(வெருளி நோய்கள் 476-478 தொடர்ச்சி)

எகல் என்பவர் கோட்பாடு குறித்த வெறுப்பும் பேரச்சமும் கொள்வதே எகலிய வெருளி.
கியோர்கு வில்ஃகெம் பிரீட்ரிக்கு எகல் (Georg Wilhelm Friedrich Hegel)(1770 – 1831) என்பவர் புகழ்மிக்க இடாய்ச்சு நாட்டு (செருமனிய) மெய்யியல் அறிஞர் ஆவார். இவரது கருத்துகளுக்கு ஆதரவு இருந்தது போல் சிலர் காரணமற்ற மிகை பேரச்சமும் கொண்டிருந்தனர்.
00

எகித்து (Egypt), எகித்து மக்கள், எகித்து தொடர்பானவை மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் எகித்து வெருளி.
எகித்திய வெருளி பல்வேறு வகைகளில் வெளிப்படும். குறிப்பாக வரலாறு, பண்பாடு, நாகரிகம் தொடர்பான எகித்திய இடங்கள் குறித்த தேவையற்ற பேரச்சம் எழுகிறது.
“Aigyptos” என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் எகித்து.
00

எக்காளம் / ஊதுகொம்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் எக்காள வெருளி.
இசை வெருளி உள்ளவர்களுக்கு எக்காள வெருளி வர வாய்ப்பு உள்ளது.
00

எக்குசு (எகசு) ( X ) என்னும் ஆங்கில எழுத்தின் மேல் உள்ள அளவுகடந்த பேரச்சம் எகசு எழுத்து வெருளி.
எக்குசு என்பது கணக்கில் பயன்படுத்தப்படுவதாலும் புதிர் எழுத்தாகப்பயன்படுத்தப்படுவதாலும் ஊடுகதிர் எக்குசு கதிர் எனச் சொல்லப்படுவதாலும் அவ்வவற்றின்மீது வெறுப்பு உள்ளவர்களுக்கு
எக்குசு எழுத்தின்மீதும் அளவுகடந்த பேரச்சம் வருகிறது.
00

எச்சரிப்பொலி குறித்த வரம்பற்ற பேரச்சம் எச்சரிப்பொலி வெருளி.
எச்சரிப்பொலி கேட்டதும் பேரிடர் வந்து விட்டதாகவே கருதித் தேவையற்ற அளவு கடந்த பேரச்சத்திற்கு ஆளாவோர் உள்ளனர்.

00