வெருளி அறிவியல்  –  1
(Science of fear or Phobia)
(அச்ச நோய் வகைகள் எனப்படும் வெருளி வகைகள்0
 முன்னுரை
 ஒன்றைப் பற்றிய அச்சத்தினால் ஏற்படும் அச்ச நோய் பல வகைப்படும். ஒன்றின் மீதான கடும் அச்சம், அல்லது விருப்பமின்மை, அல்லது வெறுப்பு, ‘போபியா(phobia)’ எனப்படுகிறது. ஒருவர் மீது, அல்லது ஒரு சூழல் பற்றி, அல்லது ஓர் அமைப்பு மீது, அல்லது அமைப்பினர், நாட்டினர், அவர்கள் தொடர்பானவை என்பனவற்றின் மீது, அல்லது இவை போன்றவற்றின்மீது, எவ்வகைப் பேரிடருக்கும் வாய்ப்பு இல்லாத பொழுதும் விடாப்பிடியான அல்லது இயல்பிற்கு மீறிய அல்லது பகுத்தறிவிற்கு முரணான அச்சம் ஏற்படுவதையே இது குறிக்கின்றது.
போபியா(phobia) என்றால் ‘அளவிற்கு மீறிய பேரச்சம்’ என அகராதிகள் குறிப்பிடுகின்றன. ஒற்றைக் கலைச்சொல்லாக அமையாமல் பொருள் விளக்கமாக அமைவதால் இச்சொல்லின் அடிப்படையிலான பிற கலைச்சொற்கள் நெடுந்தொடராக அமைந்து பயன்பாட்டுத் தன்மையை இழக்கின்றன. தமிழ் நெடுந்தொடர்களைவிட அயல்மொழியின் சுருக்கச் சொற்களே பயன்பாட்டில் நிலைத்து விடுகின்றன. எனவே, தமிழ் ஆர்வலர்கள்கூடத் தமிழ்க்கலைச் சொற்களைப் பயன்படுத்துவதில்லை என்னும் குற்றச்சாட்டைக் கூறுவதில் பயனின்றாகிறது. அதிர்ச்சி தொடர்பான அளவிற்கு மீறிய பேரச்சம், ஆசிரியர் மீது அளவிற்கு மீறிய பேரச்சம், நாய் மீது அளவிற்கு மீறிய பேரச்சம்  என்றெல்லாம் கூறினால் எங்ஙனம் ஏற்றதாக அமையும். இவற்றையே அதிர்ச்சி வெருளி, ஆசிரியர் வெருளி, நாய் வெருளி என்று சுருக்கமாகச் சொன்னால் ஏற்புடையதாக அமையும் அல்லவா?   எனவே, சுருங்கிய செறிவான கலைச்சொற்களையே நாம் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்; புத்தாக்கம் புரிய வேண்டும்; பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் நாம் ஆராயலாம்.
  அச்சம் என்னும் சொல்லைச் சங்கப் புலவர்கள் ஆறு இடங்களில் பயன்படுத்தி உள்ளனர். அச்சம் என்னும் சொல் வகைக்குப் பிங்கல நிகண்டு 19 சொற்களையும், ‘ஒரு சொல்-பல்பொருள்’ வகையில் அகத்தி, பயம் என்னும் இரு சொற்களையும் குறிப்பிடுகின்றது. 19 வகை பின்வருமாறு
உருமும், உருவும், உட்கும், பனிப்பும்
வெருவும், புலம்பும் வெறியும் பயமும்
பிறப்பும் கொன்னும் பேமும் நாமும்
வெறுப்பும் சூரும் பீரும் வெடியும்
கவலையும் அடுப்பும் கலக்கமும் அச்சம் (பிங்கலநிகண்டு 1852)
இவற்றுள் வெரு என்னும் சொல்லின் அடிப்படையிலான வெருள், வெருள்பு, வெரூஉ, வெரூஉதல், வெரூஉதும், வெரூஉம் முதலான சொற்களும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.
யானை வெரூஉம் புலிதாக் குறின் (குறள், 599).
வெருவரு தானைகொடு செருப்பல கடந்து (பதிற்றுப். 70, பதி.).
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் (குறள், 563).
வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும் (தொல்.பொ. 111).
வெருள் ஏறு பயிரும் ஆங்கண் (அகநானூறு : : 121:14)
வெருள்பு உடன் நோக்கிவியல் அறை யூகம் (கலித்தொகை : : 43:12)
வெரூஉப் பறை நுவலும்பரூஉப் பெருந் தடக் கை (பொருநர் ஆற்றுப்படை: 171)
அலமரல்ஆயிடைவெரூஉதல் அஞ்சி (குறிஞ்சிப் பாட்டு :: 137)
கொடு வாய்க் கிள்ளை படு பகை வெரூஉம் (பெரும்பாண் ஆற்றுப்படை: 227)
வெருள் என்னும் சொல்லின் அடிப்படையிலான வெருளி என்னும் சொல்லைப் பின்வருமாறு காப்பிய இலக்கியங்களிலும் புலவர்கள் கையாண்டுள்ளனர்.
வெருளி மாடங்கள் (சீவக. 532)
வெருளி மாந்தர் (சீவக. 73).
பெருங் குடி யாக்கம் பீடற வெருளி (பெருங். மகத. 24, 84)
எனவே, சங்கச் சொல்லான வெருள் என்பதன் அடிப்படையிலானதே இச்சொல்லும்.
வெகுள்வதன் அடிப்படையிலான வெகுளி போல், வெருள்வதன் அடிப்படையில், வெருளி(phobia) என ஒருவரை அச்சுறுத்தி வெருட்டுகின்ற நோயைக் குறிக்கலாம்.
வெருளி ஒரு வகை மன நோய்தான். காரணமின்றி வெறுப்பும் அச்சமும் வருவதை உணர்ந்தாலும் அதிலிருந்து மீள மாட்டார்கள். கவலை, வெறுப்பு, அச்சம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையதாக மாறி விடுகின்றன. எடுத்துக்காட்டாக உடல் நலிவாகுமோ என்ற கவலை வரும் பொழுது நாளடைவில் அதுவே  உடல்கேடு குறித்த அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதுபோல் தூய்மை குறித்துக் கவலைப்படும் பொழுது தூய்மையின்மை குறித்த வெறுப்பை உருவாக்குகிறது. இந்த வெறுப்பு சூழல் குறித்த  அச்சத்தையும் உருவாக்குகிறது. அச்சம் வளரும் பொழுது வெருளியாக மாறுகிறது.
வெருளி குறித்து ஆங்கிலத்தில் மிகுதியான விளக்கங்கள் உள்ளன. ஒரு தளத்திலேயே அல்லது ஓர் அகராதியிலேயே அல்லது ஒரு புத்தகத்திலேயே அனைத்து வெருளி குறித்தும் அறிய முடியவில்லை. ஆனால் இதில் பெரும்பாலும் அனைத்து வெருளி வகைகளும் இடம் பெற்றுள்ளன. நாளும் வெருளிகளைப் புதியதாக மருத்துவர்கள் தெரிவிப்பதால் மிக அண்மைய வகைகள் இடம் பெறாமல் இருக்கும்.
 பொதுவாகக் கடந்த நூற்றாண்டில்தான் புதிய வெருளி வகைகள் அறிமுகமாகி உள்ளன. அதிலும் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் மிகுதி. சில நிறங்கள் குறித்த வெருளிகள் குறிக்கப்பட்டிருக்கும். நிறங்கள் எண்ணிக்கை மிகுதி என்பதால் ஒவ்வொரு நிறம் குறித்த வெருளி  எனச் சேர்த்தால் பட்டியல் நீளத்தானே செய்யும்.
பெருமபாலும் கிரேக்க அல்லது இலத்தீன் சொற்கள் அடிப்படையிலேயே வெருளிகள் குறிக்கப்பெறுகின்றன. இசுபானிசு, பிரெஞ்சு முதலான சில மொழிச்சொற்கள் அடிப்படையிலும் வெருளிகள் குறிக்கப்படுகின்றன.
மூலச் சொற்களைப் பயன்படுத்தாமல் ஆங்கிலத்தில் குறிக்கையில் ஆங்கிலத்திலும் பிற மொழிகளில் குறிக்கையில் அவ்வமொழிகளிலும் குறிக்கலாம். ஆனால் அவ்வாறு குறித்தால் கலைச்சொற்கள் போல் தோன்றாது, நோய்மீதான அச்சம் வராது என அவ்வாறே குறிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சான்றாக  fear of dirty  என்றால் அழுக்கு மீதெல்லாம் அச்சமாம், நோயாம் எனக் கருதி இதனைப் புறக்கணிக்கலாம். Mysophobia என்று சொன்னால்தான் ஏதோ நோய் வந்துள்ளது என்று அஞ்சி அதனை அகற்ற முயல்வர் அல்லது மருத்துவர் கருத்துகளுக்கு மதிப்பளிப்பர் என்றும் எண்ணலாம். ஆனால், இங்கே மூலச்சொற்கைள அப்படியே பயன்படுத்தாமல் தமிழில் உள்ள பொருள் அடிப்படையிலேயே முழுத் தனித்தமிழ்க் கலைச்சொற்களாகத் தந்துள்ளேன்.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் (திருக்குறள் 428)
எனத் திருவள்ளுவர் கூறியுள்ளதன் காரணம் அஞ்ச வேண்டியதற்கு நாம் அஞ்ச வேண்டும் என்றுதான்.
“அஞ்சி அஞ்சிச் சாவார் – இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே”
 எனப் பாரதியார் கூறுவதுபோல் எதைக்கண்டாலும் அஞ்சுவோர் உள்ளனர்.
சிப்பாயைக் கண்டஞ்சுவார்ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்
துப்பாக்கி கொண்டொருவன்வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்
அப்பால் எவனே செல்வான்அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற்பார்
எனப் பாரதியாரே அவர் கால அச்சங்களைப்பற்றிக் கூறியுள்ளார். அடக்குமுறை ஆட்சிகளில் இன்றும் இவை இருக்கத்தான் செய்கின்றன.
கவலை, அச்சம், வெறுப்பு யாவையுமே அளவோடு இருந்தால் இயல்பானவையே! ஆனால் மட்டுமீறும் பொழுதுதான் நோயாக மாறுகிறது. சான்றாகக் கைகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்று கைகளைக் கழுவுவது  தேவையான ஒன்று. தூய்மைக்கேடு உடல்கேட்டை உருவாக்கும் என்று கவலைப்படுவதோ அச்சப்படுவதோ அதனால் தூய்மையின்மைச் சூழல் குறித்து வெறுப்பு ஏற்படுவதோ சரிதான். ஆனால், இதையே எண்ணி அஞ்சினால் என்னாகும்? சிலர் ஓயாமல் கைகளைக் கழுவுவர். இப்பழக்கம் பித்துப்பழக்கமாக(மேனியா) மாறிவிடுகிறது. இந்த அளவில் நின்றால் கூட ஒன்றுமில்லை. ஆனால், இது தொடர்பான கவலைகளை வளர்த்துக்கொண்டு அறிவிற்குப் பொருந்தாக, பேரச்சம் கொள்வர். அப்பொழுதுதான் இது வெருளி-அச்சநோய் ஆகிறது.
நெஞ்சு படபடப்பு, தலைசுற்றல், மிகுதியாக வியர்த்தல், மயக்கம், உடற்சோர்வு, மரண அச்சம்  போன்ற பலவும் வெருளிநோயர்க்கு ஏற்படும்.
அமெரிக்க மனநலக் கழகம்(APA-American Psychiatric Association) வெருளிகளை மூன்று பகுப்பில் அடக்குவர். அவற்றின் அடிப்படையில், நாம்
1. தனிப்பண்பு சார்ந்தவை
2. குமுகம்(சமூகம்) சார்ந்தவை   3. பிற
எனப் பகுக்கலாம்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்