(வெருளி அறிவியல் 1 இன் தொடர்ச்சி)

வெருளி அறிவியல்  –  2
(Science of fear or Phobia)
(அச்ச நோய் வகைகள் எனப்படும் வெருளி வகைகள்)
ஒரேவகை வெருளி ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. ஒரே நேரத்தில் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு வல்லுநர்கள் ஆராய்வதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை எல்லாம் ஒரே வகையாகக் குறித்துள்ளேன். நான் இதற்கு முன்பு வெருளி வகைகளைக் குறிப்பிட்டுப் பட்டியல் அளித்துள்ளேன். எனினும் இப் பொழுது அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றில் சேர்த்து மாற்றியுள்ளேன்.
ஆங்கிலத்தில், மருத்துவர்கள் விளக்கம், வெருளி நோய் குறித்த வினாக்களும் தொடர்பான விளக்கங்களும், தனித்தனி வெருளிக்கான தளங்கள், காணுரைகள், கட்டுரைகள், புத்தகங்கள் எனப் பல உள்ளன. தமிழில் அவ்வாறில்லை. எனினும் மன நோய் அல்லது மனநலம் குறித்த தமிழ் நூல்களில் வெருளிபற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. நான் முதலில் 2002 இல் இது குறித்து எழுதியபின்னர்தான் பல இதழ்களிலும் இது குறித்த விளக்கங்களை மிகுதியாகக் காண முடிகிறது. சிலர் நான் அளித்த பட்டியலை அவ்வாறே இணையத்தளங்களில் அல்லது இதழ்களில் தத்தம் பெயரைக் குறிப்பிட்டு வெளியிட்டும் உள்ளனர். சிலர் சில கலைச் சொல் விளக்கங்களைப் பயன்படுத்தி அவற்றைத் தனித்தனியே விரித்து எழுதியுள்ள நேர்வும் உள்ளது. எனினும் முழுமையாக எதுவும் இல்லை.
எனவே ஒவ்வொரு வெருளி நோய் குறித்தும் தமிழக வெருளிநோயர்களுக்கு  எவ்வாறு அல்லது எதனால்  நோய் வந்தது, நோயரின் நடவடிக்கை, மருத்துவர் அறிவுரை, மருத்துவக் குறிப்பு என்ற முறையில் கட்டுரைகள், நூல்கள் அமைய வேண்டும்.
அமெரிக்க நாட்டுப்புள்ளி விவரங்கள் அல்லது அங்குள்ள நோயர்கள் நிலை என்பனபோல் பிற நாட்டுச் சூழல் அடிப்படையில் கட்டுரைகள் அல்லது விளக்கங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. தாய்நாட்டுச் சூழலினான படைப்புகளே தேவை என்பதால் அவற்றை எடுத்துக் கூறவில்லை. எனவே மனநல மருத்துவர்களும் வல்லுநர்களும் இந்நோய்க்கு ஆளானவர்களும் இவை குறித்து எழுதிப் பிறருக்கு வழி காட்ட வேண்டும்.
 நாமும் புதிது புதிதாகப் பல வெருளிகளைக் கூற முடியும். தொலைக்காட்சித் தொடர்களைத் தொடர்ந்து பார்த்து வெருளிக்கு ஆளாகிறவர்கள் உள்ளனர். பயிற்சிமொழி தொடர்பான பேரச்சங்கள் பலருக்கு உள்ளன. அயல்மொழிக்கல்வி தொடர்பான பேரச்சங்கள் பலருக்கு உள்ளன. தாய்மொழிக்கல்விகுறித்தும் சிலருக்குப் பேரச்சங்கள் உள்ளன. மனநோய்க்குக் காரணமாக அமையும் மாமியார் வெருளி, மாமனார் வெருளி, மருமகள் வெருளி, மருமகன் வெருளி, பங்காளி வெருளி, செவ்வாய் வெருளி, சனி வெருளி எனப் பலவும் விளக்கப்பட வேண்டும். இவற்றின் அடிப்படையில் கட்டுரைகள் விளக்கங்கள் அமையும்பொழுதுதான் மக்களுக்கு எளிதில் புரியும்.
சில நோய்கள்பற்றிய கட்டுரைகளைப் படிக்கும் பொழுது அவற்றில் குறிப்பிட்டுள்ள நோய்க்குறிகள் தங்களுக்கு இருப்பதாக அஞ்சுவோர் பலர் உள்ளனர். இந்த அச்சமே நாளடைவில் வெருளியாக அவர்களுக்கு மாறி விடுகிறது. இப்படி யெல்லாம் அஞ்சாமல் தொடக்கத்திலேயே அவர்கள் மருத்துவர்களை நாடி அறிவுரை பெறுவதே நல்லது.
வெருளி தொடரபான கருத்தரங்கள் நடத்தியும் நோயர்களிடம் நோயாய்வு நடத்தியும் நோய்வந்த முறை, நலப்படுத்திய முறை குறித்து ஆய்வுரைகள் எழுதியும் பல்வேறு படைப்புகள் வெளிவரவேண்டும். ஆங்கிலத்தில் உள்ள வெருளி குறித்த படைப்புகளைப் பார்க்கும் பொழுது ஒரு வேளை அவர்கள் மிகுதியான அளவில் வெருளிக்குப் பாதிக்கப்படுகிறார்களோ? தமிழ்நாட்டில் அவ்வாறு இல்லையோ என்றும் தோன்றுகிறது.
அமெரிக்கர்களில் 10 விழுக்காட்டினருக்குத் தனிப்பண்பு வெருளி நோய் இருப்பதாக மனநலத் தேசிய நிறுவனம் (National institue of mental health) தரும் ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. அனைத்துவகையிலும் சேர்த்து ஏறத்தாழ 20 விழுக்காட்டினருக்கு வெருளி நோய் இருப்பதாக மற்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது.
இந்தியாவில் பெங்களூருவில் உள்ளது இந்திய மனநல நரம்பியல் நிறுவனம்(NATIONAL INSTITUTE OF MENTAL HEALTH & NEURO SCIENCES). 1847 இல் பெங்களூருவில் நிறுவப்பட்ட பித்தர் புகலிடம் மைசூரு அரசால் 1925 இல் மன நல மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இதனுடன் அனைத்து இந்திய மனநல நிறுவனம் இணைந்து 27.12.1974 இல் இ.ம.ந.நி. (NIMHANS) ஆக உருவெடுத்தது. இந்நிறுவனத்தில் 1979 பணியிடங்கள் உள்ளன(546 ஒழிவிடமாக உள்ளன.) என்னும் பொழுது இதன் பேரளவு புரியும். 2013-14 ஆம் ஆண்டில் 767 ஆய்வுக்கட்டுரைகள்  வெளியிட்டுள்ளது. ஆனால், இரு கட்டுரைகளில்தான் வெருளிகுறித்து முழு ஆய்வு உள்ளது. அப்படியானால் பிற சிறிய நிறவனங்ளில் வெருளி குறித்த ஆய்வுரை எந்த நிலையில் இருக்கும் என எண்ணலாம்.
புள்ளிவிவரங்கள் எதுவும் இன்மையால் மன நலச் சிறப்பு மருத்துவர் செல்வமணி தினகரனிடம் இது குறித்து வினவினேன். பெரும்பாலும் வெருளிநோயர்தான் வருவதாகவும் மித மனநோய் என்று வருபவர்களில் 50 விழுக்காட்டினர் வெருளிநோயால்தான் வருகின்றனர் என்றும் கூறினார். இது தமிழ்நாட்டின் பொதுவான விவரம்.
 உறுதி கொண்டு அஞ்சாமையுடன் எதையும்எதிர் கொண்டால் வெருளி நோய்களுக்கு இடமில்லை.
‘பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்’ என்னும் என் நெடுங்கட்டுரையில் குறித்த பின்வரும் செய்திகள் இக்கட்டுரைக்கு ஏற்றதாக உள்ளதால் குறிப்பிடுகின்றேன்.
யார்க்கும் அஞ்சாதேஎதற்கும் அஞ்சாதே!
  இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்தில் வாழ்ந்த பாரதியார், மக்களின் அடிமைத்தனத்திற்குக் காரணம் அச்சமே என்பதை உணர்ந்தார். எனவே, அச்சப்பேயை விரட்டுமாறு பல இடங்களில் வலியுறுத்துகிறார்.
அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்
(பாரதியார் கவிதைகள் பக்கம் 98/ விநாயகர் நான்மணிமாலை)
என்கிறார்.
எதற்கும் அஞ்ச வேண்டா என்பதற்காக,
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே!
(பக்கம் 180/ பண்டாரப்பாட்டு)
என்கிறார். கூற்றுவனைக் கண்டும் அச்சமில்லை என்பதற்காக அவர்,
காலாஉனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன்
காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்
(பக்கம் 183/காலனுக்கு உரைத்தல்)
என அறைகூவல் விடுக்கிறார். மேலும்,
மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன்
 மாரவெம் பேயினை அஞ்சேன்
   (பக்கம் 133/ மகாசக்தி பஞ்சகம்)
என்று கூறுகிறார். இவ்வாறு அஞ்சாமையை வலியுறுத்தும் பாரதியார் ஆத்திசூடியிலும் அதற்கான கட்டளைகளைப் பின்வருமாறு விடுக்கத் தவறவில்லை.
அச்சம் தவிர் (.சூ.1)
கீழோர்க்கஞ்சேல் (.சூ.16)
சாவதற்கு அஞ்சேல் ((.சூ. 26)
கொடுமையை எதிர்த்து நில் (.சூ. 22)
தீயோர்க்கு அஞ்சேல் (.சூ. 45)
பேய்களுக்கஞ்சேல் (.சூ. 72)
தொன்மைக்கஞ்சேல் (.சூ. 51)
ரௌத்திரம் பழகு (.சூ. 96)
வெடிப்புறப்பேசு (.சூ.107)
அச்சம் ஒழி எனக் கூறாமல், அச்சம் தவிர் எனப் பாரதியார்   கூறியது ஏன் என எண்ணலாம். முதலில் குறிப்பிட்டதுபோல் அஞ்சவேண்டிய நேர்வுகளில் அச்சம் இன்றியமையாததாக உள்ளதுதான் காரணம்.
   கீழோர்க்கு அஞ்சுவதாலும் தீயோர்க்கு அஞ்சுவதாலும், பிறருக்கு அஞ்சித் தாழ்ந்து நடந்து பிறரின் தவறுகளுக்கு நாம் உடந்தையாகி விடுகிறோம். எனவேதான் சீறவேண்டிய இடத்தில் சீற வேண்டும் என்பதற்காகச் சீறுவோர்க்குச்சீறு (ஆ.சூ.28) என்கிறார். தீயரைக் கண்டால், எதிர்க்கும் துணிவு வேண்டுமே அன்றி அஞ்சிப் பணிதல் கூடாது என்பதற்காகவே குழந்தைப் பருவத்திலேயே இவ்வுணர்வைப் பின்வருமாறு விதைத்தவர் அல்லவா பாரதியார்.
பாதகம் செய்பவரைக் கண்டால் நாம்
பயங் கொள்ளல் ஆகாது பாப்பா 
மோதி மிதித்துவிடு பாப்பா  அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா (பக்கம் 203 / பாப்பா பாட்டு)

மேலும் மக்களின் அச்சம் கண்டு
அஞ்சி அஞ்சிச் சாவார்  இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
(பக்கம் 36 / பாரதச் சங்கத்தின் தற்கால நிலை)
என உள்ளம் நைந்தவர் அல்லவா பாரதியார். எனவே, ஆத்திசூடியில் மேற் குறித்தவாறு பல வகை அச்சங்களை ஒழிக்கக் கூறியதில் வியப்பில்லை.
இவற்றின் மூலம் அச்சத்திற்கு எதிரான உணர்வை நாம் வளர்த்துக் கொண்டாலே வெருளி நோய் நம்மை அண்டாது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்