(வெருளி நோய்கள் 916-920: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 921-925

கொடுங்கோலன் ஆட்சியால் துன்புறுவோருக்கும் அதனைக் கேள்வியுறுவோருக்கும் ஏற்படும் வெருளி காெடுங்கோலன் வெருளி.
காலந்தோறும் உலகெங்கும் கொடுங்கோலாட்சியால் மக்கள் துன்புறுவதால் கொடுங்கோலாட்சிக்கு எதிராகவே உள்ளனர்.
கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக” என வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் கூறியுள்ளார்.
இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்” (பாரதியார்) என்னும் கொடுங்கோலாட்சியால் மக்கள் அது குறித்துப் பேரச்சம் கொள்கின்றனர். கொடுங்கோலர் வரலாறுகள், படங்கள், படக்காட்சிகள், கதைகள் என எதுவாக இருந்தாலும் கொடுங்கோலர் குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00

கொப்பூழ் குறித்த அளவுகடந்த பேரச்சம் கொப்பூழ் வெருளி.
கொப்பூழைத் தொட அல்லது கொப்பூழ் உள்ள வயிற்றுப் பகுதியைத் தொடவும் இத்தகையோர் அஞ்சுவர். சிறு அகவையில் யாரேனும் அவர்களின் தொப்பூழைத் தொட்டு விளையாடி எரிச்சல் ஊட்டியிருப்பர். இதனாலும் அச்சம் வளர்ந்து பேரச்சமாக மாறியிருக்கும். பொதுவாக ஊடகத்திலும் வணிகத்திலும் ஈடுபடும் பெண்கள், விளம்பர ஆளுமையர் முதலானோர்க்குக் கொப்பூழ் வெருளி உள்ளதாகக் கூறுகின்றனர்.
கொப்பூழ் என்பது பேச்சு வழக்கில் தொப்புள் எனத் திரிந்து பயன்பட்டு வருகிறது. உந்தி என்றும் நாபி என்றும் இதனைக் கூறுவோரும் உள்ளனர்.
கொப்பூழ் பகுதியை அழகியல் நோக்கில் உலக இலக்கியங்கள் கூறுகின்றன.
“நீர்ப் பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்” (பொருநராற்றுப்படை அடி 37)
எனப் புலவர் முடத்தாமக்கண்ணியார் பாடினியின் வடிவழகைச் சிறப்பிக்கையில் நீர்ச்சுழிபோல் இலக்கணம் அமைந்த கொப்பூழ் எனக் குறிப்பிடுகிறார்.
“அங் கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ்” (சீவக சிந்தாமணி, பா 172) என்று திருத்தக்க தேவர், விசையையின் தோற்ற அழகைக் குறிப்பிடுகையில் வலம் சுழி அமைந்த கொப்பூழ் எனச் சிறப்பிக்கிறார்.
இவை போன்ற பல இலக்கிய மேற்கோள்கள் உள்ளன. இவ்வாறு தமது கொப்பூழ் அழகாக இல்லையே என்று கவலைப்படுவோரும் உள்ளனர்.
கொப்பூழைப் பார்த்தால் சிலந்தி போல் தோன்றுவதாகவும் எனவே சிலந்தி வெருளி போல் பேரச்சம் வருவதாகவும் சிலர் கூறியுள்ளனர்.
அழுக்கு தேய்த்து நன்றாகக் குளிக்காவிட்டால் கொப்பூழ்ப்பகுதியில் அழுக்கு சேரும். நன்கு குளிக்க வேண்டும் என்று எண்ணாமல் இப்பகுதியை நோண்டிப் புண்ணாக்கிக் கொண்டு பிறகு கொப்பூழைக் கண்டாலே அஞ்சுவோரும் உள்ளனர்.
பிறர் யாரேனும் தவறான உறவுமுறைக்காக அணுகி அதனால் அவர்கள் மீதுவரும் வெறுப்பும் அச்சமும் கொப்பூழைப் பார்த்தாலே அல்லது அது பற்றி நினைத்தாலே வரும் நிலைக்கு மாறுவோரும் உள்ளனர்.
கொப்பூழ் கொடி என்பது தாயுறவின் அடையாளமாகப் போற்ற வேண்டியது. ஆனால் இதனைப் பிறர் காணும் வண்ணம் கவர்ச்சியாக உடுத்துகிறார்களே எனக் கவலைப்படுவோரும் உள்ளனர். இவர்களுக்குப் பிறர் கொப்பூழைப் பார்த்தாலே வெறுப்பும் பண்பாட்டுச் சீரழிவு குறித்த பேரச்சமும் வருகிறது.
திரைப்படம் ஒன்றில் கொப்பூழில் பம்பரம் விடும் காட்சி இடம் பெற்றதும் அதுபலரின் எதிர்ப்பிற்கும் வெறுப்பிற்கும் எரிச்சலுக்கும் ஆளானது. இருப்பினும் இதைப் பொருட்படுததாமல் மற்றொரு படத்தல் கொப்பூழில் முட்டை அடை செய்யும் காட்சி இடம் பெற்றது. கன்னடத் திரைப்படத்தில் நடிகர் ஒருவர் எப்போதும் தன் பாடல் காட்சிகளில் கொப்பூழில் பழப்பச்சடி, காய்கனிப் பச்சடி செய்வது போன்ற காட்சிகளை அமைப்பதே வழக்கம் என்று நடிகை தெய்சி சா(Daisy Shah) கண்டனம் தெரிவித்ததும் தொடர்ந்து பலர் அக்காட்சிகைள எதிர்த்ததும் செய்திகளில் இடம் பெற்றது. எனினும் கொப்பூழைக் கவர்ச்சிக்காட்சிகளாகக் காட்டி அதற்கென உள்ள கூட்டத்தைக்கவரும் போக்கும் இடம் பெறுகிறது. ஆனால், இக்காட்சிகளை எதிர்ப்பவர்களுக்கு அவ்வெதிர்ப்பு காெப்பூழின் மீதான வெருளியாக மாறுவதும் நிகழ்கிறது.

omphalo என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கொப்பூழ்/தொப்புள் எனப் பொருள்.
00

  1. கொலம்பியவெருளி-Columbophobia

கொலம்பியா நாடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கொலம்பிய வெருளியாகும்.
கொலம்பியாவைக் கொழும்புஉடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. கொழும்பு என்பது இலங்கையில் உள்ள நகரத்தின் பெயர். கொலம்பியா என்பது நடு அமெரிக்காவிலுள்ள ஒரு நாடாகும்.
கொலம்பிய மக்கள், கொலம்பிய நாகரிகம், கொலம்பியப் பண்பாடு, கொலம்பியக்கலை, கொலம்பிய வணிகம், எனக் கொலம்பியா சார்பானவற்றின் மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் உடையவர்களை இது குறிக்கிறது.
00

  1. கொல்லைப் பொம்மை வெருளி – Formidophobia

கொல்லைப் பொம்மை குறித்த வரம்பற்ற பேரச்சம் கொல்லைப் பொம்மை வெருளி.
வயற்புறங்களில் பறவைகளை விரட்டுவதற்காக வைக்கப்படும் பொம்மை பேச்சு வழக்கில், சோலைக் கொல்லைப் பொம்மை, சோலக் கொள்ளைப் பொம்மை, சோளக்கொல்லைப்பொம்மை என அழைக்கப்படுகின்றது. மனித உருவிலான இப்பொம்மையைப் பார்த்து மனிதர்கள் இருப்பதாகக் கருதிப் பறவைகள் அஞ்சி ஓடும். ஆனால் சிறு அகவையில் பொம்மை எனக் கருதாமல் அச்சப்படுவோர் நாளடைவில் அச்சத்திலிருந்து விடுபடாமல் வளர்த்துக் கொண்டு கொல்லைப் பொம்மை வெருளிக்கு ஆளாகின்றனர்.
formido என்னும் இலத்தீன் சொல்லிற்குத் திகிலூட்டும் அச்சம் என்றும் சே்ாளக்கொல்லை என்றும் பொருள்கள். formidophobia என்னும் பொழுது சே்ாளக்கொல்லையால் ஏற்படும் பேரச்சத்தையே குறிக்கிறது.
00