(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், திருவள்ளுவர் அறிவியற்கவிஞரா?-தொடரும்)
அறிவியல் திருவள்ளுவம்
ஆ. திருவள்ளுவரின் பட்டறிவுப் பேச்சு
பட்டறிவு என்றால் என்ன பொருள்? ஒருவர் தம் வாழ்வில் கண்டும் கேட்டும், துய்த்தும் அவற்றில் ஆட்பட்டுக் கொண்ட அறிவையே (படு அறிவு) பட்டறிவு என்கிறோம். ‘பாடு பட்டுப் பெற்றேன்’ என்பதிலும் ‘பட்டபாடு பெரிது’ என்பதிலும் உள்ள சொற்களில் இப்பொருளைக் காண்கிறோம்.
“பட்டமும் கயிறுபோல் பறக்ககின்ற சீவனைப்
பட்டறிவினாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடா”[1]
என்று சிவவாக்கியர் பாட்டில் இச்சொல்லை அதன்பொருட் குறிப்புடன் காண்கிறோம்.
பட்டறிவைப் புரிந்துகொள்ளப் பின்வரும் இரண்டு தொடர்கள் உதவும் :
1. ‘சீரகம் உடலுக்கு நலம் தரும்; நோயைத்
தடுக்கும்; போக்கும்.”
2. நான் அறிந்தவரை சீரகத்தைப் போன்று உடலுக்கு நலந்தந்து, நோயைத் தடுத்துப் போக்குவது வேறு ஒன்றும் இல்லை.
இரண்டு தொடர்களும் சீரகத்தின் நன்மையைக் காட்டு கின்றன. கருத்து ஒன்றுதான்; தொடர்கள் வேறுவேறு உத்திகளில் உள்ளன. முன்னதைவிடப் பின்தொடரில் கருத்தின் அழுத்தம் உள்ளது; உறுதி தெரிகிறது. காரணம், சொல்லுபவர் நான் அறிந்தவரை’ என்று தாம் பட்டு அறிந்ததைத் தெரிவிக்கிறார்.
“யாம்”
திருவள்ளுவப் பெருந்தகை வாழ்வியற் கருத்துக்களை 1330 குறட்பாக்களிலும் வழங்கியுள்ளார். அவர் சொல்லும் முறை சீரகம் பற்றி முதலில் கண்ட பொது முறையிலும் உள்ளது. இரண்டாவதாகக் கண்ட பட்டறிவு முறையிலும் பலப்பல குறட்பாக்கள் உள்ளன. பட்டறிவு பளிச்சென்று புலப்படுமாறு தன்னைச் சொல்லிக்கருத்தை வைத்துள்ளார். இவ்வகைக் குறட்பாக்கள் திருக்குறளில் மூன்றே மூன்று உள்ளன. அவை மூன்றிலும் தம்மைச் சொல்லிப்போம். “யாம்’ என்னும் சொல் உள்ளது. அவர் ஒரு தனித்தவராகத் தன்மை இடத்தில்தான் எழுதினார். ஆனால் தன் ஒருவனுக்குரிய நான்’ என்னும் சொல்லையோ, யான் என்னும் சொல்லையோ சொல்லவில்லை. இவை இரண்டும் ‘தான்’ என்னும் செருக்கைக் காட்டும் சொற்கள். திருவள்ளுவரும் யான் எனது என்னும் செருக்கு’ (346) என்று செருக்குக்கு உரியதாகப் பாடினார். எனவே, இவற்றை விடுத்து ‘யாம்’ என்னும் சொல்லால் பேசினார்.
‘யாம்’ என்னும் சொல் தன்மையில் பலரைக் குறிக்கும் பன்மைச்சொல். ஒருமைக்காகத் திருவள்ளுவர் பேசினார்.
தம் அறிவுப் பெருமிதத்தையோ, அருள் பெருமிதத்தையோ பேசுபவர் யாம்’ என்றே பேசுவர்.
“யாம் அவண் நின்றும் வருதும்”[2]
“இஃது யாம் இரந்த பரிசிலல்”[3]
“யாம் இரப்பவை பொன்னும் பொருளும்
போகமும் அல்ல”[4]
“படையமை மறவரும் உடையம் யாம்”[5]
இவை போன்றவை பெருமிதம் காட்டுபவை. இப்பெருமிதப் பொருளைவிட,
கண்ணகி
“என் காற்சிலம்பு” என்று கூற
மன்னன் பாண்டியன்,
“யாம் உடைச்சிலம்பு”[6] என்றான். இந்த “யாம்” அரசுப் பேருமிதம். இக்காலத்து இதனை ஆங்கிலத்தில் (Royal We) என்பர்.
திருவள்ளுவர்–யாம்
இவற்றிற்கெல்லாம் அப்பால் தம் பட்டறிவின் உறுதிப் பாட்டையும், சொல்லும் கருத்தின் அழுத்தத்தையும் பொதியவைத்து ‘யாம்’ என்று பேசுவது திருவள்ளுவர் பேச்சு.
“பெறுமவற்றுள் யாம்அறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே நல்ல பிற” (61)
“யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற” (300)
“மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்” (1071)
யாம் பட்டு அறிந்தவரை,
மக்கட்பேறு எல்லாப் பேற்றினும் சிறந்தது வாய்மையே பண்புகளில் சிறந்தது
கீழ்மக்கள் உருவத்தில் மாந்தராயினும்
இழிவில் ஒப்பில்லாதவர்”
நேருக்குநேர் திருவள்ளுவர்
இவை இக்குறட்பாக்களின் கருத்துகள். இக்கருத்துகள் ‘யாம்’ என்று திருவள்ளுவர் தம்மைக் குறித்துச் சொல்லப்பட்டவை. இதனால் அவர் நம்முன் நேருக்கு நேர் நின்றுபேசுவதாக அமைந்துள்ளன.
“யாம் அறிந்தவற்றுள்”,
“யாம் மெய்யாக் கண்டவற்றுள்”,
“யாம் கண்டது” என்று அவரே பேசுவதால் அவர் பட்டு அறிந்ததை எழுதியுள்ளார் என்று கொள்ள வேண்டும். எனவே, இவை திருவள்ளுவரின் பட்டறிவுக் கருத்துகள்.
(‘யாம்’ என்னும் சொல் திருவள்ளுவரால் இம்மூன்றிடங்களில் மட்டுமன்றி மேலும் 10 இடங்களில் அமைந்துள்ளது. பொதுவாக 2 இடங்கள், (790, 844), தலைவன் பேச்சாக 3 (1111, 1123, 1329), தலைவி பேச்சாக 7 (1140, 1150, 1171, 1204, 1245, 1218, 1312) ஆக !3. இடங்களில் காண்கிறோம். இவை பிறர் பேசுவனவாகப் படர்க்கையில் அமைக்கப்பட்டவை).
தனித் தன்மையுள்ள குறட்பாக்கள்
முன்னர்க் காணப்பட்ட மூன்று குறட்பாக்களில் தான் திருவள்ளுவர் தம்மை முன்னிறுத்திப் பட்டறிவுடன் பேசினார். தம் பளிச்சிடும் பட்டறிவுடன் பேசும் இம்மூன்று குறட்பாக்களிலும் அமைந்த பிறசொற்களும், ஒத்துள்ளமை நோக்கத்தக்கது.
சொல்லொற்றுமை
மக்கட்பேறு வாய்மை கயமை
பெறும் அவற்றுள் கண்ட அவற்றுள் அவரன்ன
யாம் யாம் யாம்
அறிவது கண்ட கண்டது
இல்லை இல்லை இல்
அறிவறிந்த எனைத்தொன்றும் ஒப்பார்
அல்லபிற அல்ல பிற (நல்ல பிற) அன்ன
திருக்குறளில் பொதுவாகத் தனித்தனித் குறட்பாக்களில் அமைந்த சொற்களைக் கணக்கிட்டால் 8 முதல் 11 வரை அமைந்திருக்கக் காணலாம். இம்மூன்று குறட்பாக்களில் சொல்லாலும், கருத்தாலும், தொடர்பாலும் 7 சொற்கள் ஒத்துள்ளன.
‘யாம் என்று தம்மைக் குறிக்கும் சொல்லுடன் கருத் தொற்றுமையும், சொல்லொற்றுமையும் கொண்டு உள்ளதை நோக்கினால் திருவள்ளுவர் இம்மூன்றிலும் ஒருமித்த மனம் பற்றியுள்ளார் என்பதை அறியலாம்.
திருவள்ளுவர் தம்மை நம்முன் நிறுத்திப் பேசுவதாலும், அவை பட்டறிவின் வெளிப்பாடாக உள்ளமையாலும், குறளில் அமைந்த சொற்களின் ஒற்றுமையாலும் இம்மூன்று குறட்பாக்களும் முப்பாலாம் திருக்குறளில் தனித்தன்மை கொண்டவையாகின்றன. இவ்வாறு தனித் தன்மையில் திருவள்ளுவர் மனம் உவந்து பேசும் கருத்துக்கள் எவை? அவை உலகியலில் எப்பங்குக்கு உரியவை?
1. | மக்கட்பேறு | — | குடும்ப வாழ்வியல் |
2. | வாய்மை | — | ஒழுக்க வாழ்வியல் |
3. | கயமை | — | மக்கட் கூட்டமாம் குமுகாய வாழ்வியல் |
உலகியல் வாழ்க்கை இம்மூன்றுள்ளும் அடங்கும் என்பதை விரித்துக் காண வேண்டியதில்லை.
(தொடரும்)
கோவை. இளஞ்சேரன், அறிவியல் திருவள்ளுவம்
+++++
குறிப்புகள்
- சிவவாக்கியர் : சிவ : 203
- கடியலூர் உருத்திரங்கண்ணனார் : பெரும்பாணாற்றுப்படை: 28
- கபிலர் : புறநானூறு : 110-2
- கடுவன் இளவெயினனார் : பரிபாடல் : 7-18, 19
- தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் : புறநானூறு : 72-5
- இளங்கோவடிகள் : சிலப்பதிகாரம், வழக்குரை காதை-67
No comments:
Post a Comment