(வெருளி நோய்கள் 821-825: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 826-830
- குத்துமுனை வெருளி – Cnidophobia
பூச்சிகளின் கொடுக்கு அல்லது தாவரங்களின் முள்ளிழை முதலான குத்துமுனைகள் குறித்த அளவு கடந்த பேரச்சம் குத்துமுனை வெருளி.
வெருளிக்குக் காரணமான ஒரு பகுதியைக மட்டும் கருத்தில் கொண்டு நேர் பொருளாகக் கொடுக்கு வெருளி(Cnidophobia) எனக் குறித்திருந்தேன். ஆனால் பூனைக்காஞ்சொறிச் செடி வகை செடி கொடிகளின் குத்தும் முள்ளிழைக்கும் நச்சுப் பூச்சிகளின் கொட்டுமுனைகளுக்கும் பொதுவான குத்து முனை என்பதை இப்பொழுது பயன்படுத்தி உள்ளேன்.
00
- குத்து வெருளி – Grothophobia / Gronthokopophobia
குத்தப்படுவோம் எனப் பேரச்சம் கொள்வது குத்து வெருளி.
grothia, gronthokopo, ஆகிய கிரேக்கச் சொற்களின் பொருள் குத்து. இத்தகையோர் தனியாக அல்லது வீட்டிற்குள்ளேயே வாழ விரும்புவர். எனவே, வெளியே எங்கும் செல்லமாட்டார்கள்.
00
- குப்பி வெருளி – Flasciphobia
குப்பி(bottle) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குப்பி வெருளி.
கண்ணாடிக் குப்பி, மாழைக்குப்பி, நெகிழிக் குப்பி என எவ்வகைக் குப்பியாக இருந்தாலும், பெரிய குப்பி, சிறிய குப்பி, பருமனான குப்பி போன்று எந்த அளவுக் குப்பியாக இருந்தாலும் அக்குப்பி மீது தேவையற்ற அளவு கடந்த வெருளி கொள்வது.
00
- குப்பை வெருளி – Purgamentophobia
குப்பை(garbage) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குப்பை வெருளி.
குப்பை, கூளம், செத்தை, அழுகல் பொருள், மலம், கழிவு, அல்லது இவற்றின் தீ நாற்றம் அல்லது இவை குறித்து எண்ணுதல் போன்றவற்றால் ஏற்படும் வெருளி.
Purgamento என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குப்பை.
00
- குப்பை முற வெருளி – Farasiphobia
குப்பை முறம்(dustpan) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குப்பை முற வெருளி.
குப்பையை அள்ளப் பயன்படுத்திய முறத்திலும் தீ நாற்றம் இருப்பதால் அருவருப்பு அடைந்து வெருளிக்கு ஆளாவர்.
காண்க: குப்பை வெருளி-Purgamentophobia
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
No comments:
Post a Comment