(வெருளி நோய்கள் 341 – 345 தொடர்ச்சி)

இரவு, இரவுப்பொழுதில் வரும் இருட்டு முதலியன குறித்த வரம்பு கடந்த பேரச்சம் இரவு வெருளி/ இருண்மை வெருளி/ இருள் வெருளி/ இரா வெருளி என அழைக்கப்பெறுகின்றது. எப்படி அழைத்தாலும் பொருள் ஒன்றுதான். எனவே நாம் இருள் வெருளி என்றே அழைப்போம்.
இரவில் வெளியே செல்லுதல், இரவில் தனியாகப் படுத்தல், இரவுப்பொழுதில் யாரேனும் வருதல் அல்லது யாரையாவது பார்த்தல், இருட்டுச் சூழல் என இவர்கள் பேரச்சம் கொள்வர்.
Nyctohylo என்றால் இருண்ட மர(க்காட்டு)ப் பகுதி எனப் பொருள். எனினும் அதுவும இருட்டைத்தான் குறிக்கிறது. எனவே, இவ்வெருளியைத் தனியாகக் குறிக்க வேண்டா.
Achluo, Lygo ஆகிய கிரேக்கச் சொற்களுக்கு இருட்டு /இருண்மை எனப் பொருள்கள்.
Scotophobia – சுகாத்தியர் வெருளி என்பது சுகாத்து நாட்டினர் தொடர்பான வரம்புகடந்த பேரச்சத்தையும் குறிக்கும் .
nocti என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இரவு.
00

இரைச்சல் ஒலி மீதான அளவுகடந்த பேரச்சம் இரைச்சல் வெருளி.
திடீர் உரத்த ஒலி, தீ யணைப்பு ஒலி, வெடிகளின் ஒலி முதலான திடீர் ஒலிகளால் அச்சம் உறுவர்.
பொருளற்ற ஒலி அல்லது பல்வேறு ஒலிகளின் கூட்டு இரைச்சலாகிறது. ஒலி மூலம் பொருளையோ இசையையோ உணர முடியும். இரைச்சல் பொருளோ இனிமையோ தராது. இதனால் இரைச்சல் கண்டு வெறுப்பும் அச்சமும் கொள்வோர் உள்ளனர். சிலருக்கு இனிமையான மென்மையான ஒலி கூட அச்சம் தரும்.
மனநோயர்கள் சிலருக்குக் காதில் இரைச்சல் கேட்டுக்கொண்டே இருக்கும். இத்தகையோர் இரைச்சல் மீது பெரும் வெறுப்பிலும் பேரச்சத்திலும் இருப்பர்.
.
00

இலசாடா(Lazada) நிறுவனம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இலசாடா வெருளி.

இலசாடா குழுமம் பன்னாட்டு இணைய வணிக நிறுவனம்.அலிபாபா குழுமத்திற்கு (Alibaba Group) உரிமையானது. இதன் வளர்ச்சியால் தம்முடைய வணிகம் பாதிப்புறும் என அஞ்சுவோருக்கு இவ்வச்சம் அளவுகடந்து போகும்போது இலசாடா வெருளி வருகிறது.
00

வறுமை தொடர்பான தேவையற்ற மிகையான பேரச்சம் இலம்பாடு வெருளி.
வறுமை வரும் என்ற அச்சத்தில், வறியவராவோம் என்ற அச்சத்தில், வறுமையைப் போக்குவது குறித்து எண்ணித் திட்டமிடாமல் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை” (தொல்காப்பியம் 2-8-63) என்கிறார் தொல்காப்பியர்.
இல்லை > இல > இலம் > இலம்பாடு என்பது வறுமையைக் குறிக்கலாயிற்று.
இலம்பாடு நாணுத் தருமெனக்கு” என வறுமை நாணத்தைத் தருவதாகக் கோவலன் கூறுவதாக இளங்கோஅடிகள் சிலப்பதிகாரத்தில் (9.71) தெரிவிக்கிறார். வறுமை அடைந்தது குறித்து நாணம் கொண்டு சோர்ந்து விடவில்லை; இழந்த செல்வத்தைப் பெற மீண்டும் வணிகத்தில் ஈடுபடக் கோவலன் முனைந்தான். இவ்வாறு இல்லாமல் அஞ்சி வாழ்வதில் பயன் என்ன? (கோவலன் மறைந்ததன் காரணம் வேறு.)
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
என்கிறார் ஒளவையார். கொடிய வறுமை மீது யாருக்குத்தான் அச்சம் வராமல் இருக்கும்?
“இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்” (அகநானூறு 123 /4-5 ) என்னும் பாடலடி மூலம் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் தலைவன் தன் நெஞ்சிற்கு “மலை கடந்து சென்று பொருள் திரட்டாமல் இருக்கிறாயே” எனச் சொல்வதாகத் தெரிவித்து்ளளார். இதன் மூலம் வறுமை வந்தவழி அஞ்சாது பொருள் திரட்டச் செல்லும் துணிவும் நம்பிக்கையுமே தேவை எனப் புரியலாகும். ஆனால், வறுமைக்கு அஞ்சித் தனித்தும் குடும்பத்தினருடனம் தற்கொலை புரிவார் உள்ளனர்.
சிலர் வறியவர்களைக் கண்டால் அஞ்சுவர். இதுவும் தவறாகும். உயர்வு மனப்பான்மையில் வரும் இலம்பாடு வெருளி இது. (தொடரில் கையாளும் பொழுது இலம்பாட்டு வெருளிக்குரிய அறிகுறிகள் என்பதுபோல் குறிக்க வேண்டும்.)
Penia என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் வறுமை. இதே பொருள் கொண்ட இலத்தீன் சொல்லான penuria என்பதுடன் ஒப்பு நோக்கத்தக்கது.
00

புனைவுரு இலியனார்டோ(Leonardo) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இலியனார்டோ வெருளி.
கதைப்படி, இலியானாருடோ வின்செந்து வின் இரட்டையருள் ஒருவர்.சைமன் என்பவரின் உடன் பிறப்பு.
இலியொனாருடோ தா வின்சி (Leonardo da Vinci) அல்லது இலியனார்தோ தா வின்சி (15.04.1452 – 2.05. 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். அந்தப் பெயரை இப்பாத்திரத்திற்குச் சூட்டியதாகக் கருதலாமே தவிர, அவருக்கும் இப்பாத்திரத்திற்கும் தொடர்பு இல்லை.
00