(வெருளி நோய்கள் 816-820: தொடர்ச்சி)

குட்டையர் பற்றிய காரணமற்ற பேரச்சம் குட்டையர் வெருளி.
“கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே” என்பது பழமொழி. குள்ள உருவத்தில் வாமனனாகத் தோற்றம் எடுத்து சேர மன்னனையே(மகாபலி) ஏமாற்றியவன் திருமால். எனவேதான் கள்ளத்தனம் செய்வோரை நம்பினாலும் குள்ளனை நம்பாதே எனப் பழமொழி வந்தது. ஆனால் இக்கதையைப் புரிந்து கொள்ளாமல் குட்டையாக இருப்பவர்கள்பற்றி அஞ்சுவோர் உள்ளனர்.
00

தங்களைக் கவர்ச்சியாளர்களாக எண்ணிக்கொண்டுள்ள உண்மையில் பருத்த தோற்றம் உடைய அழகற்ற பெண்களைக் கண்டால் வரும் தேவையற்ற பேரச்சம் குண்டுப்பெண் வெருளி.
குண்டுப் பெண்களில் பலர் தாழ்வு மனப்பான்மையில் இருப்பர். அதனால் தங்கள் மீதே வெறுப்பு கொள்வோரும் உண்டு. ஆனால், சிலர் உயர்வு மனப்பான்மையில் நடந்து கொள்ளும் போக்கு வேறு சிலருக்கு அச்சத்தையும் வெறுப்பையும் விளைவிக்கிறது. இந்தப் போக்கு தவறுதான் என்றாலும் இத்தகையோர் இருக்கத்தான் செய்கின்றனர். தற்பெருமைக்காரர்கள், அலட்டுபவர்கள் என்றெல்லாம் அவர்களைப்பற்றிச் சொல்லி அவர்கள் அருகில் வந்தாலே வெருளிக்கு ஆளாவர்.
00

குதநோய்(rectal disease) குறித்த அளவற்ற பேரச்சம் குதநோய் வெருளி.
குத வாய்ப்பகுதியில் பெரும்புண் ஏற்படும், மிகு வலி ஏற்படும், குதநோய் பெரிதாகிப் பெருந்துன்பம் விளையும் எனப் பேரச்சம் கொள்வேத குதநோய் வெருளி.
குதநோவு புற்றுநோயாய் மாறும் என மனநிலை திரிவுடன் பேரச்சம் ஏற்படுவதும் இந்நோய்தான்.
procto என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் குதவாய்.
recto என்னும் இலத்தீன் சொல் உணவுக்குழாயின் கீழ்ப்பகுதி என்னும் பொருளில் வருகிறது.
00

கதிர்வடிவ வால் கொண்ட சல்மான் எனப்படும் குதிமீன்(Salmon) மீதான அளவுகடந்த பேரச்சம் குதிமீன்வெருளி.
குதித்தல் என்னும் பொருள் கொண்ட சல்மோ என்ற இலத்தீன் சொல்லில் இருந்து சல்மான் உருவானது. எனவேதான் குதி மீன் எனப் படுகிறது.
00

எக்காரணமுமின்றி மேலே இருந்து கீழே குதிக்கப்போவதாகக் கருதிப் பேரச்சம் கொள்ளுதல் குதிப்பு வெருளி.
பொதுவாகச் சிறுவர்களுக்கு இவ்வச்சம் மிகுதியாக வரும். உயரமான இடத்திலிருந்து குதிப்பது தொடர்பாகவும் இதற்கான தேவையில்லாத பொழுதும் அது குறித்து எண்ணிக் கவலைப்படுவதாலும் சிறிய இடத்தில் இருந்து குதிக்க நேர்ந்தாலும் தாவ நேர்ந்தாலும் உயரமான இடமாகக் கருதித் தேவையின்றிப் பேரச்சம் கொள்வதும் குதிப்பு வெருளி.
புதிய வெருளிகளில் உயரமான இடத்திலிருந்து காரணம் எதுவுமின்றிக் குதிப்பதாக எண்ணும் பேரச்சம் குதி வெருளி (vertafundephobia) எனக் குறிக்கப் பெற்றுள்ளது. ஒரே வகை வெருளிக்கு வெவ்வேறு பெயர் தேவையில்லை. குதி எனச் சுருக்கமாகச் சொன்னால் குதிகாலைக் கறிக்கும் என்பதால் குதிப்பு எனக் குறிக்கப்பெற்றுள்ளது.
இதனை உயர்பு வெருளி(Acrophobia)யுடன் தொடர்புபடுத்திக் கூறுவர்.
salire என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குதித்தல்.
00

(தொடரும்)