(வெருளி நோய்கள் 396-400 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 401-405
- உடன் பிறந்தார் மக்கள் வெருளி-Nibliphobia
உடன் பிறந்தவர்கள் மகன், மகள் இருவர் மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பிறந்தார் மக்கள் வெருளி.
உடன்பிறந்தார் மகள் வெருளியில் குறிப்பிட்டவாறு, சொத்துத் தகராறு, குடும்பத் தகராறு, வாய்ச்சண்டை ஏற்படும் சூழல்களில் உடன்பிறந்தார் மக்கள் மீது பேரச்சம் வருவது இயற்கை. மகன், மகள் என்பவற்றின் பன்மையும் இருவரையும் சேர்த்துக் குறிப்பது மக்கள் என்னும் சொல்.
Nibli என்றால் உடன் பிறந்தார் மகன் அல்லது மகள் அல்லது இருவரையும் குறிக்கும்
00
- உடன் பிறந்தார் வெருளி – Fratrophobia
உடன் பிறந்தவர் மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பிறந்தார் வெருளி.
உறவினர்கள் பகையாக மாறுவது இயற்கை. சொத்துத் தகராறு, குடும்பத் தகராறு, வாய்ச்சண்டை ஏற்படும் சூழல்களில் உடன்பிறந்தார் மீது பேரச்சம் வருவது இயற்கை.
Fratro என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் உடன் பிறந்தவர்.
00
- உடன்பணியாளர் வெருளி – Synergatiphobia
உடன்பணியாளர் மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பணியாளர் வெருளி.
உடன்பணியாற்றுபவர் பொறாமையாலோ அவருக்கிருக்கும் சில தீய பழக்கவழக்கங்களாலோ பதவி உயர்வு தொடர்பான இடர்கள் அல்லது முரண்களாலோ மன வேறுபாடு ஏற்பட்டுப் பகையாக மாறுமோ என்ற எண்ணத்தால் பேரச்சம் வருவதுண்டு.
Synergati என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடனிணை பணியாளர், உடனுழைப்பாளர், உடனூழியர் எனப் பல வகையாகக் குறிப்பிடுவர். சில இடங்களில் தொழிற் கூட்டாளிையையும் இச்சொல் குறிக்கிறது. நாம் பணித்தோழர் என்று சொல்வது சிறப்பாக இருக்கும். என்றாலும் நீர்மை கருதி உடன் பணியாளர் என்றே இங்கே குறிக்கப்பட்டுள்ளது.
00
- உடன்பிறந்தாள் வெருளி – Sororophobia
உடன் பிறந்தாள் மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பிறந்தாள் வெருளி
00
- உடன்பிறப்பு வெருளி – Sibliphobia
உடன் பிறப்பு மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பிறப்பு வெருளி.
உடன் பிறந்தவர் பிணக்கால் ஆட்சி கவிழ்ந்த வரலாறும் தொழில் சரிந்த வரலாறும் மிகுதியாக உள்ளன. எனவே, கருத்து வேறுபாடுகளாலும் பொறாமை உள்ளவர்களாலும் சொத்துப் பங்கீட்டுச் சண்டைகளாலும் தனக்குப் பேரிடர் அல்லது உடல், உயிருக்கு ஊறு நேரும் என்ற அச்சத்தால் உடன்பிறந்தவர் மீது வெருளி வருவதுண்டு.
Sibli என்னும் சொல் பழைய ஆங்கிலத்தில் உறவு என்னும் பொருளுடையது. பின்னர் பெற்றோரைப் பங்குபோட்டுக் கொள்பவர் , அஃதாவது உடன் பிறந்தவன் அல்லது உடன் பிறந்தவள் என்பதைக் குறித்தது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5