(வெருளி நோய்கள் 336 – 340 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 341 – 345
341. இருப்பு இயக்க வெருளி – Fysikophobia
இருப்பு இயக்கம்(physical plane of existence) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இருப்பு இயக்க வெருளி.
00
342. இருப்புப்பாதை கடப்பு வெருளி – Bahnubophobia
இருப்புப்பாதை கடப்பு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் இருப்புப்பாதை கடப்பு வெருளி.
கடப்புவெருளி(Agyrophobia/ Dromophobia/ Banmaxianphobia) உள்ளவர்களுக்கும் தொடரி வெருளி(Siderodromophobia) உள்ளவர்களுக்கும் இவ்வெருளி வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
இருப்புப்பாதையைக் கடப்பது சடடப்படியும் தவறு. நமக்குக் கேடு விளைவிக்கும் வாய்ப்பும் உள்ளது. எனினும் அவசரம், சோம்பல் போன்ற காரணங்களால் துணிந்த இருப்புப்பாதையக் கடக்கின்றனர். என்றாலும் இருப்புப் பாதையைக் கடக்கும் பொழுது கால் இடறி விழுந்து காயம் அல்லது பெருந்தீங்கு அல்லது உயிரிழப்பு நேருமோ என்றும் கடக்கும் பொழுது தொடரி வந்து விட்டால் அடிபட்டோ தூக்கி எறியப்பட்டோ உடலுக்கோ உயிருக்கோ இழப்பு நேரும் என்றும் ஒருவகை அச்சமும் கொண்டிருப்பர். இதனால் ஏற்படும் பேரச்சத்தால் வருவதே இருப்புப் பாதைக் கடப்பு வெருளி.
00
343. இருமல் வெருளி – Tussaphobia
இருமல்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் இருமல் வெருளி.
பிறர் இருமும் பொழுது, தனக்கு இருமல் வராமலே மருந்து உட்கொள்வர். இருமுவோரைக் கண்டு அஞ்சி ஒடுவர். இருமல் பற்றிய அச்சம் பேரச்சமாக வளர்ந்து இருமல் வெருளியாக மாறுகிறது.
tussis என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இருமல்.
per என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் முழுமையான
00
344. இரும்பன் வெருளி – Ironmanphobia
புனைவுரு இரும்பன்(Ironman) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இரும்பன் வெருளி.
இரும்பன் என்பது மார்வெல் வரைநூல்(Marvel Comics)நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஓர் அமெரிக்க வரைகதை நூலில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன்(Super hero)கதைப்பாத்திரம் ஆகும். முதலில் கதை மட்டுமே பட வடிவில் வந்ததால் படக்கதை எனப்பட்டது. ஆனால், கதை மட்டுமல்லாமல்,அறிவியல், வரலாறு முதலியனவும் படங்கள் மூலம் விளக்கப்பட்டு இப்போது வருகின்றன. எனவே, பொதுவாக வரை நூல் எனக் குறித்துள்ளேன். பட நூல் என்றால் வேறு படங்கள் பற்றிய நூல் எனக் கருதலாம். எனவேதான் வேறுபடுத்த வரை நூல் எனப்பட்டது.
இரும்பு மனிதன் என்னும் இரட்டைச்சொல்லுக்கு மாற்றாக பயன்பாட்டு எளிமை கருதி இரும்பன் எனச் சுருக்கி யுள்ளேன். கரும்பு உடைய காமன் கரும்பன் என்னும் வழக்குபோன்றதகாகக் கருதலாம். முன்னரே இயந்திர மனிதன் என்பதை இயந்திரன் எனச் சுருக்கித் தந்ததை மக்கள் ஏற்றுக் கொண்டனர். வேறு பல சுருக்கப் பெயர்களும் இந்நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
00
345. இரும்பு வெருளி-Ferrumphobia
இரும்பு, இரும்புப் பொருள்கள் மீதான வரம்பு கடந்த பேரச்சம் இரும்பு வெருளி.
இரும்புப்பொருள் மேலே விழுந்து அடிபட்டதால் அல்லது பிறருக்கு அடிபட்டதைப்பார்த்ததால இரும்பு மீது ஏற்பட்ட அச்சம் நாளடைவில் வளர்ந்திருக்கலாம்.
இரும்புப்பொருள்கள் விற்பனையகம் அல்லது இரும்பபுப் பொருள்கள் உள்ள பகுதிகளில் வேலை பார்க்கவும் இத்தகையோர் அஞ்சுவர்.
Ferrum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இரும்பு.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment