(வெருளி நோய்கள் 471-475 : தொடர்ச்சி)

பல்லி, பாம்பு முதலான ஊர்வனமீதான அச்சமே ஊர்வன வெருளி.
விலங்கு வெருளி, சிலந்தி வெருளி போன்றதே இதுவும்.

‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பார்கள். இயல்பிலேயே அச்ச உணர்வு உள்ளவர்களுக்குப் பாம்பு முதலான ஊர்வன மீது பேரச்சம் வருவது இயற்கைதானே.
பாம்பை அடித்துவிட்டு அது தப்பித்துச் சென்று விட்டால் மீண்டும வந்து பழிவாங்கும்; ஒரு பாம்பைக் கொன்றால் அதன் துணை நம்மைத் தேடி வந்து கொல்லும்; கொம்பேறி மூக்கன் என்னும் பாம்பு கொத்திய பிறகு மரத்தில் ஏறி உயிர் போகிறதா என்பதைப் பார்த்து உறுதி செய்த பின்னரே திரும்பப் போகும் என்பன போன்ற நம்பிக்கைகள் உள்ளவர்கள் உள்ளனர். அந்த அச்சத்தைப் பெருக்கும் வண்ணம் கதைகள், தொலைக்காட்சிப் படங்கள், திரைப்படங்கள் உள்ளன. சில பாம்புகளை அடித்தால் அதன் இரத்தம் நம் உடலில் பட்டால் தோல் புண்ணாகும் என அஞ்சுவர்.

உலகளவில் 3,458 வகை பாம்பு வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் 200 வகையான பாம்புகள் மட்டுமே மனிதனைக் கொல்லும் அளவுக்கு நஞ்சுடையவை என்கின்றனர். மொத்தத்தில் நூற்றில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானவையே நச்சு வகையின என்றும் கூறுகின்றனர். ஆனால், பாம்பு கடித்துப் பாம்பினால் இறந்தவர்களைவிட அதனால் அச்சம் கொண்டவர்களே மிகுதியும் இறக்கிறார்கள்.
பல்லி தலையில் விழுந்தால் மரணம் என்பனபோன்ற பல்லி விழும் பலன்களின் நம்பிக்கை கொண்டவர்கள் பல்லிகள் மீது பேரச்சம் உள்ளவர்களாக உள்ளனர்.

ஊர்வன என்றால் பாம்பு மட்டும் அல்ல. ஆமை, முதலை, பல்லியோந்திகள், ஓணான், உடும்பு, பிடரிக்கோடன், மூமா (டயனோசர்) எனப் பல வகைகள் உள்ளன என நாமறிவோம். ஒட்டு மொத்த ஊர்வன மீது பேரச்சம் இருக்கும் என்று எண்ணத் தேவையில்லை. ஒவ்வொருவருக்கு ஒன்று அல்லது சில மீது மட்டும் பேரச்சம் இருக்கும்.
படகில் செல்லும் பொழுது முதலை வந்த படகைக் கவிழ்த்துவிடும் அல்லது பாய்ந்து வந்து கையைக் கெளவி விடும் என்பன போன்று பேரச்சம் கொள்வோர் உள்ளனர். இவைபோல்தான் பிற ஊர்வன குறித்த அச்சம் யாவும் தேவையற்ற கவலைகளாலும் சிந்தனைகளாலும் வருகின்றன.

பழங்கிரேக்கத்தில் herpetளn என்றால் ஊர்வன என்பது பொருள்.

00

ஊறுபொதி பண்ணியம்(fajitas)பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ஊறுபொதி வெருளி.
ஊறுபொதி பண்ணியம் என்பது, இறைச்சி அல்லது காய்கறிகளை நெருப்பில் சுட்டுப் பணியாரம்போன்ற உணவில் பொதிந்து ஊற வைத்துக் காரமாகத் தரப்படும் உணவு. கீற்றாக வழங்கப்படுவதால் பண்ணியக் கீற்று எனக் குறிக்கப்பெறுகிறது.
faja என்றால் இசுபானிய மொழியில் கட்டு என்றும் கீற்று என்றும் பொருள்கள்.
Fajita என்றால் இலத்தீன் மொழியில் கட்டு என்று பொருள்.
00

தன்னுடைய தோற்றத்தில் ஊனம் இருப்பதாக அஞ்சுவதே ஊன வெருளி.

உடல் இயல்பு மீறிய ஒழுங்கின்மை (உ.இ.ஒ.)[body dysmorphic disorder (BDD)] எனக் குறிக்கப்படுவதும் உண்டு. இது ஒரு வகை மன நோய் போன்றதாகும். உடலில் ஒழுங்கற்ற போக்கு இருப்பதாகக் கவலைப்படுவது. குறிப்பாக நிறம், முடி, பரு, மூக்கு போன்றவை சரியாக அமையவில்லை அல்லது அழகாக அமையவில்லை என எண்ணி ஊனநிலையாகக் கருதி அஞ்சுவது. உருத்திரிபு வெருளி என்றும் சொல்லலாம்.
இத்தகையோர் தம்முடைய தோற்றத்தால் நல்ல திருமண வாழ்க்கை அமையாது, நல்ல வேலை கிடைக்காது, அடுத்தவர் ஏளனத்திற்கு ஆளாக நேரிடும் என்பன போன்ற கவலைகளால் பேரச்சம் அடைகின்றனர்.