(வெருளி நோய்கள் 529-533: தொடர்ச்சி)

ஏளனமாகப்(Ridicule) பேசப்படுவது குறித்த பேரச்சம் ஏளன வெருளி.
பொதுவிடங்களில் ஏளனமாகப் பேசப்படுவோம் என்று அஞ்சுதல்; இதனால் தரம் தாழ்த்தப்பட்டதாக வருந்துதல்; தன் மதிப்பு குறைவதாகப் பேரச்சம் கொள்ளல்; கேலிப்பொருள் ஆக்கப்பட்டதாக வருந்துதல் ஆகியன இத்தகையோருக்கு ஏற்படும்.
தலைக்குனிவிற்கு ஆளாவோம் என்ற அச்சம், தாழ்வு மனப்பான்மை, தன்மதிப்புக் குறைப்பிற்கு ஆளாவோம் என்ற கவலை போன்ற வற்றால் கேலி செய்யப்பட்டாலும் கேலி செய்யப்படுவோம் என எண்ணினாலும் இப்பேரச்சம் வருகிறது.
தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், தங்களைப் பிறர் ஏளனமாக எண்ணுவதாகக் கருதி ஏளன வெருளிக்கு ஆளாவதுண்டு.
பாகப்பிரிவினை’ திரைப்படத்தில் கண்ணதாசனின் “பிள்ளையாரு கோயிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும் பிள்ளையாரு இந்தப் பிள்ளை யாரு” என்னும் பாடலில், “நொண்டிக்கை, ஊளைமூக்கு” என்றெல்லாம் கேலி செய்து பாடுவதுபோல் வரும். எதிர்ப்பாட்டு பாடினாலும் இவ்வாறான கேலிக்காக அஞ்சுவது கதைத்தலைவனின் இயல்பு. அதுபோல் ‘பதினாறு வயதினிலே’ திரைப்படத்தில் தன் நாயகி கூறிய பின்னர், ‘சப்பாணி’ எனக் கேலி செய்வதால் நாயகனுக்குச் சினம் வரும். இவை போன்ற சூழலில் அடுத்தவர் கேலி செய்வதால் வெளியில் தலை காட்ட அஞ்சுதல், அடுத்தவருடன் பழகத் தயங்குதல், தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாதல் போன்ற நிலைகள் வரும்.
‘பாகப்பிரிவினை’ திரைப்படத்திலேயே கண்ணதாசனின்
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்,
தரத்தினில் குறைவதுண்டோ?,
உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்,
அன்பு குறைவதுண்டோ?,
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்,
தரத்தினில் குறைவதுண்டோ?,
உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்,
அன்பு குறைவதுண்டோ?,
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்,
சீற்றம் குறைவதுண்டோ?,

என்று பாடல் வரும். இதுபோல் தன்னம்பிக்கை ஊட்டுவோர் இருப்பின் ஏளன வெருளி / கேலி வெருளி காணாமல் போகும்.
மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், மந்தப்புத்தியினர் போன்றவர்களை எல்லாம் கேலிசெய்யாமல் பரிவுடன் அணுகினால் யாருக்கும் ஏளன வெருளி ஏளன வெருளி / கேலி வெருளி வராது.
வன் சீண்டல்(raging) சூழலில் உள்ளவர்கள் இவ்வெருளிக்கும் ஆளாகிறார்கள்.
ஏளன வெருளி எனவும் கேலி வெருளி எனவும் தனித்தனியாகக் குறிக்கப்பெறுவனவற்றை ஒத்த தன்மை கருதி இணைத்துள்ளேன்.
cata என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் (கீழ்)மட்டமாகக் கருதுதல். அஃதாவது ஏளனம்/கேலி.
gelo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சிரித்தல். ஏளனமாக எள்ளி நகையாடலைக் குறிக்கின்றன.
00

எதையேனும் பெறுவது குறித்தான அளவுகடந்த பேரச்சம் ஏற்கை வெருளி.
பசுவின் தேவைக்காக, நம் முயற்சியில் பெறாமல் அடுத்தவரிடம் தண்ணீர் கேட்பதையும் பிச்சை என்று இழிவாகக் கூறுகிறார் திருவள்ளுவர். எனவே,
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்
.(திருக்குறள் 1066)
என்கிறார் திருவள்ளுவர். ஏற்பதை மறுத்து ‘இரவச்சம்’ என ஓர் அதிகாரமே அவர் படைத்துள்ளார்.
ஏற்பது இகழ்ச்சி(ஆத்திசூடி 8)
என்கிறார் ஒளவையார்.
இவ்வாறு பெறுவது தொடர்பான வெறுப்புரைகள் தமிழில் உள்ளன. அந்தவகையில் பெறுவது குறித்த அச்சமாக இஃது இருந்தாலும் நன்றுதான்.
கையூட்டு பெறுவதற்குப் பலர் அஞ்சுவதில்லை. என்றாலும் அச்சசூழலிலும் பேரச்சம் கொண்டு சித்தம் கலங்குவோர் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.
மணக்கொடை பெறுவதில் பேரச்சம் கொண்டு மனம் நலிவுற்றவர்களை மன நல மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டும்.
00

ஏற்புடைமை அல்லது சரியாக இருத்தல் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் ஏற்புடைமை வெருளி.
அரசியல், சமயம், மெய்யியல், தனிப்பட்ட நம்பிக்கைகளால் இவ்வெருளி ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.
ortho என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஏற்புடைமை/ சரியான.
00

ஏனங் கழுவி(dishwasher) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஏனங் கழுவி வெருளி.
ஏனங்கழுவி சரியாகச் செயல்படாது, ஏனங்களை ஒழுங்காகத் தூய்மை செய்யாது, செயல்பாட்டின் இடையே பழுதாகிவிடும் என்பனபோன்ற தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.
00

ஐங்னோணம் குறித்த அளவுகடந்த பேரச்சம் ஐங்கோண வெருளி.
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் படைத்துறைத் தலைமையகத்தின் பெயர் பெண்டகன்(The Pentagon). வெர்சீனியாவின் ஆர்லிங்டனில் உள்ள இதன் கட்டடம் ஐங்கோண வடிவிலானது. சிலர் இதை ஐங்கோண(பெண்டகன்) வெருளி என்கின்றனர். கனவுத் தீவிற்கான சண்டை(Battle For Dream Island) என்னும் வலைத் தொடரில் உள்ள பாத்திரங்களின் அடிப்படையிலும் இவ்வெருளியைக் கூறுகின்றனர். எனினும் அடிப்படை ஐங்கோண வடிவு என்பதால் ஐங்கோண வடிவம் மீதான தேதவையற்ற அளவு கடந்த பேரச்சம் என்பது எல்லாவற்றிற்கும் பொருந்தும். அதே நேரம் அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு அஞ்சுவோர் பெண்டகன் மீது பேரச்சம் கொள்வது இயற்கைதான்.
00