெருளிக்கும் இதற்கும்  வேறுபாடு உள்ளது. ஊடுகதிர்க்கருவி முதலான மருத்துவக் கருவி வழி ஆய்வுகளுக்காக ஆய்வறையில் இருக்கும்பொழுது ஆய்வாளர் வெளியில் இருப்பார். அப்பொழுது ஏற்படும் தேவையற்ற அச்சம்.
கதவு பூட்டப்பட்ட ஊர்திகள், பலகணி/காற்றமாடங்கள் இல்லாத அறைகள், தானியங்கித் தாழ்ப்பாள் உள்ள உணவக அறைகள் என இவை போன்றவற்றில் மாட்டிக் கொள்ளும் பொழுது அல்லது மாட்டிக்கொள்ளுவோமோ என எண்ணும் பொழுது வரும் பேரச்சம்.
claustrum  என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அடைப்பு.
00
  1. அண்மையர் வெருளி – sedsocophobia
தவறானவர் அடுத்து இருப்பதாகப் பேரச்சம் கொள்வது அண்மையர் வெருளி.
நகரும் படிக்கட்டு அல்லது பொது இடங்களில் அடுத்து அமர்ந்திருப்பவர் தவறானவர் அல்லது தீங்கானவர் எனப் பேரச்சம் கொள்வர். யாரைப்பார்த்தாலும் ஐயம் ஏற்படுவது போன்றதுதான் இதுவும்.
sedsoco என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் மீண்டும் தொடங்குதல் என்பதுதான் நேர் பொருள். அடுத்த வரிசைத் தொடக்கமாக அண்மையில் உள்ளவரைக் குறிக்கிறது.

00
(தொடரும்)