(வெருளி நோய்கள் 421-425 : தொடர்ச்சி)

உயரம் அல்லது உயரமான இடங்களை அண்ணாந்து பார்ப்பதால் ஏற்படும் பேரச்சம் அண்ணாத்தல் வெருளி.
உயரமான இடங்களை அண்ணாந்து பார்க்கும் பொழுது தலைசுற்றல், கிறுகிறுப்பு, மயக்கம் வரலாம் எனப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். hyps என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் உயரம். இதனை முதல் பதிப்பில் உயர வெருளி(Hypsiphobia) எனத் தனியாகக் குறித்திருந்தேன். என்றாலும் உயரம் குறித்த பேரச்சம் உயர்வு வெருளி எனத் தனியாகக் குறிக்கப் பெற்றுள்ளது. எனவே, மேல் நோக்கி அண்ணாந்து பார்ப்பது குறித்த பேரச்சம் என்பதால் இதை அண்ணாத்தல் வெருளி என இப்போது பகுத்துள்ளேன்.
00

உயரமான கட்டடங்களின் அருகில் இருக்கும் பொழுது ஏற்படும் அளவு கடந்த காரணமற்ற பேரச்சம் உயரண்மை வெருளி.
உயரமான கட்டடம் அருகில் இருந்தால், அக்கட்டடம் இடிந்து விழும், இடிபாடுகளில் சிக்க நேரிடும் என்று தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர். மாடி வீடுகளில் அல்லது படி, மின்னேணி உள்ள கட்டடங்களில் குடியிருக்கப் பெரிதும் அஞ்சுவர். மாடி இல்லாத வீடுகளில் மட்டுமே வசிக்க விரும்புவர்.
batos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு வழிச் செல்லுதல்/கடந்து செல்லக்கூடிய/அண்மைப்பாதை எனப் பொருள்கள். உயரமான கட்டடங்கள் அண்மையில் செல்லுதல், இருத்தல் ஆகிய பொருள்களை இங்கே உணர்த்துகிறது.
00

உயர் கூரை குறித்த வரம்பற்ற பேரச்சம் உயர் கூரை வெருளி.
தாழ்கூரை வெருளி(Minicelarophobia), உட் கூரை வெருளி (Celarophobia) உள்ளவர்களுக்கு உயர் கூரை வெருளி வரும் வாய்ப்புள்ளது..
00

உயரமான இடங்களைப் பார்த்தால் வருவது உயர்பு வெருளி.

உயரமான இடங்களுக்குச் செல்லும் பொழுது கீழே விழுந்து விடுவோம் என்று பேரச்சம் கொள்கின்றனர. இவ்வச்சம் வீழ்பு வெருளி(Basophobia/Basiphobia) எனத் தனியாகக் குறிக்கப்பெற்றுள்ளது.

ஏணிகள் அல்லது வீட்டுக்கூரைகளில் ஏறவும் மலையில் அல்லது பாலத்தில் வண்டி ஓட்டவும் அஞ்சுவர். படிக்கிணறுகளில் இறங்கவும் அச்சம் கொள்வர்.

உயரமான இடங்கள் கண்டு அஞ்சாதவர்களும் உள்ளனர். அவர்கள்தாம் மலையே றுதல், வானளாவிய கட்டடங்கள் கட்டுதல், பேணுதல் போன்றவற்றில் ஆர்வமுடன் ஈடுபடுகிறார்கள்.

ஏறத்தாழ 5% மக்கள் உயரவெருளியால் பாதிப்புறுகிறார்கள். இவர்களில் பெண்கள் ஆண்களைவிட இரு மடங்கு எண்ணிக்கையில் உள்ளனர்.

உயர்நிலை வெருளி(Altophobia)யும் இதுவும் ஒரே பொருண்மையின. எனவே, தனித்தனியாகக் குறிக்காமல் இணைத்துத் தரப்பட்டுள்ளது.
. உயரண்மை வெருளி(Batophobia), ஏறுவெருளி(Climacophobia), மலை வெருளி(Orophobia), நெட்டை வெருளி(Procerophobia) ஆகியவற்றுடன் தொடர்புடையது.
akron என்னும் கிரேக்கச் சொல்லிற்கு முகடு, உச்சி, விளிம்பு எனப் பொருள்கள்.
alto என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உயரிடம் எனப் பொருள்

00

உயர்ந்த திறந்த வெளியைக் கண்டு ஏற்படும் பேரச்சம் உயர்வெளிவெருளி.
உயர்பு வெருளி(Acrophobia) யுடன் தொடர்புடையது.
Aero என்பது காற்றுவெளியைக் குறிக்கும் கிரேக்கச் சொல்.
acro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் உயரம், உயர் முனை.
00

(தொடரும்)