Thursday, July 31, 2025

வெருளி நோய்கள் 191 -195 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




தாய்வழி பாட்டி/அம்மம்மா தொடர்பான அளவு கடந்த பேரச்சம் அம்மம்மா வெருளி
00

அம்மைத் தடுப்பூசி தொடர்பான பேரச்சம் அம்மைத்தடுப்பூசி வெருளி
தடுப்பூசி போடல், அம்மை குத்தல், அம்மை குத்துதல், அம்மைத்தடுப்பூசி குத்துதல், அம்மைப்பால் குத்துதல் எனப் பலவகையிலும் அம்மைநோய்த் தடுப்பிற்கான ஊசி குத்துதல் குறிக்கப் பெறுகிறது. ஊசி குத்தினால் வலிக்கும் என அஞ்சுவோர் உள்ளனர். இதுபோல் தடுப்பூசி போட்டுக் கொண்டால் காய்ச்சல் வரும் என அஞ்சுவோரும் உள்ளனர்.
சிறுவர்களிடம் மட்டுமல்லாமல், பெரியவர்களிடமும் அம்மைத் தடுப்பூசி வெருளி உள்ளது.
00

அயர்ச்சியின் பொழுது ஏற்படும் தேவையற்ற பேரச்சம் அயர்ச்சி வெருளி.
அயர்ச்சி, களைப்பு அல்லது சோர்வு ஏற்பட்டால் நோய் ஏற்படும், உடலுக்கு முடியாமல் போகும், படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாமல் போய்விடும், இவற்றால் மேற்கொண்டு வேலைபார்க்க முடியாமல் துன்பப்பட நேரிடும் என்று கற்பனைகளை வளர்த்துக் கொண்டு பேரச்சம் கொள்வர்.
களைப்பால் வேலையைக் குறித்த காலத்தில் முடிக்க முடியாது, குறிப்பிட்ட நேரத்திற்குள் படிக்க முடியாது குறித்த நேரத்தில் முடிக்க முடியாமையால் வரவேண்டிய பணமோ வெற்றியோ வராது போய்விடும் களைப்பால் உடல் நலக் கேடு ஏற்படும் மருத்துவச் செலவு ஏற்படும் என்று களைப்பு தொடர்பாகப் பேரச்சம் கொள்வர்.
kopo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அயர்ச்சி/சோர்வு/ களைப்பு. இக் களைப்பு உடலளவிலும் இருக்கலாம், மன அளவிலும் இருக்கலாம்.
00

அறிமுகமில்லா அயலவர்களைப்பற்றிய காரணமற்ற பேரச்சம் அயலவர் வெருளி.
அயலவர் வெருளி(Peregrinophobia) என்பது முற்றிலும் புதியவர்களைப் பற்றிய வெருளி. அயல்நாட்டினராக இல்லாமல் உள்நாட்டினராக இருந்தாலும் புதியவராக இருந்தால் பேரச்சம் கொள்வது.
00

Wednesday, July 30, 2025

வெருளி நோய்கள் 186 -190 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 181 -185 : தொடர்ச்சி).

அமிலத் தன்மை மீதான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் அமில வெருளி.
பயிரியலில் அமிலமண்ணில் வளரும் சில பயிர்களின் பொறுக்காத் தன்மையைக் குறிப்பது. இதைப்போன்ற மக்களின் பேரச்சத்தைக் குறிப்பது அமில வெருளி.
காதல் தோல்வி, ஒருதலைக்காதல், பழிக்குப் பழி போன்றவற்றால் அமிலத்தை முகத்தில் வீசும் கொடும் பழக்கம் பரவி வருகிறது. இதனாலும் அமிலம் என்றாலே தேவையின்றி அஞ்சுவோர் உள்ளனர்.

00

அமெரிக்கா தொடர்பான வெறுப்பும் பேரச்சமும் அமெரிக்க வெருளி.
அமெரிக்கக் கண்டம், ஐக்கிய அமெரிக்க நாடுகள், அமரிக்க நாகரிகம், அமெரிக்கப் பண்பாடு,அமெரிக்கப் பொருள்கள், அமெரிக்க அரசியல் கொள்கை, அமெரிக்க மக்கள் என அமெரிக்கா தொடர்பானவற்றின் மீது அளவுகடந்த வெறுப்பு கொள்வோர் உள்ளனர். பொதுவுடைமைக் கருத்து சார்ந்தோர் மட்டுமல்ல, பிற கருத்து உடையோர்களிடமும் சில வகைக் கட்சி அல்லது இயக்கத்தினரிடமும் இவ்வெருளியைக் காணலாம். அமெரிக்க வணிகத்தால் பாதிக்கப்பட்டு அமரிக்க வெருளிக்கு ஆளாவோர் உள்ளனர்.
00

அமைதிச் சூழலில் உருவாகும் தேவையற்ற அச்சமே அமைதி வெருளி.
அமைதி ஆயிரம் சொற்களை உணர்த்தும் என்பர். ஆனால் அமைதியான சூழலே சிலருக்குத் தேவையற்ற சிந்தனைகளுக்கு வழி வகுத்து அச்சம் ஏற்படுத்தும். புயலுக்குப் பின்தான் அமைதி என்பர். ஆனால், அமைதியான சூழலே சிலருக்குப் பேரிடர் வரப்போகிறது என எண்ணச்செய்து மனத்தில் கலவரத்தை உண்டு பண்ணிப் பேரச்சத்திற்குத் தள்ளிவிடும். தனிமைச் சூழல் அமைதியைத் தருவதால் அதுவே பேரச்சம் தரவும் வாய்ப்பாகிவிடுகிறது.
sedate என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அமைதி அல்லது உறக்கம் அல்லது இறப்பு.
00

அம்மணம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அம்மண வெருளி.
அம்மணமாக இருப்பது அல்லது தன்னுடைய அம்மண நிலையைப் பிறர் பார்ப்பது பிறரின் அம்மண நிலையைப் பார்ப்பது தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் கொண்டிருப்பர்.
gymnos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடுப்பற்ற எனப் பொருள்.
(gymnasion என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடற்பயிற்சிக்கான இடம் எனப் பொருள்gymnasein என்றால் உடையின்றிப் பயிற்சி எனப் பொருள்.)
ஆடையிலி வெருளி(Dishabiliophobia), உடுப்பின்மை(நிருவாண) வெருளி (Gymnophobia), அம்மண வெருளி(Nudophobia) எனத் தனித்தனியாகக் கூறுவதை விட அம்மண வெருளி என்றே சொல்லலாம். (நான் அவ்வாறுதான் தனித்தனியே முதலில் குறிப்பிட்டிருந்தேன்.)
ஆடை அவிழ்ப்பு வெருளி(exuerphobia) என்பது மருத்துவ நோக்கில் ஆடையை அவிழ்க்கச் சொல்வது குறித்தது.
dis என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பிரி எனப்பொருள். habil என்னும் இலத்தீன் சொல்லிற்கு ஆடை எனப் பொருள்.
00

Tuesday, July 29, 2025

வெருளி நோய்கள் 181 -185 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 176 -180 : தொடர்ச்சி)

அந்துப்பூச்சி மீதான அளவுகடந்த பேரச்சம் அந்துப்பூச்சி வெருளி.
அந்துப்பூச்சி/விட்டில் பூச்சி(Moth) என்பது பட்டாம்பூச்சி வகையை ஒத்தது. முதலில் இதனைப் பட்டாம்பூச்சி வெருளியில் சேர்த்திருந்தேன். அதைவிடத் தனியாகச் சேர்ப்பது நன்று என்பதால் இப்பொழுது தனியாகக் குறிப்பிட்டுள்ளேன்.
motte என்னும் செருமானியச் சொல்லின் பொருள் அந்துப்பூச்சி.
00

தந்தைவழி தாத்தா / அப்பப்பா தொடர்பான அளவு கடந்த பேரச்சம் அப்பப்பா வெருளி.
தந்தையின் தந்தையை ஐயா என்றும் அழைப்பர். ஆனால், அது மதிப்புச் சொல்லாகக் கருதப்படும் என்பதால் குறிக்கவில்லை.
00

தந்தை வழி பாட்டி / அப்பாத்தாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் அப்பாத்தாள் வெருளி.
00

நெடுநேரம் உட்கார்ந்திருப்பது தொடர்பான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் அமர்வு வெருளி.
உட்கார்வதால் வலி ஏற்படுவது போன்றவற்றால், பொதுவாக மூத்தோர்களுக்கு இவ்வெருளி வருகிறது. சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வகுப்பறையில் அமர்வது பிடிக்காமல் அமர்வு வெருளியாகிறது.
சிலருக்கு- அதிலும் குறிப்பாக முதியோருக்கு – நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது பிடிக்காது. ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது இயலாமையாகப்படும். எனவே உட்கார்ந்து கொண்டே இருப்பது எரிச்சலைத் தரும்.இளையோர் போல் எழுந்துநடமாட விரும்புவார்கள். ஆனால், அதற்கும் பலருக்கு இயலாது.
கீழே உட்கார் என்னும் பொருள்கொண்ட kathizein என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து இச்சொல் உருவானது.
00

அப்பத்துண்டு(crumb) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அப்பத்துண்டு வெருளி
அப்பத்துண்டு அல்லது இதுபோன்ற உணவுத் துண்டுகள் உண்ணும்பொழுது தொண்டையில் சிக்கி விடும் என்பதுபோன்ற பயம் சிலருக்கு ஏற்படுகின்றது. இதனால் உணவுத் துண்டுகளைப் பார்த்தாலே காரணமற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
தேவாலயத்தில் வழங்கும் அப்பத்துண்டை எண்ணியும் இதனைத் தூய ஆவியாகக் கருதியும் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00

Sunday, July 27, 2025

வெருளி நோய்கள் 171 -175 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 166 -170 : தொடர்ச்சி)

தவறானவர் அடுத்து இருப்பதாகப் பேரச்சம் கொள்வது அண்மையர் வெருளி.
நகரும் படிக்கட்டு அல்லது பொது இடங்களில் அடுத்து அமர்ந்திருப்பவர் தவறானவர் அல்லது தீங்கானவர் எனப் பேரச்சம் கொள்வர். யாரைப்பார்த்தாலும் ஐயம் ஏற்படுவது போன்றதுதான் இதுவும்.

அண்டையர் வெருளி என்பது வீட்டிற்கு அருகே குடி இருப்பவர்களைப் பற்றிய பேரச்சம். அண்மையர் வெருளி என்பது நமக்கு அருகில் இருப்பவர்களைப் பற்றிய பேரச்சம்.
காண்க: அண்டையர் வெருளி – Geitophobia
00

வாயில் உண்பிசினை அதக்குதல்(chewing) அல்லது அதுக்குதல் -மெல்லுதல் – தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அதக்கு வெருளி.
நாகவாற்றி மொழி (Nahuatl) உணவுப்பொருளில் கலக்கும் இயற்கைப் பிசினைக் குறிக்கும் சொல்லில் இருந்து உருவானது Chicle. அதக்குத்தீனி/அதுக்குத்தீனி(chewing gum) முதலானவற்றை அசைபோடுவது குறித்த பேரச்சத்தைக் குறிக்கிறது.
அதக்குதல் அல்லது அதுக்குதல் என்றால் வாயில் மெல்லுதல் எனப் பொருள். முதலில் தன்மையின் அடிப்படையில் உண்பிசின் வெருளி எனக் குறித்திருந்தேன். இருப்பினும் விழுங்கி உண்பதற்குரியதல்ல என்பதால், செயல் அடிப்படையில் குறிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் அதக்கு வெருளி எனக் குறித்துள்ளேன்.
சவை என்றாலும் மெல்லுதல் என்றால்தான் பொருள். என்றாலும் சபை, அவை, கூட்டம் என்றும் பொருள்கள் உள்ளன.
00

விலங்குத் தோல்(leather) மீதான அளவுகடந்த பேரச்சமே அதள் வெருளி.
விலங்குத் தோலால் அல்லது தோல் முடியால்(fur) நோய் ஏற்படும், பெருந்துன்பம் நிகழும் என்று அவற்றிற்கான வாய்ப்பு இல்லாத பொழுதும் தேவையற்று அஞ்சுவது அதள் வெருளி.
சிறு பருவத்தில் விலங்கின் தோல் தொடர்பாகக் கேட்ட கதைகளால் அஞ்சி அதுவே நாளடைவில் பேரச்சமாக வளர்ந்து அதள் வெருளியாவதும் உண்டு.
தோல் அல்லது தோல் முடி குறித்த ஒவ்வாமைபற்றித் தீவிரமாகச் சிந்தித்து வெருளி நோயாக மாறும் வாய்ப்பும் உள்ளது.
அதள் என்பது விலங்கின் தோலினைக் குறிக்கும். எனவே skin= தோல், leathier=அதள் என வேறுபடுத்திப் பயன்படுத்தலாம்.
dora என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் தோல்.
காண்க: தோரா வெருளி – Doraphobia
00

அதிரடி இசை(rock music) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அதிரடி இசை வெருளி.
அதிரடி இசையால் ஒலி மாசு ஏற்படும், மன அழுத்தம் உண்டாகும் என்றெல்லாம் கவலைப்பட்டு அதிரடி இசை மீது சிலர் பேரச்சம் கொள்கின்றனர்.
00

Saturday, July 26, 2025

வெருளி நோய்கள் 166 -170 : இலக்குவனார் திருவள்ளுவன்

 


அணுக்குண்டுதொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சமே அணுக்குண்டு வெருளி.

போர்க்கொலை நாடுகளில் இது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது. சான்றாகத் தமிழ் ஈழத்தில் மக்களைக் காக்கவேண்டிய அரசே எமனாகமாறி  நொடி தோறும் வேதியல் குண்டுகளையும் கொத்துக்குண்டுகளையும் பிற குண்டுகளையும் போட்டு அழித்து வந்ததால் மக்களில் பெரும்பாலோர் குறிப்பாகப் பள்ளிச்சிறுவர்களும்  பிற சிறுவர்களும் பெண்களும் அணுக்குண்டு வெருளியால் பாதிக்கப்பட்டு மனநோயராக இருக்கின்றனர்.

அணுஆயுத வெருளி (Nucleomituphobia) யைச் சார்ந்ததே இது.

00

அணைக்கட்டு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அணைக்கட்டு வெருளி.

அணைக்கட்டு அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் பொழுது அப்பகுதியில் உள்ள தங்கள் வீடு, நிலம், பிற உடைமைகள் அரசால் எடுக்கப்படுவது குறித்த பேரச்சம வந்து விடுகிறது. அரசால உரிய இழப்பீடு தருவதாகக் கூறினாலும் உரிய காலத்தில் உரிய இழப்பீடு தரப்படாததால் வாழ்க்கை நிலைகுறித்த வரம்பற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். அணைக்கட்டு வந்த பின்னரும் அதன் அருகில் உள்ளவர்கள் அணைக்கட்டு உடைந்து விட்டாலோ வெள்ளம கரை புரண்டு போனாலோ உடைமை, உயிர் இழப்பிற்கு ஆளாக நேரிடும் என்று வரம்பு கடந்த பேரச்சத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.

00

அணையாடை(Diaper) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அணையாடை வெருளி.

அணையாடை அணிவது, மாற்றுவது போன்றவற்றால் ஏற்படும் பதற்றம், எரிச்சல் மிகுந்து அளவு கடந்த அச்சத்திற்கு ஆளாகின்றனர்.

00

அண்ட வெளியில் உள்ளவை குறித்து ஏற்படும் தேவையற்ற அச்சம் அண்ட வெருளி. 

விண்பொருள் வெருளி(Astrophobia), எரிமீன் வெருளி-Meteorophobia, விண்மீன் வெருளி(Siderophobia), புறவெளி வெருளி(Spacephobia) ஆகியனவற்றை ஒத்ததே இதுவும்.

‘kosmo’ என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அண்டம்/முழு உலகம்.

00

அண்டை வீட்டார் குறித்த காரணமற்ற பேரச்சம் அண்டையர் வெருளி.

நம்மைக் கண்டு அண்டை வீட்டார் பொறாமை, எரிச்சல் கொள்வார்கள்  என்றும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்வார்கள் என்றும் அவர்கள் பழக்க வழக்கங்களால் நம் வீட்டு  உறுப்பினர்களுக்கும் தவறான பழக்க வழக்கங்கள் வரும் என்றும் காரணமற்ற பேரச்சம் கொள்வர்.

வீட்டிற்கு அடுத்துள்ள வீடுகளில் உள்ளவர்களை அண்டையர் குறிக்கிறது. இருக்கை அல்லது நிற்குமிடத்திற்கு அடுத்து உள்ளவர்களை அண்மையர் குறிக்கிறது. 

அண்மையர் வெருளி(sedsocophobia) காண்க.

00

Friday, July 25, 2025

வெருளி நோய்கள் 160 -165 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 156 -160 : தொடர்ச்சி)

161. அட்டோபர் வெருளி – shiyuephobia 

நடைமுறை ஆண்டில் பத்தாவது மாதமான அட்டோபர் மாதம் குறித்த  வரம்பில்லாப் பேரச்சம் அட்டோபர் வெருளி.

shi என்னும் சீனச்சொல்லிற்குப் பத்து எனப் பொருள்.yue என்னும் சீனச்சொல்லிற்கு மாதம் எனப் பொருள். எனவே, shiyue பத்தாம் மாதமாகிய  அட்டோபர் திங்களைக் குறிக்கிறது.

அட்டோபர் மாதம் என்பது பழைய உரோமன் நாட்காட்டியில் முதலில் எட்டாவது மாதமாகத்தான் இருந்தது.  ôctō என்னும் சொல்லிற்குக் கிரேக்கத்திலும் இலத்தீனிலும் 8 என்றுதான் பொருள். தமிழில் அட்டம் என்பது 8ஐக் குறிக்கும். இதனால்தான் அட்டமி, அட்ட கணம், அட்டகிரி, அட்டகருமம் எனப் பல சொற்களும் 8 என்னும் பொருளில் உள்ளன. பின்னர் அட்டம் என்பது திரிந்து அஃசுடம் என்றானதால் இதைத் தமிழ்ச்சொல்லல்ல எனத் தவறாக எண்ணுகிறோம். 

வல்லின க் மெய்யெழுத்து அடுத்த ட கரம் வராது. எனவே, ஒலிப்பியலுக்கேற்ப  அக்டோபர் (அல்லது ஒலிப்பினிமையின்றி அக்குடோபர்) எனச் சொல்லாமல் அட்டோபர் எனப்படுகிறது. எனவே, எட்டாவது மாதத்தை அட்டோபர் என்று சொல்வது பொருத்தமாகும்

00

162. அட்டைப் பெட்டி வெருளி –  Cogombophobia / Pygmachophobia/ B💡mpnophobia 

அட்டைப் பெட்டி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அட்டைப் பெட்டி வெருளி.

தாள் வெருளி போன்றதுதான் அட்டைப்பெட்டி வெருளியும்.

பாதுகாப்பின்மை, ஒவ்வாமை, போன்றவை பற்றிய எண்ணங்களால் ஏற்படும் அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.

வெற்று அட்டைப் பெட்டி வெருளி(B💡mpnophobia) எனப் புதிய வெருளியாகக் குறிக்கப் பெற்றுள்ளது. அட்டைப் பெட்டி ஒன்றும் இல்லாமல் காலியாக இருக்கும் பொழுது நாம் அட்டைப்பெட்டி என்கிறோம். புத்தகம் இருந்தால் புத்தகப்பெட்டி என்பதுபோல் எதுவும் இருப்பின் அப்பொருளின் பெயரில் அழைக்கிறோம். எனவே, அட்டைப் பெட்டி வெருளி உள்ளதால் தனியாகக் குறிக்க வேண்டா. இதனுடனேயே இணைத்துள்ளேன்.

00

163. அணி ஒளி விளக்கு வெருளி – Hrongyophobia 

அணி ஒளி விளக்கு (எரிமலை விளக்கு) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அணி ஒளி விளக்கு வெருளி.

எரிமலைக் குழம்பின் பெயரால் (lava lamp) என அழைக்கப்பெற்றாலும் தமிழில் எரிமலை விளக்கு என்றால் தவறாகப் பொருள் கொள்ள நேரிடும்.1963இல் பிரித்தானியத் தொழில் முனைவோர் எடுவர்டு கிரேவன் வாக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது அணி ஒளி விளக்காகும்.

கண்ணாடிக்குப்பி ஒன்றில் நீர்மத்தில் வண்ண மெழுகுக்கலவை உள்ளது. வெப்பமூட்டப்படும் பொழுது மெழுகு சுற்றியுள்ள நீர்மத்தைக் குளிரச் செய்கிறது. அது ஒளிரும் பொழுது பார்வைக்கு மென்மையான இடையீடற்ற குழம்பு என்னும் பொருளில் உள்ள பாஃகோயிஃகோயி எரிமலைக் குழம்பு(pāhoehoe lava) போல் உள்ளது. எனவே, இதற்கு இப்பெயர்.

00

164. அணில் வெருளி – Sciurophobia

அணிலைக் கண்டு வரும் தேவையற்ற பேரச்சம் அணில் வெருளி.

அணில் அச்சம் கொள்பவர் என்றால் அணில் படம், அணில்பற்றிய கதை, கட்டுரை முதலியன, அணில் காட்சிப்படம் என எதைக்கண்டாலும் அஞ்சுவோர் உள்ளனர். அணிலைக் கண்டால்கூடவா பயம் வரும் என்று பார்த்தால் அமெரிக்காவில் மட்டுமே 2,50,000 பேர் அணில் வெருளி உள்ளவர்கள் இருக்கின்றனராம்.

00

165. அணுஆயுத வெருளி-Nucleomituphobia

அணுஆயுதங்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் அணுஆயுத வெருளி.

அணுஆயுதக் கருவிகள் இல்லாவிட்டாலும் இருந்து பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், அவை பயன்படுத்தப்பட்டுப் பேரழிவுகள் ஏற்படும் என்று கருதுவதால் உருவாகும் அச்சம் அணுஆயுத வெருளி.

அமெரிக்கத் தலைவர்களுக்கு ஈராக்கு மீது ஏற்பட்டஅச்சம் இத்தகையதுதான். என்றாலும் அணுஆயுதக் கருவிகள்  இல்லை என்றறிந்த பொழுதும் இருப்பதாகப் பிறரை அச்சுறுத்தி அந்நாட்டை அழிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. 

போர் முழக்கங்களும் அமைதியின்மையும் வல்லரசு ஆசையும் நிறைந்த உலகில் எல்லா நாட்டினருக்கும் அணுஆயுத வெருளி இருப்பதில் வியப்பில்லை.

Nucleomitu என்றால் அணுஆயுதம் எனப் பொருள்.

00

(தொடரும்)

Thursday, July 24, 2025

வெருளி நோய்கள் 156 -160 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 151 -155 : தொடர்ச்சி)

அடுப்பு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அடுப்பு வெருளி.

அடுப்புத் துளைகள் பால் பொங்கி வடிதல் போன்றவற்றால் அடைபட்டுக்கொண்டு எரி வளி சீராக வராமல் இடையூறுகள் எற்படும், தீ நேர்ச்சி(தீ விபத்து) ஏற்படும், தீ அளவைக் குறைக்கவும் கூட்டவும் உள்ள இயக்கி நல்ல முறையில் இயங்காமல் தொல்லை கொடுப்பதால் ஏற்படும் தீங்குகள் முதலியன பற்றிய தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.

எரிவளி அடுப்பு என்று இல்லை. மண்ணெண்ணெய் அடுப்பு, கரி அடுப்பு, விறகு அடுப்பு முதலியவற்றைப் பயன்படுத்தும் பொழுதும் அளவுகடந்த பேரச்சம் வருவதும் இயல்பே!

00

அடை(pancake) உணவு வகை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அடை வெருளி.

அடை என்பது இங்கே  அதுபோன்ற முட்டை-பால் அடை, தோசை, ஊத்தப்பம், முதலியனவற்றையும் குறிக்கும்.

அடை செரிமானம் ஆகுமா, ஆகாதா, ஒவ்வாமை வருமா என்றெல்லாம் அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.

00

சிறிய இடத்தில் இருக்கும் பொழுது அடைத்துப் பூட்டி வைக்கப்படுவோம் என்று ஏற்படும் தேவையற்ற பேரச்சம் அடைதாழ் வெருளி.

குளியலறை போன்ற சிறிய அறைக்குள் இருக்கும் பொழுது தாழ்ப்பாள் திறக்க முடியாமல் உள்ளேயே இருக்க வேண்டுமோ,  யாரும் கதவைப் பூட்டி விட்டுச் சென்று விடுவரோ, தானாகக் கதவு பூட்டிக் கொள்ளுமோ என்பனபோன்ற பேரச்சம் வரலாம்.

சிலர் மின்ஏணிக்குள்/ஏணறைக்குள்(Lift) தனியாக நுழைந்ததும் கதவு திறக்கமுடியாமல் போய்விடுமோ என்று பேரச்சம் கொள்வர்.

அடைத்து வைக்கப்படும் நிலை குறித்த அளவுகடந்த பேரச்சம் சுற்றடைப்பு வெருளி(Clithrophobia) என முதலில் தனியாகக் குறித்திருந்தேன். எனினும் தாழ் போட்டு அடைக்கப்பட்டிருப்பதும் சுற்றியும் அடைக்கப்பட்டிருப்பதும் ஒன்று என்பதால் தனியாக வேறுபடுத்த வேண்டா என்பதால் இத்துடன் இணைத்துள்ளேன்.

cleithro என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் மூடு அல்லது அடை.

cleisio என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சுற்றியடைக்கப்பட்ட (பகுதி)

00

உள்ளறை/மறைவறை/ஒதுக்கறை/ உள்ளகப் பேழை முதலான அடைபகுதிகள் (Closets)குறித்த அளவில்லாப் பேரச்சம் அடைபகுதி வெருளி.

வைக்கப்படும் பொருள்களுக்கேற்ப அடைபகுதிகள் பல வகைப்படும்.

மறைவிட வெருளி என முதலில் குறித்திருந்தேன். மறைவிடம் என்பது கழிவறையையும் குறிக்கும். இவ்வெருளியில் அதுவும் அடங்கும். ஆனால், அது மட்டுமல்ல.  எனவே, எனக் குறித்துள்ளேன்.

00

வெளியேற முடியாத அளவில் அறைக்குள் இருக்கும்பொழுது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் அடைப்பிட வெருளி.

அடைதாழ் வெருளிக்கும் இதற்கும்  வேறுபாடு உள்ளது. ஊடுகதிர்க்கருவி முதலான மருத்துவக் கருவி வழி ஆய்வுகளுக்காக ஆய்வறையில் இருக்கும்பொழுது ஆய்வாளர் வெளியில் இருப்பார். அப்பொழுது ஏற்படும் தேவையற்ற அச்சம். சிற்றிட வெருளி என்றும் சொல்லலாம்.

கதவு பூட்டப்பட்ட ஊர்திகள், பலகணி/காற்றமாடங்கள் இல்லாத அறைகள், தானியங்கித் தாழ்ப்பாள் உள்ள உணவக அறைகள் என இவை போன்றவற்றில் மாட்டிக் கொள்ளும் பொழுது அல்லது மாட்டிக்கொள்ளுவோமோ என எண்ணும் பொழுது வரும் பேரச்சம் அடைதாழ் வெருளி.

claustrum  என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அடைப்பு.

00