Thursday, August 30, 2012

குருதி (Blood)

குருதி (Blood)

- இலக்குவனார் திருவள்ளுவன்

ஆகத்து 30, 2012    13:40  இந்தியத் திட்ட நேரம்


குருதி (blood) உடலில் ஓடும் செந்நிற நீர்மம். எனவே, செந்நீர் என்றும் சொல்லப்பெறும். சிவப்புநிறத்தைக் குறிக்கும் அரத்தம் என்னும் சொல்லும் இதனடிப்படையில் இரத்தம் என்னும் சொல்லும் குருதியைக் குறித்து வழங்கப்படுகின்றன.

உணவுப்பொருள்கள், மூச்சு வளிகள், உரனிகள்(vitamin) ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லக் குருதியோட்டம் பயன்படுகின்றது. நுரையீரலில் இருந்து அனைத்து மெய்ம்மிகளுக்கும் உயிர்வளியை எடுத்துச் செல்வதும் திரும்புகையில் மெய்ம்மிகளில் இருந்து கரிவளியை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் குருதிதான். குருதி ஓட்டத்தின் துணை இன்றி உடலின் எப்பகுதியும் இயங்க முடியாது. குருதி ஓட்டம் நின்றால் உடல் இயக்கம் நின்று விடும்.

நெஞ்சமும் குருதிக் குழாய்களும் கொண்ட மண்டலம் சுழல் மண்டலம் எனப்பெறும். ஒரு சுழற்சியில் குருதியின் பயணத் தொலைவு நூற்றுப் பத்தொன்பதாயிரம் அயிரைக்கல்(கிலோமீட்டர்). குருதிக் குழாய்களுக்குள் செல்கையில் அதன் வேகம் மணிக்கு 65 அயிரைக்கல்.

மனித உடலில் ஓடும் நீர்மத்தில் நீர் 79% கண்ணறைகள் 12% புரதம் 7%, ஏனைய கெட்டிப் பொருள்கள் 2% அடங்கியுள்ளன. குருதி நீர்மமாக இருந்தாலும் மிகமிக நுண் திடப்பொருள்கள் பல இதில் கலந்துள்ளன. இவை செவ்வுயிர்மிகள், வௌ்ளுயிர்மிகள், குருதித்துணுக்கிகள்(plate-lets) ஆகும். எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி என்பகி (Bone Marrow) இருக்கும். என்பின் (எலும்பின்) அகத்தில் (உள்ளே)உள்ளதால் இதனை என்பகி என்று சொல்லலாம். என்பகியில் செவ்வுயிர்மிகள், வெள்ளுயிர்மிகள்,குருதித்துணுக்கிகள் உற்பத்தியாகின்றன.

ஒரு துளிக் குருதியில் பலகோடி செவ்வுயிர்மிகள் உள்ளன. செவ்வுயிர்மிகள் வட்டமாகவும் சுற்றித் தடித்தும் நடுவே மெலிந்தும் காணப்படும். வௌ்ளுயிர்மிகள் செவ்வுயிர்மிகளைவிடப் பெரியவை. 500 முதல் 1000 செவ்வுயிர்மிகளுக்கு 1 வௌ்ளுயிர்மி என்னும் விகிதத்தில் இவை குருதியில் கலந்துள்ளன. வௌ்ளுயிர்மிகள் மாறிக்கொண்டே இருக்கும் உருவத்தை உடையன. உடலில் காயம் ஏற்பட்டால் வெளியேறும் குருதியை உறையச் செய்து நிறுத்த உதவுவனவே குருதித் துணுக்கிகள் ஆகும்.

செவ்வுயிர்மிகளின் நிலைப்புத்தன்மை ஏறத்தாழ மூன்று திங்கள் மட்டுமே. எனவேதான், நல்வாழ்வுநிலையில் உள்ளவர் மூன்று திங்களுக்கொருமுறை குருதிக் கொடை வழங்கலாம் என்கின்றனர். உடலுக்குள் நுழையும் நோயுயிரிகளை எதிர்த்துப் போராடும் படை வீரர்களாகத் திகழ்பவை வெள்ளுயிர்மிகளே! உடலில் காயம் ஏற்பட்டவுடன் குருதிக்கசிவைத் தடுப்பன குருதித்துணுக்கிகள்.

குருதியில் உள்ள செவ்வுயிர்மியில் காவுநீரி (ஈமோகுளோபின்/haemoglobin)உள்ளது. இவ்வேதிப்பொருளே குருதிக்குச் செந்நிறத்தை அளிக்கிறது. காவுநீரி உயிர்வளியைச் சுமந்து செல்கிறது. காவுதல் என்றால் சுமத்தல் எனப் பொருள். காவினெம் கலனே என்பார் புலவர் ஔவையார்(புறநானூறு 206: 10). தோளில் சுமந்து செல்வதற்குப் பயன்படும் கம்பு அல்லது தடிக்குக் காவடி எனப் பெயர். இதனடிப்படையில்தான் காவடியும் வந்தது. காவுதல் அடிப்படையில் காவி எனக் குறிப்பிட்டால் காவி நிறம் எனத் தவறாகப் பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே காவும் பணிபுரியும் நீர்மஉட்பொருளைக் காவுநீரி எனலாம். குருதியில் இதன் எண்ணிக்கை குறைந்தால் குருதிச் சோ‌கை ஏற்படும்(anemia). குருதியில் காவுநீரி ஆண்களுக்கு 14-18கா(கிராம் ) அளவிலும், பெண்களுக்கு 12-16கா (கிராம் ) அளவிலும் இருக்கவேண்டும்.

குருதியில் செவ்வுயிர்மிகள்,வெள்ளுயிர்மிகள், குருதித்துணுக்கிகள்(Platelets) ஆகியவற்றுடன் நீர்ம நிலையில் வைக்கோல் நிறத்தில் குருதிநீரம்(plasma) உள்ளது. குருதிநீரம் நீர்ம இயல்பில் இருப்பினும் புரதப்பொருட்கள், தாதுப்பொருட்கள், செரித்த உணவுப்பொருட்கள், கழிவுப்பொருட்கள் முதலான நூற்றுக்கணக்கிலான வேறுபொருட்களும் உள்ளன.

1900 ஆம் ஆண்டில் அறிஞர் இலான்சுடைனர் என்பவர் குருதிப் பிரிவுகளைக் கண்டு பிடித்தார். குருதி பொதுவாக நான்கு வகைப்படும். அவை ஏ, பி(B), ஓ, ஏபி ஆகிய ஆங்கில எழுத்துகளில் குறிக்கப்படுகின்றன. நாம் தமிழ் நெடில் எழுத்துகளைக் கொண்டு ஆ, ஈ, ஊ, ஆஈ என நால்வகையாகக் குறிக்கலாம். ஒருவருக்குக் குருதிப் பற்றாக்குறை ஏற்படும் பொழுது பிறரின் உடலிலிருந்து குருதியைப் பெற்று ஏற்றலாம். என்றாலும் எல்லாருக்கும் எல்லாவகைக் குருதிகளும் ஒத்தப்போகா. எவ்வகைக் குருதி உடையவருக்கு எவ்வகைக் குருதி செலுத்தப்படலாம் என்ற விவரம் வருமாறு:

உடலில் உள்ள குருதி வகை - ஒத்திணையும் குருதி வகை

ஆ - ஆ அல்லது ஊ

ஈ - ஈ அல்லது ஊ

ஊ - ஊ மட்டும்

ஆஈ - ஆஈ, ஆ, ஈ, ஊ

அந்தந்தக் குருதி வகை அந்தந்தக் குருதிக்கு ஒத்துப்போகும்; ஊ வகைக் குருதி எல்லா வகைக் குருதிகளுக்கும் ஒத்துப் போகும்; அதனால் இவ்வகைக் குருதியினரைப் பொதுநிலைக் கொடைஞர் எனலாம். எல்லா வகைக் குருதிகளும் ஆஈ வகைக் குருதிக்கு ஒத்துச் சேரும்; எனவே இவ்வகையினரைப் பொதுநிலை ஏற்குநர் எனலாம்.ஊ வகைக் குருதிக்கு ஊ வகைக் குருதி மட்டுமே ஏற்கும். பிற வகைக் குருதி ஒத்துப் போகாது.

குருதிவகைப்படி ஆ வகையினர் 42%ம் ஈ வகையினர் 8%ம், ஆஈ வகையினர் 3%ம், ஓ வகையினர் 47%ம் அமைந்துள்ளனர். இவை தவிர ஆ1, ஆ 2 என ஆவகைக் குருதித் துணைவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

குறுவால் குரங்கினத்தின் (Rhesus) செவ்வுயிர்மிகளில் உள்ள புரதம் போன்ற காரணி இருந்தால், கு.கு.நேர்மம் (Rh positive) என்றும் இல்லாவிட்டால் கு.கு. எதிர்மம் (Rh negative) என்றும் சொல்வர். கு.கு. காரணிகளில் 50 வகைக் குழுமுறையைக் கண்டறிந்துள்ளனர்.

நெஞ்சிலிருந்து குருதிக் குழாய்கள் வழியாகக் குருதி பாய்ந்து செல்கிறது. இதனால் குருதிக்குழாய்ச் சுவர்களில் ஓர் அழுத்தம் ஏற்படுகிறது. இதுவே குருதி அழுத்தம் ஆகும். குருதியால் நாடிச் சுவர்களில் உண்டாகும் ஓசை மூலம் குருதி அழுத்தத்தை உணரலாம். இயல்பாக 120 க்கும் 80க்கும் இடைப்பட்டுக் குருதி அழுத்த அளவு இருக்க வேண்டும். குருதி அழுத்தத்தை அளக்கும் கருவி குருதி அழுத்தமானி. குருதி அழுத்தம் மிகுதியானால் நெஞ்சமும் மிக விரைவாக வேலை செய்யும். இதனால் இதயத்துடிப்பு சட்டென்று நிற்கக்கூடும். இதுவே மாரடைப்பு எனப்படுகிறது.

குருதி அழுத்தம் குறைவானால் மிகுதியான களைப்பும் தளர்ச்சியும் ஏற்படுகிறது. மனக்கவலை, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரக நோய்கள் போன்றவற்றால் குருதி அழுத்தம் மிகுதியாகும். இதனால் நுரையீரல்கள்,சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகளுக்கு ஊறு நேரலாம். எதைக் கண்டும் தளராத மன உறுதியும் அமைதியாய் எதையும் எதிர்கொள்ளும் மெல்லுணர்வும் இருப்பின் குருதி அழுத்தம் சீராகவே இருக்கும்.

மனநலம் நம்முயிர் காக்கும்!
 
நன்றி : புத்தறிவியல்

1 comment:

  1. அருமை, அழகுதமிழுடன் அறிவியலும் - தொடர்க. நன்றி - குமரன்.

    ReplyDelete