(வெருளி நோய்கள் 66-70 தொடர்ச்சி)

71.) 19 ஆம் எண் வெருளி – Enneaidekaphobia / nonadecaphobia
19 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 19 ஆம் எண் வெருளி.
கிரேக்கத்தில் ennea என்றால் 8, deca என்றால் 10. சேர்த்துக் குறிப்பிடும் பொழுது 19 ஐக் குறிக்கிறது.
இலத்தீனில் nona என்றால் 9, deca என்றால் 10. இவையும் சேர்ந்து 19ஐக்குறிக்கின்றன. 13 ஆம் எண் மீதான பேரச்சம் வரும் முன்னரே 19 என்பதைத் தீப்பேறு(unlucky) எண்ணாகக் கருதி அஞ்சினர். அகவை 19 என்பது அருவருப்பானது அல்லது சீர்கேடானது என்பது சிலரின் பேரச்சம். இரண்டு உலகப்போர்களும் 1900களில் நடைபெற்றதாலும்19 என்பது குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
1999 என்பதை 19 ஐக்குறிக்காமல் 99 என்று மட்டும் குறிப்பிடுவர். 19 ஆம் பிறந்தநாளை 18 அல்லது 20 ஆவது பிறந்த நாள் என்றே இத்தகையோர் குறிப்பிட்டு அவ்வாறே கொண்டாடுவர்.
00
72.) 191 ஆம் எண் வெருளி – Hekatenenekontahenophobia
191 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 191 ஆம் எண் வெருளி.
கிரேக்கத்தில் hekato என்றால் 100, enenekonta என்றால் 90, hen என்றால் 1 எனப் பொருள். 11 ஆம் எண் வெருளி உள்ளவர்கள் 191 இன் கூட்டுத்தொகை 11 என்பதால் இதைக் கண்டும் பேரச்சம் கொள்வர். 191 என்பதை மாற்றியமைத்தால் உருவாகும் 911 குறித்தும் பேரச்சம் கொள்வர். பறத்தி எண் 191 பல நேர்ச்சிகளைச்சந்தித்ததாலும இந்த எண் மீது பேரச்சம் உள்ளது. 191 குறித்த மூடநம்பிக்கையால், வான் பயணத்திற்கு இந்த எண் ஏற்றதல்ல எனக் கருதி, அமெரிக்க வான் நிறுவனம், தெல்டா வான் நிறுவனம் ஆகியன பறத்தி எண் 191 என்பதைத் தடை செய்து விட்டன. பறத்தி எண் 191 இல் பேய்,பிசாசுகள் தங்கியிருப்பதாகவும் சிலர் பேரச்சம் கொள்கின்றனர்.
00
73.) 2 ஆம் எண் வெருளி – Dyophobia / diphobia / duophobia
2 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 2 ஆம் எண் வெருளி.
கிரேக்கத்தில் dyo என்றால் 2 எனப் பொருள்.
இரண்டாகப் பிரியக்கூடியவை மீதும் இருமை வகைப்பாடு மீதும் இத்தகையோருக்குப் பேரச்சம் வரும். இணையாக அல்லது சோடியாக இருப்பனவற்றின் மீது பேரச்சம் கொள்வர். முதாலம் இணையில் இருந்து ஒன்றையும் அடுத்த இணையில் இருந்து ஒன்றையும் பயன்படுத்துவர். சான்றாகக் காலுறை அணிவதாக இருந்தால், ஒவ்வொரு காலுக்கு வெவ்வேறு நிறம் கொண்டவற்றை அணிவர்.
00
74.) 20 ஆம் எண் வெருளி – Vigintiphobia
20 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 20 ஆம் எண் வெருளி.
wīgentī என்னும் தொல் இத்தாலியச்சொல் 20 ஐக் குறிக்கிறது. இதிலிருந்து உருவானதே Viginti. இருபான்(score) என்பது 20 கொண்ட அளவையின் பெயராகும். இந்த அளவையின் மீதும்பேரச்சம் வரும். இருபதுக்கு இருபது என்னும் மட்டையாட்டத்தின் மீதும் பேரச்சம் கொள்வர்.
00
75.) 21 ஆம் எண் வெருளி – Vigintiunusphobia
75.) 21 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 21 ஆம் எண் வெருளி.
சில நாடுகளில் 21 அகவை என்பது வயது வந்ததற்கு அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்தியாவிலும் முன்பு தேர்தலுக்கான வாக்குரிமைக்கான அகவை 21 என்றிருந்தது. பொறுப்பினை விரும்பாதவர்களுக்கு 21 என்பதன் மீது பேரச்சம் உருவாகிறது.

21 இன் கூட்டுத் தொகை 3. எண் 3 மீது பேரச்சம் கொள்வோர் எண் 21 மீதும் பேரச்சம் கொள்வர்.
00

(தொடரும் )