(வெருளி நோய்கள் 836-840: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 841-845
- குமுகாய வெருளி-Sociaphobia/ Sociophobia
குமுகாயச்சடங்குகள், நிகழ்வுகள், போக்குகள் தொடர்பிலான அளவுகடந்த பேரச்சம் குமுகாய வெருளி.
ஒன்றுகூடல் நிகழ்வுகள், விருந்துக் கூட்டங்கள்,ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நண்பர்கள் உறவினர்களுடான சுற்றுலாக்கள் என எந்தப் பொது நிகழ்வாயினும் காரணமற்ற பேரச்சம் கொள்வர்.
00
- கும்பல் வெருளி-Demophobia
காரணமின்றிக் கூடும் கும்பல் பற்றிய அளவுகடந்த பேரச்சம் கும்பல் வெருளி.
கூட்ட வெருளியைப் போன்றதுதான் இதுவும். ஆனால், அதனைவிட இதில் பேரச்சம் மிகுதி. கும்பல் கலவரத்தில் ஈடுபடலாம், கொலை, கொள்ளைகளில் ஈடுபடலாம் எனப் பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
demo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மக்கள். இங்கே கும்பலாகக் கூடும் மக்களைக் குறிக்கிறது.
00
- குயிகோ வெருளி – Quigophobia
நட்சத்திரப் போர்கள்(Star Wars) தொலைக்காட்சித்தொடரில் வரும் முதன்மைப் பாத்திரம் குயி-கோன்-சின்(Qui-Gon Jinn) மீதான அளவுகடந்த பேரச்சம் குயிகோ வெருளி.
இப்பாத்திரத்தில் நடிப்பவர் இலியம் நீசன்.
00
- குயிரினோ நெடுஞ்சாலை வெருளி – Quirinophobia
குயிரினோ நெடுஞ்சாலை குறித்த வரம்பற்ற பேரச்சம் குயிரினோ நெடுஞ்சாலை வெருளி.
மணிலா-தெல் மாண்டே கரே சாலை(Manila-del Monte Garay Road) என உருவாக்கப்பட்ட பொழுது பெயர் சூட்டப்பட்டது. பின்னர் அமைந்துள்ள மாவட்டத்தின் முதல் அலுவல்முறைத் தலைவரின் பெயரில் பெருமகனார் தாமசு சுசானோ சாலை(Don Tomas Susano Road) எனப் பெயரிடப்பட்டது. மீண்டும பெயர் மாற்றப்பட்டு பிலிப்பைன்சு தலைவர் எல்பிடியோ (இ)ரிவேரா குயிரினோ [Elpidio Rivera Quirino (1890-1956)] மறைவில் அவர் பெயர் சூட்டப்பட்டது.
00
- குரங்கு வெருளி-Monkeyphobia / Pithecophobia
குரங்கு மீதான தேவையற்ற பேரச்சம் குரங்கு வெருளி.
குரங்கைக் காணும் பொழுது மேலேதாவித் துன்புறுத்தம் என்றும் கடித்துப் பெருங்காயம் ஏற்படுத்தும் என்றும் குரங்கு படத்தைப்பார்த்தாலோ குரங்கு பற்றிக் கேட்டாலோ இத்தகைய அச்ச எண்ணம் உருவாவதும் இந்நோயின் தன்மையாகும்.
கோவில் பகுதி, மலைப்பகுதி, சில சுற்றுலாப் பகுதிகளில் குரங்குகள் மிகுதியாக உள்ளன. பழம் முதலான உணவிற்காகக் கைகளில் உள்ள பைகளைப் பிடுங்க நம்மை நோக்கி வரும். நாம் விழிப்பாக இல்லை என்றால் பிடுங்கிக் கொண்டு போகும். இதனைக் கண்ணுறுவதால் அல்லது இவ்வாறு நிகழும் என எதிர்பார்ப்பதால் குரங்குகள் பாய்ந்து துன்புறுத்தும் என்று பெருங்கவலையும் அதனால் பேரச்சமும் கொள்வோர் உள்ளனர்.
pithekos என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் குரங்கு எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
No comments:
Post a Comment