Friday, July 26, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், இ. அறிவியல்அறிமுகச்சொல்

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், ஆ.திருவள்ளுவரின் பட்டறிவுப் பேச்சு-தொடர்ச்சி)

இவ்வாறு தனித்தன்மையுடன் வாழ்வியல் குறிப்புகளைக் கொண்ட இக்குறட்பாக்கள் மூன்றும் மற்றொரு வியப்பையும் உள்ளடக்கியனவாகும்.

அதுதான் இக்காலம் வளர்ந்து விரிந்துள்ள அறிவியலின் குறிப்பும் பொருந்தியுள்ளமையாகும். முன்னே கண்ட பக்கம் 25, 26 அறிவியல் விளக்கத்தையும் இக்குறட்பாக்களின் கருத்தேற்றத்தையும் பொருந்திக்காண வாய்ப்புள்ளது. மூன்று குறட்பாக்களும் சொல்லமைப்பிலும், கருத்தமைப்பிலும் பட்டறிவிலும், ஒத்துள்ளமையால் ஒரு குறளைக் கொண்டே பொருத்திக் காணலாம். அவற்றிலும் ”பெறும் அவற்றுள்” (61) என்னும் குறட் கருத்தைப் பொருத்திக் காணலாம்.

குறட்கருத்துபுதுமைக்கால அறிவியல் விளக்கம்
யாம் அறிவதுநிகழ்ச்சிகளைக் காண்டல்
பெறும் அவற்றுள்தொகுத்தல், தொடர்பு காணல்
அறிவது, அறிவறிந்தகருதல்
மக்கட்மேறு அல்லபிறஆய்வின் முடிவு.

புதுமைக்கால அறிவியலைக் கருதிப்பார்த்துத் திருவள்ளுவர் கருத்தளிக்கவில்லைதான். என்றாலும் சாலப் பொருந்தும் அளவு அமைந்திருப்பதைக் காண்கின்றோம். தமிழ் மண்ணில் அறிவியலின் ஊற்றுகள் பண்டைக் காலத்தே கண் திறந்தமைக்குப் பல சான்றுகளை இலக்கியங்கள் தருகின்றன. அவற்றிற்கெல்லாம் அடித்தளமான கோட்பாட்டைத் திருவள்ளுவத்தில் காண்கின்றோம். இங்கு காணப்பட்டவை கொண்டு மட்டும் திருவள்ளுவரை ‘அறிவியற் கவிஞர்’ என்று கூறி நிறைவு பெற்றுவிட வேண்டியதில்லை. மேலும் மேலும் சான்றுகள் திருக் குறளில் கிடைக்கின்றன அறிவியலின் இலக்கணம் கூறுதல் போன்றும், அறிவியலின் சான்று காட்டும் இலக்கியங்களாகவும் பல கிடைக்கின்றன.

முதலில் அறிவியலின் இலக்கணம் கூறுவது போன்ற சான்று காணத்தக்கது.

அறிவியலின் இலக்கணச் சான்று என்பது இங்கு ஒரு சொல்லாகத் திருவள்ளுவரால் ஆக்கப் பெற்றுள்ளது. அறிவியல் என்பதே அறிவின் இலக்கணம், அறிவின் துறை’ என்பனவல்லவா பொருள்? இவ்வொரு சொல் அவர்தம் பட்டறிவால் எழுந்த மூன்று குறட்பாக்களில் முதலில் அமைந்த மக்கட்பேற்றுக் குறளில் உள்ளது.

அறிவறிந்த”

மக்களை ஆணாகவோ, பெண்ணாகவோ பெற்றுவிடும் ஒன்றே பெறுமவற்றுள் பெரும்பேறு ஆகிவிடாது. தலை, கை, கால் முதலிய உறுப்புகளின் நிறைவுடன் குழந்தையைப் பெறுவது மட்டும் இங்குக் குறிக்கப்படவில்லை. எத்தகைய மக்கள் என்றும் சுட்டப்பட்டுள்ளது. எத்தகைய மக்கள்? ஒர் அடைமொழி உள்ளது. “அறிவறிந்த மக்கள்” (61) ஆம் இந்த “அறிவறிந்த” என்னும் அடைமொழிச் சொல் ஆழ்ந்ததும் நுண்ணியதுமான கருத்துடன் அமைக்கப்பட்ட சொல் இச்சொல்லாட்சி திருக்குறளில் மூன்றே குறட்பாக்களில் தான் உள்ளது.

‘அறிவறிந்த’ என்னும் சொல்லின் பொருள்களாகக் காணப்பட்டவை பின்வருபவை :

“அறியவேண்டுவனவற்றை அறிதல்”இது பரிமேலழகர் கண்ட பொருள். கற்பதில் கற்க வேண்டியவை என்றும் காணவேண்டாதவை என்றும் கொள்ள வகை உண்டு. அதனால்தான் “கற்க கசடற கற்பவை” (391) என்றார். ஆனால், அறிவில் அறியவேண்டுவன, அறியவேண்டாதன என்றில்லை. ஏனென்றால் அறிவு ‘தீது ஓரிஇ, நன்றின்பால் உய்ப்பது”. (422) எனவே, அறிவு நன்மையைத்தான் தரும். இவ்வகையில் பரிமேலழகர் பொருள் பொருந்தாது.

“அறிவறிந்த கல்விச் செல்வமான பிள்ளை” என்றார் பரிதியார். கல்வி என்றாலே அறிவறியும் செயலுக்கு உரியதுதான். இது கொண்டு நோக்கினால் ’அறிவறிந்த’ என்றமை ஒரு சிறப்புக் கருத்துக்காக அமைக்கப்பட்டதாகக் கொள்ள வழியில்லை.

இவ்வாறே ’அறிவறிந்த’ என்னும் சொல்லமைந்த மற்றைய இரண்டு குறட்பாக்களுக்கும் பொருள் காணப்பட்டது.

ஆனால் காலிங்கர் மற்றொரு பொருளைக் குறித்துள்ளார். ”அறிவினை முழுதும் அறிந்து” என்றார். இவ் விளக்கம்- ‘அறிவினை அறிதல்’ என்னும் விளக்கம் அறிவியலை அண்டிப் பார்க்கிறது.

அறிவதுதான் அறிவு என்றாலும் ’அறிவையே. அறிவது-அதனையும் முழுமையாக அறிவது’ என்பது சற்று அழுத்தமான கருத்தைக் காட்டுகிறது.

அறிவில் நுண்ணிய அறிவு சிறந்தது. நுண்ணிய அறிவின் செயற்பாடு பெரும் ஆக்கத்தை விளைவிக்கும். அதனால்தான் ”அறிவு உடையார் ஆவது அறிவார்” (427) என்றார். ஆவதாகிய ஆக்கத்தை அதனினும் புத்தாக்கத்தை அறிவு தரின் அது நுண்ணறிவால் விளைந்த விளைச்சல்.

அத்தகைய அறிவின் செயற்பாட்டால் விளையும் ஆக்கத்தைக் கண்டறிவதுதான் அறிவாகும். இவ்விளக்கத்தின் அடக்கமாகத்தான் ’அறிவறிந்து‘ என்னும் சொல் ஆக்கப்பெற்றது.

எனவே, அறிவு அறிந்த என்பதற்கு ‘ஆக்கத்தைத் தரும் அறிவை அறிந்த’ என்பது பொருளாகும். இவ்வறிவுச் செயற்பாடுதான் ’அறிவியல்’ எனப்படுகின்றது.

இக்கருத்திற்கு உரமூட்டுகின்றது அடுத்தொரு குறள்:

செறிவறிந்த சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின் (123)

என்னும் குறளிலும் ‘அறிவறிந்து’ என்னும் சொல் அமைந்துள்ளது.

இக்கால அறிவியலின் விளைச்சல் ’செறிவறிந்த சீர்மையைப் பயப்பது’ என்பதை அறிவோம். புதிய கருத்துகள் செறிந்த சீர்மைகளே அறிவியலின் கண்டு பிடிப்புகள். இவ் வகையிலும் ‘அறிவறிந்த’ என்பது அறிவியலைக் குறிக்கும். இது அக்கால அறிவியலின் அடையாளச் சொல்லாகத் திருவள்ளுவரால் ஆக்கப் பெற்றுள்ளது. ”செறிவறிந்த சீர்மை” பெறுவதற்கும் ஒரு விதிப்பு வைத்துள்ளார் திருவள்ளுவர். அது “அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறுதல்”. இக்காலத்தும் அறிவியல் வல்லுநர் எவரும் தம் கண்டுபிடிப்பால் இறும்பூது எய்துவர். கண்டுபிடித்த முதல் உணர்ச்சியில் துள்ளியும் குதிக்கலாம். ஆனால் அக்கண்டுபிடிப்பை பயன்படுத்துவதன் நல்ல பண்பு நெறியாக அடக்கமே கொள்வர். அறிவியல் வல்லுநர்களின் வாழ்வியலைக் கூர்ந்து நோக்கினால் இந்த அடங்கும் உண்மை புலப்படும்.

எனவே, இரண்டாவதாக ’அறிவறிந்து’ அமைந்த இக்குறளும் இக்கால அறிவியற் பாங்கைக் குறித்துக் காட்டுவதாக உள்ளது.

பொறி என்றால்


மூன்றாவதாக,

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி” (618)

என்னும் குறள் ஒரு வகையில் அறிவியலுக்கு அணியாகின்றது. பொறியின்மை என்பதற்கு ‘விதி இல்லாமை’ என்றே பரிமேலழகர் முதலிய பலர் உரைகண்டனர். ‘நல்ல தலையெழுத்தில்லாமை பழியில்லை’ என்னும் பொருள்பட விதியைக் காட்டினர். மணக்குடவர் ‘ஆக்கம் இல்லாமை’ என்றார். ஆனால், பரிதியார் மட்டும் “மெய், வாய், கண், மூக்குச் செவி குறைந்தது பங்கமல்ல’’ என்றார். பொறி என்பதற்கு ‘ஐம்பொறி’ என்பதே உரிய பொருளாகும்.

திருவள்ளுவரும், “பொறிவாயில் ஐந்து’’ என்று ஐம்பொறிக்கே ‘பொறி’ என்னும் சொல்லைப் பெய்தார். மேலும் “கோள்இல் பொறிஇல் குணம்இலவே என்குணத்தான்” என்று ஐம்பொறியைக் குறித்தார். இவ்வைந்து பொறியும் தலையிலேயே அமைந்துள்ள குறிப்பையும் காண்கின்றோம். கண், வாய், செவி, மூக்கு நான்கொரு மெய்யின் ஒரு பகுதியும் தலையில் உள்ளமை அறிவோம்.

இவ்வகை ஐந்து பொறியில்லாமை பழிதான். பார்வையில்லாத கண்ணைக் கொண்டவன் குருடன் என்னும் பழிக்கு ஆளாவான். இதுபோன்றே கேட்கமுடியாத செவிடன், பேசமுடியாத ஊமையன்-நெறியாக மூச்சுவிட முடியாது. மணத்தைமோந்து பார்க்க முடியாத மூக்கரையன், உணர்வை உணரமுடியாது மரத்துப் போனவன் பழிக்கு ஆளாவான்.

ஆனால் “அறிவறிந்த ஆள்வினை இன்மைதான் பழி” ஆள்வினை இருந்தால் கண்பார்வையில்லாத குருடனும் வாழ்வில் சிறக்கலாம். நம்கால எலன் கெய்வர் முதல் இன்று நாட்டில் உலவும் உயர்ந்து திகழும் குருடர் பலர் பழி சொல்லப்படாதவர்கள். இது போன்றே ஆள்வினையால் மற்றையப் பொறிகள் இல்லாமல் உயர்ந்து பழியைப் புறங்கண்டோராக அறிகின்றோம்.

இக்குறள் இக்கருத்துகளுடன் இக்காலப் பொறி அறிவியல் முன்னேற்றத்தையும் குறிப்பாகக் காட்டுகிறது என்று வெளிப்படுத்தலாம்.

இக்காலம் ‘பொறி’ என்பது செயற்கையில் உருவாக்கப்பட்டு இயங்கும் எந்திரங்களைக் குறிக்கிறது. நம் உடல் உறுப்புக்குரிய சொல்லாகிய பொறி” என்னும் பெயர் இன்று இயங்கும் எந்திரங்களுக்கு எவ்வாறு ஆனது?

உடலின் ஐந்து பொறிகளும் தாம் இயங்கி மற்ற வற்றை இயங்க வைக்கின்றவை. கண், பார்வையால் தான் இயங்கி மாந்தனை நடமாடி இயங்க வைக்கின்றது. பிற உடற்பொறிகளும் இவ்வாறே. இவைபோன்று இயங்கி இயங்க வைத்ததால் எந்திரங்களும் பொறி என்று குறிக்கப்படுகின்றன.

மேலும் விரித்து நோக்கினால் இக்காலத்தில் காணப்பட்டுள்ள பொறிகள் அனைத்தும் உடலின் பொறிகள் இயங்கும் நுணுக்க த்தை வைத்தே காணப்பட்டவை என்பதை அறியலாம்

கண்ணின் இயக்கத்தைப் பார்த்து நிழற்படப் பொறி காணப்பட்டது: பலவகையாக வளர்ந்தது. காதின் ஒலிவாங்கும் இயக்கத்தை வைத்தே ஒலிவாங்கிகள்: வாயின் பேச்சு இயக்கத்தைக் கொண்டே ஒலிவிடுவான்கள், (Computer) மூளையின் இயக்கத்தை வைத்தே இன்று உலகில் உயர்ந்துவரும் கணிப்பொறிகள் என யாவும் உடற்பொறிகளின் ஈனல்களே.

இப்பொருத்தத்துடன் “பொறியின்மை யார்க்கும் பழி யன்று” என்னும் குறளைநுணுகி நோக்கினாலும் இக்காலப் பொறி வளர்ச்சியுடன் ஒப்பிட்டு நோக்கினாலும் பொறிகள் தாம் நாட்டின்-மாந்தரின் வாழ்வையே இயக்கி வாழ வைக்கின்றன என்பதை உணரலாம்.

இச்சமயத்தில் பொறியில்லாமை எந்தநாட்டிற்கும் பெரும்பழியாகும். மிதிவண்டி முதல் பீச்சிப்பாயும் வெடி ஊர்தி (இராக்கெட்) வரை பெறாத நாடு உலகில் பழி கொள்ளும் நாடாகும். ஆனால், பழியின்மை எதனால் உண்டாகும். ஆள்வினை என்னும் முயற்சியால்தான் உண்டாகின்றது. ஆள்வினையிலும் அறிவியல் அறிந்தஅறிவறிந்த ஆள்வினையால்தான் உண்டாகின்றது.

எனவே,

“பொறியின்மை” என்னும் குறள் தன் குறிப்புப் பொருளால் அறிவியலின் உள்ளீட்டைக் கொண்டதாகிறது.

இவ்வுள்ளிட்டுப் பொருளைப் பின்வருமாறு வெளிக்கொணரலாம்.

பொறியின்மைமின் ஊர்தி, வான் ஊர்தி, கணிப்பொறி முதலிய ஆக்கப் பொறிகள் இல்லாமை
யார்க்கும்உலகில் எந்த நாட்டிற்கும், மாந்தருக்கும் ! !! !!
பழி அன்றுகுறை ஆகாது
அறிவறிந்துஅறிவின் செயற்பாடாம் அறிவியலை அறிந்து
ஆள்வினை இன்மைமுயலாதிருத்தலே
பழிகுறையாகும்

பொருள்கொள்வதை வெறும் இலக்கிய பொருத்தமாக இவ்வாறு மட்டும் கருதக்கூடாது. காலச் சூழலின் வெளிப்பாடுகளைக் கணித்துக்கொண்டு நோக்கினால் இப்பொருள் படவும் திருவள்ளுவரின் குறட்பா கோடிட்டுக் காட்டுவதாகக் கொள்ள முடிகிறது.

இவ்வாறு எழுதுவதை இழுத்துப் பிடித்து வலிந்து பொருள் கொள்வதாகவும் கருதக்கூடாது. இக்கால வளர்ச்சிச் சூழலையும், திருவள்ளுவர் கால தொடக்கச் சூழலையும் பொருத்திப் பார்க்க வேண்டும். அந்நிலையில் அக்கால வடிப்பில் இவ்வாறு குறிப்பாகத்தான் அமைக்கப் பட்டது என்று கொள்வதே பொருந்தும்.

எனவே, மூன்று குறட்பாக்களிலும் அறிவறிந்த என்னும் அறிவியல் இலக்கணச் சொல் அமைந்து திருவள்ளுவரின் அறிவியற் பாங்கைக் குறிக்கின்றன.

இவற்றால் மட்டும் திருவள்ளுவர் அறிவியற் கவிஞர், என்று நிறைவாகச் சொல்ல இயலாது. சொன்னால் ‘காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டதாகும்.

இக்காலத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவாகப் பெருகியுள்ளன. நாளும் ஒரு புதுமையாக்கம் நிகழ்ந்து வருகிறது. இவற்றின் அடையாளங்கள் பலவற்றைத் திருக்குறளில் காண முடிகின்றது.

(தொடரும்)

Friday, July 19, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன்,ஆ.திருவள்ளுவரின் பட்டறிவுப் பேச்சு

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், திருவள்ளுவர் அறிவியற்கவிஞரா?-தொடரும்)

பட்டறிவு என்றால் என்ன பொருள்? ஒருவர் தம் வாழ்வில் கண்டும் கேட்டும், துய்த்தும் அவற்றில் ஆட்பட்டுக் கொண்ட அறிவையே (படு அறிவு) பட்டறிவு என்கிறோம். ‘பாடு பட்டுப் பெற்றேன்’ என்பதிலும் ‘பட்டபாடு பெரிது’ என்பதிலும் உள்ள சொற்களில் இப்பொருளைக் காண்கிறோம்.

“பட்டமும் கயிறுபோல் பறக்ககின்ற சீவனைப்
பட்டறிவினாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடா”
[1]

என்று சிவவாக்கியர் பாட்டில் இச்சொல்லை அதன்பொருட் குறிப்புடன் காண்கிறோம்.

பட்டறிவைப் புரிந்துகொள்ளப் பின்வரும் இரண்டு தொடர்கள் உதவும் :

1. ‘சீரகம் உடலுக்கு நலம் தரும்; நோயைத்
தடுக்கும்; போக்கும்.”

2. நான் அறிந்தவரை சீரகத்தைப் போன்று உடலுக்கு நலந்தந்து, நோயைத் தடுத்துப் போக்குவது வேறு ஒன்றும் இல்லை.

இரண்டு தொடர்களும் சீரகத்தின் நன்மையைக் காட்டு கின்றன. கருத்து ஒன்றுதான்; தொடர்கள் வேறுவேறு உத்திகளில் உள்ளன. முன்னதைவிடப் பின்தொடரில் கருத்தின் அழுத்தம் உள்ளது; உறுதி தெரிகிறது. காரணம், சொல்லுபவர் நான் அறிந்தவரை’ என்று தாம் பட்டு அறிந்ததைத் தெரிவிக்கிறார்.


யாம்

திருவள்ளுவப் பெருந்தகை வாழ்வியற் கருத்துக்களை 1330 குறட்பாக்களிலும் வழங்கியுள்ளார். அவர் சொல்லும் முறை சீரகம் பற்றி முதலில் கண்ட பொது முறையிலும் உள்ளது. இரண்டாவதாகக் கண்ட பட்டறிவு முறையிலும் பலப்பல குறட்பாக்கள் உள்ளன. பட்டறிவு பளிச்சென்று புலப்படுமாறு தன்னைச் சொல்லிக்கருத்தை வைத்துள்ளார். இவ்வகைக் குறட்பாக்கள் திருக்குறளில் மூன்றே மூன்று உள்ளன. அவை மூன்றிலும் தம்மைச் சொல்லிப்போம். “யாம்’ என்னும் சொல் உள்ளது. அவர் ஒரு தனித்தவராகத் தன்மை இடத்தில்தான் எழுதினார். ஆனால் தன் ஒருவனுக்குரிய நான்’ என்னும் சொல்லையோ, யான் என்னும் சொல்லையோ சொல்லவில்லை. இவை இரண்டும் ‘தான்’ என்னும் செருக்கைக் காட்டும் சொற்கள். திருவள்ளுவரும் யான் எனது என்னும் செருக்கு’ (346) என்று செருக்குக்கு உரியதாகப் பாடினார். எனவே, இவற்றை விடுத்து ‘யாம்’ என்னும் சொல்லால் பேசினார்.

‘யாம்’ என்னும் சொல் தன்மையில் பலரைக் குறிக்கும் பன்மைச்சொல். ஒருமைக்காகத் திருவள்ளுவர் பேசினார்.

தம் அறிவுப் பெருமிதத்தையோ, அருள் பெருமிதத்தையோ பேசுபவர் யாம்’ என்றே பேசுவர்.

“யாம் அவண் நின்றும் வருதும்”[2]

“இஃது யாம் இரந்த பரிசிலல்”
[3]

“யாம் இரப்பவை பொன்னும் பொருளும்
போகமும் அல்ல”
[4]

“படையமை மறவரும் உடையம் யாம்”
[5]

இவை போன்றவை பெருமிதம் காட்டுபவை. இப்பெருமிதப் பொருளைவிட,

கண்ணகி

“என் காற்சிலம்பு” என்று கூற

மன்னன் பாண்டியன்,

“யாம் உடைச்சிலம்பு”[6] என்றான். இந்த “யாம்” அரசுப் பேருமிதம். இக்காலத்து இதனை ஆங்கிலத்தில் (Royal We) என்பர்.

 திருவள்ளுவர்யாம்

இவற்றிற்கெல்லாம் அப்பால் தம் பட்டறிவின் உறுதிப் பாட்டையும், சொல்லும் கருத்தின் அழுத்தத்தையும் பொதியவைத்து ‘யாம்’ என்று பேசுவது திருவள்ளுவர் பேச்சு.

பெறுமவற்றுள் யாம்அறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே நல்ல பிற (61)


யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற (300)

மக்களே போல்வர் கயவர்அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில் (1071)

யாம் பட்டு அறிந்தவரை,

மக்கட்பேறு எல்லாப் பேற்றினும் சிறந்தது வாய்மையே பண்புகளில் சிறந்தது
கீழ்மக்கள் உருவத்தில் மாந்தராயினும்
இழிவில் ஒப்பில்லாதவர்

நேருக்குநேர் திருவள்ளுவர்

இவை இக்குறட்பாக்களின் கருத்துகள். இக்கருத்துகள் ‘யாம்’ என்று திருவள்ளுவர் தம்மைக் குறித்துச் சொல்லப்பட்டவை. இதனால் அவர் நம்முன் நேருக்கு நேர் நின்றுபேசுவதாக அமைந்துள்ளன.

யாம் அறிந்தவற்றுள்”,

யாம் மெய்யாக் கண்டவற்றுள்”,

“யாம் கண்டது” என்று அவரே பேசுவதால் அவர் பட்டு அறிந்ததை எழுதியுள்ளார் என்று கொள்ள வேண்டும். எனவே, இவை திருவள்ளுவரின் பட்டறிவுக் கருத்துகள்.

(‘யாம்’ என்னும் சொல் திருவள்ளுவரால் இம்மூன்றிடங்களில் மட்டுமன்றி மேலும் 10 இடங்களில் அமைந்துள்ளது. பொதுவாக 2 இடங்கள், (790, 844), தலைவன் பேச்சாக 3 (1111, 1123, 1329), தலைவி பேச்சாக 7 (1140, 1150, 1171, 1204, 1245, 1218, 1312) ஆக !3. இடங்களில் காண்கிறோம். இவை பிறர் பேசுவனவாகப் படர்க்கையில் அமைக்கப்பட்டவை).


தனித் தன்மையுள்ள குறட்பாக்கள்

முன்னர்க் காணப்பட்ட மூன்று குறட்பாக்களில் தான் திருவள்ளுவர் தம்மை முன்னிறுத்திப் பட்டறிவுடன் பேசினார். தம் பளிச்சிடும் பட்டறிவுடன் பேசும் இம்மூன்று குறட்பாக்களிலும் அமைந்த பிறசொற்களும், ஒத்துள்ளமை நோக்கத்தக்கது.

சொல்லொற்றுமை

மக்கட்பேறு                 வாய்மை              கயமை

பெறும் அவற்றுள்      கண்ட அவற்றுள்    அவரன்ன

யாம்                      யாம்                           யாம்

அறிவது                     கண்ட                    கண்டது

இல்லை                  இல்லை            இல்

அறிவறிந்த             எனைத்தொன்றும்      ஒப்பார்

அல்லபிற                அல்ல பிற (நல்ல பிற)  அன்ன

திருக்குறளில் பொதுவாகத் தனித்தனித் குறட்பாக்களில் அமைந்த சொற்களைக் கணக்கிட்டால் 8 முதல் 11 வரை அமைந்திருக்கக் காணலாம். இம்மூன்று குறட்பாக்களில் சொல்லாலும், கருத்தாலும், தொடர்பாலும் 7 சொற்கள் ஒத்துள்ளன.

‘யாம் என்று தம்மைக் குறிக்கும் சொல்லுடன் கருத் தொற்றுமையும், சொல்லொற்றுமையும் கொண்டு உள்ளதை நோக்கினால் திருவள்ளுவர் இம்மூன்றிலும் ஒருமித்த மனம் பற்றியுள்ளார் என்பதை அறியலாம்.

திருவள்ளுவர் தம்மை நம்முன் நிறுத்திப் பேசுவதாலும், அவை பட்டறிவின் வெளிப்பாடாக உள்ளமையாலும், குறளில் அமைந்த சொற்களின் ஒற்றுமையாலும் இம்மூன்று குறட்பாக்களும் முப்பாலாம் திருக்குறளில் தனித்தன்மை கொண்டவையாகின்றன. இவ்வாறு தனித் தன்மையில் திருவள்ளுவர் மனம் உவந்து பேசும் கருத்துக்கள் எவை? அவை உலகியலில் எப்பங்குக்கு உரியவை?

1.மக்கட்பேறுகுடும்ப வாழ்வியல்
2.வாய்மைஒழுக்க வாழ்வியல்
3.கயமைமக்கட் கூட்டமாம் குமுகாய வாழ்வியல்

உலகியல் வாழ்க்கை இம்மூன்றுள்ளும் அடங்கும் என்பதை விரித்துக் காண வேண்டியதில்லை.

(தொடரும்)

+++++

  1. சிவவாக்கியர் : சிவ : 203
  2. கடியலூர் உருத்திரங்கண்ணனார் : பெரும்பாணாற்றுப்படை: 28
  3. கபிலர் : புறநானூறு : 110-2
  4. கடுவன் இளவெயினனார் : பரிபாடல் : 7-18, 19
  5. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் : புறநானூறு : 72-5
  6. இளங்கோவடிகள் : சிலப்பதிகாரம், வழக்குரை காதை-67

Friday, July 12, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், திருவள்ளுவர் அறிவியற்கவிஞரா?

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 1. அ. அறிவியற் கவிஞர் திருவள்ளுவர்- தொடர்ச்சி)

‘அறிவியல் கவிஞரே’(?) என்னும் வினாவிற்கு விடை காணப் புகுமுன் ஒரு குறிப்பை எழுத வேண்டும். அக் குறிப்பு ஒரு நூலாசிரியன் தவறாது கொள்ள வேண்டிய நெறி பற்றியதாகும். அந்நெறி மொழி நெறி.

இந்நூலின் தொடக்கம் முதல் இதுவரையும் சான்றுகளின் அழுத்தமாகச் சொல் அமைப்புகள் காட்டப் பட்டுள்ளன. இனியும் அவ்வாறு மேற்கொள்ளப்படும்.

தமிழ்ச் சொல் கட்டுக்கோப்பான அமைப்புடையது. சொல்லின் மூலம் ஆணிவேர் போன்றது. அந்த ஆணி வேரில் முளைத்துக் கிளைக்கும் பொருள் மக்களின் வாழ்வு, மரபு, வரலாறு, நாட்டுநிலை முதலியவற்றிற்கு உதவக் கூடியது. புதிர்களாக வரும் கருத்துப் பூட்டகங்களைத் திறக்கும் திறவுகோல்கள் பண்டைத் தமிழ்ச் சொற்கள்.

நூலாசிரியனோ, பாடம் சொல்லும் ஆசிரியனோ தவறாது கொள்ள வேண்டிய நெறியாக, மேலைநாட்டு அறிஞர் சான் கிரகாம் (John Graham) என்பார் ஓர் ஆழ்ந்த நெறியை அறிவித்தார்.

“நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் உள்ளார்ந்த வாழ்க்கை உண்டு. அது அவர்தம் பொருள் பொதிந்த மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. அது வருங்கால மக்களின் அறிவிற்காகப் போற்றப்படுகிறது.

நாட்டு வரலாறு, பழக்க வழக்கம், ஒழுக்க நெறி ஆகியவற்றை மிகப் பழமையான இக் காலத்தில் வழக்கில் இல்லாத சொற்கள் கொண்டுள்ளன. அச் சொற்களினின்று வெளிப்படுத்தாத ஆசிரியன் மிகவும் தவறியவனாவான்” என்னும் விளக்கம் உரிய வழிகாட்டியாகத் தக்கது.

இவ்வறிஞரின் இக்கருத்து ‘ஆங்கிலச் சொல் நூல்’ (English Word Book) என்னும் ஆங்கில நூலில் உள்ளது. இவர் குறிப்பிடும் மொழிச் சொல் ஆங்கிலத்தையும் குறிப்பிடலாம். பொதுவாக எந்த மொழியையும் குறிப்பிடலாம். சில நூற்றாண்டுகள் வரலாற்றையே கொண்ட ஆங்கிலச் சொல்லுக்கும் இது பொருந்தும் என்றால், பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட தொன்மை நுண்மொழியாம் தமிழின் சொற்கள் எத்துணை ஆழமும், வரலாற்று அழுத்தமும் கொண்டனவாகும்?

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் மாணிக்கச் சுருக்கமாக,

“எழுத்தின் திறன்;
இச்சொற் பொருளின் அழுத்தம்”
[1]

என்றார். தமிழின் இன்சொல்லும் அதன் பொருள் அழுத்தமும் எத்துணையோ வரலாற்றுப் புதிர்களையும் வாழ்வியல் பூட்டகங்களையும் வெளிப்படுத்துவனவாகும். இதனை அடியொற்றிய இச்சிறு நூலில் எடுத்துக்கொண்ட கருத்திற்கு ஏற்பத் தமிழ் சொற்கள் மூல அமைப்புடனும், பொருளுடனும் உரிய இடங்களில் சான்றுகளாகக் காட்டப்படுகின்றன.

இனி அறிவியற் கவிஞரைக் காண்போம்:

‘அறிவு, இயல்’ என்னும் இரு சொற்களில் இயல்: என்பதற்கு முதற்பொருள்கள் இலக்கியம், இலக்கணம் என்பன. முத்தமிழில் ஒன்றாகிய ‘இயல் தமிழ்’ என்பது இலக்கியத்தையும் இலக்கணத்தையும் குறிப்பது. தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களில் 27 உட்பிரிவுகளைக் கொண்டது. இவற்றுள் 22 உட்பிரிவுகள் பிறப்பு இயல், மரபு இயல் என இயல்’ என்று அமைந்தவை. இங் கெல்லாம் ‘இயல்’ என்பது இலக்கணத்தைக் குறிக்கும்; இத்துடன் துறை என்னும் உட்பிரிவையும் குறிக்கும். திருக்குறளிலும் மூன்று பாடல்களில் 13 இயல்கள் உள்ளன. இவையும் இலக்கணம் என்றும், உட்பிரிவாம் துறை: என்றும் பொருள்படும்.

நீர்நிலையாம் குளத்திற்குள் இறங்குவதற்குப் பல துறைகள் இருக்கும். இது போன்று ஒரு தொகுப்புக் கருத்திற்கும் பல உட்பிரிவுகள் அமையும். இவ்வுட் பிரிவே துறை எனப்படும்.

‘அறிவியல்’ என்பது ஒரு துறை. வாழ்வியல் இயக்கத்திற்குத் துணை நிற்பது அறிவியல். இக்காலத்தில் உவகை அளாவி, வானத்தை அளாவி வளர்ந்துள்ளது. அனைத்திலும் மேம்பட்டு நிமிர்ந்து நிற்கிறது.

தமிழில் ‘அரசியல்’[2] ‘அமைச்சியல்’[3] எனும் சொல்லமைப்புக்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. இவற்றிற்கு அரசின் இலக்கணம்’, ‘அமைச்சின் இலக் கணம்’ எனப் பொருள். திருவள்ளுவர் ‘கண்ணோட்டத் துள்ளது உலகியல்’ (572) என்னும் குறளில் உலகியல்’ என்னும் சொல்லைப் படைத்துள்ளார். இதற்கு உலக நடைமுறை என்று பொருள். ‘வானியல் ஊனியல்’ என்னும் சொற்களை இடைக்காட்டுச் சித்தர் பாடவில் காண்கின்றோம். இவ்வாறு பல உள்ளன.

“அறிவியல்” என்னும் சொல் பழந்தமிழ் நூல்களில் இல்லை; இந்த நூற்றாண்டில் உருவான சொல் அறிவியல்’ ஆங்கிலத்தின் ‘Science என்பதற்கு ஆக்கப்பெற்ற சொல். ‘விஞ்ஞானம்’ என்பது வடசொல்.

தமிழில் ‘அறிவியல்’ என்னும் சொல் முற்கால நூல்களில் இல்லாமையால் அறிவியற் கருத்துக்கள் தமிழில் இல்லை’ என்று ஆகாது. தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் பல அறிவியற் கருத்துக்களைக் காண முடிகின்றது. திருவள்ளுவத்தில் அறிவியற் கருத்துக்கள் செறிந்துள்ளன.

தமிழில் ‘அளவை’ என்பது ஒரு துறை. இஃது

‘அளவையியல்’ எனத் தக்கது. தமிழில் ‘அளவை நூல்’ என்றொரு நூல் இருந்து மறைந்தது, பதிப்பரசர் உ. வே. சா. அவர்களும் இதனைக் குறித்தார்கள்.

‘அளவை நூல்’ என்பதற்கு ‘அறிவை அளக்கும் நூல்’ என்று பொருள். அறிவால் அறிவை அளப்பதாகும். அறிவால் நூற்கருத்துகளை அளந்தோர் தம் கருத்தை நிலைநாட்டக் கருத்துப் போரிட்டனர், அஃதாவது பட்டி மண்டபத்தில் சொற்போரிட்டனர். இப்போரில் தம்தம் பெருமையையும் பேச நேரும்; தம்மை வியந்து தருக்கியும் பேசினர். இவ்வாறு தருக்கொடு பேசுவது ‘தருக்கம்’ எனப்பட்டது. சிறுபஞ்ச மூலம் என்னும் நூலிலும்[4] இச் சொல்லைக் காண்கின்றோம், இவ்வாறு அளவை நூல், “தருக்க நூல்” என்றும் வழங்கப்பெற்றது. இந்த அளவையை ஆங்கிலத்தார் Logic என்றனர். வடநூலார் “வாத சாத்திரம்” என்றனர்.

அறிவை அளக்கும் ‘அளவையியல்’ சில படிகளைக் கொண்டது. தமிழறிஞர் காண்டல் அளவை; கருதல் அளவை என இரண்டு படிகளாகக் கண்டனர். வடநூலார் பத்து (வேதவியாசர்) என்றும், எட்டு (கிருதகோடி) என்றும், ஆறு (சைமினி) என்றும் பல வகையாகக் கொண் டனர். கெளதம புத்தர் காண்டல், கருதல்’ என்னும் இரண்டையே ஏற்றார். மணிமேகலைக் காப்பிய ஆசிரியர் சாத்தனார் இவற்றை விளக்கினார்.

திருவள்ளுவர்,

ஆற்றின் அளவு அறிந்து கற்க” (125) என்றார். இதில் ‘அளவு’ என்பது அளவையியல் நூலைக் குறிக்கும். ஏன் கற்கவேண்டும் (?) என்பதற்குத் திருவள்ளுவர்,

“அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல்” என்று காரணமும் சொன்னார். “அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல்” என்பது முன் கண்ட பட்டிமண்டபக் கருத்துப் போரைக் குறிக்கும்; தருக்கத்தைக் குறிக்கும். இது கருதியே உரையாசிரியர் பரிமேலழகரும் இப்பொருளே கொண்டார்.

‘அளவு’ என்னும் சொல் பொதுவில் எண்ணிக்கை முதலிய பல அளவுகளைக் குறிக்கும். ‘ஆற்றின் அளவு அறிந்து ஈக’ (477) என்பதில் இப்பொதுப்பொருள் உள்ளது.

மேலே கண்ட குறள் ‘கற்க’ என்றதாலும், ‘அவை அஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு’ என்றதாலும் கற்பதற்கும், மாற்றம் கொடுத்தற்கும் ‘அளவை நூல்’ என்பதே பொருந்துவது. பொதுவான அளவுப் பொருள் இங்குப் பொருந்தாது. ஏனெனில் கல்வி ‘கரையில’. கல்வி எண்ணிக்கை அளவில் அடங்காதது. ஆனால், எவற்றைக் கற்க வேண்டும் என்னும் அளவிற்கு உரியது. திருவள்ளுவர் ‘கசடறக் கற்பவை கற்க’ என்று ஒர் அளவு கூறினார். எனவே, ‘அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல் பொருட்டு அளவை நூலைக் கற்க வேண்டும்’ என்பதே பொருத்த மானது.

இந்த ‘அளவை’ என்பது காண்டல் அளவை, கருதல் அளவை என்னும் இரண்டு படிகளைக் கொண்டது என்று கண்டோம். இவற்றுள் காண்டல் கண்ணால் காண்டலையும், கருத்தால் காண்டலையும் குறிக்கும். ‘கருதல்’ என்பது கண்டதைக் கொண்டு அதன் தொடர்பில் உள்ளதைக் கருதி அளத்தலாகும். ‘புகை வருவதைக் கண்டுகொண்டு நெருப்பு இருக்கும்’ என்பது போன்று கருதி அறிதல் – ஊகித்தல் ‘கருதல் அளவை’யாகும்.

திருவள்ளுவர், ‘அளவு அறிந்து’ என்றதால்,

‘காண்டல் அளவை;
கருதல் அளவை’

எனும் இரண்டையும் குறித்துள்ளார் என்பதை நாம் கருத்தில் நிறுத்திக்கொண்டு, அறிவியல் கருத்தை அணுக வேண்டும்.

‘அறிவியல்’ என்பது அறிவைக் கொண்டு ஆய்ந்து உண்மையைக் கண்டு ஒரு முடிவிற்கு வருதல் ஆகும்.

இக்கால அறிவியல் வல்லுநர் அறிவியலுக்குப் பின் வரு மாறு விளக்கம் தந்தனர்.

‘உலக நிகழ்ச்சிகள் பல.
அவற்றைக் கூர்ந்து காணல்:
கண்டு ஒருங்கு சேர்த்தல்;
சேர்த்தவற்றை வகைப்படுத்தல்;
வகைப்படுத்தி அவற்றிடையே உள்ள
உள்ளார்ந்த தொடர்புகளை அறிதல்;
அறிந்தவற்றைக் கொண்டு அறியவேண்டிய
உண்மையைக் கருதிப் பார்த்தல்;
கண்டவற்றையும், கருதி அறிந்தவற்றையும் ஒழுங்கு செய்து முடிவு
 காணலாம் அறிவுச் செயலே ‘அறிவியல்’

இவற்றைச் சுருக்கமாகச் சொன்னால்,

நிகழ்ச்சிகளைக் காணல் – அவற்றைத் தொகுத்தல் – அவற்றுள் தொடர்பு காணல் – கருதல் – உண்மை முடிவு கொள்ளல் என அமையும்.

இவற்றிலுள்ள செயற்பாடுகளைக் கூர்ந்து பார்த்தால் காணல், கருதல் இரண்டுந்தாம் நிலைக்களமான செயற் பாடுகள். மற்றவை இவையிரண்டிற்கும் துணை செய்த பவை. இன்றியமையா நிலைக்களமான காவல். கருதல் இரண்டும் தமிழ் அளவையியலின் இரண்டு படிகள். திருவள்ளுவர் இவற்றின் அடக்கமாக “அளவறிந்து’ என்று ‘அளவை நூ’லைக் குறித்தமை இங்கு நினைவு கூரத் தக்கது.

மேலே விளக்கம் கூறப்பட்ட அறிவியல் இக்கால அறிவியல் வளர்ச்சியில் இரண்டு பாகுபாடுகளாகக் கொள்ளப்படுகிறது.

ஒன்று “பட்டறிவு அறிவியல்” (Experimental Science)
இரண்டு, “முறை அறிவியல்” (Methodological Science)

பட்டறிவு அறிவியல்–.⁠அறிவியல் அறிஞர் தாம் தம், பட்டறிவில் காணும் நிகழ்ச்சிகளையும் அவற்றை வைத்துத் தாம் கருதல் (ஊகம்)களையும் கொண்டு ஆராயும் அறிவியல். முறை அறிவியல் ⁠பட்டறிவில் கண்ட நிகழ்ச்சிகளை; கருதல்களைப் பெறுவதற்கு உதவும் அறிவியல்.

இரண்டாவதான ‘முறை அறிவியலுள் இன்றியமையாத துறைகள் கணக்கியல், அளவையியல் கோட்பாட்டியல் (Philosophy) என்பன.

இவை இக்கால அறிவியல் நுணுக்கங்கள், இந்நுணுக்கங்களின் மையமான ‘அளவையியல்’ பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவரால் குறிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் பெருகிவரும் நுணுக்கங்களின்படியும் திருவள்ளுவர் குறிப்பு அடங்கியுள்ளமை ஒத்துப்பார்த்து அறிதற்கு உரியது. ஒத்துப் பார்ப்பதால் உண்டாகும் அறிவு திருவள்ளுவர் அறிவியல் அறிஞர்’ என்பதை ஏற்பதாகும்.

இரண்டு பாகுபாடுகளில் முதலாவதாகக் கண்ட ‘பட்டறிவு அறிவியல்’ திருவள்ளுவர் குறட்பாக்களில் எவ்வாறு பொதிந்துள்ளது என்பதைக் காணவேண்டும்.

(தொடரும்)

+++++

  1. அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரம், உரைப்பாயிரம்.

2. மாங்குடி மருதனார், மதுரைக்காஞ்சி, 191.

3. பெருங்குன்றுார் கிழார்: பதிற்றுப்பத்து, பதிகம்-9-11.

4. காரியாசான், சிறுபஞ்சமூலம்: 91-1.