(வெருளி நோய்கள் 921-925: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 926-930
- கொழுப்பு வெருளி-Lipophobia/ Adipophobia
கொழுப்பு பற்றிய தேவையற்ற பேரச்சம் கொழுப்பு வெருளி.
கொழுப்பு கூடுவதால் உடல் எடை கூடும், மாரடைப்பு ஏற்படும், பிற நோய்கள் தாக்கும், தொந்தி வளரும் என்றெல்லாம் அளவு கடந்த கவலையால் வரும் பேரச்சம் இது.
lipos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கொழுப்பு.
கொழுப்பு என்னும் பொருள் கொண்ட adeps என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து Adipo என்னும் ஒட்டுச்சொல் உருவானது.
00
- கொள்ளையர் வெருளி-Harpaxophobia
கொள்ளையடிக்கப்படல் அல்லது வழிப்பறி குறித்த அளவுகடந்த பேரச்சம் கொள்ளையர் வெருளி/ திருட்டு வெருளி.
நாளும் கொள்ளைபற்றிய செய்திகள் வருவதால் கொள்ளைபற்றிய பேரச்சம் வருகிறது. கொள்ளை யடிக்கப்படும் பொழுது கொலையும் நிகழ்வதால் பேரச்சம் மேலும் வளருகிறது.
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
என்பார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்(மகாதேவி திரைப்படப்பாடல்).
நாம்தாம் திருட்டு குறித்து வெறும் அச்சம் மட்டும் கொள்ளாமல் விழிப்பாக இருக்க வேண்டும்.
தீயோர் வெருளி (Scelerophobia) உடன் ஒப்புமை மிக்கது.
harpax என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பறித்தல் அல்லது கைப்பற்றல். எனவே, திருட்டு வெருளி எனச் சொல்வதை விட வழிப்பறி அல்லது கொள்ளைகுறித்த பேரச்சத்தைக் குறிக்கிறது என்பதே பொருத்தமாக இருக்கும்.
00
- கொடும்பல் புலி வெருளி-Sabertoothphobia
கொடும்பல் புலி குறித்த வரம்பு கடந்த பேரச்சம் கொடும்பல் புலி வெருளி.
வளைந்த பற்களையுடைய புலி கொடும்பல் புலி எனப்படுகிறது.
Saber அல்லது sabre என்றால் வளைவாள் எனப் பொருள். இது இலத்தீன் சொல். சுவை, அறிதல் எனப் பொருள்கள். இசுபானிய மொழியிலும் இச்சொல் அறிவது அல்லது முடிவது என்னும் பொருள்களில் உள்ளது. முதன்மையாக ஒரு வகை வளைந்த வாளைக் குறிக்கிறது. ஆனால் விளைச்சாெல்லாக வரும்பொழுது வாளால் வெட்டுவது அல்லது காயப்படுத்துவது என்று பொருள்படும். எனவே வளைவாள் பல் என்பது கொடுமையான வளைந்த பற்களை உடைய புலியைக் குறிக்கிறது. வளைவாள் பல் என்பதை விடக் கொடும் பல் எனக் குறிக்கலாம். கொடு என்பது வளைவையும் குறிக்கும் கொடுமையையும் குறிக்கும். இங்கே கொடுமையான வளைந்த பற்களை உடைய புலியைக் குறிக்கிறது. இது பார்ப்பதற்கே அச்சம் விளைவிக்கக் வடியதாக உள்ளது. எனவே, கொடும்பல் புலியை நேரில் அல்லது படக்காட்சியில் அல்லது படத்தில் பார்க்கும் பொழுது அல்லது கொடும்பல் புலியைப்பற்றி யாரும் பேசும்பொழுது வெருளி ஏற்படுகிறது. இதனால் மன அமைதிக் குறைவு, மனக் கலக்கம், தலை சுற்றல் போன்ற வெருளிக்கே உள்ள உடல், மனத்தொல்லைகள் ஏற்படுகின்றன.
சிலர் இதனைக் கொடுவாள் பூனை வெருளி என்கின்றனர். கொடுவாள் பூனை என்கது முற்றும் அழிந்து போன வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய ஒரு விலங்கு (pre-historic animal) ஆகும். பூனையும் புலியும் ஒரே பூனைப் பேரினக் குடும்பத்தைச் சேர்ந்து இருப்பதால் இத்தகைய புரிதல் உள்ளதா எனத் தெரியவில்லை.
00
- கொட்டில் கதவு வெருளி – Karazportaphobia
ஊர்திக் கொட்டில் கதவு குறித்த வரம்பற்ற பேரச்சம் கொட்டில் கதவு வெருளி.
Porta என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கதவு.
00
- கொட்டு வண்டி – Zixiechephobia
கொட்டு வண்டி(dump truck) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கொட்டு வண்டி வெருளி.
Zixieche என்னும் சீனச் சொல்லின் பொருள்கள்,கொட்டு வண்டி, கொட்டுந்து, சரக்குந்து, பண்ட உந்து என்பனவாகும்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
No comments:
Post a Comment